காதல் காயங்களே 20 – 1

அத்தியாயம் 20

 

கடவுளே.. அவள் மனம் அரற்றியது. எல்லாத் துன்பமும் ஒரே நேரத்தில் வந்தால் எப்படித் தாங்குவாள். இனிக் கதைப்பதற்கே தெம்பற்று நிற்கிறவளை இந்த அர்ஜுன் என்ன செய்யப் போகிறான்?

 

வேகமாக விழிகளைத் துடைத்துக்கொண்டு இமைகளைப் பிரித்துவிட்டு அழுத தடம் தெரியாமல் மறைத்துக்கொள்ள முயன்றவளைக் கண்டு, ஊமையடி பிரதீபனின் நெஞ்சில் விழுந்தது. இப்படித்தான் கண்ணீர் வடிக்கும் உள்ளத்தை மறைத்துக்கொண்டு வெளியே நிமிர்ந்து நிற்கிறாளா?

 

அவளோ பெரும் பதட்டத்தில் இருந்தாள். வருகிறவனைவிட அருகில் நிற்கிறவன் ஆபத்தானவனாயிற்றே! இவன் இருக்கும்போதா இந்த அர்ஜுன் வரவேண்டும்?

 

பிரதீபனின் புருவங்கள் சுருங்கிற்று! அத்தனை நேரமாய் இருந்த மயூரி இல்லை இவள். இவளிடம் என்னவோ பயம், படபடப்பு, பதட்டம். ஏன்? அவன் வந்தபோது கூட எந்த உணர்வையும் காட்டாமல் நிமிர்வாக எதிர்கொண்டவள் வருகிறவனைக் கண்டு ஏன் அதிரவேண்டும். ஆதிராவின் அப்பாவோ? நினைத்த மாத்திரத்தில் வலியில் சுருண்டது அவன் இதயம்.

 

அப்படியே இருந்தாலும் மயூரியின் இந்த மாற்றம் பொருந்தாமல் தனித்துத் தெரிந்தது.

 

மயூரியோ தன் முன்னே வந்திருந்தவனைப் பதட்டத்தோடு நோக்கிவிட்டு இவனைத் திரும்பிப் பார்த்தாள். பிரதீபனும் அவள் விழிகளையே கூர்ந்தான். அலைபாய்ந்து தடுமாறிய அந்த விழிகளில் எதைக்கண்டானோ அவளருகில் தானும் அமர்ந்துகொண்டான். “நான் இருக்கிறன். நீ கதை!” என்றான். துணையாக உனக்கு நானிருக்கிறேன் என்றானா? இல்லை, நீ போகச் சொன்னாலும் நான் போகமாட்டேன் என்றானா. சொன்னவனுக்கும் தெரியாது கேட்டுக்கொண்டவளுக்கும் தெரியாது.

 

ஆனால், அவளின் வாழ்வு மீண்டும் திசைமாறப்போகும் புள்ளியில் நிற்பதை உணர்ந்தாள் மயூரி. அந்த எண்ணம் வேறு அவளைப்போட்டுப் பந்தாடியது!

 

ஆறிப்போன டீ கவனிப்பார் அற்றுக் கிடக்க, கேக் துண்டினை எடுத்தான் பிரதீபன்.

 

தான் வந்தும் ஒரு வார்த்தை பேசாமல் அமர்ந்திருக்கும் மயூரி அர்ஜுனைப் பாதித்தாள். நண்பனாகக் கூட நலம் விசாரிக்க மாட்டாளா? அருகில் இருந்தவனை ஒருமுறை பார்த்துவிட்டுக் கேள்வியாக மயூரியை நோக்கினான். பிரதீபனை யார் என்று அறிமுகம் செய்வாள்? அதைவிட, அவன் அவளைத் தேடிக்கொண்டு இங்குவரை வந்ததில் சினம் துளிர்விட்டிருந்தது அவளுக்கு.

 

எனவே, அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு, “எப்ப வந்தீங்க அர்ஜுன்?” என்றாள் வெறுமையாக. அதில், ஏன் வந்தாய் என்கிற கேள்வி பொதிந்து கிடக்க, அவன் சின்னதாய்ச் சிரித்தான்.

 

“அவுஸ்திரேலியால இருந்து இவ்வளவு தூரம் உன்னைத் தேடி வந்தவனை எப்படி இருக்கிறாய் அர்ஜுன் எண்டு ஒரு கேள்வி கேக்கவே மாட்டியா மயூரி?”

 

வாயருகில் கேக் துண்டினைக் கொண்டுபோன பிரதீபனின் கை அப்படியே அந்தரத்தில் நின்றுபோயிற்று. அவனேதான்! அதிர்வோடு மயூரியைப் பார்த்தான். ஒருமுறை தொலைத்தான் தான். மீண்டுமா? அவன் கைப்பொருள் தொலையப்போகிறது என்று தெரியாமல் தொலைத்தபோது எப்படியோ உயிர் வாழ்ந்துவிட்டவனால், இப்போது கண்முன்னே கையை விட்டே போய்விடுவாளோ என்கிற எண்ணம் துடிக்க வைத்தது.

 

சற்றுமுன் ‘உன் கணவனோடு சேர்ந்து வாழ்’ என்று அவனே சொன்னான் தான். ஆயினும், சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்? உயிரை நசுக்கும் துன்பத்தை அந்தக் கணத்தில் அனுபவித்தான் பிரதீபன். அவனுடைய ஆத்மார்த்தமான வாழ்வுக்கு, தான் எத்தனை இன்றியமையாதவள் என்று மீண்டுமொருமுறை அவனுக்கு உணர்த்தினாள் அவன் நேசித்த பெண்மை! தவிப்போடு அவன் பார்க்க, அவளும் அவனைத்தான் திரும்பிப் பார்த்தாள்.

 

அவள் என்ன நினைக்கிறாள்? அவளுக்குள் என்ன ஓடுகிறது? என்ன முடிவெடுக்கப்போகிறாள்? இதையெல்லாம் கணிக்கும் சக்தி அவனிடமிருந்து அகன்றுவிட்டதைப் போலிருந்தது. ‘என்ன விட்டுட்டுப் போயிடுவியா மய்யு’ வலியைத் தேக்கி விழிகளால் அவளிடம் இறைஞ்சினான். அதுவும் ஒரு கணம் தான்!

 

அவளே முடிவெடுக்கட்டும்! அதற்கான உரிமை உனக்கில்லை. மனம் துடிக்கத் துடிக்கச் சொல்லிக்கொண்டது! வேகமாகத் தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டான். வாய்க்குள் இருந்ததை அப்படியே விழுங்கிக்கொண்டு தட்டில் மீண்டும் பார்வையைப் பதித்தான். என்ன சொல்லப்போகிறாள்? காதுகள் மட்டும் பலமடங்கு கூர்மையடைந்துவிட்டிருந்தது.

 

மயூரியும் அர்ஜுனிடம் திரும்பியிருந்தாள். “எனக்கு இப்ப டைமில்ல அர்ஜுன். நாங்க பிறகு கதைப்பமா?” என்றவள், எழுந்துகொள்ளப்போக, “ஒரு ஃபைவ் மினிட்ஸ் போதும் மயூரி!” என்று தடுத்தான் அர்ஜுன்.

 

கடவுளே.. சொல்வதைக் கேட்கிறான் இல்லையே! ஆற்றாமையோடு அவனைப் பார்த்தாள். “டைமில்ல அர்ஜுன்! இது என்ர வேலை நேரம். அதைவிடக் கதைக்கிறதுக்கும் ஒண்டுமில்ல!” என்றாள் அழுத்தி. இவன் இப்படியே போய்விட்டான் என்றால் நல்லதே என்று மனம் எண்ணிக்கொண்டது!

 

“ஏதோ இருக்கப்போய்த்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறன்!” என்று பிடிவாதமாய் நின்றான் அவன். “நீயும் நிறையநேரமா இங்கதான் இருக்கிறாய்!” குறிப்பாகப் பிரதீபனைப் பார்த்தபடி சொன்னான்.

 

ஆக, முதலே வந்திருக்கிறான். ‘அவனோடு கதைப்பதற்கு நேரம் இருக்கு என்னிடம் கதைக்க நேரமில்லையா’ என்கிறான். உண்மையிலேயே மயூரிக்கு முடியவில்லை. கோபமா சினமா ஆத்திரமா என்று தெரியாமல் எல்லாமே கலந்துகட்டி நிதானத்தை இழக்க வைத்துக்கொண்டிருந்தது.

 

“என்ன புதுசா சொல்லப்போறீங்க? அப்படியே நீங்க என்ன சொன்னாலும் என்ர முடிவில மாற்றம் இல்ல. அதால கதைக்கவும் ஒண்டும் இல்லை!” என்றாள் முடிவாக.

 

“அப்ப பின்னேரம் வீட்டை வரவா?” என்றான் அவன். அருகில் இருப்பவன் இறுகிப்போவது இவளுக்குத் தெரிந்தது.

 

“வீட்டை வந்து மட்டும் என்ன கதைக்கப்போறீங்க?” என்றாள் பட்டென்று! ‘கதைக்க ஒண்டும் இல்லை எண்டுறன். எரும வீட்டை வரவா எண்டுறான்.’ கடுமையாக எதையாவது சொல்லிவிட வாய்வரை வந்தது. ஆனாலும் அவனும் அவனின் குடும்பமும் அவளுக்குச் செய்த உதவிகள் ஏராளம். அதை எண்ணிப் பொறுமை காத்தாள்.

 

மயூரியின் போக்கு அர்ஜுன் அறிந்ததுதான். என்றாலுமே, தன் முடிவில் உறுதியாக நின்று தன்னை விலக்கிவிடுவதிலேயே அவள் குறியாக இருப்பதைக் கண்டு தனக்குள் வருந்தினான் அர்ஜுன். அங்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும்போதே தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டான். அப்போதே அவளும் மறுத்துவிட்டிருந்தாள் தான். ஆனாலும், அருகில் தானே இருக்கிறாள், பழகப் பழக புரிந்துகொள்வாள், சம்மதிப்பாள் என்று நம்பினான். அந்தளவுக்கு அவனையும் அவனது வீட்டினரையும் அவளுக்கும் பிடிக்கும். அவளின் அப்பாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது அவன் எதிர்பாராதது. அதற்கு என்று இலங்கை வந்தவள், அப்படியே இங்கேயே தாங்கிக்கொண்டதும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிப்போனான்.

 

முடிகிறபோதெல்லாம் பேசும்போது தன் மனதை உணர்த்துவான். தன் விருப்பத்தைத் தெரிவிப்பான். அதற்குமேல் அவனுக்கு வற்புறுத்தத் தெரியவில்லை. அது அவனது இயல்பும் அல்ல. இனியும் எப்படி அவளிடம் தன்னை விளக்குவது என்றும் தெரியவில்லை. என்றாலும் ஒருமுறை நேரிலேயே சென்று கதைப்போமே என்றுதான் வந்திருந்தான். அப்படி வந்தவனை வீட்டுக்கு எடுப்பதற்குக்கூட அவள் தயாராயில்லை. வேதனையோடு அவன் அவளைப் பார்த்தபோது விழிகளைத் திருப்பிக்கொண்டாள் மயூரி!

 

‘சாரி அர்ஜுன்!’ மனதில் சொல்லிக்கொண்டாள். அவன் நல்ல மனிதன். நல்ல நண்பன். அதற்காக வாழ்க்கையை இணைக்கும் அளவுக்கு அவளால் யோசிக்கக் கூட முடியாது. சற்று இளக்கம் காட்டினாலும் இன்னும் கெஞ்சிக்கொண்டு நிற்பான்.

 

அதைவிட, அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறானே, சம்பிரதாயத்துக்கேனும் இனிமையாகக் கதைக்கவேண்டும் என்றெல்லாம் நாகரீகம் பார்க்கும் நிலையில் அவளும் இல்லை. முதலாவது அவன் வந்த நேரம் பிழை. இரண்டாவது அவன் வந்ததே பிழை! அவ்வளவு சொல்லியும் கேட்காமல் வந்தால் பட்டுக்கொள் என்று எண்ணிக்கொண்டாள். பிரதீபனோடு போராடியே அவளுடைய சக்தி அத்தனையுமே தீர்ந்து போயிருந்தது. இதில் இவன் வேறு. எத்தனை முறை சொல்லியாயிற்று. நந்தினி மூலமாகவும் கேட்டுவிட்டிருந்தான். இனி கடுமையாக எதையாவது சொன்னால் மட்டுமே இவனுடைய தொல்லை தீரும் என்கிற நிலைக்கு அவனே அவளைக் கொண்டுவந்துவிட்டிருந்தான்.

 

அர்ஜூனுக்கும் அதற்குமேல் மேல்பூச்சாகப் பேசப் பிரியமில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தை இப்படித் தருவாள் போலும் இல்லை. அவளின் வார்த்தைகள் அவனை நோகடித்ததுதான். என்றாலும், அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை. அவ்வளவு அருமையான பெண் மயூரி. தன் தகுதியை வளர்த்துக்கொள்ள இரவு பகலாக அவள் கற்றது, பட்ட பாடுகள் எல்லாமே அவன் அறிவான்.

 

வயிற்றில் ஆறுமாதக் கருவோடு அவள் அவுஸ்திரேலியா வந்ததில் இருந்து திரும்பி இங்கே வருகிற வரைக்கும் அவனுக்கு அவளை நன்கு தெரியும். ஒரே அலுவலகம். அது மாத்திரமல்ல ஒரே கட்டடத்தில் அவள் நான்காவது மாடியிலும் அவன் குடும்பம் கீழ் மாடியிலும் என்று வசித்திருக்கிறார்கள். பிறந்த குழந்தையை எப்படிக் கவனித்துக்கொள்வது என்று அவள் கற்றுக்கொண்டதே அவனுடைய அம்மாவிடம் தான். அவசரம் ஆபத்துக்கு ஆதிராவை விட்டுவிட்டுப் போனதும் அவர்களின் வீட்டில் தான். அவ்வளவு நெருக்கம். அந்த நாட்களில் கூட இப்படி ஒருவனை, அதுவும் ‘நான் இருக்கிறன், நீ கதை’ என்று உரிமையாகச் சொல்கிற அளவுக்கு நெருக்கத்தில் அவள் அனுமதித்ததே இல்லையே.

 

எனவே, “ஃபோன்ல உன்னோட கதைக்கவே முடியேல்ல மயூரி. அதுதான் நேரிலேயே வந்தனான். ஆனா என்ன கதைக்க எண்டும் தெரியேல்ல?” என்று கைகளை இயலாமையோடு விரித்தான் அவன்.

 

“என்னைப்பற்றி உனக்கு நான் சொல்லத் தேவையில்லை. உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு உனக்கே தெரியும். அம்மா அப்பாவைப் பற்றியும் உனக்குத் தெரியும். என்ர குடும்பத்தைப் பற்றியும் தெரியும். அவே எல்லாருக்கும் உன்னையும் ஆதிராவையும் எவ்வளவு பிடிக்கும் எண்டும் தெரியும். பிறகும் ஏன் மறுக்கிறாய் மயூரி? பழைய வாழ்க்கை பற்றின எந்தப் பிரச்சனையும் நமக்குள்ள வராது. உன்ன முழுமையா விளங்கி வச்சிருக்கிறவன் நான். நிச்சயமா உன்னையும் ஆதுவையும் நான் நல்லா வச்சிருப்பன். கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லு!” என்றான் கெஞ்சலாக.

 

‘கல்யாணமா?’ விலுக்கென்று நிமிர்ந்தான் பிரதீபன்.

 

என்ன சொல்கிறான் இவன்? என்னவோ பொருந்திப்போகவில்லையே? அவன் விழிகள் மயூரியைத் துளைத்தது. மனதில் ஒரு பரபரப்பு. இதயம் அதிவேகமாய்த் துடித்தது! இப்போது அவள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

 

“நானே என்னையும் ஆதுவையும் நல்லா வச்சிருப்பன் அர்ஜுன். அதுக்கு நீங்க தேவையில்லை!” கத்தரித்தாற்போல் பதில் சொன்னாள் மயூரி.

 

அர்ஜுனின் முகம் கன்றிச் சிவந்தது. “ஆதுக்கு நல்ல அப்பாவா கட்டாயம் நான் இருப்பன்…” என்று அவன் முடிக்க முதலே, “வாயை மூடுங்க!” என்று சீறிவிட்டிருந்தாள் மயூரி.

 

சுற்றுப்புறமாவது பக்கத்தில் இருக்கிறவனாவது! அனைத்துமே மறந்துபோயிற்று! அவளின் பொறுமையும் தொலைந்து போயிற்று!

 

என்றைக்குமே இந்த வார்த்தைகளை அவளால் அனுமதிக்க முடிந்ததே இல்லை. அவளின் பெண்ணுக்கு கண்டவனும் அப்பாவாக இருப்பானா? அதென்ன பக்கத்துவீட்டு உறவா? உயிர் கொடுத்த உறவு! ஒருவன் மட்டுமே அதற்கு உரியவன்! அவனுக்கே அந்த உரிமையைக் கொடுக்க அவள் தயாராயில்லை. இதில் இவன் அப்பாவாக இருப்பானாம்.

 

“என்ர பிள்ளைக்கு அப்பாவா இருக்க நீங்க யாரு? அப்பா எண்டுற உறவு என்ன போறவனும் வாறவனும் கொண்டாடுற உறவா? ஆதுக்கு அப்பா யார் தெரியுமா? பக்கத்தில இருக்கிறாரே. இவர்தான். அவரையே கலியாணத்துக்கு மாட்டேன் எண்டவள் நான். உங்களைக் கட்டுவனா? என்ர பிள்ளை என்ன உங்களிட்ட வந்து எனக்கு அப்பா வேணும் எண்டு கேட்டவளோ? இல்ல அப்பா இல்லை எண்டு அழுதவளோ? சும்மா வந்து அப்பாவா இருப்பன் ஆட்டுக்குட்டியா இருப்பன் எண்டு கதை அளக்கிறீங்க. தயவுசெய்து போய்டுங்க அர்ஜுன். இல்லாட்டி கோபத்தில என்ன கதைக்கிறது எண்டு தெரியாம கதைச்சுப்போடுவன்! உங்கள்ள நிறைய மரியாதை வச்சிருக்கிறன். அதை நீங்களேகெடுத்துப்போடாதீங்கோ!” என்றவள் அவனுடைய முகத்தைக்கூடப் பார்க்க மறுத்தாள்.

error: Alert: Content selection is disabled!!