அத்தியாயம் 2
சொல்லிவிட்டு வந்த சம்மதத்தை ஜீரணிக்க முடியாமல், காரிலேயே அமர்ந்துவிட்டான் பிரதீபன். வாழ்க்கை மீதான பற்றுதல் அற்றுப்போய் நிறைய நாட்களாகிவிட்டது. இன்றோ, அனைத்துமே வெறுத்துப்போயிற்று! தன்னைத் தானே வெறுத்தான்!
‘பொறுப்பான மகனாம்’ அம்மா சொல்கிறார். அவனுடைய பொறுப்பைப் பற்றி அவள் ஒருத்தியிடம் கேட்டால் உண்மையைச் சொல்லுவாள்.
எல்லோருக்குமே எல்லோருமே நல்லவர்களாக இருந்துவிட முடியாது என்பதற்கு அவனே சாட்சி.
கொலைக்குச் சமனான பாதகமொன்றைச் சத்தமே இல்லாமல் நிகழ்த்திவிட்டு நானும் ஆண்பிள்ளைதான் என்று தலையை நிமிர்த்திக்கொண்டு திரியும் அவனுக்குள் குற்ற உணர்ச்சி கரையான்களாக அரித்தெடுப்பதை எவர் அறிவர்?
வேலைக்குச் சென்றவனை வேலைகள் முழுதாக விழுங்கிக்கொண்டது. மாலை ஒரு மீட்டிங். அது முற்றுப்பெற்றிருந்தபோது முற்றிலுமாகக் களைத்துப் போயிருந்தான். ஆனபோதிலும், வீடு செல்ல விருப்பமில்லை.
பெண் தயார் என்று அம்மா எதையாவது சொல்லிவிடுவாரோ என்று பயம். உண்மையிலேயே பயந்தான்.
அவர் சொல்வதுபோல அவர் இருக்கிறார் என்கிற எண்ணம் தானோ தனியாக இருக்கச் சொல்கிறது. அம்மாவுக்குப் பிறகு? இந்தக் கேள்வி அவனுக்கும் உண்டுதான். ஆனால் திருமணத்தின் மீதான மயக்கம், ஆசை, எதிர்பார்ப்பு, கனவு இப்படி எதுவுமே அவனிடம் இல்லையே.
‘என்ன செய்யலாம்?’ என்று எண்ணியவன், கண்ணில் அகப்பட்ட தியேட்டருக்குள் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நுழைந்தான்.
திரை இருண்டு கிடந்தது. மங்கலான வெளிச்சத்தில் இருக்கை ஒன்றைத் தேடி விழிகளைக் கூர்மையாக்கிச் சுழற்றினான். ஒரு பெண் குழந்தை. வாசலையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளை எங்கேயோ பார்த்திருக்கிறான். எங்கே பார்த்தோம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் அவனது நினைவடுக்குகள் குழம்பிக் கிடந்ததால் அப்படியே விட்டுவிட்டு அவளை நோக்கிச் சென்றான். அவளின் இரண்டு பக்க இருக்கைகளும் வெறுமையாக இருக்க நடுவில் அவள் இருந்தாள். ஒன்றில் அமரப்போக, வேகமாக ஒரு கையை அந்த இருக்கையில் வைத்து, “இங்க அம்மா வருவா அங்கிள்.” என்றாள் சின்னத் தயக்கத்தோடு.
அந்நிய அவனிடம் மெல்லிய பயம். இருந்தபோதிலும் தன் தேவையைத் துணிவுடன் அவள் சொல்லவும் தவறவில்லை. அது மனத்தைக் கவர, முறுவலித்து, “அந்தப்பக்கம்?” என்று கையால் காட்டிக் கேட்டான்.
“அதுல இருங்க.” என்றாள் தலையை ஆட்டி.
ஒரு புன்னகையை அவளிடம் கொடுத்துவிட்டு அமர்ந்துகொண்டான். மீண்டும் ஒருமுறை வாசலை நோக்கிவிட்டு அவள் அவனைப் பார்த்துச் சிரிக்கவும், “உனக்கு விஜய் மாமாவைப் பிடிக்குமோ?” என்று விசாரித்தான்.
கண்கள் மின்ன பெரிய சிரிப்போடு தலையை மேலும் கீழுமாக அசைத்தாள் அவள். அதுதான் தாயை இழுத்துக்கொண்டு வந்திருக்கிறாள். அவன் உதட்டின் முறுவல் விரிந்தது.
“அப்ப அஜித் மாமா?”
அதற்கும் அதே தலையாட்டல் தான்.
“சூர்யா அங்கிள்..”
அவன் கேட்டு முடிக்க முதலே தலையை ஆட்டினாள்.
“ஆக மொத்தத்தில நல்லா படம் பாப்பாய் போல.” அவன் சிரிப்புடன் கேட்க அந்தப் பூமுகம் முழுவதுமே புன்னகையோடு சின்ன வெட்கமும் பரவிப்போயிற்று!
எத்தனை அழகு? மனம் கொள்ளை போக அவளையே பார்த்தான். அம்மா சொன்னதுபோல அவன் மணமுடித்திருக்க இவளைவிடப் பெரிய பிள்ளை ஒன்று அவனுக்கும் இருந்திருக்கும். அந்த எண்ணவோட்டத்தின் கனத்தைத் தாங்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டான்.
அருகில் இருப்பவள் அடிக்கொருதரம் குழப்பத்தோடும் யோசனையோடும் தன் பெரிய விழிகளைத் திருப்பித் திருப்பி அவனைப் பார்த்தத்தையோ, அவளின் அன்னை வந்து அமர்ந்ததையோ அல்லது திரைப்படம் தொடங்கியதையோ உணராமல் தனக்குள் உழன்றுகொண்டிருந்தான் அவன்.
இடையில் புஸ்பவதி அம்மா அழைத்து, “தம்பி, அக்காவுக்கு சொல்லிட்டன்.” என்று ஆரம்பிக்க, இருந்த மன உளைச்சலில், “அதுதான் நீங்க விரும்பின மாதிரி கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லிட்டன் தானே. பிறகும் ஏன் என்னை தொந்தரவு செய்றீங்க. வைங்கம்மா!” என்றுவிட்டு வைத்திருந்தான்.
இரவு பதினொருமணி தாண்டிய பிறகுதான் வீடு வந்து சேர்ந்தான். பாண்ட் பொக்கெட்டில் இருந்து வீட்டுத்திறப்பை எடுக்கமுதலே, வந்து கதவைத் திறந்தார் புஸ்பவதி.
‘என்ன வரப்போகிறதோ?’ கலவரத்தோடு அவரை நோக்கினான். உறக்கத்தின் சாயல் படர்ந்திருந்தாலும், தெளிந்த முகத்தோடு இருந்தார் புஸ்பவதி. அதன்பிறகுதான் நிம்மதியானான். கூடவே, உறங்காமல் விழித்திருந்தவரின் மீது மெல்லிய கோபமும் வந்தது.
“படுக்காம என்னம்மா செய்றீங்க? நேரம் என்ன தெரியுமா?”
“இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே தம்பி. உனக்கு எண்டு ஒருத்தி வந்திட்டாள் எண்டால் இதையெல்லாம் அவள் பாப்பாள். நான் நிம்மதியா படுப்பன் தானே.” இயல்பாகச் சொன்னபடி உறங்கச் சென்றவரைக் கண்டு மனம் நெகிழ்ந்து போயிற்று அவனுக்கு.
இதுதான் வாழ்க்கை போலும். அது பாட்டுக்கு நாமும் போகவேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டான். ‘என்னால் முடியாது’ என்று முரண்டிய மனதை அப்படியே விட்டுவிட்டான். அந்த மனத்துக்குப் பிடித்து வாழ்ந்த நாட்கள் எல்லாம் அவன் வாழ்வில் இனி வரப்போவதில்லை.
நெஞ்சில் என்னவோ கனமாய் அழுத்தியது.
நாட்களும் நகர, புஸ்பவதி திருமணம் பற்றிப் பேசும்போதெல்லாம் அவனுக்குள் ஒரு முள்ளுக் கிடந்து தைக்காமல் இல்லை. அந்த முள்ளைக் காலத்துக்கும் அகற்ற முடியாது. அதனோடுதான் இனி அவன் வாழ்க்கை. எனவே, வருவதை எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டான்.
நான்கைந்து பெண்களைப் பற்றி அன்னை சொன்னபோதும் அவனுக்குள் பெரிய சுவாரசியமோ எதிர்பார்ப்போ இல்லை. ஃபோட்டோக்களைப் பார்த்து எந்தப் பிடிப்பும் வரவுமில்லை. அவனுக்கே அவனை எண்ணிக் குழப்பம். ‘அந்தளவுக்கு வயசு போயிற்றா? இல்ல, வாழ்க்கை மீதான பற்றுதல் போயிற்றா..’
“எனக்கு யாரையும் பிடிக்கிற மாதிரி இல்லையம்மா. எதை வச்சுத் தெரிவு செய்றது எண்டும் தெரியேல்ல. நீங்களே பாத்து முடிவு செய்ங்க.” என்றுவிட்டுப் போனவனை வேற்றுக் கிரகவாசியைப்போல் பார்த்தார், புஸ்பவதி.
‘ஊருக்க அவனவன் தெருவுக்கு ஒருத்தி எண்டு சைட் அடிக்கிறான். இவன், நான் காட்டுற பொம்பிளையளை கூட பாக்கிறான் இல்ல. அதையும் நான் சொல்லிக் குடுக்கேலுமா(குடுக்க இயலுமா)? என்னத்த பெத்து வளத்தனோ தெரியாது.’ என்று தன்னையே நொந்துகொள்ளத்தான் முடிந்தது அவரால்.
‘வாறவளுக்குத் திறமை இருந்தா பிடிப்பை வரவைக்கட்டும். என்னை அவளுக்குப் பின்னால சுத்த வைக்கட்டும். அது அவளின்ர சாமர்த்தியம்’ நடக்கும் என்கிற நம்பிக்கையே இல்லாமல், கண்ணுக்குத் தெரியாதவளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டான்.
அப்போதுதான், வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தங்களின் புராஜெக்ட் ஒன்றைக் கொடுப்பதற்காக ஐடி நிறுவனங்களை பொதுவான ஒன்றுகூடல் ஒன்றுக்கு அழைத்திருந்தது. பிரதீபனும் அவனுடைய நிறுவனம் சார்பாகச் சென்றிருந்தான். ஒன்றுகூடல் முடிந்து வெளியேறியபோது, இன்னொரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நண்பன் ஜெய் இவனைக் கண்டுவிட்டு, “பிரதீப்! நில்லடா வாறன்.” என்றான், சத்தமாக.
‘கார் பார்க்கிங்ல நிக்கிறன், வா’ என்பதுபோல் சைகையில் சொல்லிவிட்டு, பார்க்கிங் சென்று காருக்குள் ஏறியிருந்த வெப்பத்தைத் தணிக்கக் கண்ணாடிகளை இறக்கிவிட்டான். காரில் சாய்ந்து நின்று கல்லடி பட்டதும் கலைந்த தேனீக்கள் போல மீட்டிங் முடிந்து வெளியேறிய பல்வகை மனிதர்களை அசுவாரசியாமாக அலசிக்கொண்டிருந்தான்.

