அத்தியாயம் 18
ஒரு மாதப் பிரிவு. அவனைப் பாராமல், அவனின் அணைப்புக்குள் அடங்காமல், அவனின் அருகாமையை அனுபவிக்காமல், அவன் குறும்புகளை ரசிக்காமல் எப்படி இருக்கப்போகிறாள்? மயூரிக்கு நினைக்கும்போதே கண்களில் நீர் கோர்த்தது!
நினைத்துப்பார்க்கவே என்னவோ கானகத்தில் தொலைந்துபோன குழந்தையின் மலைப்பைக் கொடுக்கையில் நிஜம்? மிகவுமே பயந்தாள். அவள் தைரியமான பெண்தான். அவனுடைய அன்பு, அவனுடைய காதல், அவனுடைய பாதுகாப்பு அவளைப் பலகீனமானவளாக மாற்றிப் போட்டிருந்தது. அவளுக்கானவற்றை எல்லாம் அவனே பார்த்துப் பார்த்துச் செய்து, எல்லாத்துக்குமே, ‘அவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்’ என்கிற எண்ணத்தோடு வாழப்பழகிக்கொண்டவளுக்கு திடீர் என்று நீ தனியாக இருந்துகொள் என்றதும் பெரும் துயராகத்தான் போயிற்று!
பேச்சுக்கள் குறைந்துவிட அவன் மடிக்குள் புகுந்துகொண்டு அவன் அணைப்புக்குள்ளேயே பூனைக்குட்டியைப்போல சுருண்டு கிடந்தாள் மயூரி.
“மயூ! ஒரு மாதம் தான். சும்மா சோக கீதம் வாசிக்கக்கக்கூடாது. சரியோ? போயிட்டு ஓடி வந்துடுவன். கவனமா இருக்கோணும்!” என்று பல புத்திமதிகளைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டவனைக் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள் மயூரி!
கடந்த நாட்கள் நரகமாகவே கழிந்துபோயிற்று! உண்ணப் பிடிக்கவில்லை, உறங்கப் பிடிக்கவில்லை, வேலைக்குப் போகப் பிடிக்கவில்லை. எதுவுமே பிடிக்கவில்லை.
நந்தினிக்கோ மயூரியின் இந்த மாற்றங்களில் பெரும் அதிருப்தி!
“இப்படி முழுசா அவனில தங்கி வாழாத மயூ! அவன் போனது கஷ்டமாத்தான் இருக்கும். எனக்கும் விளங்குது. ஆனா நீ இவ்வளவு தூரத்துக்குத் துடிக்கிறது.. ஆக கூடமாதிரி இருக்கு. கொஞ்சம் சுயமா இருக்கப்பழகு மயூ!” என்று புத்தி சொன்னபோது, ஆம் என்று தலையசைத்தவள் கூடவே கண்ணீரையும் உகுத்தாள்.
அதற்குமேல் கண்டிக்க மனமற்றுத் தானும் அவளை அணைத்துக்கொண்டாள் நந்தினி! “சரியடி மாடு! அழாத! உன்ர ஆள் வருவான். வந்து தரவேண்டியதை எல்லாம் தருவான். இப்ப சிரி பாப்பம்..” என்று அவளைச் சிரிக்க வைப்பதற்குள் அவள்தான் ஒருவழியாகிப் போயிருந்தாள்.
நாட்கள் இப்படியே ஓடிப்போயிற்று! ஒரு மாதம் என்று போனவன் இரண்டு மாதம் முடிந்துதான் திரும்பி வந்தான். வந்தவனை மெல்லிய கலக்கத்தோடு எதிர்கொண்டாள் மயூரி.
“கண்டதும் ஓடிவந்து கட்டிப்பிடிப்பாய் எண்டு பாத்தா, என்னடியப்பா ஒரு விதமா பாக்கிறாய்?” அவளை நெருங்கி அமர்ந்தபடி கேட்டான் பிரதீபன்.
கைகள் அதுபாட்டுக்கு அவளை வளைத்தது. “ரெ..ண்டு மாதம் மய்யு…” தாபத்துடன் நெருங்கியவனிடமிருந்து விலகினாள் மயூரி.
அவன் கேள்வியாகப் பார்க்க கலக்கத்தோடு அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள். அவனுக்குப் புருவங்கள் சுருங்கிற்று. எப்போதெல்லாம் பயப்படுகிறாளோ எப்போதெல்லாம் கலங்குகிறாளோ அப்போதுகளில் மட்டும் தான் அவள் இப்படிச் செய்வது வழக்கம்.
“மாமா என்னவாம்?”
“அவருக்கு ஒண்டுமில்ல. நல்லாருக்கிறார்.”
வேற என்ன…?
“ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா? நந்தினியோட சண்டை பிடிச்சியா?” அவளின் தலையை வருடிக்கொடுத்தபடி கேட்டான்.
“இல்ல..”
அவனுக்குத் தெரிந்து கேட்ட எல்லாக் கேள்விக்கும் இல்லை என்றால் வேறு என்ன?
“என்னில ஏதாவது கோவமா? டெய்லி கதைக்கேல்ல எண்டு. ஒரு மாதம் எண்டு சொன்னது ரெண்டு மாதம் ஆயிட்டுது எண்டு.”
அவளோ மறுத்துத் தலையசைத்தாள். “என்னில தான் கோவம்.” மெல்லிய குரலில் சொன்னாள்.
“உன்னில உனக்கா? தெரியாம இவனை காதலிச்சிட்டமே.. காதலிச்சது மட்டுமில்லாம கசமுசாக்கு எல்லாம் விட்டுட்டமே எண்டா?” குறும்புடன் கண்ணடித்துக் கேட்டான் அவன்.
தயக்கத்துடன் அவன் முகம் பார்த்துவிட்டு எழுந்துபோய் ஒரு ரிப்போர்ட்டைக் கொண்டுவந்து கொடுத்தாள் மயூரி.
புருவங்கள் சுருங்க வாங்கிப் பார்த்தவனுக்கோ அதிர்ச்சி. எட்டு வாரக் கருவுக்கு அவள் தாய். முகம் இறுகிப் போயிற்று. கண்களிலோ கனல் பறந்தது. “எப்படி?” என்றான் ஒற்றை வார்த்தையாய்.
அவனது இறுகிய தோற்றமும் கோபத்தில் சிவந்த முகமும் எரிக்கும் பார்வையும் அவளுக்குள் நடுக்கத்தை விதைத்துக் கண்ணீரை உற்பத்தி செய்தது. “அது நீங்க போன நேரம். என்ன விட்டுட்டு போகப்போறீங்க எண்டு அந்தக் கவலைல மறந்திட்டன். பிறகு நீங்க இல்லை எண்டு போடேல்ல..” மென்று விழுங்கினாள் மயூரி.
“மறதி! மண்ணாங்கட்டி மறதி!” அவள் சொல்லி முடிக்க முதலே ரிப்போர்ட்டை சுழற்றி எறிந்துவிட்டுப் போனான் அவன். இந்த புராஜெக்டை நல்லமாதிரி முடித்துக் கொடுத்திருந்தான். இனி அடிக்கடி இப்படிக் கிடைக்கும். பதவி உயர்வு போலத்தான். சம்பளமும் கணிசமாக உயரும். விரைவில் தங்கைக்கும் முடித்துவிட்டு மயூரியோடு செட்டில் ஆகவேண்டும் என்று பல கற்பனைகளோடு வந்தவனின் தலையில் இடியை இறக்கியிருந்தாள் மயூரி.
அவன் போட்டுவைத்திருக்கும் அத்தனை திட்டத்தையும் நொடியில் இடித்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டது போலிருந்தது.
மயூரியோ கண்மண் தெரியாத கோபத்தில் கண்களும் முகமும் சிவக்கப் போனவனைக் கண்டு விதிர்விதிர்த்துப்போனாள்.
அடுத்த கணமே அறைக்குள் ஓடிப்போய் அவனைச் சமாதானம் செய்தாள். ஜன்னல் கம்பிகளைப் பற்றிக்கொண்டு நின்றவன் அவள் சொன்ன எதையுமே காதுகொடுத்துக் கேட்க மறுத்தான்!
“என்னிலதான் பிழை தீபன். ஆனா என்ன செய்யச் சொல்லுறீங்க? குழந்தை வந்திட்டுதே. கோபப்படாதீங்க பிளீஸ்..” மென்மையாகக் கெஞ்சினாள்.
“நீங்க இல்லாம தனியா இருந்ததுல எனக்கு இந்த நினைவே வரேல்ல தீபன். இப்படி எண்டு அறிஞ்ச நாள் தொட்டு எனக்கும் நிம்மதி இல்ல. எனக்கு என்னவோ என்ர அம்மாவே எனக்கு மகளா பிறக்கப்போறா எண்டுற மாதிரியே இருக்கு..” என்றவளுக்குக் கேவல் வெடித்தது. முகத்தைப் பொத்திக்கொண்டு கண்ணீர் வடித்தாள். என்ன சொல்லி அவனைச் சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை.
அவனோ இறுகிப்போய் நின்றான். அவளின் எந்தச் சமாதானங்களுக்கும் அவன் எடுபடவில்லை. அழுது, கெஞ்சி, மன்னிப்புக் கேட்டு எதற்குமே அவன் இறங்கி வரவில்லை என்றதும், “இப்ப என்ன செய்றது எண்டு நீங்களே சொல்லுங்கோ?” என்றாள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு.
“அபார்ட் செய்வம்.” எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் அவன்.
கடவுளே… நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டாள் மயூரி. அவன் எதைச் சொல்லிவிடக்கூடாது என்று பதறினாளோ அதைச் சொல்லியேவிட்டானே!
அவளின் குழந்தை.. அம்மா.. அவள் நெஞ்சு ஒருமுறை வலித்துத் துடித்தது. அம்மாவை இன்னுமொருமுறை இறுதிப்பயணம் அனுப்பிவைக்கப் போகிறாளா?
இல்லை.. கூடாது.. எப்படியாவது அவனைச் சமாதானம் செய்யவேண்டும். எப்படி? எப்படி? மனம் பரபரத்தது.
பொலபொல என்று கொட்டிய கண்ணீரை வேக வேகமாகத் துடைத்துக்கொண்டு வந்து அவனைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினாள். அவள் அழுதாள் அவனுக்குப் பிடிக்காது. கோபப்படுவான். இதோ இப்போதும் அழுகிறாள் தானே. அதைப் பார்த்தாவது இரங்கமாட்டானா? மனம் ஏங்க அவள் பார்க்க அவனோ அப்போதும் ஜன்னல் வழியே வெளியேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“தீபன் என்னை ஒருக்கா பாருங்கோ பிளீஸ்!” அவன் முகத்தைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தாள். அவன் விழிகளோடு கலங்கிச் சிவந்திருந்த தன் விழிகளைக் கலந்து, “இது எங்கட குழந்தை தீபன். உங்கட ரத்தம். என்ர உயிர். நம்ம குழந்தை. நம்ம முதல் வாரிசு. இது நடந்திருக்கக் கூடாதுதான். ஆனா நடந்திட்டுதே. அதை அழிக்கலாமா தீபன்? எங்கட உயிரை நாங்களே கொல்லலாமா தீபன்?” கண்ணீருடன் கேட்டாள்.
அவனோ அவளின் கையைத் தட்டிவிட்டான். “இது நடந்திருக்கக் கூடாது! நடந்தே இருக்கக் கூடாது! நீ நடத்திப்போட்டாய். அதனாலதான் சொல்லுறன் அபார்ட் செய் எண்டு. விளங்குதா உனக்கு.?” கிட்டத்தட்ட உறுமினான் அவன்.
அவளின் பாதங்கள் பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்தது. அவளின் தீபனுக்கு இந்தளவுக்குக் கோபம் வருமா? அதுவும் அவளிடம்? அச்சத்தோடு நோக்கினாள். ஆனால் பயந்தோ நடுங்கியோ ஒதுங்கிப்போகும் நேரம் இதுவல்லவே!
அடுத்தகணம் அவனிடம் ஓடிப்போய் அவன் கையைப் பற்றிக்கொண்டு கெஞ்சினாள்.
“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்! உங்கட வாயால அப்படிச் சொல்லாதீங்கோ தீபன். அவளின்ர அப்பா நீங்க. அவள் தாங்கமாட்டாள். ரெண்டு வருசம் கழிச்சுத்தான் கல்யாணம் எண்டு பிளான் பண்ணினோம். அப்படியே இருக்கட்டும். இப்ப எழுத்தை மட்டும் முடிப்போம். என்ர சம்பளத்தில எங்கட குடும்பத்தை நான் ரன் பண்ணுறன். நீங்க உங்கட சம்பளத்தில ஒரு ரூபாயும் தரவேண்டாம். உங்கட குடும்பத்தை பாருங்கோ. கடமைகளை முடியுங்கோ. எந்தத் தொந்தரவும் நானோ என்ர பிள்ளையோ தரமாட்டோம் தீபன். ஆனா இப்ப ரெஜிஸ்டர் செய்வம் தீபன். ஓம் எண்டு சொல்லுங்கோ தீபன். பிளீஸ்.. பிளீஸ் தீபன் எனக்கு எங்கட குழந்தை வேணும் பிளீஸ்..” அப்படியே அவன் காலடியில் மடிந்து கதறினாள் மயூரி.
அவனோ இளகவே இல்லை. இரும்பாக இறுகிப்போய் நின்றான்.
“இந்தக் குழந்தை நாங்க சந்தோசமா வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சி தீபன். யோசிச்சுப் பாருங்கோ.. ஒரு ஆம்பிளை பிள்ளையோ பொம்பிளை பிள்ளையோ நாளைக்கு வளந்து வந்து அப்பா எண்டு கூப்பிட்டா எப்பிடி இருக்கும்?”அவளின் கேள்வியில் அவன் தாடை இறுகிற்று. ஒருகணம் விழிகளை இறுக்கி முடித் திறந்தான்.
அவனும் துடிக்கிறான் தான். அவனுக்கும் வலிக்கிறதுதான். ஆனால், உணர்வுகளின் பிடியில் அகப்பட்டுக்கொண்டு தற்போதைய நிலவரத்துக்கு உசிதமில்லாத காரியத்துக்கு ஆம் என்று சொல்ல முடியாதே!

