பேயாட்டம் ஆடிய மனது அமைதிகொண்டிருந்தது. அதன்பிறகுதான் நடந்துபோன நிகழ்வின் ஆழம் விளங்க தனக்குள்ளேயே குன்றிப்போனான் பிரதீபன். என்ன காரியம் செய்துவிட்டான். அவனே அவனளவில் தாழ்ந்துபோய் நின்றான். குன்றலோடு ஆழ்ந்து உறங்குகிறவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தில் ஏதாவது பயம் பதட்டம் தெரிகிறதா என்று தேடி அலைந்தது அவன் விழிகள். அவளோ அடித்துப்போட்டதுபோல் உறங்கி எழுந்தாள். கண் விழித்தவள் முகம் மலர அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தெளிவாகத் தானாகப் புன்னகைக்கிறாள்.
அவன் விழிகளில் தெரிந்த கேள்வியில் என்ன என்றாள் சிரித்துக்கொண்டு. நிர்மலமாய், கலக்கம் எதுவுமின்றி, எதுவுமே நடவாததைப்போல அவளின் பார்வையில், அவன் மனம் ஆசுவாசமானது. அவனை அவள் நம்புகிறாள். அவளைப் பயன்படுத்திக்கொண்டதாய் நினைக்கவில்லை. நெஞ்சில் நேசம் பிறக்க அவளருகில் சென்று அமர்ந்தான். சட்டென்று தாவி வந்து அவன் மடியில் தலை சாய்த்துக்கொண்டாள் மயூரி.
“எனக்கு நீதான்.. உனக்கு நான்தான். அதில உனக்கு நம்பிக்கை இருக்குதானே.” கரகரத்த குரலில் அவன் கேட்டபோது அவள் கண்ணீருடன் தலையசைத்தாள்.
“என்னில?” தன்னைத் தவறாக நினைத்துவிடுவாளோ என்கிற தவிப்பை விழிகளில் தேக்கிக் கேட்டவனுக்கு, இறுக்கி அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டுப் பதிலைச் சொன்னாள் மயூரி.
“வெறுமையா இருந்த மனசு நிறைஞ்சுபோயிருக்கு தீபன். என்னவோ யாருமே இல்லாம தனியா இருக்கிற பீல்.. பயமா இருக்கும்.. இரவில் எழுந்து அழுதிருக்கிறன். ஆனா இப்ப எனக்கு நீங்க இருக்கிறீங்க எண்டுற நம்பிக்கை வந்திருக்கு.” என்று அவன் மீதான நம்பிக்கையை வேகமாக அடுக்கினாள் அவள்.
“ஆனா மயூ.. இது மகா தவறு. நடந்திருக்கவே கூடாது. இதால பேபி இப்ப வேண்டாம் நமக்கு. உன்னால கவனமா இருக்க முடியும் தானே. இன்னும் ரெண்டு வருசத்துக்கு கல்யாணம் சரிவராது. இப்பதான் அக்காக்கு பாத்திருக்கு.. இனி தங்கச்சிக்கு முடிக்கவேணும். பிறகுதான் நமக்கு.. உனக்கு விளங்குதா என்ர நிலைமை?” குன்றலோடு கேட்டான்.
அவன் நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும். தடுத்திருக்க வேண்டும். உடனேயே திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறவன் இப்படி நடந்திருக்கக் கூடாதே! அவள் என்ன சொன்னாலும் என்னவோ அவளின் நிலையை அவன் பயன்படுத்திக்கொண்டதுபோல் ஒரு தோற்றம் உருவாகி அவனை வெட்கவைத்தது.
“அதெல்லாம் நான் கவனமா இருப்பன். நீங்க யோசிக்காதீங்க. நந்துன்ர சித்தி டொக்டர்தான்.” என்று குறும்புடன் கண்ணடித்தாள் அவள்.
“உன்ன…” பழைய மயூரியைப் பார்ப்பது போலிருந்தாலும் மனப்பாரம் இறங்கவே இல்லை அவனுக்கு.
“நீயாவது தடுத்திருக்கலாம் தானே. நீ எனக்கும் மேல.. என்ன ஆளடி நீ? பறக்கும் முத்தம் தந்தத்துக்கே அவ்வளவு கோவப்பட்டுட்டு இண்டைக்கு.. ப்ச்!” என்று தலையைக் கோதிக்கொண்டான் அவன்.
“டோய்! அந்தப் பிரதீபன் எனக்கு யாரோ.. இந்தத் தீபன் எனக்கு மட்டுமே சொந்தமானவன். வித்தியாசம் விளங்குதா?” அவன் மடியில் படுத்துக்கிடந்து அவனிடமே கேள்விகேட்டாள் அவள்.
என்றாலும் அவன் மனம் ஆறவேயில்லை. மடியில் கிடந்தவளை மனதில் குத்திய உணர்வோடு பார்த்தான். அவளுக்கு அவன் தவறு செய்துவிட்டானா? இன்னொருத்தி அவன் வாழ்வில் இல்லைதான். என்றாலும்.. இது எவ்வளவு பெரிய பிழை.. அவள் குற்றம் சாட்டினால் கூட மனம் ஆறும் போலிருந்தது.
“என்னில உனக்கு கோவமே இல்லையா?”
“எதுக்கு?” விளங்காமல் கேட்டாள் அவள்.
“நடந்ததுக்கு…”
“அதுக்கு நீங்க மட்டுமா காரணம்? நீங்க சொன்னதுதான். எனக்கு நீங்கதான் உங்களுக்கு நான் தான். பிறகு என்ன?”
“ப்ச்!” என்றவன் அவளை அணைத்துக்கொண்டான். “நான் வீட்டை போகேல்ல.”
அவள் கேள்வியாகப் பார்த்தாள்.
“அக்காக்கு கல்யாணம் சரிவந்திருக்கிறது உண்மைதான். ஆனா அங்க போனது எண்டு சொன்னதெல்லாம் பொய்.”
அவள் குழப்பத்துடன் பார்த்தாள்.
“அது.. உன்னை பிரிஞ்சு இருக்க முடியேல்ல. அதுதான் உன்ன பாக்காம, கதைக்காம இருந்தா கட்டுக்க வருவன் எண்டு நினைச்சன்.” குற்ற உணர்ச்சியோடு சொன்னான் அவன்.
“ரிசெல்ஸ் எப்படி?” முகத்தில் பரவிய பெரிதான சிரிப்புடன் கேட்டாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முதல் என்ன நடந்தது எண்டு தெரியும் தானே. அதுதான் ரிசெல்ஸ்.” சின்னச் சிரிப்போடு வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் அவன்.
“என்ன நடந்ததாம்?” அவன் கழுத்தை வளைத்தபடி கேட்டாள் மயூரி.
அவனும் இசைந்தான். இதழ்கள் உரசிக்கொண்டன. தேகங்கள் தீப்பற்றிக்கொண்டன.
“திரும்பத் திரும்ப என்ன கெட்டவனாக்காம விடடி!” என்றவனின் உதடுகள் அவள் இதழ்களின் உரசலில் இருந்து மீளவேயில்லை.
எதற்கும் ‘முதல்’ என்பதற்கு மட்டும் தானே பயமும் தயக்கமும். முதல் என்பதைக் கடந்துவிட்டால் நாளடைவில் அதுவே வழக்கமான ஒன்றுபோல் மாறிவிடும்.
அப்படித்தான் அவர்கள் வாழ்விலும். நாட்கள் நகர்ந்தது. அவர்களின் உறவும் தொடர்ந்தது. இரவுகளின் வாசம் அவளின் அறையாகிப் போயிற்று அவனுக்கு.
நந்தினியிடம் திட்டு வாங்கினாலும் உண்மையைச் சொல்லிவிட்டாள் மயூரி. கேட்டதும் நம்ப முடியாமல் பார்த்தாள் நந்தினி. மயூரியா இது? அவளால் நம்பவே முடியவில்லை. திட்டு திட்டென்று திட்டித் தீர்த்துவிட்டாள்.
“நந்து பிளீஸ் தீட்டாத.. தீபன்ல பிழையே இல்ல. நான் தான். என்னாலதான். என்னவோ வெறுமை.. எனக்கு தெரியேல்லடி. பிழை எண்டு விளங்குது.. ஆனா தீபன் இல்லாம நானும் இல்ல..” கண்ணீருடன் சொன்னவளின் சமாதானத்தை அவள் ஏற்கவேயில்லை.
“நீ என்ன விளக்கம் எண்டாலும் சொல்லு, ஆனா எலிக்கு பயந்து வீட்டையே கொழுத்தின கதைதான் இது!” என்று முடித்துவிட்டாள் நந்தினி.
“அப்பாக்குக்கூட சொல்லிட்டன் நந்து. அவருக்கு தேவகி ஆன்ட்டியும் சொல்லி இருக்கிறா போல. சத்தியமா நாங்க பிரியமாட்டோம். நம்படி!” தோழியின் சம்மதம் அவளுக்கு வெகு முக்கியமாயிருந்தது.
ஆனால் நந்தினியோ, அங்கிளுக்கு ஃபோனைப்போடு என்று சொல்லி, அவருக்கு இவர்கள் விரும்புவது தெரியுமா என்று விசாரித்துக்கொண்டாள். “மயூரின்ர விருப்பம் தானேம்மா என்ர விருப்பமும்!” என்றவரின் பேச்சைக் கேட்டவளின் விழிகள் மயூரியைக் குற்றம் சாட்டியது.
“அங்கிள் உன்ன எவ்வளவு நம்புறார் பாத்தியா? அவருக்கு நீ செய்றது சரியா எண்டு நீயே யோசி. எனக்கு எந்த விளக்கமும் தராத!” கண்டிப்புடன் சொன்னாள் நந்தினி.
குற்ற உணர்ச்சி தாக்க, தலையைக் குனிந்துகொண்டு கண்ணீர் உகுத்தாள் மயூரி. நந்தினிக்கோ அதற்கும் கோபம் தான் வந்தது.
“சும்மா அழாத மயூ! இந்தக் கண்ணீர் எதையும் சரியாக்காது! நீங்க சேருவீங்க எண்டுறதுக்காக நீங்க செய்றது சரி கிடையாது. விளங்குதா உனக்கு? இனியாவது கவனமா இரு! அவ்வளவுதான் நான் சொல்லுவன்!” என்றவள், அப்படியே சித்தியிடம் கூட்டிக்கொண்டுபோய் கருத்தடை மாத்திரையும் வாங்கிக்கொடுத்தாள்.
“உனக்கா உண்மையைச் சொல்லு?” என்று அவரிடம் வாங்கிய திட்டுக்கும் சேர்த்து இவளை ஒரு வழி செய்து முடித்துவிட்டிருந்தாள் நந்தினி.
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. அவர்களின் உறவில் எந்த மாற்றமும் இல்லை. கருத்தடை மாத்திரை மூலம் தன்னைக் காத்துக்கொண்டாள் மயூரி. பிரதீபனின் தமக்கைக்குத் திருமணமும் நல்லபடியாக முடிந்தது. நந்தினியும் அவளும் அவனுடைய நண்பர்கள் என்கிற பெயரில் திருமணத்துக்குப் போய்விட்டு வந்தார்கள். அப்போதுதான் பிரதீபனுக்கு புராஜெக்ட் விசயமாக சிங்கப்பூர் செல்லவேண்டி வந்தது.

