காதல் காயங்களே 24 – 3

அடுத்த நொடியே அவன் கைகளுக்குள் புகுந்திருந்தாள் அவனுடைய பெண். அணைத்து உச்சி முகர்ந்தான். தேகத்தில் நடுக்கம் ஓடியது அவனுக்கு. அவள் விழிகளிலும் கண்ணீர். கன்னத்தை வருடிக்கொடுத்தான். விழிகளால் அவள் முகத்தை வருடினான். கைகளுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த அந்த வண்ணத்துப்பூச்சியின் அருகாமையை ரசித்துக்கொண்டிருந்தான்.

 

“அப்பா..” என்றாள் மெல்ல. காதில் தேன் வந்து பாய்ந்தது. வெற்றுடலாய் இருந்தவனுக்குள் அப்பா என்றழைத்து உயிரைப் புகுத்தியிருந்தாள் அவள். உடலெங்கும் சிலிர்த்துப் போயிற்று பிரதீபனுக்கு. அவளை மடியிலேயே அமர்த்திக்கொண்டான்.

 

“இன்னொருக்கா கூப்பிடு!” என்றான் ஏக்கத்தோடு.

 

அவளுக்குக் கண்ணீர் வழிந்தது. “அப்பா…” சிரித்துக்கொண்டே அழைத்தாள். கைகள் நடுங்க அவள் கண்களைத் துடைத்துவிட்டான். “அழக்கூடாது செல்லம்!” அதைச் சொல்லமுடியாமல் குரல் கரகரத்துப் போயிற்று. செருமிச் சீர் செய்துகொண்டான். ஆசையோடு அவளையே பார்த்தான். அவனுடைய மகள் அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தாள். அவன் உதட்டிலும் அதன் எதிரொலியாக சிரிப்பு அரும்பிற்று. என்ன என்றான் புருவங்களை உயர்த்தி. அவளும் முகம் முழுக்க விரிந்த சிரிப்புடன், தானும் என்ன என்றாள் அவனைப்போலவே புருவங்களை உயர்த்தி

 

வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தான் பிரதீபன். “சேட்டைக்காரி!” என்றான் ஆசையோடு. அவளோ சிரிக்கும் அப்பாவையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். “என்னம்மா?” என்றான் அவன் கனிவோடு. மனம் நிறைந்து ததும்பியது! ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள் அவள். விழிகள் மட்டும் அவன் முகத்திலேயே இருந்தது.

 

“யார் சொன்னது?”

 

“அம்மா..” அந்தப் பதிலில் அவன் மனம் இனம்புரியாத அமைதி கொண்டது.

 

“அப்பாவில கோவமா?” என்றான் மெல்ல.

 

இல்லை என்று தலையசைத்தாள் அவள். “ஆனா நீங்க ஏனப்பா எங்களை பாக்க இவ்வளவு நாளா வரேல்ல?” ஏக்கத்தோடு கேட்டாள் பெண்.

 

தொண்டை அடைத்துக்கொண்டது தகப்பனுக்கு.

 

“நீங்க ரெண்டுபேரும் அவுஸ்திரேலியாவில இருந்தது அப்பாக்கு தெரியாம்மா. நான் இங்கதான் உங்களை தேடிக்கொண்டு இருந்தனான்.” என்றான் அவன்.

 

“நாங்க இங்க ரெண்டு வருசமா இருக்கிறோமே..” இந்த இரண்டு வருடமும் என்ன செய்தாய் என்று கேட்கிறாள். மகளின் புத்தி சாதுர்யத்தில் அவனுக்குப் பெருமையாய் போயிற்று.

 

அதைவிட இத்தனை வருடங்களாக அவளுக்குள் இருந்த கேள்விகள் வெளியே வருவதையும் கணித்தான். அந்தக் கேள்விகளுக்குச் சரியான பொருத்தமான பதில்களைச் சொல்லவேண்டும். அப்போதுதான் அவளால் அவனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியும். அவளின் அப்பாவாக மட்டுமல்ல, அவளின் அம்மாவின் கணவனாகவும் ஏற்கமுடியும். அவர்கள் மூவருமாக இணைந்து வாழப்போகும் வாழ்க்கையை, மனதில் எந்த முரணும் இல்லாமல் அவள் இயல்பாய் ஏற்பதற்கு இந்தக் கேள்விகள் தான் உதவப்போகிறது. எனவே நிதானமாகப் பதில் சொன்னான் அவன்.

 

“நீங்க அம்மாட வயித்துக்கு இருக்கேக்க அப்பா ஒரு பெரி..ய பிழை செய்துபோட்டன். மன்னிக்கவே முடியாத பெரிய பிழை. அதால அம்மா கோவிச்சுக்கொண்டு போய்ட்டா. பிறகு நிறைய வருசம் அப்பா உங்களை தேடினான். இலங்கை முழுக்க தேடினான். இனி எங்க தேடுறது எண்டு தெரியாம தேடுறதை விட்டபிறகுதான் நீங்க இங்க வந்து இருக்கிறீங்க. நீங்க வந்தது தெரியாம அப்பா இருந்திட்டன். ஒருநாள் அம்மாவை எதேர்ச்சையா பாத்ததும் பின்னால துரத்திக்கொண்டு அப்பா ஓடிவந்திட்டேன்.” கதைபோல இலகு குரலில் சொன்னாலும், சொல்லும்போதே அவன் இதயம் கனத்துப் போயிற்று.

 

இந்த மகளை அவள் காப்பாற்றியபடியால் இன்றைக்கு அவன் வாழ்க்கை மீண்டிருக்கிறது. இல்லாவிட்டால்? அந்தக் குற்ற உணர்ச்சியிலேயே கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்துபோயிருப்பான்.

 

“நீங்க பிழை செய்தனீங்களோ?” சந்தேகமாக அவனைப் பார்த்தாள். அவளுக்கு ஏனோ அவனைப் பார்க்கத் தவறு செய்கிறவனாகத் தோன்றவில்லை போலும். “அப்படி என்ன செய்தனீங்க?”

 

“அத உனக்கு அப்பாவாலா சொல்ல முடியாது செல்லம். அவ்வளவு பெரிய பிழை.” என்றுவிட்டு, “சொன்னாத்தான் அப்பாவோட கதைப்பியா?” என்றான் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு.

 

“இல்லை இல்ல. இல்லாட்டியும் நான் கதைப்பன்.” என்றவள், அவனுடைய சோகத்தை உடனேயே ஆற்றுகிறவளாக உரிமையோடு தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

கரைந்துபோனான் பிரதீபன். அவள் உலகத்தில் தண்டனைகளே இல்லை போலும். மன்னித்தலும் அன்புகாட்டலும் மட்டுமே நிறைந்து கிடந்ததில் உணர்ச்சி வசப்பட்டுப்போனான் அவளின் அப்பன்.

 

“இனி அப்பா எந்தப் பிழையும் செய்யமாட்டன். உங்களை பிரிஞ்சு போகவும் மாட்டன். ஆதிரா குட்டி நல்லா வளந்து, படிச்சு, வேலைக்குப்போய், கல்யாணம் கட்டி எண்டு அவள் கிழவியாகிற வரைக்கும் அப்பா எங்கயும் போகமாட்டன். உங்களை பிரியவும் மாட்டன்.” என்று அவன் வேகவேகமாக வாக்குக்கொடுத்தபோது, கிளுக் என்று சிரித்தாள் அவள்.

 

உன் காலம் முடிகிறவரைக்கும் உன்னைப் பிரியமாட்டேன் என்று சொன்னதைக் காட்டிலும், அவளை அவன் கிழவியாகிற வரை உருவகப்படுத்தியதால் சிரித்தாள் அவனுடைய மகள். வார்த்தைகளின் ஆழம்வரை சென்று உணர்கிற அளவுக்குப் பக்குவம் இல்லாத வயது தானே. அப்பா இனி என்னவிட்டுப் போகமாட்டார் என்பதாக மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தாள் அவள். அதுதானே அவளுக்கு வேண்டியதும்!

 

சற்று யோசித்துவிட்டுச் சொன்னாள் பெண். “அம்மா கோபம் வந்தா கோவிச்சுக்கொண்டு எல்லாம் போகமாட்டா. போயிருக்கிறா எண்டா நீங்க சரியான பெரிய பிழை என்னவோ தான் செய்து இருக்கிறீங்க.” என்றாள், ஆராய்ச்சியோடு அவனை நோக்கி.

 

‘அச்சு அம்மாக்காரிதான்!’ ஆசையாய் மனம் சொல்லிக்கொண்டது.

 

இவ்வளவு சமாதானம் சொல்லியும், அப்படி என்ன செய்திருப்பான் என்று அவளுக்குள் ஓடுகிறது. உதட்டினில் முறுவல் அரும்பப் பார்த்தாலும் அடக்கிக்கொண்டு பாவியைப்போல் தலையை ஆட்டினான் அவன். “பெரிய பிழைதான் செல்லம். வேற யாரும் எண்டால் அப்பாவோட கதைச்சே இருக்கமாட்டீனம். உன்ர அம்மா நல்லவள். பாசமானவள். அதனாலதான், நான் அவ்வளவு பெரிய பிழை செய்தும் இந்த உலகத்திலேயே பெரிய பரிசு ஒன்றை எனக்குத் தந்திருக்கிறாள். ” ஆசையோடு அவளையே நோக்கிச் சொன்னான் அவன்.

 

“பரிசா?” என்று அவள் விழிகளை விரிக்க ஆம் என்பதாகத் தலையை அசைத்தான் அவன்.

 

அது என்ன என்கிற கேள்வியை அவள் கண்களில் படித்துக்கொண்டே, “அது நீ!” என்றான் அவன்.

 

அவளின் முகம் பூவாய் மலர்ந்து போயிற்று! தன்னைக் கொண்டாடும் தந்தையை எந்தக் குழந்தைகளுக்குத்தான் பிடிக்காது? அவளும் அவளின் அப்பாவின்மேல் பித்தானாள்.

 

குழந்தைகளின் உலகம் மிக மிகச் சின்னது. அவர்களைச் சந்தோசப்படுத்த நாம் ஒன்றும் மலையைப் புரட்டவே தேவையில்லை. நீ எனக்கு எவ்வளவு முக்கியம், உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று சொன்னால் போதும். கொண்டாடித் தீர்ப்பார்கள். அதைத்தான் பிரதீபனும் செய்தான். அவனுடைய பெண்ணும் அப்பா ஹீரோவை அந்தக் கணத்திலிருந்து கொண்டாடத் தயாரானாள்.

 

“ஆனா செல்லம், உன்ர அம்மா இன்னும் அப்பாவில கோவமாத்தான் இருக்கிறா. அதை நினைக்கத்தான் பயமா இருக்கு.” சோகத்துடன் அவன் சொன்னதும் பக்கென்று சிரித்துவிட்டாள் அவனின் பெண்.

 

“அம்மாக்கு நீங்களும் பயமா?” என்றாள் குதூகலமாய். அவளுக்கு ஒரு கூட்டாளி அகப்பட்டுக்கொண்ட சந்தோசம்.

 

“பின்ன. அவளை பார்த்தாலே எனக்கு நடுங்கும்.” என்றான் மகளின் சிரிப்பை ரசித்துக்கொண்டே.

 

அவளோ நம்பமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தாள். அவன் காதருகில் குனிந்து ரகசியக் குரலில், “உங்களுக்கும் அம்மா அடிப்பாவா?” என்று வினவினாள். அவன் சோகமாகத் தலையை ஆட்ட அவளுக்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

 

கண்ணில் சேர்ந்துவிட்ட நீருடன் மகளையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரதீபன்.

 

அவனுடைய சொர்க்கம் வேறெங்கும் இல்லை. கண்முன்னே கலகலத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!