தற்கொலை எல்லாம் செய்துகொள்கிற அளவுக்கு அவன் கோழையல்ல; என்றாலும் ஏதேனும் நடந்திருந்தால்? தேகமெங்கும் ஒரு நடுக்கம் ஓடிற்று! இன்னொரு திருமணம் நடந்து மனைவி என்று யாரோ ஒருத்தி அவன் அருகில் நின்றிருந்தால்… நிச்சயம் அவள் நெஞ்சமே வெடித்துச் சிதறி இருக்கும்! வேண்டுமானால் யாருக்கும் காட்டிக்கொள்ளாமல் நடித்திருப்பாளாய் இருக்கும். ஆனால் நிச்சயமாக உள்ளுக்குள் சில்லுச் சில்லாகச் சிதறியிருப்பாள். கன்னம் நனைக்கப்பார்த்த கண்ணீரைக் கண்களுக்குள் வைத்தே துடைத்துக்கொண்டாள்.
பார்த்த நந்தினிக்குக் கோபம் வந்தது.
“இப்ப என்னத்துக்கு அழுறாய் நீ? செய்றதை எல்லாம் யோசிக்காம செய்றது. பிறகு இருந்து அழுறது. இவ்வளவு நாளும் கேகேயில தான் பிழை எண்டு நானும் நினைச்சுக்கொண்டு இருந்திட்டன். அவர் அண்டைக்கு சொன்னதுக்குப்பிறகு யோசிச்சுப்பார்த்தா உன்னிலையும் பிழை இருக்கு எண்டு விளங்குது. நடந்த எல்லாத்துக்கும் நீங்க ரெண்டுபேரும் தான்டி காரணம். பிறகு அவரை மட்டும் வதைக்கிறது நியாயம் இல்ல மயூ!” என்று திட்டித் தள்ளினாள் நந்தினி.
“ஆரம்பம், அவருக்கு இடம் கொடுக்காத இது பிழை எண்டு சொன்ன நேரமும் நீ கேக்கேல்லை. பிரிஞ்சு வந்த நேரம் அவரோட நான் கதைக்கிறன் எண்டு சொன்ன நேரமும் ‘வாழ்க்கையை பிச்சையா வாங்கித் தரப்போறியா’ எண்டு பெரிய இவள் மாதிரி கேட்டாய். ஆது பிறந்த பிறகாவது அவரோட கதைச்சிருக்கலாம். இப்படி நீயும் தான்டி நிறையப்பிழை செய்திருக்கிறாய். அவர் என்னைக் கேக்கிறார், ‘நீங்களாவது என்னோட கதைச்சிருக்கலாமே நந்தினி’ எண்டு. என்ன பதில் சொல்லுவன் நான். உன்னோட சேர்ந்து லூசு வேலை நானும் பாத்திருக்கிறன். நினைக்கவே கவலையா இருக்கு மயூ. தயவு செய்து கொஞ்சம் அவருக்காகவும் யோசி.” என்று கண்டிப்புடன் எடுத்துரைத்தவள், கலங்கிப்போய் நின்றிருந்த மயூரியை ஆதுரமாக அணைத்துக்கொண்டாள்.
“சரிசரி அழாத. நீயே நினைச்சாலும் கேகே இனி உன்னை விடமாட்டார். பார் பார் அங்க பார். யாருக்குமே தெரியாம கண்ணால உன்னை தேடுறார்.” என்று காட்டினாள் நந்தினி.
உண்மையிலேயே அவனும் அவளைத்தான் தேடிக்கொண்டிருந்தான். அவர்களைக் கண்டதும் வேகப்பார்வையால் இவளின் முகத்தை அளந்துவிட்டு அதைவிட வேகமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டவனைக் கண்டு முதன் முதலாக மயூரியின் உதட்டினில் சின்னப் புன்னகை ஒன்று அரும்பிற்று!
அவர்கள் எல்லோரும் அதிகாலையிலேயே வருவதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றதும் இருவருக்குள்ளும் மயான அமைதி. ஒரு பிஜாமா செட்டுக்கு மாறிக்கொண்டு வெளியே வந்தவளின் பார்வையில், மற்ற அறையின் கட்டிலில் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு மாற்றுடை தேடிக்கொண்டிருந்தவன் கண்ணில் பட்டான். அவள் நினைத்திருந்தால் அவனுடைய உடைகளை எடுத்து கப்போர்ட்டில் அடுக்கி வைத்திருக்கலாம். ‘நான் ஏன் செய்யோணும்?’ என்கிற வீம்பு தடுத்திருந்தது. இப்போதோ, அவன் உடையைத் தேடிப் பெட்டியைக் கிண்டிய காட்சி அவளைத் தைக்க உதட்டைக் கடித்துக்கொண்டு மெல்ல குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
அவர்களின் திருமணநாளும் மிக அழகாய் விடிந்திருந்தது. பிரதீபன் ஏற்பாடு செய்தபடியே மிதமான மணமகள் அலங்காரத்தில் கோயிலில் வந்து இறங்கிய மயூரிக்கு கைகால்களில் எல்லாம் ஒரு நடுக்கம் பரவிற்று. ஒரு பயம்.. துணையற்று நிற்பதுபோல் ஒரு உணர்வு தாக்க, ஒருவித மிரட்சியோடு அங்கிருந்தவர்களை நோக்கினாள்.
வெளி ஆட்கள் என்று யாரும் இல்லை தான். என்றாலும், கோயில் சூழல், நடந்துகொண்டிருந்த திருமண ஏற்பாடு, சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாம் ஒருவித தடுமாற்றத்தைக் கொடுத்தன. அவர்கள் வேறு மணப்பெண்ணான அவளையே நோக்க அதுவேறு இன்னும் மிரள வைத்தது. ‘பயப்படாம்மா வாம்மா.. என்று அழைத்துச் செல்ல எனக்கு என்ன அம்மாவா இருக்கிறா?’ மனம் கலங்கிப் போயிற்று! கண்களில் நீர் சூழ இதழ்கள் நடுங்கிற்று! இப்படியெல்லாம் கழிவிரக்கம் கொள்கிறவள் அல்ல அவள். நடந்துகொண்டிருக்கும் நிகழ்வும் சூழலும் அப்படி அவளை மாற்றிவிட்டிருந்தது.
“என்னடி நிக்கிறாய். வா!” என்று கரம்பற்றி அழைத்தாள் நந்தினி. தோழியைத் திரும்பிப் பார்த்தாள் மயூரி. ஒருமுறை அவள் தோளில் சாய்ந்து அழுதுவிட வேண்டும் போலிருந்தது.
அவளை மணக்கோலத்தில் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் அவளின் அம்மா அப்பாவின் பெரும் கனவு, ஆசை, வாழ்நாள் லட்சியம் எல்லாமே. இதோ.. அவளும் அவர்கள் ஆசைப்பட்ட கோலத்தில் நிற்கிறாள். பார்ப்பதற்குத்தான் அவர்கள் இல்லை. விழியோரம் தேங்கிவிட்ட கண்ணீரோடு அவள் விழிகள் அலைபாய்ந்தது. ‘அம்மா.. அப்பா.. பாத்துக்கொண்டு இருக்கிறீங்களா? நீங்க ஆசைப்பட்ட மாதிரி இண்டைக்கு உங்கட மகளுக்கு கல்யாணம் மா. அப்பா..’ அவள் மனம் அரற்றியது.
‘இந்தக் கல்யாணத்தை முதலே செய்திருக்கலாமோ.. அப்பாவாவது பாத்திருப்பார். ஆதிராவோட கொஞ்ச நாளாவது சந்தோசமா இருந்திருப்பார்..’ கலங்கிப்போனாள் மயூரி. அவரைத் தண்டித்துவிட்டாளா அவள். அவர்களுக்கு எந்தச் சந்தோசத்தையும் மகளாய் அவள் கொடுக்கவே இல்லையே. இதயம் வலியில் கிடந்து துடிக்க, நந்தினியின் கையை நடுக்கத்தோடு இறுக்கப்பற்றிக்கொண்டாள்.
நந்தினிக்கு அவளின் மனநிலை விளங்காமல் இல்லை. “மயூ! முடிஞ்சு போனதை மாத்துற சக்தி நமக்கில்லை. ஆனா, இனி நடக்கிறத நல்லமாதிரி கொண்டுபோக நம்மால மட்டும் தான் முடியும். மனதை அலைபாய விடாத. இண்டைக்கு உனக்கு கல்யாணம். அதை மட்டும் நினை. சந்தோசமா முழு மனசோட நடக்கிறத ஏற்றுக்கொள். வா.. எல்லாரும் எங்களைத்தான் பாத்துக்கொண்டு இருக்கினம்.” மெல்ல அவளைத் தேற்றி அழைத்துப்போனாள்.
அங்கே பிரதீபன் தவிப்போடு அவளின் வருகைக்காகக் காத்திருந்தான். அவனுக்குத் தெரியும்; இந்த நிமிடத்தில் மயூரியின் மனம் என்ன பாடு படும் என்று. அவளின் வார்த்தைகளால் உண்டாகியிருந்த காயம் கூட அந்தக்கணத்தில் காணாமல் போயிருந்தது.
இன்னும் என்ன செய்கிறார்கள்? பொறுமை இழக்கும் தறுவாயில் கலக்கம் நிறைந்த முகமும் கலங்கிய விழிகளுமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள் மயூரி.
பார்த்ததுமே ஓடிப்போய் அரவணைத்துக்கொள்ளத்தான் அவன் இதயம் அந்தரித்தது. அதுவும், கூட்டத்துக்குள் தவறிப்போன குழந்தையைப்போன்று அலைபாய்ந்த விழிகள் தேடி ஓடிவந்து அவனிடம் தஞ்சம் புகுந்தபோது, உருகியே போனான் அவளின் தீபன்.
‘வா!’ என்பதாக சின்னத் தலையசைப்பால் வரவேற்று, அப்போதைக்குத் தன்னால் முடிந்ததாய் கண்ணால் அவளைத் தேற்றினான்.
என்ன மாயமோ, அவளிதயம் அமைதியாயிற்று! அதைக் கண்டுகொண்டவனின் விழிகளில் மெல்லிய குறும்பு படர்ந்தது. வேண்டுமென்றே புருவங்களை உயர்த்தினான். அவளின் மனநிலை அப்படியே மாறிப்போயிற்று! அதைவிட, உரிமையோடு அவள் மேனியில் படிந்த அவன் விழிகள் வேறு தூரத்திலிருந்தே அவளின் ரகசிய பாகங்களில் சில்மிஷம் செய்ததில் தடுமாறித் தலைகுனிந்தாள்.
“பாத்தியாடி! இத்தனைபேர் நிக்கிறோம். ஆனாலும் கண்ணாலையே காதலிக்கிறார் கேகே. உனக்கு அடுத்த பிள்ளை பிறக்கிறதுக்கெல்லாம் கனநாள்(நிறையநாள்) ஆகாது!” என்று அவளின் காதைக் கடித்தாள் நந்தினி.
மயூரியின் கன்னங்கள் சூடாயிற்று! “பேசாம இரடி!” தலையைக்கூட திருப்பாமல் வாய்க்குள் வார்த்தையைக் கடித்துத் துப்பினாள்.
“இப்பதான்டி கல்யாணக்களை உனக்கு வந்திருக்கு. ஆனா கேகேயே பார். அவருக்கு இரவே வந்திருக்கும் போல. வழியுது.” என்று அவளின் சிவந்திருந்த முகத்தைப் பார்த்துவிட்டு ஓட்டித் தள்ளினாள் நந்தினி.
மயூரிக்குச் சிரிப்பு வரப்பார்த்தது. அதை அடக்கிக்கொண்டு மெல்லப் பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். நந்தினி சொன்னதுபோல, ஐய்யர் அவனுக்கான சடங்குகளை அவனைக்கொண்டு செய்துகொண்டிருந்தாலும் அவன் கண்கள் இங்கே இவளிடம் தான் இருந்தது.
உண்மையில் அவளின் காலடியில் மொத்தமாக வீழ்ந்திருந்தான் அவன்.
பிறை நெற்றியை அலங்கரித்த திலகம் தொடங்கி, கயல் விழிகளுக்குத் தீட்டியிருந்த கண்மையிலிருந்து, உதட்டுச் சாயத்தில் தோய்ந்திருந்த இதழ்கள் முதல், பாந்தமாய் தழுவியிருந்த பட்டுச் சேலையும் அது காட்டிய அழகிய வளைவுகள் என்று அவளின் அழகில் அவன் தலை சுற்றித்தான் போயிருந்தான். இதில் அவள் போட்டுக்கொண்டிருந்ததோ மிக அளவான அலங்காரம் தான்.
தன்னருகே வந்து அமர்ந்தவளை உரசிக்கொண்டு அமர்ந்தான் அவன். அவர்களுக்கான சடங்குகள் ஆரம்பித்து, அய்யர் மந்திரங்களைச் சொல்லித் தாலியை அவன் கையில் கொடுத்தபோது அவள் தேகம் அவளையும் மீறி நடுங்கத் தொடங்கிற்று. அலைப்புற்ற விழிகள் நீருடன் அவனை நோக்கி பின் அங்கிருந்தவர்களில் எங்காவது அன்னை தந்தையின் முகம் தெரிந்துவிடாதா என்று ஏக்கத்தோடு அலைபாய்ந்தது.
“சுற்றி இருக்கிற ஆக்களுக்க மாமா மாமியைத் தேடாத மயூ. கருவூலத்துக்க பார். சாமி வடிவில இருக்கிறது உன்ர அம்மாவும் அப்பாவும் தான்.” என்றான் அவன் இதமான குரலில்.
‘உண்மைதானே..’ அவள் இதயம் பொங்கித் ததும்பியதில் விழிநீர் மார்பை நனைக்க பிரதீபனை நிமிர்ந்து பார்த்தாள். “அவேக்கு(அவர்களுக்கு) முன்னாலதான் இந்தக் கல்யாணம் நடக்குது. நீ அழாத! இதுக்குமுதல் என்ன நடந்திருந்தாலும் இனி உன்ர அம்மாவும் அப்பாவுமா இருந்து உன்ன நான் பாப்பன்.” அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி வாக்குக் கொடுத்து, தன் உயிரில் எப்போதோ கலந்துவிட்டவளை ஆண்டவன் சந்நிதியில் தன் திருமதியாக்கிக்கொண்டான் அவளின் தீபன்.
கசியும் விழிநீரை அடக்கும் வலுவற்றவளாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரி. நெற்றியில் திலகமிட்டுவிட்டு அவள் கன்னங்களைத் துடைத்துவிட்டான் அவன்.
பார்த்திருந்த அனைவரின் இதயங்களும் நெகிழ்ந்து கசிந்தது. மனதார பூத்தூவி பல்லாண்டு வாழ அவர்களை வாழ்த்தினர்.

