அத்தியாயம் 21
அப்படியே அமர்ந்திருந்தாள் மயூரி. அப்போது அவளிடம் வந்தாள் ஆதிரா. ‘இவள் என்ன கேக்கப்போறாள்?’ கலக்கத்தை விழிகளில் தேக்கி மகளைப் பார்த்தாள்.
“இந்த அங்கிள் எங்களுக்குச் சொந்தமா அம்மா?” ஆவலே வடிவாகக் கேட்டாள் அவள்.
அக்கேள்வியில் அப்படியே உடைந்தாள் மயூரி. கோபமும் வீராப்புமாய் அவனிடம் மறுத்துவிட்டவளால் மகளிடம் அதைக் காட்ட முடியவில்லை. அதுவரை நேரமும் அடக்கி அடக்கி வைத்திருந்த கண்ணீர் மளுக்கென்று வழிந்தோடியது.
ஆதிராவோ தாயின் கண்ணீரைக் கண்டு பயந்துபோனாள். “அம்மா என்னம்மா? ஏன் அழுறீங்க?” அவளுக்கும் கண்கள் கலங்கிற்று!
“அம்மா அழாதீங்கமா..” மகளின் குரலில் தெரிந்த அழுகையில் சட்டெனச் சமாளித்துக்கொண்டாள் மயூரி.
“ஒண்டுமில்லமா..” இரண்டு கைகளாலும் கண்களையம் கன்னத்தையும் துடைத்துக்கொண்டு பாசத்தோடு மகளிடம் புன்னகைத்தாள். அவளை மடியில் இருத்தி, முடியை ஒதுக்கிவிட்டாள். ஆசையாக நெற்றியில் உதடுகளை ஒற்றி எடுத்தாள். பழகிய பழக்கமாக ஆதிராவும் அன்னையை இறுக்கி அணைத்து நெற்றியில் உதடுகளை ஒற்றி எடுத்து, காயப்பட்டிருந்த மனதுக்கு ஒத்தடம் கொடுத்தாள்.
“என்ர செல்லக்குட்டி!” என்று மகளை அவள் கட்டிக்கொள்ள, “ஏன் அம்மா அழுதனீங்க?” என்று தன் கேள்வியிலேயே நின்றாள் அவள்.
“அது சும்மா மா.. தாத்தா நினைவு வந்தது, அதுதான்..” மடியிலிருந்த மகளைத் தோளில் சாய்த்து வருடிக்கொடுத்தாள் மயூரி. ஆதிராவைச் சமாளிக்கத்தான் அப்படிச் சொன்னாள். ஆனால், அப்பா இருந்திருக்கலாமோ.. இருந்திருக்க எவ்வளவு பெரிய தெம்பாக இருந்திருக்கும் என்று அவரின் இழப்பை அந்தக் கணத்திலும் உணர்ந்தாள்.
“அந்த அங்கிள் யாரம்மா?” மீண்டும் கேட்டாள் ஆதிரா.
மயூரிக்கு மீண்டும் இலேசாகக் கண்கள் கலங்கிற்று! பிஞ்சு நெஞ்சு இதுவரை அனுபவித்தறியாத ஒரு பாசத்தின் சுவையை இலேசாக அறிந்துகொண்டு இன்னும் வேண்டும் என்று கேட்கத் தெரியாமல் தடுமாறுகிறாள். அதனால்தான் அவளின் நினைவுகளில் இருந்து அவன் அகல்கிறானே இல்லை.
அம்மா என்கிற உறவைத்தாண்டி வேறு எந்தச் சொந்தத்தின் அன்பையும் அனுபவிக்காத மகளை இன்னுமே இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள். மிகவுமே இக்கட்டான ஒரு சூழ்நிலையில் காலம் தன்னை நிறுத்தியிருப்பதாய் உணர்ந்தாள்.
“சொல்லுங்கோவன் அம்மா!” ஆதிராவுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. அன்னையை உலுக்கினாள்.
“இலங்கைக்கு நாங்க வந்த கொஞ்ச நாள்ல நீ என்னட்ட ஒரு கேள்வி கேட்ட ஆது.”
சின்னவள் முகத்தில் சின்னச் சின்னதாய் சிந்தனைக் கோடுகள். “என்ன கேட்டனான்?”
“அண்டைக்கு, ‘இன்னொருக்கா இதே கேள்வியை நீ என்னட்ட கேட்டா உன்ன வளக்கிறதுல அம்மா தோத்துட்டன் எண்டு அர்த்தம்’ எண்டு அம்மா சொன்னனான். உனக்கு நினைவிருக்கா?” சொல்லிவிட்டு மனதில் நடுக்கத்தோடு ஆதிராவையே பார்த்தாள்.
ஆம் என்று தலையசைக்கவில்லை பெண். “அப்..பா..” மெல்ல அசைந்தன அந்தச் சின்ன இதழ்கள். அவள் முகத்தில் அதிர்ச்சி ஆனந்தம் அழுகை எல்லாமே போட்டி போட்டுக்கொண்டு வந்தது. “அப்பா..வா?” என்றாள் மீண்டும் கேள்வியாக. கேட்கும்போதே.. அப்பாவா என்று சொல்லும்போதே அவள் உதடுகள் பிதுங்கின.
மகளின் பிஞ்சு நெஞ்சு அதை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் படுகிற பாட்டை உணர்ந்த அன்னையின் விழிகளும் கலங்கிக் கண்ணீரைக் கொட்டிற்று! “ம்! அவர் உன்ர அப்பாடா!” என்றதுமே, ஒருகணம் தாயின் முகத்தையே பார்த்தவள் அடுத்தகணம் அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு கழுத்துவளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருந்தாள். மயூரின் கழுத்தை ஆதிராவின் கண்ணீர் நனைத்தது. துடித்துப்போனாள் அன்னை.
“ஆது.. டேய் செல்லம்.. என்னடா.. அம்மாவை பார் இங்க?” கலங்கிப்போய் அவளை முகம்பார்க்க வைக்க முயல, மறுத்தாள் ஆதிரா. சின்னஞ்சிறு உடல் அழுகையில் குலுங்கிற்று!
சொல்லாமல் இருந்திருக்கலாமோ. கடவுளே.. என் செல்ல மகள் துடிக்கிறாளே.. ஆண்டவா.. மயூரியின் கண்களிலும் கண்ணீர் அளவற்றுப் பொங்கி வழிந்தது.
மகளை அணைத்து வருடிக்கொடுத்தாள். பிஞ்சுக் குழந்தை. என்ன தெரியும் அவளுக்கு? “அம்முக்குட்டி அழாதடி! செல்லம்..” மகளை விட மோசமான நிலையில் இருந்தாள் மயூரி!
அவன் சொன்னதுபோலவே இவள் பிறந்ததும், ‘முட்டாள் உன் மகளைப் பாரடா’ என்று கொண்டுவந்து காட்டியிருக்க இவள் இப்படித் துடித்திருக்க மாட்டாளே!
“அம்மாச்சி! அம்மாவை பாரடி.. ஏன் அழுறாய்? அம்மாவில கோவமா? செல்லம்..” தழுதழுத்த குரலில் கேட்டாள்.
இல்லை என்று கழுத்து வளைவில் இருந்தே மறுத்துத் தலையசைத்தாள் ஆதிரா.
அந்த நிலையிலும் தனக்கான பதிலைச் சொன்ன மகளின் பாசத்தில் அவளும் உடைந்தாள். ஆற்றுவாரும் தேற்றுவாரும் இன்றி அழுது தீர்த்தனர் அன்னையும் மகளும்.
மெல்ல மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள் மயூரி. அழுததாலோ என்னவோ மனம் ஒருவகையில் அமைதியடைந்திருந்தது. ஒரு தெம்பு பிறந்திருந்தது. வருவதை நிதானத்தோடு எதிர்கொள்ளும் தெம்பு. ஆதிரா இந்தளவுக்குத் துடிப்பாள் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. இப்போதும் அழுகை நின்றிருந்தபோதும் விசும்பல் இன்னுமே இருந்தது. பாசத்தோடு அரவணைத்து ‘நான் இருக்கிறேன் உனக்கு’ என்பதாக வருடிக்கொடுத்துக்கொண்டே இருந்தாள்.
இலங்கை வந்தபோது, “அப்பா இல்லையா?” என்கிற கேள்வி அவளிடம் அடிக்கடி வீசப்பட்டிருக்க வேண்டும். ஒருநாள் இவளிடம் அதையே கேட்டபோது கலங்கிப்போனாள் மயூரி! மகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் சிவந்து கண்கள் கலங்கி எதுவும் சொல்லாமல் அன்னை அப்படியே அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு, கலக்கத்தோடு இன்றுபோலவே அவளைக் கட்டிக்கொண்டு, “நான் ஏதும் பிழையா கேட்டுபோட்டேனா அம்மா?” என்று அவள் கேட்டபோது, “இனி நீ இந்தக் கேள்வியை கேக்கவே கூடாது. கேட்டா அம்மா உன்னை நல்லபடியா வளக்கேல்ல எண்டு அர்த்தம்.” என்று குரலில் இறுக்கத்தோடு சொல்லிவிட்டாள்
எதை எப்படி உணர்ந்தாளோ? அதன்பிறகு ஆதிரா அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவேயில்லை. குழந்தைதான் அவள். செல்லம் கொண்டாடி எதற்கும் அடம்பிடித்து அழும் வயதுதான். ஆனால், ஒற்றைப் பெற்றவரின் வளர்ப்பில் வளரும் குழந்தைகளை இந்தச் சமூகம் அந்த வயதிலேயே தேவையான விசயங்களுக்கு பக்குவப்படுத்திவிடும். பெற்றவரும் கூட! அப்பா இல்லையா, அப்பா எங்கே, அம்மா தனியாவா இருக்கிறார் என்கிற கேள்விகள் போதுமே வயதுக்கு மீறிய பக்குவத்தை அவர்களுக்குள் புகுத்திவிட. அதனால்தானோ என்னவோ இன்றைக்கும் வேறு எந்தக் கேள்விகளையும் அன்னையிடம் கேட்காமல், சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் மனக்குழப்பங்களை அதிர்வுகளை எல்லாம் கண்ணீராய்க் கொட்டிவிட்டிருந்தாள் ஆதிரா.
விசும்பலோடே சற்றுநேரத்தில் அப்படியே உறங்கிப்போயிருந்தாள் ஆதிரா. மெல்ல நிமிர்த்தி முகம் பார்த்தாள். உறக்கத்தில் மூடியிருந்த கண்மடல்கள் தடித்திருந்தன. அழுததில், அதுவும் முகத்தைக் கழுத்துக்குள் புதைத்துக்கொண்டு அழுததில் முகமும் வீங்கிப் போயிருந்தது.
‘ரோசக்காரி!’ கடைசிவரை அழுத முகத்தை அவளுக்குக் காட்டவே இல்லையே! அவ்வளவு இறுக்கமாக கழுத்தை வளைத்துப் பிடித்திருந்தாள். அதில் இவளுக்குக் கழுத்தும் வலித்தது. உறக்கம் கலையாமல் முகத்தை துடைத்துவிட்டு, பாசத்தோடு உச்சி முகர்ந்துவிட்டு தூக்கிக்கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தினாள். நான்கடியில் இருக்கும் அறைதான். என்றாலும் மூச்சு வாங்கியது. வீட்டைப் பூட்டி, விளக்குகளை அணைத்துவிட்டு மகளின் அருகில் தானும் படுத்துக்கொண்டாள்.
பிரதீபனின் மொத்த வீடுமே அவன் சொன்னதைக் கேட்டு ஸ்தம்பித்துப்போய் நின்றுவிட்டது. புஸ்பவதி அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். அவனுடைய அக்கா – அத்தான், தங்கை-மச்சான் என்று அனைவரின் முகத்திலும் நம்ப முடியாத அதிர்ச்சி! திருநாவுக்கரசு இருந்த இடத்திலேயே இறுகிப்போயிருந்தார்.
புஸ்பவதி அம்மையாரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவருடைய மகனா, ஒரு பெண்ணுடன் முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தான் என்பதிலேயே அவர் மனம் அடிபட்டுப் போயிற்று. இதில் பிள்ளை உருவாகுமளவுக்குப் போய், அந்தக் குழந்தையையே அழிக்கத் துணிந்திருக்கிறான் என்று நினைக்க நினைக்க மனதில் ஆத்திரமும் அருவருப்பும் மண்டிப் போயிற்று! என்ன வளர்ப்பை வளர்த்துத் தொலைத்தார்! நம்ப முடியாமல் அதிர்ந்து ஆத்திரப்பட்டுக் கத்தி அழுது அப்படியே ஓய்ந்து போயிருந்தவருக்கு மகனின் முகம் பார்க்கவே பிடிக்காமல் போயிற்று!
“என்ன மனுசனடா நீ! வெக்கமே இல்லாமல் இத்தனையையும் செய்துபோட்டு கண்ணுக்கு முன்னால வந்து நிக்கிறியே! எவ்வளவு தைரியம் உனக்கு? கடவுளே.. என்னத்த பெத்து என்னத்த வளத்தனோ தெரியேல்லையே! இன்னும் என்னத்தையெல்லாம் கேக்கப்போறனோ.. ஆண்டவா..” மருமகன்கள் நிற்கிறார்கள் என்பதையே மறந்து அவனைப்போட்டுத் திட்டினார்.
கருத்துப்போன முகத்தோடு சிலையைப்போல அமர்ந்திருந்தான் பிரதீபன். உப்பைத் திண்றவன் தண்ணீரைக் குடிக்கத்தானே வேண்டும்!
“இதுல இவனுக்கு ஒரு கலியாணத்தை செய்துபோடவேணும் எண்டு நான் வேற தலைகீழா நிண்டேனே. அப்படி ஒண்டு நடந்திருக்க இந்தப் பாவத்தையெல்லாம் எங்க போய் கழுவி இருப்பன்?” என்று கண்ணீர் வடித்தார் அவர்.
“காணும் புஸ்பா! எத்தனைதரம்தான் இன்னும் நடந்ததையே கதைச்சுக்கொண்டிருப்பாய். இனி அடுத்தது என்ன எண்டு பார்!” என்றார் திருநாவுக்கரசு.
அவருக்கும் பெரும் அதிர்ச்சியே! ‘என் மகனா?’ என்று இடிந்தே போனார். வயதான காலத்தில் தங்களுக்கு இனி மகன் இருக்கிறான் என்கிற அபார நம்பிக்கை இருந்தது. அந்தளவுக்குப் பொறுப்பானவன். கேள்விப்பட்ட செய்தியில் அந்த நம்பிக்கையே அறுந்துபோனதாய் உணர்ந்தார். என்னவோ மனதே விட்டுப்போயிற்று!

