காதல் காயங்களே 26 – 2

 

“என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க நீங்க? நீங்க பட்டினி கிடந்தா இரக்கப்பட்டு ஓடிவந்து உங்களை கொஞ்சுவன் எண்டா?”

 

“ஓ..! அப்ப நான் பட்டினி கிடந்தா நீ ஓடிவந்து என்னை கொஞ்சுவியா? அது மட்டும் தானா இல்ல அதுக்கும் மேலயும் செய்வியா?” என்றான் அவன் நக்கலாக.

 

அவளோ கொதித்துப்போனாள். “அதுக்கெல்லாம் வேற யாரையும் பாருங்கோ. என்னை இல்ல. இந்த வீட்டில உங்கட வேலை ஆதிராவுக்கு அப்பாவா இருக்கிறது மட்டும் தான். நீங்க தலைகீழா நிண்டாலும் என்னை…” அதற்குமேல் அவளைக் கதைக்கவிடாது, முகம் இறுக அவளின் வாயைப் பொத்தி மற்றக் கையால் அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்த அடுத்த அறையை நோக்கி நடந்தான் அவன்.

 

திகைத்துப்போனாள் மயூரி!

 

திமிறக்கூட மறந்து அவனைப்பார்த்து விழித்தவளை அறைக்குள் சென்று விட்டுவிட்டுக் கதவடைத்தான். “இப்ப சொல்லு! ஆதிராவுக்கு அப்பாவா வேலை பாக்கோணும். சரி. உனக்கு யாரா இருக்கோணும்? அதையும் சொல்லு?”

 

அவன் தூக்கியத்திலேயே அதிர்ந்துபோனவளின் தேகம் நடுங்கிக்கொண்டிருந்ததில் வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டிருந்தன.

 

“சொல்லு மயூ! உனக்கு யாரா வேலை பாக்கோணும் நான்? முந்தி(முன்னர்) பாத்த அதே வேலைய பாக்கட்டா?” அவளை நெருங்கிச் சென்று கேட்டான் அவன்.

 

அவளோ கோபத்திலும் படபடப்பில் சிவந்துவிட்ட முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

 

“எனக்குப் பதில் வேணும் மயூ! இல்லாம விடமாட்டன்.” அவளின் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான்.

 

“சொல்லு மயூ? உனக்கு நான் வேண்டாமா? உன்ர தீபன் வேண்டாமா? அந்தளவுக்கு கொடுமைக்காரனாடி நான்? ஆனா எனக்கு என்ர மய்யு வேணும்! என்ர மய்யுவாவே வேணும்! ஒரு நாள் ரெண்டு நாள் இல்லையடி பத்து வருச காத்திருப்பு. யோசிக்காம செய்த ஒரு பிழைக்கு இன்னும் எத்தனை வருசத்துக்கு தண்டனை தரப்போறாய்? சாகிற வரைக்கா?” அவன் கேள்வியில் அவள் தேகம் ஒருமுறை நடுங்கிற்று!

 

ஆனாலும், நிமிர்ந்து அவன் விழிகளைப் பார்த்து, “எனக்குத் தெரியாது. ஆனா மனம் ஒப்பாத எதையும் என்னால செய்யேலாது!” என்றுவிட்டு நடந்தாள் அவள்.

 

அவளுடையது பத்துவருடக் கோபம் இல்லையா. இலகுவில் தீரேன் என்று நின்றது! ஆனால், அவனுடையதும் பத்துவருடக் காத்திருப்பாயிற்றே! இலகுவில் அவனும் விடப்போவதில்லை.

 

கதவுப் பிடியில் கைவைத்தவள் நிதானித்து, “தயவுசெய்து சாப்பிடுங்க!” என்றாள் அவன் முகம் பாராமல்.

 

அவன் உதட்டினில் மெல்லிய முறுவல் மலர்ந்தது. வேகமாக மறைத்துக்கொண்டான்.

 

“எனக்கும் பசிக்குதுதான். ஆனா நீ தந்தா மட்டும் தான் சாப்பிடுவன். எத்தனை நாளானாலும் சரி!” என்றான் அவன்.

 

“உங்களை வருத்தி எனக்கு பிடிக்காததை செய்ய வைக்க பாக்குறீங்களா பிரதீபன்?” அவன் விழிகளைப் பார்த்து நிதானமாய்க் கேட்டாள் அவள்.

 

“செய்யாத. ஏன் செய்றாய்? உனக்குத்தான் நான் வேண்டாமே. பிறகு எதுக்கு என்னைப்பற்றி யோசிக்கிறாய்? நான் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி என்ன? உனக்குத் தேவை ஆதிராக்கு நான் அப்பாவா இருக்கவேணும். அவ்வளவுதானே. அதுல ஏதும் குறை வந்தா மட்டும் கேளு! இப்ப போ!” என்றவனை விழிகளாலேயே எரித்தாள் மயூரி.

 

“எதிரியைக் கூட பட்டினி போடுற பழக்கம் எனக்கில்லை. வாங்க சாப்பிட!” அவன் முகம் பாராமல் சிடுசிடுத்தாள் அவள்.

 

“அதுதான் பசிக்குது எண்டு சொன்னதும் ஓடிவந்து சாப்பாடு போட்டாய் போல!” இதழோரம் வளையச் சொன்னான் அவன்.

 

குத்திக் காட்டியவனை பார்வையாலேயே எரித்தாள் மயூரி.

 

“இவ்வளவு கஷ்ட்டப்பட்டெல்லாம் நீ சாப்பாடு தரத்தேவையில்ல. போய் உன்ர வேலையை பார்.” அவனும் தன் வீம்பைக் கைவிடுவதாயில்லை.

 

“இப்ப வரப்போறீங்களா இல்லையா?” என்று சீறினாள் அவள். செய்வதை எல்லாம் செய்துவிட்டு என்ன நடிப்பு!

 

அதற்குமேல் அவனும் அவளைச் சீண்டவில்லை.

 

“சரிசரி! ஏன் மயூ இவ்வளவு கோவம்? வாடா எண்டா உனக்குப் பின்னால வரப்போறன். அதுக்குப்போய்..” என்றபடி அவளுடன் நடந்தான்.

 

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அவளின் கையால் சாப்பிடப் போகிறானே!

 

‘சாப்பாட்டுக்கே ரெண்டுநாள் பட்டினி மச்சி..!’ என்று உள்மனம் கேலிசெய்து சிரித்தது. அதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப்படவில்லை.

 

சமையலறையை நோக்கி நடந்தவளுக்கு என்ன சமைப்பது வீட்டில் என்ன இருக்கிறது என்பது கூட புத்திக்கு வர மறுத்தது. அந்தளவில் அவளை நிதானமிழக்க வைத்திருந்தான் அவன்.

 

பின்னாலேயே வந்தவனோ, “சிம்பிளா எதையாவது செய்.” என்றான். அவள் என்ன இருக்கிறது என்று பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “புட்டு அவிச்சு முட்டை போட்டு பிரட்டு. மிளகாய் பொரியலும் இருந்தா காணும்.” என்றான்.

 

அந்த நேரத்திலும், ‘அடப்பாவி இது சிம்பிள் சமையலாடா!’ என்று ஓடியது அவளுக்கு. ஆனாலும், பேசாமல் தண்ணீரைக் கெட்டிலில் கொதிக்க வைத்தாள். அவனுக்கு அளவாக அரிசிமா எடுக்க, “உனக்கும் சேத்து செய்.” என்றான் அவன். அவளின் முகத்தில் பொறுமை குறைந்து கோபச்சிவப்பு ஏறுவது அவனுக்கு விளங்காமல் இல்லை.

 

பேசாம இரடா என்று அறிவு சொன்னாலும் அது முடியும் போலில்லை.

 

அதற்குள் குளித்துவிட்டு வந்த ஆதிராவைப் படிக்க அமர்த்தினாள் மயூரி. பிரதீபனைத் தன்னுடன் வரும்படி ஆதிரா கண்ணால் அழைக்க, இவனும் அவளை நோக்கி இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பான். மயூரி பார்த்த தீப்பார்வையில் அப்படியே திரும்பி வந்து பழைய இடத்திலேயே நின்றுவிட்டான்.

 

“ஆடாம அசையாம ஒழுங்கா ஒரு மணித்தியாலம் இருந்து படிச்சா மட்டும் தான் பிறகு விளையாட விடுவன்!” ஆதிராவிடம் கண்டிப்புடன் சொன்னாள் மயூரி.

 

அப்பாவுடன் விளையாட விடாமல் படிக்கச் சொல்லும் அன்னையைத் தானும் முறைத்தாள் ஆதிரா. “வரவர சொர்ணாக்காவா வாறீங்க மயூரி! எனக்கு இது பிடிக்கேல்ல!” என்று படக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

 

அம்மாவுக்கும் மகளுக்கும் நடுவில் நடக்கும் போரைக்கண்டு சிரிப்பு வந்தது பிரதீபனுக்கு. மயூரிக்குப் பயந்து அடக்கிக்கொண்டான்.

 

இருவருக்குமான மாவைப் போட்டு அதற்குள் அளவாக உப்பையும் போட்டு வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் சிவப்பு வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் வெட்டி வைத்தாள். கறிவேப்பிலையும் கழுவி அதனோடு எடுத்துவைத்தாள். நீர் கொதித்ததும் அதை அளவாக விட்டு மாவைக் குழைத்து, புட்டாகக் கொத்தி, ஏற்கனவே துருவி பிரிட்ஜில் இருந்த தேங்காய் பூவையும் கலந்து நீத்துப்பெட்டியில் அவியவைத்தாள். அதற்குள் பக்கத்து அடுப்பில் ஒரு சட்டியை வைத்து நல்லெண்ணெய் விட்டு, கடுகு சீரகம் சேர்த்து வெட்டி வைத்தவைகளை போட்டு நன்கு வதக்கி, மஞ்சள், உப்பு, மிளகுத்தூள் போட்டு முட்டையையும் போட்டு பிரட்டிக்கொண்டிருக்க இந்தப்பக்கம் புட்டு அவிந்திருந்தது. அதை ஒரு சட்டியில் கொட்டி, மீண்டுமொருமுறை கொத்தி நல்ல சின்ன சின்ன புட்டாக மாற்றி அதை முட்டைப் பிரட்டலுக்குள் சேர்த்துப் பிரட்டி உப்பும் உறைப்பும் பார்த்து முடித்தபோது, அவன் கேட்ட ‘முட்டை பிரட்டிய புட்டு ’ தயாராயிருந்தது. அப்படியே, அதே அடுப்பிலேயே எண்ணையை சூடாக்கி நான்கைந்து மிளகாயைப் போட்டு பொறித்து எடுத்தாள்.

 

அவ்வளவையும் செய்யும்போது கையைக் கட்டிக்கொண்டு சமையல் கட்டில் சாய்ந்தபடி அருகிலேயே நின்றிருந்தான் பிரதீபன். அன்று தொடத்தானே வேண்டாம் என்றாள். பக்கத்தில் நிற்கலாம் தானே. அவளைப் பார்த்துக்கொண்டு அவளின் நடமாட்டங்களை கண்களுக்குள் நிரப்பிக்கொண்டு, நிதானமாக, துப்பரவாக, சுறுசுறுப்பாக ஒரு ஜதியில் இயங்கியவளை ரசித்துக்கொண்டு, அவளின் வாசத்தை சுவாசித்துக்கொண்டு அவனுக்கும் அவளுக்குமான மௌனமான இந்தப் பொழுதை இதமாக அனுபவித்துக்கொண்டு நின்றான். ஒன்றுமே அவளோடு கதைக்க முற்படவில்லை.

 

புட்டுப் பிரட்டலையும் மிளகாயையும் ஒரு தட்டில் இட்டு அவனிடம் நீட்டினாள் மயூரி.

 

அதை வாங்கிக்கொண்டே, “ஆதுக்கு?” என்றான் அவன்.

 

“அவள் சாப்பிட்டாள். இனி சாப்பிடமாட்டாள்.” முகம் பாராமல் பதிலிறுத்தாள் மயூரி.

 

மனம் கேளாமல், ஆதிராவிடம் வந்து அவளுக்கு ஒரு வாய் கொடுத்தான் பிரதீபன். தகப்பன் ஊட்டிவிட்டதை ஆசையாக வாங்கிவிட்டு, “எனக்கு காணும் அப்பா! நீங்க சாப்பிடுங்க.” என்றாள் அவள்.

 

“இன்னும் ஒரே ஒரு வாய்!” என்று நான்கைந்து வாயைக் கொடுத்து, அதன்பிறகு அவள் வேண்டவே வேண்டாம் என்றபிறகுதான் தான் ஒரு வாய் உண்டு பார்த்தான் பிரதீபன்.

 

அளவான உப்பு உறைப்பில் அருஞ்சுவையாய் இறங்கியது புட்டு. பாத்திரங்களை அவள் அலம்புவதைக் கண்டுவிட்டு, “நல்ல ருசியா இருக்கு. சூடு ஆறமுதல் நீயும் சாப்பிடு!” என்றான் மனதில் நிறைவோடு. அவள் வரும்வரை காத்திராமல் அங்கு நின்றே சாப்பிட்டான். என்னவோ நிறையச் சாப்பிடவேண்டும் போல்.. நிறையப் பசிப்பதுபோல, இரண்டு நாள் பசியல்ல பத்துவருடமாகப் பசிக்காத பசி அவளின் கைச் சமையலைக் கண்டு பசித்தது.

 

அப்படி அவன் நின்றுகொண்டு ஆவலாகச் சாப்பிட்டது அவனுடைய பசியைச் சொல்ல, இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை என்பதும் சேர்ந்துகொள்ள தானும் வராமல் மேசைக்குப் போகமாட்டான் என்று அறிந்து தனக்கும் போட்டுக்கொண்டு மீதம் இருந்த புட்டை அப்படியே கிண்ணத்தோடு கொண்டு அவள் மேசைக்கு நடக்க அவனும் கூடவே வந்தான். மௌனமாகவே இருவரும் சாப்பிட்டனர்.

 

அவன் சாப்பிடும் வேகத்தைக் கண்டு மயூரியின் கண்கள் தடுக்க முயன்றும் முடியாமல் அடிக்கடி அவனிடம் ஓடியது. ஆதிரா சிரிப்புடன் என்னவோ சொல்ல வரவும், ‘ஒன்றும் சொல்லாதே’ என்று கண்ணால் சமிக்ஜை செய்தாள் மயூரி. தலையை ஆட்டிவிட்டுச் சிரிப்புடன் மேசையில் கிடந்த புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள் பெண்.

 

தட்டில் இருப்பது முடிந்ததும், கிண்ணத்தில் இருந்ததை எடுத்து அவன் அவளுக்கும் போட முனைய, அவளோ தட்டை விலக்கிக்கொண்டு, “எனக்கு காணும்.” என்றாள்.

 

“எனக்காகச் சொல்லுறியா?”

 

“இல்ல. இதுக்கு மேல சாப்பிட்டா எனக்கு மேல மேல வரும்.” என்றாள் உண்மையாகவே.

 

“அப்ப எல்லாத்தையும் நான் சாப்பிடட்டா?” அவன் அப்படிக் கேட்டது நெஞ்சின் ஏதோ ஒரு பாகத்தைத் தொட அவனை நிமிர்ந்து பார்த்தாள் மயூரி.

 

“என்ன பாக்கிறாய்? இவ்வளவு நாளும் முதல் சாப்பிட்டதுல பாதி கூட சாப்பிடமாட்டன். பசிக்காது. அம்மாவுக்காக எண்டு சாப்பிடுவன். ஆனா இன்றைக்கு நிறைய பசிக்குது..” என்றவன், கிண்ணத்தில் இருந்ததை அப்படியே தட்டில் கொட்டிக்கொண்டு சாப்பிட்டான்.

 

பார்த்திருந்த மயூரிக்குத்தான் நெஞ்சில் என்னவோ செய்தது.

 

இன்னும் காணாதோ என்கிற சந்தேகம் வந்திருந்தது. அப்படிச் சாப்பிட்டான். “இனி டெய்லி ஓடவேணும் போலத்தான் இருக்கு. ஆதுவும் நானுமா ஓடப்போறம்.” என்றான் வயிற்றைத் தட்டிக் கொடுத்தபடி.

 

error: Alert: Content selection is disabled!!