காதல் காயங்களே 18 – 2

அவளருகில் தானும் அமர்ந்துகொண்டு சொன்னான். “இங்க பார் மயூரி! நமக்கு இன்னும் வயசும் வாழ்க்கையும் தாராளமா இருக்கு. இந்தக் குழந்தையே வேணும் எண்டு ஏன் நிக்கிறாய்? நீ சொல்லுற மாதிரியே ரெஜிஸ்டர் செய்து பிள்ளை பிறந்தா ரெண்டோ மூண்டு வருசம் கழிச்சு அம்மா அப்பாவைக்கு முன்னால மனுசி மக்களோட நிண்டா எப்படி பாப்பீனம் நம்மை? காறித் துப்ப மாட்டினமா. குழந்தை குழந்தை எண்டு சாகிறியே இந்தக் குழந்தையையும் தான் ஊரே மோசமா கதைக்கும். அது பரவாயில்லையா உனக்கு? நான் எனக்காக மட்டும் சொல்லேல.. உனக்காகவும் உன்ர வயித்தில இருக்கிற குழந்தைக்கும் சேத்து தான் சொல்லுறன். உன்னை என்ர அம்மா மதிப்பாவா? கல்யாணத்துக்கு முதலே கர்ப்பமானவள் எண்டு தூற்ற மாட்டாவா? அப்பா மதிப்பாரா? இல்ல சகோதரிகள் அவேன்ர மனுசன் மார்.. அவேன்ர குடும்பம் எல்லாம் நம்மளை மதிக்குமா சொல்லு? பேரக்குழந்தை எண்டு அள்ளி அணைக்கவேண்டிய அம்மா அப்பா ரெண்டுபேரும் வெறுத்து ஒதுக்குவீனம். அப்ப அந்தக் குழந்தை எவ்வளவு பாவம் சொல்லு? ஏன் அப்படி ஒரு வாழ்க்கையை அது அனுபவிக்கோணும்?” அவனுடைய எந்த விளக்கத்தையும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தவறிழைத்தவர்கள் அவனும் அவளும். தண்டனை குழந்தைக்கா?

 

“எப்படியும் ரெண்டு வருசத்தில கல்யாணம் செய்றது எண்டு பிளான் பண்ணினோம் தானே. அப்ப பிள்ளைக்கு ஒரு வயதுதான் இருக்கும். பிழை விட்டுட்டோம் எண்டு சொல்லி மன்னிப்பு கேப்போமே தீபன்? அவேயும் மனுசர் தானே. மன்னிக்கமாட்டீனமா?”

 

அவனுக்கோ அவ்வளவு சொல்லியும் திரும்பவும் தன் பிடியிலேயே நிற்கிறாளே என்று சினம் பொங்கிற்று!

 

“கவனமா இருக்க உன்னால முடியல்ல. நீ எனக்கு திட்டம் போட்டு தாறியா. எத்தனை தரம், குழந்தை விசயம் கவனம் கவனம் எண்டு சொல்லி இருப்பன். அப்பயெல்லாம் தலையாட்டிப்போட்டு இப்ப என்ன வசனம் பேசுற.” என்றவன் அவளைக் கூர்ந்தான். “இல்ல.. இவன் எல்லாத்தையும் முடிச்சிட்டானே. கையை விட்டுட்டுப் போனாலும் போயிடுவான். இவனை பிடிச்சு வைக்க என்ன செய்யலாம் எண்டு யோசிச்சு திட்டம் போட்டுச் செய்தியா மயூரி?”

 

மூச்சும் பேச்சும் நிற்க அவனையே வெறித்தாள் மயூரி! கண்ணீர் அப்படியே கண்களுக்குள்ளேயே நின்றுபோயிற்று! திருமணமாகாமல், எந்தச் சாட்சியங்களும் இல்லாமல், அவனை மட்டுமே நம்பி அவனோடு அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கான பெறுபேறுதான் அவன் பேசியது! இத்தனை நாள் வாழ்க்கையில் அவன் விளங்கிக்கொள்ளாத ஒன்றை அவள் விளக்கித்தான் அவன் விளங்கிக்கொள்வான் என்றால்.. அது தேவையில்லை.

 

அவனோ அவளை உணரும் நிலையைத் தாண்டியிருந்தான். கோபம் வாயை மூட விடவில்லை.

 

“இப்ப என்ன உனக்கு? ஊருக்கே தெரியோணும், பிரதீபன் காதலிச்சவளை கல்யாணத்துக்கு முதலே கர்ப்பமாக்கிட்டான். அவன் கேவலமானவன். அலையுற கேஸ் எண்டு உனக்கு காட்டோணும். என்ர அம்மா அப்பாக்கு முன்னால உன்ன காதலி எண்டு அறிமுக படுத்தோணுமா இல்ல கர்ப்பவதியா இருக்கிறாய் எண்டு அறிமுகப் படுத்தோணுமா? கூடப் பிறந்ததுகள் காறித் துப்புவாளவே. அம்மா கேவலமா பாப்பா. அப்பா நீ எல்லாம் ஆம்பிளையா எண்டு கண்ணாலையே கேப்பார். உன்ர அப்பாவும் தான். கேவலமான ஒருத்தனை மகள் பிடிச்சிருக்கிறாள் எண்டு நினைப்பார். இதெல்லாம் தான் வேணுமா உனக்கு? என்னை சந்திசிரிக்க வச்சு கேவலப்படுத்தவேனும் எண்டு எத்தனை நாளா திட்டம் போட்டாய் மயூரி?” அபார்ட் செய்வதற்குச் சம்மதிக்காமல் அவள் போராடியதால் அவன் வெறிகொண்டிருக்க வேண்டும். வார்த்தைகளை அமிலமாகக் கொட்டினான்.

 

“போவம்…” ஒற்றை வார்த்தையில் ஓய்ந்துபோய் சொன்னவளைக் கண்டு அதிர்ந்தான் பிரதீபன்.

 

“மய்யு..” அவனுக்கும் தொண்டை அடைத்தது. சம்மதிக்கும் வரை சம்மதிக்க வைக்கப் போராடியவன், அவள் போவம் என்றதும் உடைந்தான். உயிரைக் குடையும் வலி அவனுக்குள்ளும் நமநமத்தது. அப்போ அவளுக்கு? குற்ற உணர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.

 

மெல்ல எழுந்து அவள் தளர்ந்த அடிகளை எடுத்துவைத்துப்போக, “மய்யு நில்லு..” என்று எட்டிப்பிடித்தான். அவளோ அவன் பிடிக்குள் அகப்படாமல் விலகினாள். அந்த ‘மய்யு’வுக்குள் எந்த மெய்யும் இருப்பதாகத் தோன்றவில்லை அவளுக்கு. அதுதான் எல்லாமே.. எல்…லாமே அவளை விட்டுப் போகப்போகிறதே!

 

“அதுதான் ஓம் எண்டு சொல்லிட்டன் தானே. எனக்கு களைப்பா இருக்கு..” என்றவள் உள்ளே சென்று குரலடைக்க அப்பொய்ன்மெண்ட் எடுப்பது கேட்டது.

 

தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் பிரதீபன். இது எங்கட குழந்தை தீபன்.. அப்பா எண்டு உங்களைக் கூப்பிடும்.. அவள் சொன்னதே காதுக்குள் எதிரொலித்தது.

 

நந்தினியின் சித்தியிடம் அழைத்துப்போனான் பிரதீபன். இருவரையுமே அப்பட்டமாக வெறுப்பை உமிழும் விழிகளால் மதிப்பற்று அளவிட்டார் அவர்.

 

“ஒரு உயிரை கொல்லுறதுக்கு தயாரா இருக்கிற நீங்க உங்கட உணர்ச்சிகளை கொன்றிருக்க வேணும். அதுக்கு ஏலாது ஆனா குழந்தையை கொல்ல ஏலும் என்ன? ஏன் எண்டால் அது நீங்க இல்ல. உங்களுக்கு வலிக்காது தானே. உங்கட கழுத்தையா திருகப்போறம். உங்கட கையை காலையா ஒவ்வொண்டா(ஒவ்வொன்றாக) பிடுங்கி எடுக்கப்போறோம்? அம்மாவும் அப்பாவும் என்னை நல்லா பாத்துக்கொள்ளுவீனம் எண்டு நம்பிக்கொண்டு வயித்துக்க கிடக்கிற அந்தப் பச்சை மண்ணைத்தானே கொல்லப்போறீங்கள்..” கொதிப்போடு வார்த்தைகளைக் கொட்டினார் அவர்.

 

கண்ணீர் மார்பை நனைக்க அப்படியே அமர்ந்திருந்தாள் மயூரி. அவர் சொன்ன காட்சிகள் கண்ணுக்குள் வந்துநின்று அவளின் உயிரைப் பிடுங்கி எறிந்தது! அவர் என்ன சொல்லியும், பிரதீபன் இறுகிப்போய் அமர்ந்திருந்தானே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.

 

“என்ன முடிவில மாற்றம் ஏதும் இருக்கா?” அவரும் வெறுப்புடன் கடைசியாகக் கேட்டார்.

 

விலுக்கென்று நிமிர்ந்த மயூரி, கடைசியாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள். அவன் சொல்லும் பதிலில் தான் அவளின் குழந்தையின் உயிர் தங்கி இருக்கிறது.

 

அவளைத் திரும்பிப் பார்த்தவன் அவரின் முகம் பாராமல், “மாற்றம் இல்ல டொக்டர்.” என்றான்.

 

மயூரியோ உடைந்து அழுதாள்.

 

டொக்டரின் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு. அவனைப் பார்வையாலேயே எரித்தார். அதைத் தாங்கமாட்டாமல், “நான் வெளில நிக்கிறன்.” என்றுவிட்டு வந்துவிட்டான் பிரதீபன்.

 

“அவர் ஆம்பிளை. அவருக்கு என்ன. ஆனா உனக்கு? நீ அம்மா எல்லா. உன்ர வயித்துக்க உன்ன நம்பி எல்லா கிடக்கு அந்த குழந்தை. பிச்சை எடுத்து எண்டாலும் தன்ர குழந்தையைக் காப்பாத்துறவள் தான் தாய். நீயெல்லாம்.. கொஞ்சம் கூடவா உனக்கு புத்தியில்ல. எனக்கு வார கோபத்துக்கு கொச்சை கொச்சையா திட்டவேணும் மாதிரிக் கிடக்கு! ச்செய்! நாகரீகம்.. இந்தக்காலம், மாடர்ன் உலகம் எண்டுசொல்லிக்கொண்டு நீங்க அடிக்கிற கூத்து இருக்கே.. சுதந்திரமா வாழுறோம் எண்டுற பெயர்ல கேவலமான உங்கட இச்சைகளைத்தான் தீர்க்கிறீங்களே தவிர ஒழுக்கமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. இண்டைக்கு இதுக்குச் சம்மதிக்கிறாய் எல்லா.. நாளைக்கு உனக்கும் இதே நிலமை வந்து நிக்கும் பார்!” என்றவர், “நட அறைக்கு!” என்றார் மதிப்பே இல்லாத குரலில் உதாசீனமாக.

 

தலையைப் பிடித்துக்கொண்டு சிலையென அமர்ந்திருந்த பிரதீபனின் நொடிகள் ஒவ்வொன்றும் நரகமாய் கழிந்தன. நகரவே நகராதா என்று பொழுது நகர்ந்துமுடிந்தபோது வெளியே வந்த மயூரி ஓய்ந்துபோயிருந்தாள்.

 

அனைத்தும் முடிந்து போயிற்று! அழுகை நின்றிருந்தது.

 

அவளைக் கண்டதும் அறை வாங்கியவன் போல் அவளையே பார்த்தான் அவன்.

 

அவனுடைய விருத்தி அழிந்தே போயிற்று… அவன் மனம் ஊமையாய் அழுதது.

 

“போவம்..” என்றாள் மயூரி அவன் முகம் பாராமல். உதட்டைக் கடித்தான் பிரதீபன். ஒரு பெருமூச்சுடன் அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

 

“என்ர ரூமுக்குப் போவம்..” பைக்கில் அமர்ந்ததும் பொதுவாகச் சொன்னாள்.

 

அவனும் அங்கேயே விட்டான். அறையின் கதவைத் திறந்து அவனை உள்ளே விடாமல் வாசலிலேயே நின்று, “எனக்கு கொஞ்சம் தனியா இருக்கோணும்!” என்றாள், அப்போதும் அவன் முகம் பாராமல்.

 

“மயூ..” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் வெறுமை நிறைந்த விழிகள் அவனை வாயடைக்க வைத்தது. அவளின் ஓய்ந்த தோற்றம் என்னவோ செய்தது. இதற்கு அவன்தானே காரணம். உதட்டைக் கடித்தான்.

 

“நாளைக்கு வாறன்.” என்று திரும்பியவனை, “இனி இங்க வராதீங்க.” என்றாள் அவள்.

 

அவன் திகைப்புடன் பார்க்க, “உங்களுக்கு நிறையக் கடமைகள் இருக்கு பொறுப்புகள் இருக்கு. அதையெல்லாம் முடிங்க மிச்சத்தை பிறகு பாப்பம்..” என்றாள் அவள்.

 

பிரதீபன் அவளையே பார்த்தான். அவளின் வலியை அவனால் உணர்ந்துகொள்ள முடிகிறதுதான். ஆனால்…

 

அவள், “பாய்!” என்றபடி கதவடைத்துக்கொண்டாள்.

 

அதுதான் அவளைக் காண்பது கடைசியாக இருக்கப்போகிறது என்பதை அறியாமல், அங்கேயே நின்றுவிட்டு மனதில் பாரத்தோடு இறங்கிச் சென்றான் அவன்.

 

 

error: Alert: Content selection is disabled!!