காதல் காயங்களே 25 – 1

அத்தியாயம் 25

 

 

அலுவலகத்தில் தன் கணனியின் முன்னே அமர்ந்திருந்த மயூரியின் மெல்லிய விரல்கள் விசைப்பலகையின் மீது லயத்துடன் தாளமிட்டுக்கொண்டிருந்தாலும், தகப்பனும் மகளும் என்ன செய்வார்கள், என்ன பேசிக்கொள்வார்கள் என்கிற குறுகுறுப்பு பின்னணி இசைபோல ஓடிக்கொண்டே இருந்தது.

 

சும்மா அழைப்போமா, என்ன செய்கிறார்கள் என்று விசாரிப்போமா என்று நினைத்தாலும், அப்பா மகள் உறவுக்கு அப்பா மகள் இருவருமே உயிர் கொடுத்துக்கொள்ளட்டும் என்று தள்ளி நின்றுகொண்டாள். இருவருமே மற்றவரின் அருகாமையையும் அன்பையும் இதுவரையிலும் அனுபவிக்காதவர்கள். அனுபவித்துக்கொள்ளட்டுமே!

 

அலுவலகத்தில் இருந்து புறப்படுமுன் மட்டும், எங்கே நிற்கிறாய் என்று ஆதிராவுக்கு அழைத்துக் கேட்டாள்.

 

“அப்பா வீட்டில அப்பாவோட நிக்கிறன் அம்மா.” என்று சந்தோசமாய் ஆதிரா சொன்னபோது, இவள்தான் ஒருகணம் பதில் சொல்லமுடியாமல் நின்றுவிட்டாள்.

 

ஒரு நான்கு மணிநேரம் கடந்திருக்குமா? அதில் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டு இரண்டு மணிநேரம் ஆகியிருக்குமா? அதற்குள் அப்பா வீட்டில் என்று இயல்பாக அவளைச் சொல்ல வைத்துவிட்டானே!

 

அதுசரி! ஆட்களை வளைத்துப்போடுவதில் தான் அவன் வல்லவனாயிற்றே! புத்தி தெளிவான அவளையே தடுமாற வைக்கவில்லையா! இனி வெறுமையாக இருக்கும் வீட்டுக்குப்போய் என்னதான் செய்வது? நந்தினியையும் பார்க்கவேண்டும் போலிருக்க அவள் வீட்டுக்குக் காரைச்செலுத்தினாள்.

 

வீதியில் கவனம் இருந்தாலும், ஆதிரா சொன்னதே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது. நான்கு சொற்கள் கொண்ட ஒற்றை வசனத்தில் இரண்டு அப்பாக்களைச் சொல்லிவிட்டாள்.

 

இதை முதலிலேயே செய்திருக்க வேண்டுமோ? அவன் சொன்னதுபோல அவள் பிறந்த பிறகாவது காட்டியிருக்க வேண்டுமோ? இரவு அவர்தான் அப்பா என்று சொன்னபிறகு அன்று காலையில் அதைப்பற்றி ஆதிரா இவளிடம் கேட்கவே இல்லை. எதையாவது கேட்டுவிடுவாளோ என்று இவள்தான் தடுமாறிக்கொண்டிருந்தாள்.

 

அவள் எப்போதும்போல முதல் நாள் அழுத சுவடே இன்றிப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டிருந்தாள். கேட்டால் பிடிக்காது, அல்லது அம்மா அப்பா பற்றிய பேச்சை விரும்புவதில்லை என்று அந்தச் சின்னமகள் யோசித்து வைத்திருக்கவேண்டும். தன்னைத் தெரிந்து தனக்காக யோசித்து நடக்கும் அந்த மகளுக்கு இவள் தவறிழைத்துவிட்டாளா? அவளுக்காகவே அவனைப் பிரிந்தவள் அவளுக்காகவே அவனோடு இணைந்திருக்கவும் வேண்டுமோ?

 

ஆனால், ஆதிராவுக்கு அம்மாவேயானாலும் அவளும் உயிரும் உணர்வுகளும் நிறைந்த ஒரு மனுசிதானே. உள்ளக்குமுறல்களை எங்கே கொண்டுபோய்ப் புதைப்பாள்? குழம்பிக்கிடந்த மனதோடு நந்தினி வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.

 

கதவைத் திறந்த நந்தினி இவளைக் கண்டதுமே முறைத்தாள்.

 

மயூரிக்கோ தாயைக் கண்ட குழந்தைபோன்று மனம் அவளின் தோளுக்கு ஏங்கிப் போயிற்று. பின்னால் நந்தினியின் கணவன் குழந்தையோடு நிற்பதைக் கண்டுவிட்டுத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள். அவனைப்பார்த்துப் புன்னகைத்துவிட்டு, “வீட்டுக்கு வந்த மனுசரை வா எண்டு கூப்பிடவேணும் நந்து! அதுதான் மரியாதை.” என்றாள் கலகலப்பாக கதைக்க முயற்சித்து.

 

இவளை நந்தினிக்குத் தெரியாதா என்ன? “காணும் நடிச்சது! வா!” என்றவள், கணவனிடம் கண்ணைக் காட்ட, “உள்ளுக்கு வாம்மா!” என்றவன் பிள்ளையோடு வெளியேறி இருந்தான்.

 

“சாப்பிடுறியா? உனக்கு விருப்பமான காளான் பிரட்டினான்.” என்றாள் நந்தினி.

 

“எனக்கு ஒண்டும் வேண்டாம். நீ இங்க வந்து இரடி!” என்றவள் நந்தினி அமர்ந்ததும், அவளின் மடியில் தலை வைத்துக்கொண்டாள்.

 

அதுவரை இருந்த கோபம் மறந்து, தோழியைக் கவலையோடு பார்த்தாள் நந்தினி. கைகள் அதுபாட்டுக்குத் தலையை வருடிக்கொடுத்தது.

 

மீண்டும் எதையாவது இழுத்துவிட்டுக் கொண்டார்களோ.. இனியாவது சந்தோசமாக இருப்பாள் என்று நினைத்தாளே. அந்தக் கேகே மீதுதான் கடும் கோபம் உருவாகிற்று! அவனைப் பார்த்தாலும் பார்த்தாள் அன்றிலிருந்து இவள் படுகிற துயரங்கள் கொஞ்சநஞ்சமில்லை!

 

பொறுக்க முடியாமல், “என்ன மயூ? இப்ப என்ன நடந்தது?” என்றாள் அதட்டலாக.

 

“ஒண்டும் நடக்கேல்ல. ஆது அவளின்ர தகப்பனோட போய்ட்டாள். அதுதான் இங்க வந்தனான்.” என்றாள் மயூரி.

 

“ஓ…!” என்று கேட்டுக்கொண்டாலும், பிரதீபனை ‘ஆதுவின் தகப்பன்’ என்று அவள் விளித்ததைக் குறித்துக்கொண்டாள் நந்தினி.

 

“அதுக்கு எதுக்கு நீ சோகமா இருக்கிறாய்?”

 

“நான் ஒண்டும் சோகமா இல்ல!”

 

“பொய் சொல்லாத மயூ!” என்றவளின் கையிலேயே ஒன்று போட்டாள் மயூரி.

 

“நான் ஏனடி பொய் சொல்ல? என்ன எண்டாலும் உன்னட்ட சொல்லுவன்.”

 

“அதுதான் எல்லாத்தையும் எனக்கு சொல்லியிருக்கிறாய் போல.” என்று முறைத்தாள் நந்தினி.

 

எழுந்து அமர்ந்துகொண்டு தோழியைச் சங்கடத்துடன் பார்த்தாள் மயூரி. “இந்தளவுக்கு வரும் எண்டு நானே நினைக்கேல்ல நந்து!”

 

“என்னை பாத்து சொல்லடி? இந்தளவுக்கு கேகே கொண்டுவருவார் எண்டு உனக்குத் தெரியாது? கேகேயைப்பற்றி எனக்கே தெரியும். ஆனா உனக்குத் தெரியாது. இத நான் நம்பவேணும்?” அவள் முகத்தை நேராகப் பார்த்துக் கேள்வி கேட்டாள் நந்தினி.

 

“அவரைத் தெரியும் தான். ஆனா, இப்பவும் முந்தி மாதிரியே இருப்பார் எண்டு எப்படியடி நினைக்கிறது சொல்லு?” மெல்ல அவளிடமே நியாயம் கேட்டாள்.

 

பதில் சொல்லாமல் நந்தினி முறைத்துக்கொண்டிருக்க, “உன்னட்ட அவரை பாத்ததை, கதைச்சதை சொன்னா நீ சேத்து வச்சிடுவாய் எண்டுதான் சொல்லேல்ல. பிறகு பாத்தா இந்த அர்ஜுன் வந்து எல்லாத்தையும் கெடுத்துப்போட்டான்.” என்று, நடந்ததை எல்லாம் சொல்லும்போதே அவள் குரல் கனத்துப்போயிற்று!

 

தெளிந்த நீரோடையாகச் சென்றுகொண்டிருந்த அவளின் வாழ்க்கையில் மீண்டும் கல்லை எறிந்துவிட்டான்!

 

இவ்வளவு நடந்திருக்கிறது ஒரு வார்த்தை இவள் சொல்லவே இல்லையே என்று உள்ளே ஓடினாலும், திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தனக்குள் போராடி மன உளைச்சலில் இருக்கிறாள் என்று புரிந்து போயிற்று நந்தினிக்கு.

 

அவளும் எவ்வளவைத்தான் தாங்குவாள். அதைவிட இது பத்து வருடத்துக் காயம். இலகுவில் ஆறவும் ஆறாது. காதலுக்கும் காயத்துக்கும் நடுவுக்குள் அகப்பட்டுக்கொண்டு துடிக்கிறவளின் தலையை வருடிக்கொடுத்தாள் நந்தினி.

 

அந்த அன்பில் உள்ளம் தானாக நெகிழ, “சொல்லாம விட்டது பிழை தானடி. ஆனா கோவிக்காத. உன்னைவிட்டா வேற யாரடி இருக்கினம் எனக்கு.” எனும்போதே,

 

“இனியும் இப்படி எதையாவது சொன்னாய் எண்டு வை வெளுப்பன் சொல்லிப்போட்டன். இனி உனக்கு கேகேதான் எல்லாத்துக்கும். அழுறதா இருந்தாலும் அங்க போய் அழு. சிரிக்கிறதா இருந்தா அவரோட சேர்ந்து சிரி. கொஞ்சுறதா இருந்தா அவரை கொஞ்சு. விளங்கினதா?” என்றாள் அதட்டலாக.

 

என்ன இருந்தாலும் இனி அவன்தான் அவளுக்கு. அதில் நந்தினிக்கு மாற்றுக் கருத்தில்லை!

 

அமைதியாகிப்போனாள் மயூரி.

 

“என்னடி? ஒன்றுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? சும்மா கண்டதையும் நினைக்காம சந்தோசமா வாழுற வழியை பார் மயூ!” என்றாள் நந்தினி தன்மையாக.

 

“அது அவ்வளவு இலகுவா முடியும் எண்டு நினைக்கிறியா நந்து?” அகன்ற விழிகளில் வேதனையைத் தேக்கிச் சொன்னாள் மயூரி.

 

நந்தினிக்குமே மனம் கலங்கிப் போயிற்று. ஆனால் காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.

 

“பிடிச்சுக்கொண்டு தொங்காத எண்டு சொல்லுறன். எனக்கும் கேகேல கோவம் இருக்குத்தான். அது வேற. ஆனா, நீயா அவரை விட்டு பிரிஞ்சபிறகும் அவர் இன்னொரு கல்யாணம் கட்டேல்ல பாத்தியா. பத்து வருசமடி. ஒரு ஆம்பிளை அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க மாட்டான். உனக்காவது பற்றுதலுக்கு ஆதிரா இருந்தாள். ஆனா அவருக்கு? நீயும் இல்லை என்கிறபோது சிம்பிளா புது மாப்பிள்ளை ஆகியிருக்கலாம்.” என்றாள் தெளிவாக.

 

“இன்னொருத்தியை கட்டியிருந்தா நீயே கூட நியாயம் கேக்க முடியாது. அவரை விட்டுட்டு போனது நீ. அவரோ அப்படியெல்லாம் செய்யாம இவ்வளவு காலமும் உனக்காக காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். உன்ன பாத்த பிறகும் நீ இடம் குடுக்கேல்ல. இருந்தும், உன்னையும் மீறிக்கொண்டு கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறார் எண்டால் கேகே கெட்டவர் இல்லயடி. குழந்தையை வேண்டாம் எண்டு சொன்னது எனக்கும் கோவம் தான். ஆனா ஆதிராவ பெத்த கையோட பாத்திருந்தாலும் அண்டைக்கும்(அன்றைக்கும்) உன்ன விட்டிருக்க மாட்டார். அதுதான் கேகே.” உறுதியாகச் சொன்னாள் நந்தினி.

 

“ஆம்பிளைகள் எப்பவுமே அப்படித்தான் மயூ. ஆழமா யோசிக்காம முடிவு டக்கென்று எடுப்பினம். அதே மாதிரி நான் எடுத்த முடிவுதான் சரி எண்டு நினைப்பினம். அதால வருகிற பிரச்சனைகள் தான் இதெல்லாம். அண்டைக்கு குழந்தையை பற்றி பெருசா யோசிச்சு இருக்கமாட்டார். ஆனா இண்டைக்கு ஆதிராவுக்கு சின்னதா ஏதும் ஒண்டு சொல்லிப்பார். கடைசிவந்தாலும் விடமாட்டார்.”

 

அது உண்மைதான். அன்று ஆதிராவைப் பற்றிக் கதைத்தற்கு ஆக்ரோஷம் கொண்டானே. அவளின் தேகம் அப்போதும் நடுங்கியது.

 

“என்னடி?” என்றாள் நந்தினி.

 

“இல்ல.. அண்டைக்கு கோபத்தில..” என்று நடந்ததைச் சொன்னபோது, கேட்டுவிட்டுக் கொதித்துப்போய் நான்கு நன்றாகப் போட்டுவிட்டிருந்தாள் நந்தினி.

 

“அறிவிருக்காடி உனக்கு. உன்ர கோபத்துக்கு ஆதுவ இழுப்பியா நீ. கேகே உன்ன சும்மா விட்டுட்டார். நானா இருந்திருக்க கொன்றே போட்டிருப்பன்.” என்றவளை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப் போயிற்று மயூரிக்கு.

 

“அதுசரி இப்ப எங்க ஆது?”

 

“அவேன்ர(அவர்களின்) வீட்டை போய்ட்டாள்.”

 

“ஓ.. மின்னல் வேகத்திலதான் எல்லாத்தையும் செய்றார் கேகே.” என்றவளுக்கு மனதுக்கு இதமாயிருந்தது.

 

“அந்தப் பெரிய மனுசி என்ன செய்றா எண்டு பாப்பம்.” ஆதிராவுக்கு அழைத்தாள் நந்தினி. அவளுக்கும், தகப்பனோடு ஆதிரா இணைந்துகொண்டாளா, அவன் வீட்டினர் எப்படி அவளை ஏற்றுக்கொண்டனர் என்று அறியவேண்டி இருந்தது.

 

அவன் அருகில் இருப்பான் என்கிற தயக்கத்தில் அழைக்காமல் இருந்த மயூரியும் நந்தினி அழைக்கவும் தானும் காதைத் தீட்டிக்கொண்டாள்.

 

இவள் அழைத்ததும், “ஹலோ! யாருங்க பேசறது? பிரபா வைன்ஷாப் ஓனருங்களா?” என்று, வடிவேலுவின் மிமிக்கிரியில் மிதமிஞ்சிய உற்சாகத்தில் துள்ளிக்கொண்டு வந்து செவிகளை நனைத்தது ஆதிராவின் இளங்குரல்.

 

முகம் மலர மயூரியைத் திரும்பிப் பார்த்தாள் நந்தினி. அவளும் மகளின் அதீத சந்தோசத்தில் முகம் கனியக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

“ஆதிரா.”

 

“கடையை எப்ப சார் தொறப்பீங்க?”

 

“டோய்! என்ன சேட்டையா?”

 

“நோநோநோ! நோ பிராப்ளம். ச்சாரி பார் த டிஸ்டபன்ஸ்!” வடிவேலுவின் அதே உச்சரிப்பில் பிளந்து கட்டினாள் சின்னவள்.

error: Alert: Content selection is disabled!!