அத்தியாயம் – 23
குடும்பத்தாரை வழியனுப்பிவைத்துவிட்டுத் திரும்பிய பிரதீபன், நந்தினியின் குற்றம் சாட்டும் பார்வையைத்தான் எதிர்கொண்டான். ஏன் என்று தெரியாதா என்ன? ஆனாலும், அவனிடம் மாற்றமில்லை. மயூரியையே சமாளித்துவிட்டானாம் பிறகென்ன. அதுவும், பிரத்தியேகமாக அவனிடம் அவள் சம்மதம் சொன்ன விதம் அவனுக்குள் காதலூற்றைத் திறந்துவிட்டிருந்ததில் உல்லாசத்தில் மிதந்துகொண்டிருந்தான். உண்மையைச் சொல்லப்போனால், அவன் ஏங்கிக்கிடக்கும் அவர்கள் இருவருக்குமான தனிமைக்கு நந்தினி நந்தியாகவே தெரிந்தாள்.
அவளை நந்தியாக எண்ணியது சிரிப்பைக் கொடுக்க, அந்தச் சிரிப்புடனேயே அவளைப் பார்த்தான். அவள் கோபத்துடன் என்னவோ சொல்லத் துடிப்பதும் மயூரிக்காக அடக்கிக்கொண்டு இருப்பதும் கண்ணில் பட்டது.
“மயூ. ஒரு டீ தாறியா? தொண்டையெல்லாம் காய்ஞ்சுபோச்சு.” என்றான் அவளிடம்.
‘என்ன உரிமையில் கேட்கிறானாம்?’ கடுப்புடன் அவனைப் பார்த்தாள் மயூரி. அவனோ சிரித்துக்கொண்டு, ‘என்ன?’ என்று கண்களால் கேட்டான்.
நந்தினி இருந்ததில் முறைத்துவிட்டு எழுந்துபோனாள். “உனக்கும் சேர்த்து கொண்டுவா!” என்று அவளிடம் குரல் கொடுத்துவிட்டு நந்தினியிடம் திரும்பினான்.
‘என்ன பேசப்போகிறாய்?’ என்று கேட்டது அவன் கண்கள்.
‘இவன் மாறவே இல்ல. அண்டைக்கு இருந்த அதே திமிரும் தடிப்பும் அப்படியே இருக்கு.’ என்று முறைத்தாள் நந்தினி.
அவளுக்கு எங்கே தெரியப்போகிறது, உடைந்துபோயிருந்தவனின் திமிரையும் தடிப்பையும் மீட்டுக்கொண்டு வந்ததே மயூரிதான் என்று!
“செய்றதை எல்லாம் செய்துபோட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி எப்படி இப்படி உங்களால நடக்கமுடியுது கேகே?” என்றாள் பட்டென்று.
அவளின் கேள்வியில் தெரிந்த குற்றச்சாட்டைக் காட்டிலும் அவள் சொன்ன கேகே அவனுக்கு நிரம்பவே பிடித்திருந்தது. ரசித்துப் புன்னகைத்தான்.
மயூரியை இத்தனை வருடங்களாக அழவைத்தவன் கல்லுமாதிரி அமர்ந்துகொண்டு சிரிக்கிறான் என்று சீற்றம் கொண்டாள் நந்தினி.
“அந்தநேரம் உங்களை சும்மா பகிடிக்குத்தான் கேகே.. காதல் காயக்காரன் எண்டு சொல்லுறனான். ஆனா நீங்க உண்மையாவே கேகேதான். அவளுக்கு நிறையக் காயங்களை குடுத்திட்டிங்க. நிறைய அழ வச்சிட்டிங்க. அம்மாவும் இல்லாம, அப்பாவுக்கு முன்னால வயித்தில பிள்ளையோட போய் நிக்கவும் முடியாம, நம்பினவனும் கைவிட்டு தனிமரமாகி, வேலை பாத்த இடத்திலையும் வேலை செய்ய முடியாம எண்டு அவள் பட்ட கஷ்டம் நிறைய. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க. அவளிலையும் நிறைய பிழை இருக்கு. இடம் குடுக்காதயடி விலகியிரு எண்டு சொல்லச் சொல்லக் கேக்காம உங்களை மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு நம்பினவள். அதுக்கான பலனைத்தான் இத்தனை வருசமா அனுபவிச்சவள். ஆதுவும் இல்லாட்டி உயிரோட இருந்தே இருக்கமாட்டாள். அந்தளவுக்கு உங்களைப் பிரிஞ்சு துடிச்சவள். உங்களை மறக்கமுடியாம அவள் பட்டபாடு எனக்குத் தெரியும். தயவுசெய்து அவளை இனியாவது தனியா விடாதீங்க. சந்தோசமா வச்சிருங்க. அவள் உங்களை நம்பி வாறது இது ரெண்டாம் தரம். முதல் தரம் பொய்த்துப்போன மாதிரி இந்த முறையும் பொய்யா போயிடாதீங்கோ. வெளில தான் தைரியம்.. உள்ளுக்க நல்லா உடைஞ்சுபோய் இருக்கிறாள். என்றைக்கு நீங்க அவளை எனக்கு பழைய மயூரியா காட்டுறீங்களோ அண்டைக்குத்தான் என்ர வாயில இருந்து உங்கட பெயர் வரும். அதுவரைக்கும் நீங்க கேகே தான். அவளை காதல் எண்டுற பெயர்ல காயப்படுத்தின காயக்காரன் தான். நான் உங்கள முழு மனசோட வெறுக்கிறன் கேகே!” என்றவளுக்கும் அழுகை வந்துவிடும் போலாயிற்று!
அதற்குமேல் அங்கு இருக்கப்பிடிக்காமல், “மயூ நான் வாறனடி!” என்றுவிட்டு, அவனிடம் சொல்லிக்கொள்ளாமலேயே வெளியேறி இருந்தாள் நந்தினி.
காரைச் செலுத்திக்கொண்டிருந்தவளின் கண்ணோரம் நீர் துளிர்த்திருந்தது. அவனால் மட்டுமே மயூரியைச் சந்தோசமா வைத்திருக்க முடியும். அது அவளுக்கு நன்கு தெரியும். ஆனாலும், எத்தனை வருடங்களாக அவனைப்போட்டு மனதுக்குள்ளேயே சபித்திருப்பாள்; திட்டியிருப்பாள். அத்தனையும் இன்றைக்கு அவனைக் கண்டதும் தயக்கமின்றி வெளிவந்துவிட்டிருந்தது. இப்போதுதான் மனதே ஆறியது. எத்தனை நாட்கள் அவளின் மடியில் விழுந்து மயூரி கதறியிருப்பாள்! இனியாவது சிரிக்கட்டும். சந்தோசமாக வாழட்டும்! முழுமனதோடு எண்ணிக்கொண்டாள்.
‘இந்த நாசமாப்போன கேகேயும் இனி அவளை விடமாட்டான். சிரிக்கவைப்பான். என்ன சொக்குப்பொடியை போட்டு வச்சிருக்கிறானோ.. அவன் மட்டும் தான் அவளுக்கும் வேணும்.’ அன்று போலவே இன்றும் அந்தச் சொக்குப்பொடியின் ரகசியம் பிடிபடாதபோதும் நிறைவாக எண்ணிக்கொண்டு நிம்மதியோடு வீட்டுக்கு பயணப்பட்டாள்.
பிரதீபனின் முழுச் சந்தோசமும் அப்படியே வடிந்துவிட்டிருந்தது. இனி எல்லாம் சரியாகிவிடும், சரியாக்குவான் என்று நினைத்துக்கொண்டிருக்க அது அவ்வளவு இலகுவல்ல என்றுவிட்டுப் போய்விட்டாள் நந்தினி.
இருந்த இருக்கையிலேயே கண்ணை மூடிக்கொண்டு சரிந்தவன் விலுக்கென்று நிமிர்ந்தான். மயூரியும் எல்லாவற்றையும் கேட்டிருப்பாளே. வேகமாக எழுந்து அவளிடம் விரைந்தான்.
அவனுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தாலும், அவன் நினைத்தது சரிதான் என்று இறுகிப்போய் அவள் நின்ற நிலையே சொல்லிற்று! அழுகிறாளோ.. மனம் துடிக்க, “மயூ! ” என்றபடி நெருங்கி அவளின் முகம் பார்க்க முயன்றான்.
அவளோ காட்டமறுத்தாள்.
“என்னை பார் மயூ!” என்றபடி அவளின் முகம் பற்றப்போக, வேகமாக அவனிடமிருந்து விலகிநின்று, “என்னைத் தொடாதீங்க!” என்றாள் பட்டென்று. அடக்கப்பட்ட கோபத்தில் முகம் மிளகாய்ப்பழம் போன்று சிவந்திருந்தது.
அவள் சொன்னவிதமும் விலகிய வேகமும் அவனைச் சுட்டது!
“நான் தொடக்கூடாதா உன்ன?” சட்டென்று துளிர்த்துவிட்ட கோபத்துடன் கேட்டான்.
“இல்ல! தொடக்கூடாது!” அவளும் உறுதியாகவே மறுத்தாள்.
மனம் வலியில் சுருண்டுவிட அவளையே பார்த்தான். இன்றைக்குத் தொடாதே என்று சீறியவள் தானே அன்றைக்கு நந்தினி சொல்லியும் காதில் விழுத்தாமல் அவனோடு வாழ்ந்தாள். அவ்வளவு நம்பிக்கை. ஆனால், அவனும் துரோகம் செய்யவில்லையே.. குழந்தையைத்தான்.. கடவுளே திரும்பவும் காயப்பட்டிருந்த அதே இடத்துக்குத்தான் வந்துநின்றது அவனின் எண்ணவோட்டம்!
மயூரியின் மனதோ நந்தினியால் நினைவூட்டப்பட்ட இறந்தகாலத்தை எண்ணிக் கொதித்துக்கொண்டிருந்தது. அதை அவனுக்குக் காட்டாமல் டீயினை வெகு கவனமாக ஆற்ற முனைந்தாள். உள்ளே நடந்துகொண்டிருந்த மனப்போராட்டத்தின் விளைவாக கைகள் மெலிதாக நடுங்கிற்று.
வேதனையோடு அவளைப் பார்த்தான் பிரதீபன்.
அவளின் அடக்கப்பட்ட ஆத்திரம்தான் அவனுக்குள் கிலியைப் பரப்பிற்று!
“என்ன எண்டாலும் என்னோட கதை மயூ. மனதுக்கையே வச்சிருக்காத.” என்றான் தன்மையாக.
கோபத்துடன் அவள் நிமிர, “என்னை தனியா விடு, பிரிஞ்சு போ எண்டு மட்டும் சொல்லாத. இன்னொருமுறை நீயும் நானும் பிரியிறதா இருந்தா அது இந்த உலகத்தைவிட்டு நான் போறதா மட்டும் தான் இருக்கும்! விளங்குதா உனக்கு?” அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னான் அவன்.
அவனை முறைத்தாள் மயூரி. கோபச் சிவப்புடன் மெல்லிய நீர்ப்படலமும் அவள் விழிகளில் சேர்ந்திருந்தது.
அவனும் அவளின் கண்ணீரைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். இந்தமுறை துடைக்கப் போகவில்லை. ஆனால், “நானா தொடமாட்டன். தானா என்ர கை தொட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை!” என்றான் அவளைத் தளராமல் நோக்கி!
அதற்கு அவளிடமிருந்து எந்தவிதமான எதிரொலியும் இல்லை.
“அண்டைக்குமே குழந்தையைத்தான் வேண்டாம் எண்டு சொன்னனான். உன்னையில்ல. என்னைவிட்டு பிரிஞ்சு போனதும் நீதான். நான் இல்ல. என்றைக்குமே என்னால உன்ன விட்டுக்கொடுக்க முடிஞ்சதே இல்ல. உன்ன எனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு என்னைவிட உனக்குத்தான் நல்லா தெரியும். பழசை எல்லாம் பிடிச்சுக்கொண்டு தொங்குற நீ இதையும் மறந்திடாத.”

