அத்தியாயம் – 22
அடுத்தநாள் காலை ஒன்பது மணியளவில் தன் குடும்பத்தை மொத்தமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் பிரதீபன். கழிந்த இரவு மட்டும் தான் அவனுக்குப் பாரமான இரவாய்க் கழிந்தது. ஒருசொட்டுக்கூட உறங்கவே இல்லை. நிகழ்காலமும் இறந்தகாலமும் கலந்துவந்து உறங்கவிடாமல் செய்தன. ஆனால், விடிந்தபோது தெளிந்திருந்தான். பிழைதான்! பெரும் தவறுதான்! நேர்ந்துவிட்டது. இப்போது நேராக்க முயற்சிக்கிறான். நேராக்கியும் தீருவான். இதுதானே அவனுடைய இயல்பு! அவளைத் தொலைத்ததில் தன் இயல்பையும் தொலைத்து நடைப்பிணமாக வாழ்ந்தவன் தன் இயல்பை மீண்டும் மீட்டுக்கொண்டிருந்தான்.
கதவைத் திறந்த மயூரியின் முகத்தில் மெல்லிய பதட்டம். அதுவரை நேரமும் யாரெல்லாம் வருவார்கள், என்ன கேட்பார்கள், எப்படி நடப்பார்கள் என்று உள்ளுக்குள் பயந்துகொண்டிருந்தாள். எதுவந்தாலும் எதிர்கொள்ளும் துணிவு இருந்தாலுமே, கூடவே ஒரு பயமும் தொற்றிக்கொண்டுதான் இருந்தது. அந்தப் பயத்துடனும் மெல்லிய சங்கடத்தோடும் அங்கு நின்றவர்களைப் பார்த்தாள். பிரதீபனின் தங்கை கணவனைத் தவிர்த்து மற்ற எல்லோரையும் அவளுக்கு பிருந்தாவின் கல்யாணத்துக்குச் சென்றதில் தெரியும். அவர்களுக்குத்தான் அவளை நினைவிருக்காது. மெல்லச் சுழன்ற விழிகள் கடைசியில் பிரதீபனிடம் சென்று நின்றது.
அவனும் வந்ததில் இருந்து அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கண்டுவிட்டுக் கண்ணாலேயே தேற்றினான்.
அவளை அறியாமலேயே ஒரு தெம்பு மனதைச் சூழ, “வாங்கோ!” என்றாள், மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு.
உள்ளே வரும்போதுதான் நந்தினியும் நிற்பதைக் கவனித்தான் பிரதீபன். ஆச்சரியமாய் நோக்கிப் புன்னகைத்தான். நந்தினியால் அதுகூட முடியவில்லை. காலையில் அழைத்து, “நந்து பிளீஸ்டி, லீவு போட்டுட்டு உடனேயே வீட்டை வாடி!” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டிருந்தாள் மயூரி.
என்னவோ ஏதோ என்று ஓடிவந்தவள் கண்ட காட்சி பிரதீபனின் வருகை. ‘கேகேயா?’ என்று அப்படியே நின்றுவிட்டாள்.
அவளுக்கு பத்து வருடங்கள் கழித்து அவனைப் பார்த்த அதிர்ச்சி. கூடவே அவனை இவள் எப்போது பார்த்தாள்? தன் குடும்பத்தையே கூட்டிக்கொண்டு இங்கே எதற்கு வந்திருக்கிறான்? என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளும் அவளைச் சூழ்ந்தது. இதுநாள் வரை ஒரு வார்த்தைகூட அவனைப்பற்றி மயூரி சொல்லவே இல்லை. ‘இவளை!’ பல்கலைக் கடித்துக்கொண்டு மயூரியை முறைத்தாள். ‘அமுசடக்கி! இவன் எண்டு வந்திட்டா எல்லாத்தையும் தனக்குள்ளேயே மறைச்சுப்போடுவாள். அண்டைக்கும் தான் இண்டைக்கும் தான்!’ முறைப்போடு மயூரியைப் பார்க்க அவள் எங்கே இவளைப் பார்த்தாள். வந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிரதீபனின் அம்மா அப்பா, அக்கா அத்தான், தங்கை மச்சான் என்று அனைவரும் அமர்ந்துகொண்டாலும், மயூரி நின்றிருந்ததில் அவனுக்கு அமர்ந்துகொள்ள மனமில்லை. துணையாக நான் இருக்கிறேன் என்று சொல்வதைப்போல தானும் நின்றுகொண்டான்.
என்ன கதைப்பது, என்ன கேட்பது என்று மயூரிக்குத் தெரியவில்லை. இதில் பிரதீபன் வேறு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘எல்லோரையும் வைத்துக்கொண்டு என்ன பார்வை இது..’ அது வேறு பதட்டத்தைக் கொடுத்தது. தேநீர் ஊற்றிக்கொண்டு வருவோம் என்று அவள் சமையலறையின் புறமாகத் திரும்ப, “ஒண்டும் வேண்டாம். நீ இங்க வாம்மா.” என்று அழைத்தார் புஸ்பவதி.
அவரால் முடியவேயில்லை. அதுவும் அவர் அமர்ந்திருந்தது ஆதிரா மயூரியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தோடு கன்னம் இழையச் சிரித்துக்கொண்டிருந்த புகைப்படத்துக்கு நேரெதிரில். பார்த்த கணமே அவரின் அன்னையை நினைவூட்டிக் கண்ணில் நீரை வரவைத்தாள் ஆதிரா. அவள் யார், யாரின் குழந்தை என்று யாருமே அறிமுகம் செய்யும் தேவையே இல்லாமல், ‘நான் உங்கள் பேத்தி’ என்று அவளே அவளை அறிமுகம் செய்துகொண்டிருந்தாள்.
பத்து வருடங்களாக இப்படி ஒரு பேத்தி இருக்கிறாள் என்று தெரியாமல் மகன் வழி ஒரு பேரனுக்கோ பேத்திக்கோ எவ்வளவு ஏங்கி இருக்கிறார். சக்தி வாய்ந்த தெய்வம் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும், அத்தனை கடவுளுக்கும் நேர்த்தியும் வேண்டுதலும் வைத்துவிடுவார். நினைக்க நினைக்க ஆத்திரம் பெருகியது. அவருக்குள் பொங்கிக்கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்துவிடும் போலிருந்தது. நாகரீகமாக அமர்ந்திருந்து அவள் உபசரிக்க அவர்கள் தேநீர் பருகி மெல்ல ஆரம்பித்து இந்த விசயத்தை நல்லபடியாக கொண்டுபோகும் நிலையில் அவர் இல்லவே இல்லை. நெஞ்சு முழுக்க கோபமும் குமுறலும் மட்டுமே நிறைந்து கிடந்தது. அதையெல்லாம் கொட்டி முடித்து, இந்த விசயத்துக்கு ஒரு முடிவைக் கண்டால் மட்டுமே அவரால் ஆறியிருக்க முடியும். எனவேதான் மயூரியை அழைத்தார்.
“அவனுக்குத்தான் அறிவில்லை எண்டால் உனக்கு எங்கயம்மா போனது புத்தி. நீயாவது யோசிச்சு நடந்திருக்க வேண்டாமா? சந்தோசமா இருந்திருக்க வேண்டிய வாழ்க்கைய ஏன் இப்படி சிதைச்சு சீரழிச்சு வச்சிருக்கிறீங்கள்? இதுதான் நீங்க எல்லாரும் படிச்ச படிப்பும் பாத்த வேலையும் உங்களுக்குச் சொல்லித் தந்ததோ?” என்று ஆரம்பித்துவிட்டிருந்தார் அவர்.
என்ன பதிலைச் சொல்வாள்? அவர் கேட்பது எத்தனை சரியானது. அவளது அப்பா இருந்திருக்க அவரும் இதையேதான் கேட்டிருப்பார். அவன்மீது அத்தனை குற்றத்தையும் சாட்டிச் சீறினாளே, அவள் நடந்துகொண்டது மட்டும் சரியா? ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையாது என்பார்களே. அவள் இடம் கொடுத்ததால் தானே கரு உருவாகும் அளவுக்கே போனது! அவன் மீதான கோபத்தைக் காட்டிலும், தவறிப்போனோமே.. வாழ்க்கையில் சறுக்கிவிட்டோமே என்பதுதானே இன்றுவரை அவளைப்போட்டுக் கொல்கிறது. அம்மாவை இழந்த துயருக்காய் ஆறுதல் தேடி தன்னை இழந்து, கருவை இழக்கக்கூடாது என்று வாழ்க்கையை இழந்து தனிமரமாகி என்று அவள் பார்த்த முட்டாள் தனங்களும் தான் எத்தனை? கன்றிப்போன முகத்துடன் நின்றிருந்தாள் அவள்.
நந்தினிக்குத் தன் தோழியைப் பார்க்கப் பாவமாயிருந்தது. ஆனால் இதில் அவள் செய்யவும் என்னதான் இருக்கிறது? பிரதீபனைத்தான் முறைத்தாள்.
அவனாலும் தாயின் முன்னே மயூரி தலைகுனிந்து நிற்பதைப் பார்க்க முடியவில்லை தான். ஆனால், அவன் இடைபுகுந்தால் அவர் இன்னுமே கோபம் கொண்டு வார்த்தைகளை விடக்கூடும். எனவே பொறுமை காத்தான்.
“நாங்க எல்லாம் பெருசா படிக்காத ஆக்கள் தான். ஆனா வாழ்க்கையை படிச்ச மனுசர். எப்படி வாழவேணும் எண்டு தெரிஞ்ச மனுசர். எங்களை அடுப்படிக்க போட்டு முடக்கினதாலதான் உங்களுக்கு நாங்க சுதந்திரம் தந்தது. ஆனா நீங்க அந்தச் சுதந்திரத்தை, நம்பிக்கையை உங்கட வசதிக்கு பயன்படுத்தி இருக்கிறீங்கள். உன்ர அம்மா அப்பா என்ன ஊர் மேஞ்சுபோட்டு வா எண்டோ உன்னை அனுப்பி வச்சவே!” அதுவரை அவர் சொன்னதில் நியாயம் இருப்பதாய் அவள் மனமும் சொன்னதில் அமைதியாக நின்றவள், பெற்றவர்களைப் பற்றிச் சொன்னதும் விலுக்கென்று நிமிர்ந்தாள்.
அவள் எதையாவது சொல்லிவிடமுதல், “அம்மா!” என்று அதட்டியிருந்தான் பிரதீபன். “பிழை செய்தது நானும் அவளும். அதுக்கு எதுக்கு இந்த உலகத்தில இல்லாத மனுசரைப் பற்றிக் கதைக்கிறீங்கள்? அவே(அவர்கள்) மயூரிய எப்படி வளர்த்தவே எண்டு எனக்குத் தெரியும். அவேயப்பற்றித் தெரியாம கதைக்காதீங்க. முதல், என்ன எண்டாலும் என்னை சொல்லுங்க. அவளை சொல்ல வேண்டாம்!” என்றான் அவன்.
எல்லோருக்கும் முன்னால் அவன் அதட்டியதும் அழுகை வந்தது அவருக்கு.
“ஓமடா! நான் தானடா உன்ன பிழையா வளத்துப்போட்டன். அதனாலதான் இண்டைக்கு நீ இப்படி வந்து நிக்கிறாய். இல்லாட்டி ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளை சகோதரிகளோட வளந்த நீ இன்னொரு பொம்பிளையின்ர வாழ்க்கையை நாசமாக்கி இருப்பியா?” கொதிப்புடன் கேட்டவருக்குத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காதலின் வேகத்தில் கரு உருவாகி இருந்தாலும் அதைக் கல்யாணத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்க வேண்டாமா! ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டானே.
முகம் கருத்துப்போயிற்று பிரதீபனுக்கு. அவளை அவன் நாசமாக்கினானா என்ன? முடியுமா அவனால்? இன்றுவரை பித்தனைப்போல் அலைகிறான். அவள்தான் அவனைப் பித்தனாக்கிவிட்டாள். இதைச் சொன்னால் அவளே ஏற்றுக்கொள்ளமாட்டாள்! அப்படியிருக்க அம்மா?
பிருந்தாவுக்குத் தம்பியை அப்படிப் பார்க்க முடியவில்லை. அக்கா அவளையே தகப்பனுக்குச் சமமாகத் தாங்கியவன். “சரியம்மா. நடந்தது நடந்து போச்சு. விடுங்கோ!” மெல்ல அன்னையைச் சமாதானப்படுத்தினாள். முதல் நாள் இரவு அவன் சொன்னதற்குப்பிறகு ஒரு வார்த்தைகூட அவனோடு கதைக்கவில்லை அவள். அவ்வளவு கோபம் மனதில் இருந்தாலும் சமாளிக்க முயன்றாள்.
“என்னத்த விட சொல்லுறாய்? பத்து வயசுப் பிள்ளைக்கு அப்பன் அவன். ஆனா அவனை பெத்து வளத்த எங்களுக்கு ஒண்டும் தெரியாது. நல்லாருக்கடா நீ எங்களுக்குச் செய்ற எல்லாமே! இன்னும் பத்து வருசம் போயிருக்க அவளுக்கே கல்யாண வயசு வந்திடும். வெளில சொன்னா சனம் காறித்துப்பும்!” என்று அவர் குமுறியபோது முகம் கருத்து நின்றவனைப் பார்த்தாள் மயூரி.
“அவரை மட்டும் பிழை சொல்லாதீங்கோ.” என்றாள் மெல்ல. எல்லோர் பார்வையும் அவளிடம் திரும்பிற்று!
“ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினது உண்மை. உயிராத்தான் இருந்தோம். நீங்க சொன்னமாதிரி காதல் எண்டதும் கண்டமாதிரி நாங்க நடக்கேல்லை. உங்கட மகனும் அப்படியான ஆள் இல்ல. அக்கா தங்கச்சி இருக்கு, அவேக்கு நல்லமாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டுத்தான் எங்கட வாழ்க்கையை துவங்கிறது எண்டு முதலே சொல்லிப்போட்டார்.” என்றதுமே அவனது சகோதரிகளின் கண்கள் கலங்கிப் போயிற்று!
அப்படியொன்றும் தங்கள் சகோதரன் முற்றிலும் ஒழுக்கமற்றவனாக நடந்துவிடவில்லை. தங்களைப் பற்றி யோசிக்காமலும் இல்லை என்று தெரிந்துகொண்டதும் மனதிலிருந்த பாரம் சற்றே விலகியதுபோல் உணர்ந்தனர். புஸ்பவதியும் கண்களில் கண்ணீருடன் அவளையே பார்த்தார்.
“என்ர அம்மா மோசம் போனபிறகுதான் எல்லாமே மாறிப்போச்சு. அப்பவும் அவர் என்னை கைவிடேல்ல. குழந்தை வேண்டாம் எண்டு மட்டும்தான் சொன்னவர். அதுக்குக் காரணமும், தான் இப்படி எண்டு தெரியவந்தால் தன்ர சகோதரங்களின்ர வாழ்க்கை நல்லபடியா அமையாது எண்டுற பயம். அம்மா அப்பா தன்னை நம்பிக்கொண்டு இருக்கினம் அவே மதிக்கமாட்டினமே எண்டுற எண்ணம். பிறகு என்னையும் குழந்தையையும் கூட்டிக்கொண்டு வந்தால் நீங்க என்ன சொல்லுவீங்களோ எண்டுற யோசனை. இந்தச் சமூகம் அவர் செய்த பிழைக்காக மொத்தக் குடும்பத்தையும் கேவலப்படுத்தும் எண்டுற பயம். தன்னால தன்ர சகோதரிகளுக்கு ஒரு கெடுதலும் நடக்கக்கூடாது எண்டு நினைச்சவர். அப்பவும் அவர் என்னை விட்டுட்டு போகேல்ல. ஆனா எனக்குத்தான், குழந்தையை அவர் வேண்டாம் எண்டது மனம்விட்டுப் போயிட்டுது. நான்தான் அவரை விட்டுட்டு போனனான். அதால அவரை மட்டும் குறை சொல்லாதீங்கோ. நீங்க நினைக்கிற மாதிரி அவர் கூடாதவரும் இல்ல!” அவள் சொல்லச் சொல்ல பிரதீபன் எப்படிஉணர்ந்தான் என்றே வரையறுக்க முடியாமல் நின்றான்.

