காதல் காயங்களே 26 – 1

அத்தியாயம் 26

 

 

அம்மாவும் மகளும் படுக்கைக்குச் சென்றிருந்தனர். மயூரியின் இடுப்பைக் கட்டிக்கொண்டு ஒரு காலைத் தூக்கி அவளின் மேல் போட்டிருந்தாள் ஆதிரா. மற்றும்படி உறங்கும்வரை கட்டிலையே இரண்டாக்கிவிடுகிறவர்களுக்குள் இன்று என்றுமில்லாத ஒரு அமைதி.

 

‘சாப்பிட்டேன்’ என்று அவன் சொன்ன பொய்யிலேயே மயூரியின் எண்ணங்கள் சுற்றிச் சுழன்றுகொண்டு நின்று, குற்றக் குறுகுறுப்புக்கு ஆளாகிக்கொண்டிருந்தது. அதுவும் நிறைந்திருந்த அவளின் வயிறு வெறுமையான அவன் வயிற்றைச் சொல்லிக்காட்டிக்கொண்டே இருந்தது.

 

என்ன இது? எதற்கு நான் அவனைப்பற்றிய சிந்திக்கவேண்டும்? சாப்பிடாதே என்று அவள் சொல்லவே இல்லை. அவனாகத்தான் உண்ணாமல் போனான். போகட்டுமே! எத்தனை நாட்கள் அவள் கண்ணீரில் கரைந்திருப்பாள். உண்ணாமல் உறங்காமல் கிடந்திருப்பாள். அப்போதெல்லாம் யார் கவனித்தார்கள் அவளை? காலையில் உனக்காக உன்னை மணக்கவில்லை என்று அவ்வளவு தெளிவாகச் சொன்னபிறகும் உயிர்க்காதலன் போன்று உணவை ஊட்ட வந்தால் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

 

இனியாவது அவள் மனதை விளங்கி நடந்துகொண்டால் நல்லது!

 

“அம்மா அப்பாவோட கதைக்கவே மாட்டீங்களா?” படுத்திருந்த ஆதிரா திடீரென்று கேட்கவும் திகைப்புடன் மகளைப்பார்த்தாள் மயூரி.

 

“எனக்கு எல்லாம் தெரியும். அப்பா சொன்னவர். நீங்கதான் எனக்கு ஒண்டும் சொல்லேல்ல.” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

 

“அப்படி என்னத்த சொன்னவர் உன்ர கொப்பா?” என்றாள் கடுப்புடன்.

 

ஒரு அரை நாள். அதற்குள் அப்பாவும் மகளுமாகச் சேர்ந்துகொண்டு அவளைப் படுத்துகிற பாடு இருக்கே! கண்ணைக் கட்டியது மயூரிக்கு.

 

“அது.. அப்பா தெரியாம என்னவோ பெரிய பிழை செய்துபோட்டாராம். அதனாலதான் நீங்க அவரோட கதைக்காம போனீங்களாம். இன்னுமே கோவமா இருக்கிறீங்களாமே.” அவள் சொன்ன தொனியே ‘நீ செய்வது சரியில்லை.’ என்று அவளைக் குற்றம் சாட்டுவது போலிருந்தது.

 

பல்லைக் கடித்தாள் மயூரி. “இவ்வளவும் சொன்ன கொப்பா தான் என்ன செய்தவர் எண்டு சொன்னவரோ?” சொல்லியிருக்கமாட்டான் என்கிற தைரியத்தில் கேட்டாள்.

 

“அம்மா! அப்பாவை அப்பா எண்டு சொல்லுங்கோ. அது என்ன கொப்பா.” என்று சண்டைக்கு வந்தாள் ஆதிரா.

 

‘அடக்கடவுளே! ஒரு நாளுக்கே இந்தப்பாடா?’ என்று பார்த்தாள் மயூரி.

 

“அது பெரியாக்கள் கதைக்கிற விசயமாம். அதால அவர் எனக்கு சொல்லேல்ல. ஆனா தன்னில தான் பிழை எண்டு சொன்னவர்.” என்று தகப்பனின் நேர்மைக்குக் கொடிபிடித்தாள் மகள்.

 

‘அதுதானே பாத்தன். அவன் மகா புத்திசாலி. நல்லபிள்ளைக்கு நடிச்சிருக்கிறான்.’

 

“ஆனா நான் உங்கட வயித்துக்க இருக்கேக்க நடந்த விசயத்துக்கு நீங்க ஏன் இன்னும் கோவமா இருக்கிறீங்க. அவருக்கு உங்களை பாத்தாலே பயமா இருக்காம்!” என்றதும், பக்கென்று சிரித்துவிட்டாள் மயூரி.

 

மகள் புறமாகப் புரண்டு அவளை நெருக்கமாகக் கட்டிக்கொண்டு, “யாருக்கு? உன்ர கொ… சொரி சொரி உன்ர அப்பாக்கு என்னை பாத்து பயமாமோ?” என்று மகளிடம் செல்லம் கொஞ்சினாள் தாய்.

 

“ஓம் அம்மா. நீங்க பேசுவீங்க எண்டு அவருக்குச் சரியான பயமாம்.” அவனுக்கு மேலால் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் ஆதிரா.

 

“அப்பா பாவம் தானே அம்மா. நீங்க மன்னிச்சா அப்பாவை நாங்க எங்களோடயே வந்து இருக்கச் சொல்லலாம் அம்மா.” என்றாள் ஆசையாக.

 

மகளின் ஏக்கம் புரிந்தது. அவனுடைய வருகையையே ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் முழிக்க, நிரந்தரமாகவே அவனும் இங்கு இருப்பது என்றால்.. மூச்சு முட்டிவிடாதா?

 

திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டு, மகளுக்கு அவனை அப்பாவாகக் காட்டிவிட்டு வீட்டுக்கு வரவிடாமல் தடுப்பதில் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது? பல்கலைக் கடித்துப் பொறுக்க வேண்டியதுதான் போலும்!

 

“சரி. நான் மன்னிச்சா நீ எனக்கு என்ன தருவாய்?”

 

“என்ன வேணும்?” ஆவலாய் கேட்டாள் மகள்.

 

நெற்றியை தொட்டுக் காட்டினாள் மயூரி. அடுத்த நொடியே அன்னையை இறுக்கிக் கட்டிக்கொண்டு நெற்றியில் மட்டுமில்லை முகம் முழுவதிலும் முத்தமிட்டாள் ஆதிரா. மயூரியும் திருப்பிக்கொடுக்க, அவர்களின் முத்த விளையாட்டு ஆரம்பித்து முடிந்தபோது ஆதிரா உறக்கத்துக்கே போயிருந்தாள்.

 

மகளை வருடிக்கொடுத்தாள் மயூரி. இவளுக்காகவேனும் அவனுடன் சேர்ந்து வாழ்ந்துவிடேன் என்றது அறிவு. ஆனால் எப்படி? மனது ஒப்பாமல் வாழும் கலையை அவள் அறிந்திருக்கவில்லையே!

 

அடுத்தநாள் காலையில் சொன்னதுபோலவே வந்துவிட்டிருந்தான் பிரதீபன். “குட்மோர்னிங் ஆதுக்குட்டி!” உற்சாகமாய் சிரித்தபடி வந்தவனின் முகத்தில் தெரிந்த சோர்வை, பார்த்ததுமே கண்டுகொண்டாள் மயூரி. ‘இரவு அங்கும் சாப்பிடவில்லையோ?’ கேள்வியுடன் அவள் அவனை ஏறிட அவனோ இரவைப்போலவே மகளறியாமல் அவளைத் தவிர்த்தான்.

 

ஒரு கோபம் சுர் என்று ஏறிற்று! ‘தன்ர வயித்த தானே கவனிக்கத் தெரியாத அளவுக்கு அவன் ஒண்டும் குழந்தை இல்லை தானே!’ என்று கோபமாய் எண்ணிக்கொண்டவள் மகளை அவனுடன் அனுப்பிவிட்டு தான் தன் காரில் வேலைக்குப் புறப்பட்டிருந்தாள்.

 

மாலை, ஆதிராவை பள்ளிக்கூடத்தால் அழைத்துக்கொண்டு வந்து டென்னிஸ்க்கு விட்டு, அங்கிருந்தும் கூட்டிக்கொண்டு மேக் டொனால்ட்க்கு அழைத்துச் சென்று அவளுக்கு மட்டும் வாங்கிக்கொடுத்தாள்.

 

“நீங்க சாப்பிடேல்லையாம்மா?” என்று கேட்ட மகளிடம், “கேண்டீன்ல சாப்பிட்டது பசிக்கேல்ல ஆது.” என்றுவிட்டாள்.

 

உண்மையில் பசியில்லைதான். ஆனால், அவள் சொன்னதல்ல காரணம். இரவு அவனைச் சாப்பிடாமல் அனுப்பியது நெஞ்சில் நின்று உறுத்திக்கொண்டே இருந்தது. கோபதாபங்களைத் தாண்டியதுதானே வயிற்றுப்பசி. அதை ஆற்றாமல் விட்ட செயல் அவளை மிகவுமே தொந்தரவு செய்துகொண்டிருந்தது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்தபோது முற்றிலுமாகக் களைத்துப் போயிருந்தாள்.

 

வழமையான அலுவல்கள்தான். ஆயினும், மனப்போராட்டம் மனதை மட்டுமல்ல உடலையும் சோர்வடையச் செய்திருந்தது.

 

வீட்டு வாசலுக்கு வந்தால் அன்று போலவே இன்றும் காத்திருந்தான் பிரதீபன். அவனைக் கண்டதுமே, அவளின் இந்த மன அலைக்கழிப்புக்கெல்லாம் இவன்தான் காரணம் என்று ஒரு கோபம் எழ, அவனை லட்சியம் செய்யாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள் மயூரி.

 

அவனுடைய மகளுக்கோ அப்படி அவன் காத்திருந்தது கவலையாய் போயிற்றுப் போலும்.

 

“அப்பா! திறப்பு இல்லையா உங்களிட்ட? என்ரய(என்னுடையதை) தாறன். இனி வந்தா வீட்டுக்குள்ள போங்கோ. நீங்களும் எங்களோட இருக்கிறதுக்கு அம்மா ஓம் எண்டு சொல்லிட்டா.” துள்ளிக்கொண்டு சொல்லியபடி, தன் பள்ளிக்கூட பாக்கில் இருந்த சாவிக்கோர்வையை எடுத்து நீட்டினாள் ஆதிரா.

 

கை தானாக அதை வாங்கினாலும், பிரதீபன் மயூரியைக் கேள்வியாக நோக்கினான்.

 

அவளோ அவனிடம் பார்வையைத் திருப்பவே இல்லை. நீ பதில் சொல்லாமல் நானும் வரமாட்டேன் என்பதாக அவனும் இருந்த இடத்திலிருந்து அசையவே இல்லை.

 

‘மகளையும் வைத்துக்கொண்டு என்ன இது?’ சினச் சிவப்பு முகத்தில் ஏற, “திறப்பை குடுத்தாச்சு எண்டால் உன்ர அப்பாவையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்க நட ஆது!” என்றாள் மயூரி, அதட்டல் குரலில்.

 

அதாவது, மகள் சொன்னதற்கு அவளும் சம்மதிக்கிறாளாம்! உதட்டோரம் எழுந்த சிரிப்பை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்குள் நடந்தான் பிரதீபன்.

 

ஆதிராவைக் குளிக்க அனுப்பிவிட்டு, மயூரி உடைமாற்ற அறைக்குள் சென்றிருந்தாள்.

 

தொப்பென்று வந்து சோபாவில் சோர்வுடன் விழுந்தான் பிரதீபன். அன்று முழுக்க உண்மையிலேயே அவன் உபவாசம் தான். அவள் கையால் சாப்பிட்டே ஆகவேண்டும் என்கிற பிடிவாதம் உந்திய பட்டினி! அம்மா தேநீர் கேட்டும் அருந்தவில்லை. அந்தக் களையோடு அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்கிற கேள்விக்கும் பதில் அவனுக்குத் தெரியவே இல்லை.

 

அவளின் கோபத்தில் நியாயம் இருக்கிறதுதான். அதற்காக அப்படியே விடமுடியுமா?

 

அப்போது பார்த்து அவனுடைய அன்னை அழைத்தார்.

 

“என்னம்மா?” இருந்த களைப்பில் ஏற்றத்துடத்துடன் கேட்டான்.

 

“மயூரிட்ட ஃபோனை குடு!” அவன் கோபத்தை எல்லாம் பொருட்டே செய்யாமல் உத்தரவிட்டார் அவர்.

 

“அவளோட என்ன கதைக்கப்போறீங்க?” அவனுக்குத் தெரியும், என்ன கதைக்கப்போகிறார் என்று. அந்தக் கோபம் தெறித்தது வார்த்தைகளில்.

 

“அது என்னத்துக்கு உனக்கு? நீ குடு!” என்று நின்றார் அவர்.

 

“உடுப்பு மாத்துறாள் அம்மா. என்ன எண்டு சொல்லுங்கோ, நான் அவளிட்ட சொல்லுறன்.”

 

“எனக்கு வாயிருக்கு. நானே சொல்லுவன். நீ கதவைத் தட்டிக் குடு!” என்று உத்தரவிட்டார் அவர். “ஒரு பிள்ளையே இருக்கு. இதுல அவள் உடுப்பு மாத்திறாளாம். இவர் வெளில நிக்கிறாராம்.” என்கிற புறுபுறுப்பு வேறு மிகத் தெளிவாகவே கேட்டது.

 

“அம்மா!” என்று அவன் அதட்ட, “என்னடா அம்மா? நான் என்ன இல்லாததையா சொன்னனான்? பெரிய இவன் மாதிரி அதட்டுறாய்?” என்று அவனுக்கு மேலால் நின்றார் அவர்.

 

இவருடன் மல்லுக்கட்டுவதற்கு அவளிடமே கைப்பேசியைக் கொடுத்துவிடலாம் போல என்று அவன் நினைக்கையிலேயே, அவளும் இவன் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டே உடைமாற்றி வெளியே வந்து அவனைக் கேள்வியாக ஏறிட்டாள்.

 

‘இப்ப மட்டும் இங்க என்ன பார்வை?’ அப்போதும் ஃபோனைக் கொடுக்காமல் அவன் நிற்க, அவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு வந்து கிட்டத்தட்ட அவன் கையிலிருந்து அதைப் பறித்து எடுத்து, காதுக்குக் கொடுத்து, “சொல்லுங்க மாமி.” என்றாள் மயூரி.

 

“நான் மனுசனாகாம அவா உனக்கு மாமியாயிட்டா போல. ஆச்சரியம்!” என்று புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்திவிட்டுப் போனான் அவன்.

 

போகிறவனின் முதுகைத்தான் முறைக்க முடிந்தது அவளால்.

 

அங்கே புஸ்பவதி அம்மாவோ எடுத்ததுமே, “அம்மாச்சி மயூரி, இவன் என்ன கேட்டாலும் உன்னட்ட சாப்பிட்டன் உன்னட்ட குடிச்சிட்டன் எண்டு சொல்லுறானம்மா. உண்மையா சொல்லுறானா இல்ல சும்மா சொல்லுறானா ஒண்டும் விளங்கேல்ல. தேத்தண்ணி கேட்டா வேண்டாமாம், உன்னோட குடிக்கப்போறானாம். சாப்பாடு கேட்டா நீ தந்தனியாம் எண்டு சொல்லுறான். ரெண்டு நாளா இங்க என்னட்ட பச்சத்தண்ணி கூட வாங்கிக் குடிக்க இல்ல. நம்புறதா இல்லையா எண்டு கிடக்கு. அதுதான் உன்ன கேக்க நினைச்சனான். உண்மை எண்டால் சந்தோசம். இல்லை எண்டால் என்ன எண்டு ஒருக்கா அவனை கவனியம்மா.” என்றவர், அது உண்மையா பொய்யா என்று அவளிடம் விசாரிக்கவே இல்லை. மாறாக பேத்தியைப் பற்றியும் அவளைப் பற்றியும் கேட்டுவிட்டு அப்படியே மயூரியின் நம்பரையும் வாங்கிக்கொண்டு வைத்துவிட்டிருந்தார்.

 

மயூரி அப்படியே அமர்ந்துவிட்டாள். கண்மண் தெரியாத ஆத்திரத்தில் கைகால்கள் நடுங்கிற்று! ஆக, நேற்று அவன் கேட்டு அவள் கொடுக்க மறுத்ததில் இருந்து சாப்பிடவில்லை. என்ன இது? தன்னை வருத்தி அவளைப் பணியவைக்கப் பார்க்கிறானா? சுர் என்று உச்சிக்கு ஏறிய கோபத்துடன் அவன் முன்னே சென்று நின்றாள்.

error: Alert: Content selection is disabled!!