காதல் காயங்களே 17 – 1

அத்தியாயம் 17

 

 

என்ன முயன்றும் பழைய மயூரியைப் பிரதீபனால் பார்க்கவே முடியவில்லை. நந்தினியும் எவ்வளவோ முயன்று பார்த்துத் தோற்றுத்தான் போனாள். ஒரு சோகம்.. ஆற்ற முடியாத துயர் அவள் முகத்திலும் கண்களிலும் படிந்தே போயிற்று! இம்மெனுமுன் முணுக்கென்று கண்ணீர் உகுத்தாள். நந்தினி இருப்பதில் அலுவலகத்தில் சமாளித்தவள் மாலையில் பிரதீபனின் துணையையே முழுவதுமாக நாடினாள்.

 

கடற்கரையில் அமர்ந்தபடி அவன் தோளில் சாய்ந்து கண்ணோரம் துளிர்க்கும் கண்ணீருடன் அன்னையைப் பற்றி அவளைப் பற்றி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி என்று அவனோடு பகிர்ந்துகொள்வதில் ஒரு சுகம் அவளுக்கு. நேரம் காலம் பாராமல் பேசிக்கொண்டிருப்பாள். பெரும் பாடுபட்டு அவன்தான் அங்கிருந்து கிளப்புவான்.

 

அன்று ஒரு சனிக்கிழமை. காலையிலேயே அவன் வீட்டுக்கே வந்துநின்றாள் மயூரி. அழைப்புமணியை அழுத்திவிட்டு நின்றவளைக் கண்டதும் திகைத்துப்போனான் பிரதீபன். அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அதில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

“வா மய்யு!” தன்னைச் சமாளித்துக்கொண்டு அழைத்தவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒருநாளும் வராதவள் வந்திருக்கிறாளே!

 

பொத்தென்று வந்து மென் இருக்கையில்(சோபா) விழுந்தவள் கால்களைச் சுருட்டிக்கொண்டு அங்கேயே படுத்துக்கொண்டாள். கவலையோடு பார்த்தான் அவன். மெல்ல அவளருகில் சென்று, “என்னம்மா?” என்றான் தலையை வருடிக்கொடுத்தபடி.

 

“ப்ச்!”

 

“உடம்புக்கு ஏதுமா?”

 

“ஒன்றுமில்லை!” என்றவள் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்து, “ஏன்.. சும்மா நான் உங்களிட்ட வரக்கூடாதா?” என்றாள் மெல்லிய கோபம் துளிர்த்த குரலில்.

 

ஒருகணம் அவளையே பார்த்தான் பிரதீபன். சட்டெனக் கோபம் கொள்வது அவள் இயல்பல்ல! மனம்தான் அவளுக்குச் சரியில்லை. புரிந்துபோயிற்று!

 

உதட்டினில் சிரிப்பைத் தவழவிட்டபடி, “இங்கயே வந்திட்ட..” என்று இதயத்தை தொட்டுக் காட்டிவிட்டு, “இங்க வாறதெல்லாம் ஒரு விசயமா?” என்றான், ‘வீட்டுக்குள்’ என்று பொருள்படும்படி நிலத்தை ஆட்காட்டி விரலால் காட்டி.

 

அவளின் உதட்டினில் குட்டிச் சிரிப்பு ஒன்று வந்துவிட்டுப் போனதோ என்று ஒரு சந்தேகம் அவனுக்கு.

 

“சரி, சொல்லு என்ன குடிக்கிறாய்? தேத்தண்ணி ஊத்தவா?” என்றான் இதமான குரலில்.

 

“ம்ம்..”

 

பரிவோடு அவளை வருடிவிட்டு எழுந்துபோனான். அவளின் தாயார் இறந்து மூன்று வாரங்களாயிற்று. பெரிதாக அவள் மீளவேயில்லை. ஆண்பிள்ளை அவன், அவனுக்கே இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது அன்னையின் குரல் கேட்காவிட்டால் மனம் தேடத்தொடங்கிவிடும். அப்படியிருக்க அவள்? ஒற்றைப்பிள்ளை. அவனை விடவும் சின்னவள். அவள் அவர்களைப் பிரிந்து இங்கு வந்து வேலை செய்வதே பெரிய பிரிவாகத்தான் அவளுக்கு இருந்திருக்கிறது. அப்படியிருக்க அன்னையின் இழப்பு.. அவனுக்கும் மனதில் பாரம் தான். காட்டிக்கொண்டால் இன்னுமே உடைந்துபோவாள் என்று அதைப்பற்றியே கதைக்கமாட்டான்.

 

தேநீரைக் கொண்டுவந்து கொடுக்கவும் எழுந்திருந்து இரண்டு கைகளாலும் பற்றி இரண்டு மிடறு அருந்தினாள். அவளையே பார்த்துக்கொண்டு நின்றவனுக்கு பக்கத்தில் தட்டிக்காட்டினாள். அவனும் அமர்ந்துகொண்டான். அவர்களுக்குள் இருந்த சின்ன இடைவெளியைக் கூட விரும்ப மாட்டாமல் அவனை நெருக்கிக்கொண்டு அமர்ந்து கால்களைத் தூக்கி குறுக்கி வைத்துக்கொண்டு அவன் மீது சாய்ந்துகொண்டாள்.

 

பாதுகாப்பில்லாமல் பயந்துபோயிருந்த குழந்தை தாயைக் கண்டதும் அவரின் மடிக்குள் ஓடிப்போய்ப் புகுந்துகொண்டு கழுத்தைக் கட்டிக்கொண்டு சிணுங்குமே அப்படி இருந்தது அவனுக்கு அவளைப்பார்க்க.

 

மனம் கனிய, “என்ன மயூ?” என்றான் அவளைத் தன்னோடு அணைத்தபடி.

 

அந்தக் கனிவில் உடைந்தாள் மயூரி. “பயமா இருக்கு தீபன்.. அப்பா முந்தி மாதிரிக் கதைக்கிறாரே இல்ல. இங்க வரச்சொன்னா வாராரும் இல்ல. எனக்கு அங்க வேலை கிடைக்காம இந்த வேலைய விட்டுட்டு போகவும் முடியேல்ல. கடன் இருக்கு..” கேவல்களினூடு சொன்னாள்.

 

சடங்கு சம்பிரதாயம் என்று சைவசமயத்தவர்களுக்கு இறப்பு வீட்டுக்கே பெரும் தொகை தேவைப்படுகிறதே! செல்வேந்திரனின் பென்சன் அவளின் அம்மாவின் மருத்துவத்துக்கே சரியாகிப்போகும். பிறகு எங்கே காசு இருக்கப்போகிறது? அவள் உழைப்பதும் ஒரு வருடமாகத்தானே. அவனிடமும் உண்மையிலேயே பெரிதாக சேமிப்பு என்று இருக்கவில்லை. வருவதை வீட்டுக்கு அனுப்பிவிடுவான். கொஞ்சமாய் அவனுக்கு என்று வைத்திருப்பான். அதைக் கொடுக்க முன்வந்தபோதும், அவனைப்பற்றி அறிந்திருந்தவள் தேவை என்றால் கேட்பதாகச் சொல்லி மறுத்துவிட்டிருந்தாள்.

 

“எனக்கென்று யார் இருக்கினம் சொல்லுங்கோ.. அப்பாக்கும் ஒண்டு எண்டால் என்னால தாங்கவே ஏலாது தீபன். அவர் அங்க என்ன செய்யுறாரோ எண்டு தெரியாம.. ஒவ்வொரு நாளும் நரகம் மாதிரிக் கிடக்கு..” என்றவளிடம் உனக்கு நான் இல்லையா என்று கேட்கமுடியவில்லை. இந்த நேரத்தில் அந்தக் கேள்வி அபத்தம் அல்லவா.

 

அவள் தேடி அலைப்புறுவது தாயன்பை. அது கிடைக்காது என்பதில் தந்தையின் அருகாமைக்காகத் தவிக்கிறாள். அவனால் முடிந்தது அவளைத் தேற்றி அரவணைத்துப் போவது மட்டுமே!

 

“மயூம்மா அவரையும் நீ கொஞ்சம் விளங்கிக்கொள்ள வேணும். உனக்கே இப்படி இருக்கு எண்டால் அவருக்கு எப்படி இருக்கும் எண்டு யோசி. அந்த வீடு முழுக்க அவருக்கு நினைவுகள் நிறைஞ்சு கிடக்கும். அவே கல்யாணம் கட்டி வந்தது, சந்தோசமா வாழ்ந்தது, நீ பிறந்தது, உன்னை நல்லபடியா ரெண்டுபேருமே சேர்ந்து வளத்தது எண்டு நிறைய. அதையெல்லாம் நினைச்சுப்பார்த்து இனி அவா திரும்பியே வரமாட்டா எண்டு உணர்ந்து அவரா வெளில வரவேணும். அதுக்கு கொஞ்சம் டைம் நீ குடுக்கோணும் மா. யோசிச்சுப்பார், உன்னாலேயே இன்னும் வெளில வரமுடியேல்ல தானே..” என்று அவன் சொன்னதைக் கேட்டாளோ என்னவோ கொஞ்சநேரம் அவளிடம் பதில் இல்லை.

 

அவனது இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள். திகைப்புடன் பார்த்தான் பிரதீபன். அவளோ இன்னும் விரல்களோடு விரல்களைக் கோர்த்தாள். அவனுக்குள் இன்னுமே ஒன்றினாள். என்னவோ அவனுக்குள்ளேயே புதைந்துவிடுகிறவள் போல! பிரதீபனுக்கோ அவளின் நடவடிக்கையில் மேலும் மேலும் திகைப்புத்தான். தள்ளியிரு என்றும் சொல்லமுடியவில்லை. தாங்கமாட்டாள். அவனால் இதற்கு அனுமதிக்கவும் முடியவில்லை.

 

பெரும் திண்டாட்டத்தில் அவன் இருக்க திடீரென்று நிமிர்ந்து, “உங்களோடயே இங்க இருக்கவா தீபன்? எனக்கு அங்க தனியா இருக்கவே முடியேல்ல. இரவில நித்திரை வருதில்ல. என்னவோ பயமா இருக்கு. அம்மா மோசம்போக முதலும் இப்படித்தான் நெஞ்சுக்க என்னவோ செய்தது. இப்பவும்.. அப்பாவுக்கும்..” என்றவளுக்கு அதற்குமேல் முடியாமல் அழுகையில் உதடுகள் துடிக்க, கண்களில் கண்ணீர் கொட்டிற்று.

 

அவனோ, “அசடு! சும்மா கண்டதையும் நினைக்காத. அப்படி ஒண்டும் நடக்காது! நான் சொல்லுறன் பார், எங்கட குழநதைகளை உன்ர அப்பாதான் வளத்து தருவார். அந்தளவு காலம் மாமா எங்களோடயே இருப்பார்!” என்றான் அவளைத் தேற்றும் விதமாக.

 

அவளின் நடவடிக்கைகளே அவனுக்குள் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பிற்று. இதில் இங்கேயே இருக்கவா என்று கேட்டது இன்னுமே அதிர்ச்சிதான். அவன் அருகில் வருவதற்கே தயங்கியவள். அவளுடைய அறைக்குள் அனுமதிக்காதவள். இன்று அவன் வீட்டுக்கே வந்து, அவனுடனே நெருக்கமாக அமர்ந்து கேட்பது என்ன?

 

பாதுகாப்பு இன்மையும் பயமும் அவளைப்போட்டுப் பந்தாடுகிறது என்று விளங்கிற்று. எனவேதான் குழந்தைகளைப்பற்றிப் பேசி பேச்சின் திசையை மாற்றினான். அதற்குப் பயனும் இருந்தது. மெல்லிய முறுவல் அரும்ப, “உண்மையாவா?” என்று கேட்டாள் அவள்.

 

“பின்ன, நான் என்ன பொய்யா சொல்லுறன்?” என்று இளமுறுவல் பூத்தான் அவன்.

 

“அப்ப நாங்க கல்யாணம் கட்டுவமா?” கண்களில் ஆவலைத் தேக்கிக் கேட்டவளை அதிர்ந்துபோய்ப் பார்த்தான் பிரதீபன்.

 

இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.

error: Alert: Content selection is disabled!!