“என்ன ப்ரோ, கல்யாணச் சாப்பாடு எப்ப போடப்போறாய்.” செல்லமாய் இவன் வயிற்றில் குற்றிக் கேட்டான் அங்குவந்த ஜெய்.
‘இவனுமா..’ என்று மனம் உள்ளுக்குள் அலறினாலும், ‘இப்படி பாக்கிறவன் எல்லாம் கேக்கிற நிலமைக்கு வந்திட்டியேடா பிரதீபா..’ என்று நொந்து, “அம்மா பாக்கிறாடா.” என்றான் பதிலாக.
“வர்றே வா! ஒருவழியா வயசுக்கு வந்திட்டாய். மாப்பிள கல்யாணத்துக்கு ரெடி எண்டு சொல்லுறாய்..” என்றபடி திரும்பியவன், அங்கே ஒரு பெண் செல்வதைக் கண்டுவிட்டு, “ஹல்லோ மேடம்.. என்ன வெளிக்கிட்டிங்க போல!” என்றான் அவளிடம்.
‘ஒருத்தரையும் ஒழுங்கா வீடு போய்ச்சேர விடமாட்டான் இவன்..’ என்று திரும்பியவனின் பார்வை அங்கே நின்றவளைக் கண்டு அப்படியே நிலைத்தது. அவள்தானா? ஈரைந்து வருடங்கள் கழிந்து காண்கிறான். உடனேயே இனம்கண்டு கொள்ளும் அளவில் அப்படியே இருந்தாள். தான் காண்பது அவளைத்தான் என்று நம்பமுடியாமல் திகைத்து நின்றான் பிரதீபன்.
அவளும் இவனைப் பார்த்துவிட்டாள். சிலநொடிகள் அவனிடமே நிலைத்தபோதும் ஜெய்யிடம் திரும்பி, “ஓம் அண்ணா. இனியும் லேட்டானா ஆதிராவை சமாளிக்க ஏலாது. போயிட்டு வாறன்.” என்றுவிட்டு நகர்ந்தாள்.
அதே குரல்! அந்தக் குரலின் தீண்டலே அவனைச் சிலிர்க்கச் செய்ய அவளையே பார்த்திருந்தான். அதே மெல்லிய தேகம். இன்னும் பொலிவேறியிருந்த முகம். டொப்பும் ஜீன்சுமாக நாகரீகமங்கையாக நின்றிருந்தாள்.
“ஒரே ஒரு நிமிசம் இங்க வா.” என்றுவிட்டுத் தன் காருக்கு ஓடினான் ஜெய்.
அருகில் வந்தவள் எதுவும் பேசாமல் ஜெய் போன திசையையே பார்த்துக்கொண்டு நிற்க அவனால் நம்ப முடியவில்லை.
அவன் முன்னால் நிற்பது மயூரி. தேடித் தேடிக் களைத்து, ஓய்ந்து தேடுவதைக் கைவிட்டபிறகு வந்து நிற்கிறாள். இத்தனை வருடங்களாகக் கண்ணில் படாதவள், தேடியபோது கிடைக்காதவள், தவித்தபோது வராதவள், அவளைக் கடந்து பயணிப்போம் என்று காலடி எடுத்துவைத்த கணத்தில் வந்து நிற்கிறாள்.
என்னைத் தாண்டி உன்னால் போகமுடியுமா என்று அவள் கேட்பது போலிருந்தது அவனுக்கு.
அதோடு, யார் அந்த ஆதிரா? இத்தனை நாளாய் எங்கிருந்தாள்? எதற்காக அவனைத் தன் தொடர்பு எல்லைக்கு அப்பால் தூக்கி எறிந்தாள்? சாம்பிராணியைப் போட்டதும் கிளம்பும் புகைபோன்று, அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் கிளம்பின.
அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதும், அதை அவள் அசூசையாக உணர்கிறாள் என்பதும், புத்திக்கு உரைத்தும் விழிகளை அகற்ற முடியவில்லை அவனால்.
“எப்பிடி இருக்கிறாய் மயூரி?” மெல்ல ஆரம்பித்தான். குரல் வழமையான தெளிவுடன் வர மறுத்தது.
“நல்லாருக்கிறன். நீங்க?” காற்றுவந்து கலைத்த முடியைக் காதோரமாக ஒதுக்கியபடி இயல்பாக உரையாடினாள் அவள்.
அவனால் அதை நம்பமுடியவில்லை. அவனை அவள் பாதிப்பதுபோல அவளுக்குள் அவன் மீதான பாதிப்பு எதுவுமே இல்லையோ? அடிவாங்கிச் சுருண்டது மனது!
அவளுக்குத் திருமணமாகியிருக்கலாம். அந்த ஆதிரா அவளின் பெண்ணாய் இருக்கலாம். இன்னும் எத்தனையோ மாற்றங்கள் இத்தனை ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கலாம். இதோ, அவனும் தானே திருமணத்துக்குச் சம்மதித்திருக்கிறான். அப்படி, ஓடுகிற வாழ்க்கையில் மனிதர் மாறிக்கொண்டு போவது இயல்புதான். ஆனாலும், நாம் நேசித்த ஒருவரை எந்தக் காலத்திலும் இயல்பாகக் கடந்துசெல்ல முடியுமா என்ன?
“இங்கதான் இருக்கிறியா? நான் கண்டதே இல்லையே.” என்றான்.
இனம் விளங்காத பொருளோடு அவளின் பார்வை ஒருமுறை அவனில் படிந்து மீண்டது.
“ரெண்டு வருசமா இங்கதான். நான் உங்களைக் கண்டிருக்கிறன்.” அதைக்கேட்டு பிரதீபனின் விழிகளில் மெல்லிய அதிர்வு வந்துபோனது.
அவனைக் கண்டும் அவனோடு கதைக்காமல் இருந்திருக்கிறாள். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, இரண்டு வருடமாக. அவளால் அதைச்செய்ய முடிந்திருக்கிறது.
‘அந்தளவுக்கு பத்தோட பதினொன்றா என்னைக் கடந்துபோக உன்னால முடிஞ்சதாடி?’ என்று சூடாகக் கேட்கவேண்டும் போலிருந்தது. நிலையான முடிவை எடுப்பதிலும், அதிலேயே நிலைத்து நிற்பதிலும் அவள் வல்லவள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?
அவளோ கையில் எதையோ கொண்டுவந்துகொண்டிருந்த ஜெய்யைப் பார்த்துப் புன்னகைத்து, “என்ன அண்ணா இது?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள். என்ன இருக்கும் என்கிற ஊகத்தில் முகம் முழுவதுமே சிரிப்புப் பரவியது.
“ரஃபெலோ. உன்ர மகளுக்கு விருப்பம் எல்லா..” என்றபடி அதனை நீட்டினான் ஜெய்.
“ஐயோ அண்ணா. சும்மாவே ஒரே சொக்லேட்ஸ் தான் சாப்பாடு. இதுல நீங்களும் சேர்ந்து கெடுக்கிறீங்கள்.” மகள் மீதான பிரியத்தில் முகம் கனிய வாங்கித் தன் கைப்பைக்குள் மறைவாக வைத்துக்கொண்டவளை நம்ப முடியாமல் பார்த்தான் பிரதீபன்.
“மகள் இருக்கிறாளா உனக்கு?” அவனே ஊகித்தான் தானே. என்றாலும் அவள் வாயால் கேட்டபோது, ஏமாற்றமும் தோல்வியும் மனத்தைக் கவ்விப் பிடிக்க இறுகிவிட்ட குரலில் கேட்டான்.
அவள் பதில் சொல்லமுதல், “உனக்கு மயூரியத் தெரியுமாடா?” என்று கேட்டான் ஜெய்.
“அது ஒரு பத்து வருசத்துக்கு முதல் இருக்கும் அண்ணா. வேலைக்குச் சேர்ந்த புதுசுல ஒரே ஏரியால இருந்தனாங்க. அப்ப பழக்கம். பிறகு டச் விட்டுபோச்சு.” என்று அவள் சொன்னபோது, ‘ஓ’ என்று கேட்டுக்கொண்டான் ஜெய்.
“மயூரின்ர மகள் ரெண்டாவது தான் படிக்கிறாள். ஆனா வாய் இருக்கே.. அவளிட்ட கதைச்சு வெல்லமாட்டாய். உனக்கும் அவளைத் தெரியுமடா..” ஜெய் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, மயூரிக்கு ஃபோன் வந்தது
“ஆதிராதான்.” என்றபடி எடுத்துக் காதுக்கு கொடுத்தாள்.
அப்போதுதான் வெளிவந்திருந்த அந்த ஆப்பிள் ஃபோன் அவளின் பொருளாதார நிலையையும் பறைசாற்றியது.
“எங்கம்மா நிக்கிறீங்க? பத்து நிமிசத்தில வாறன் எண்டு சொல்லியே முப்பது நிமிசம் ஆயிட்டுது!” இளங்குரல் ஒன்று செல்லக்கோபத்துடன் ஒலிப்பது அவனுக்கே கேட்டது.
“இந்தா வெளிக்கிட்டன் செல்லம். இப்ப வந்திடுவன். ஜெய் மாமாதான் பிள்ளைக்கு என்னவோ தாறன் எண்டு மறிச்சவர். இப்ப கார் எடுக்கப்போறன். இன்னும் பத்து நிமிசத்துக்க வந்திடுவன். சரியா.” என்றபடி ஃபோனை அணைத்துவிட்டு, “இதுக்கும் மேல நிண்டா அவளைச் சமாளிக்க ஏலாது அண்ணா. போயிட்டு வாறன். பாய் பிரதீபன்!” என்று, விடைபெற்று நடந்தவளிடமிருந்து பார்வையை அகற்றுவது கடினமாயிருந்தது அவனுக்கு.
பிரதீபனாம் பிரதீபன்! தாடை இறுகியது பிரதீபனுக்கு!

