காதல் காயங்களே 29 – 1

அத்தியாயம் 29

 

 

ஏற்பாடு செய்தபடியே மத்தியான உணவும் முடிந்திருந்தது. மயூரியும் ஒரு நிலைக்கு வந்திருந்தாள். இது இப்படித்தான் என்றானபிறகு அதை ஏற்று மனம் ஒருமுகப்பட்டுத் தன் நிலைக்கு மீளுமே அப்படித் தன் நிலைக்கு மீண்டிருந்தாள். திருமணப்பொழுதின் மீதான பயம், பதட்டம், படபடப்பு எல்லாம் அடங்கி பழைய மயூரியாக அமர்ந்திருந்தாள்.

 

மற்றவர்களோடு அளவளாவிக்கொண்டிருந்தாலும் பிரதீபனும் அதை உணர்ந்துதான் இருந்தான். தன் பக்கம் பார்த்துவிடவே கூடாது என்று அவள் கவனமாக இருப்பதை அறிந்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான். தாலி கட்டுகிறவரை ஒரு பயத்துடன் தன் துணை தேடிய மயூரி இல்லை அவள். அதற்கு முதல் பார்த்த நிமிர்வான மயூரி. அந்த மயூரியை இன்னுமே மனத்துக்குப் பிடிக்க தாராளமாக அவளைப் பார்த்து ரசித்தான்.

 

தன் கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள் மயூரி.

 

குறிப்புக் காட்டுகிறாளாம். உதட்டில் முறுவல் அரும்ப, “இனி வெளிக்கிடுவம்!” என்றான் பிரதீபன்.

 

“அங்க சிக்னல் வந்தா இங்க வேலை நடக்குது.” அவர்களைக் கவனிப்பதைத் தவிர வேறு என்ன வேலை நந்தினிக்கு?

 

பேசாம இரடி என்பதாக முறைத்தாள் மயூரி.

 

ஹோட்டலில் இருந்தே விடைபெற்றுக்கொள்வதாக முடிவாக, எல்லோருமே கணவன் மனைவி இருவரையும் வாழ்த்தி அணைத்து விடை கொடுத்தனர். மருமகளை ஆசையாக உச்சி முகர்ந்த புஸ்பவதி அம்மையார், “இரவுக்கு சமைக்க வேண்டாம். மூன்றுபேரும் வீட்டை வாங்கோ!” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

 

காரில் தன்னருகில் இருந்தவளைப் பார்த்தான் பிரதீபன். பட்டுச் சேலை, தாலிக்கொடி, குங்குமப்பொட்டு, மிதமான அலங்காரம் என்று புதுப்பொலிவுடன் மிளிர்ந்துகொண்டிருந்தாள் அவனுடைய மனைவி மயூரி!

 

“நன்றி மயூ. என்னை நம்பி கழுத்தை நீட்டினதுக்கு.” இளம் சிரிப்புடன் சொன்னான்.

 

“நேரமாகுது.”

 

பேச்சைக் கத்தரிக்கிறாளாம். உதட்டில் அரும்பிய முறுவலுடன் வீட்டுக்குக் காரை விட்டான். என்னதான் அவன் மீது கோபமாய் இருந்தாலும் அவனுடைய ஒற்றைப் பார்வையில் மனக் கலக்கங்கள் அகன்று அவள் அமைதியானது அவனுக்குப் பிடித்திருந்தது.

 

வீட்டுக்குள் வந்ததும் உடைமாற்ற எண்ணி அறையை நோக்கி நடந்தவளின் இடையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான் பிரதீபன். அப்படிச் செய்வான் என்று எதிர்பாராதவள் அவன் மீதே வந்து மோதி அதிர்வோடு அவனைப் பார்த்தாள்.

 

“இப்ப நீங்க எனக்கு புருஷி. நான் உங்களுக்கு புருஷன். எக்ஸ் லவ்வர் இல்ல! ஓகேயா புருஷி!” என்றான் வேண்டுமென்றே.

 

அவள் ஒன்றும் சொல்லாமல் அவனிடமிருந்து விலக முனைய, விளையாட்டைக் கைவிட்டுவிட்டு அவளைத் தன் முகம் பார்க்கவைத்தான் அவன். நெஞ்சில் சூழ்ந்த கலக்கத்தைக் காட்டாமல், அவனுடைய அருகாமையில் நடுங்கிய உடலைத் திடப்படுத்த முனைந்தபடி, ‘என்ன சொல்லப்போகிறாய்?’ என்பதுபோல் அவனை ஏறிட்டாள் அவள்.

 

“இடைப்பட்ட காலத்தில என்ன வேணுமெண்டாலும் நடந்திருக்கலாம். ஆனா இப்படி ஒருநாள் வராதா எண்டு நீயும் நானும் எவ்வளவு ஆசைப்பட்டம் சொல்லு. அதை நினைச்சாவது சந்தோசப்பட மாட்டியா மயூ? என்னவோ யாரோ ரெண்டுபேருக்கு கல்யாணம் நடந்தமாதிரி இருக்கிற?” என்று குறைபட்டுக்கொண்டான் அவன்.

 

இப்போது அவள் அவனுடைய திருமதி. திருமதி பிரதீபன்! கானல் நீராகப் போய்விட்டதே என்று எண்ணிய காதல் கைகூடி இருக்கிறது. நெருக்கமான மிக ஆத்மார்த்தமான ஒரு அணைப்புக்கு மனதும் உடலும் ஏங்கிற்று! அதை நிறைவேற்றுகிறவனாக அவளை அணைத்தான். கூடவே அவளின் கையை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டான். அவள் அதற்கு மறுத்துத் தன் கைகளை எடுத்துக்கொள்ள, “கட்டிப்பிடி மயூ!” என்றான் காதோரமாய். அவள் ‘மாட்டேன்’ என்பதுபோல் தலையசைத்தாள். அவனை ஏமாற்றம் கவ்வியது. “சின்னதா ஒரு அணைப்பு. அது உன்னால ஏலாதா(இயலாதா) மயூ?”

 

அவள் தன் முடிவிலிருந்து மாறவே இல்லை.

 

“சின்னதா ஒரு செலபரேஷன். நீயும் நானுமா. நமக்கு கல்யாணம் நடந்ததுக்காக. செய்யடி.” என்றான் கெஞ்சலாய்.

 

“நாங்க காதலிச்சு கல்யாணம் கட்டேல்ல. பிடிச்சும் நடக்கேல்ல. இருக்கிற முடிவுகள்ல இந்த முடிவுதான் எல்லாருக்கும் நல்ல முடிவு எண்டுறதால நடந்த கல்யாணத்துக்கு கொண்டாட்டம் தேவையில்லை.” பட்டென்று சொன்னாள் அவள்.

 

முகத்தில் அறை வாங்கியது போலிருந்தது அவனுக்கு. நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான். நடந்த திருமணம் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லையா என்ன? அவன் நெருங்குகிற ஒவ்வொரு முறையும் வார்த்தைகளால் குத்திக் குதறிவிடுகிறாளே. அவனுக்குக் கோபம் வந்தது. பார்வையால் அவளைச் சுட்டான். “நானும் நீயும் காதலிச்சதாலதான் இந்தக் கல்யாணமே நடந்தது மயூ. ஆதிராவை மறந்திட்டு கதைக்காத!”

 

“மறக்கேல்ல. ஆதிராவாலதான் இந்தக் கல்யாணமே நடந்தது!” அவளும் வார்த்தைகளை அழுத்திச் சொன்னாள்.

 

சற்று நிதானித்தான் பிரதீபன். வீண் கோபங்களும் அதனால் வெளிவரும் வார்த்தைகளாலும் அன்றுபோல் இன்றும் அவனைக் காயப்படுத்திவிடுமோ என்று பயந்தான். எனவே, “ஏன் மயூ இந்தக் கோபம்?” அவளின் கன்னம் வருடி தன்மையாகவே கேட்டான்.

 

அந்த வருடலும், விழிகளின் யாசிப்பும் என்னவோ செய்ய அதையும் கோபமாக்கி அவன் மீதே காட்டினாள்.

 

“என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க நீங்க? செய்றதை எல்லாம் செய்வீங்க, கடைசில கல்யாணம் எண்டு ஒண்டு நடந்ததும் எல்லாத்தையும் மறந்து ஓடிவந்து உங்கட கைல விழவேணுமா? நடந்த கல்யாணத்தை வச்சு முறையில்லாம நடந்தத முறையோட நடத்தத் துடிக்கிறீங்களா? ஆதுக்காகத்தான் எல்லாம் எண்டு எத்தனை தரம்தான் உங்களுக்குச் சொல்லுறது?” அவளின் சீறலில் தீச் சுட்டாற்போன்று உடனேயே அவளை விட்டு விலகினான்.

 

“ஆதிராவ நான் கூட்டிக்கொண்டு வாறன்!” இயந்திர தொனியில் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்றான்.

 

இருவரும் ஒன்றாகச் சென்று கூட்டிக்கொண்டு வருவதாகத்தான் பேச்சு. இப்போதோ, மனதில் ஒற்றுமை இல்லாமல் ஒன்றாகச் சென்று என்ன வரப்போகிறது என்றிருந்தது.

 

ஒருகணம் உதட்டைக் கடித்துவிட்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டிருந்தாள் மயூரி. கட்டிலில் அமர்ந்தவளுக்கு வியர்த்துக்கொட்டியது. அவனிடம் ஏன் அப்படிக் கதைத்தாள்? அவளுக்கே சரியாகாத் தெரியவில்லை. அணைப்புக்கு அடங்கினால் இரவுக்கு அதற்கு மேலும் போவானோ என்கிற பயம். கூடவே ஒரு கோபம் அவளுக்குள்ளேயே கனன்றுகொண்டிருந்தது. நடந்த திருமணம் அனைத்தையுமே சரியாக்கிவிட்டதா என்ன?

 

இந்தத் திருமணத்தினால் அவள் பிரிந்ததற்கான பொருள் அடிபட்டுப் போனது போலிருந்தது. பட்ட கஷ்டம், விட்ட கண்ணீர் எல்லாவற்றுக்கும் பதில் என்ன? இடையில் அகப்பட்டிருந்த அவளின் அப்பா ஏன் மகளின் சந்தோசமான வாழ்வின் எந்தப் பக்கத்தையும் பார்க்காமல் போய்ச்சேர்ந்தார். வயதான அவரைப் பார்த்துக்கொள்ள மகள் என்று அவள் இருந்தும் கொஞ்சி விளையாட பேத்தியாக ஆதிரா இருந்தும் அனாதையைப்போல் வாழும் நிலைக்கு அவரைத் தள்ளினாளே. போகும்போது கூட நிம்மதியாகப் போயிருக்க மாட்டாராகத்தான் இருக்கும். அப்படி அவரை அனுப்பிவைத்துவிட்டு அவள் மட்டும் அவனோடு சந்தோசமாக வாழப்போகிறாளா? இப்படிப் பல கேள்விகள் அவளைப்போட்டு ஆட்டிப்படைத்தன.

 

வீட்டின் கதவு சாத்தப்படும் சத்தத்தில் நிமிர்ந்தாள். சொல்லாமல் போகிறான். சத்தமே இல்லாமல் அவன் காட்டிவிட்டுப்போன கோபம் அவளைப் பாதித்தது. மென்மையாக விலகி இருக்கலாமோ, அவன் கேட்டதைச் செய்திருக்கலாமோ? ஒரு சின்னச் சந்தோசம். அதை அவனுக்குக் கொடுக்காமல் அவள் கண்டது என்ன? மனது அவளை எல்லாப்பக்கமும் பிரித்து மேய்ந்தது.

 

ஆதுக்காகத்தான் திருமணம் என்றதும் சுண்டிப்போன அவனுடைய முகம் கண்ணுக்குள் வந்து வதைத்தது. ஆனால், அதுதானே உண்மையும்.

 

நந்தினி சொன்னவற்றைக் கேட்டபிறகு அவன்பால் மெல்லிய இளக்கம் உருவானது உண்மைதான். ஆனால், திருமணம் நடந்துவிட்டது என்பதற்காகவே எதுவுமே நடக்காததைப்போல கட்டிப்பிடி என்றால் எப்படிக் கட்டிப்பிடிப்பது? மனம் ஒப்பவேண்டாமா? அந்தக் கணத்தில் கடந்த பத்து வருடத்தின் காயமெல்லாம் வீறுகொண்டு எழுந்துவர அந்தக் கோபத்தில் அவனைக் கடுமையாகச் சாடிவிட்டிருந்தாள்.

 

சொன்னபிறகு அவளுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டதுதான். ஆனால், எப்படியும் அவனின் நெருக்கத்தை இன்றைய மனநிலையில் அவளால் அனுமதிக்கவே முடியாது.

 

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆதிரா வந்துவிடுவாள். வேகமாக எழுந்து சாரியைக் களைந்து வேறு உடைக்கு மாறி, சாரியை உடனேயே காப்போர்ட்டுக்குள் எடுத்து வைத்தாள். முடிந்தவரை திருமணத்துக்காகப் பயன்படுத்திய பொருட்களை ஒதுக்கி வைத்தாள். மேக்கப்பை அகற்றி முகம் கழுவித் துடைத்து எப்போதும்போல புருவங்களுக்கிடையில் ஒட்டுப்பொட்டினை வைத்துக்கொண்டவளுக்கு உச்சித் திலகத்தினை வைக்காமல் விட மனமில்லை. வைத்தால் ஆதிரா நிச்சயம் விசாரிப்பாள். என்ன சொல்வது? எப்படியாவது சமாளிப்போம். அவனும் இருக்கிறான் தானே. பார்த்துக்கொள்வான் என்று தோன்ற, அவன் தீட்டிவிட்ட திலகத்தை தானும் தீட்டிக்கொண்டாள்.

 

அவனுடைய அறையை எட்டிப்பார்த்தபோது, கோபத்தோடு கட்டிலில் கழற்றிப் போட்டிருந்த வேட்டி சட்டை கண்ணில் பட்டது. உள்ளே சென்று அதையும் எடுத்து மடித்தாள். அவனுடைய உடல் சூடு இன்னுமே இருந்தது. அன்று முழுக்க அவள் உணர்ந்த அவனுடைய வாசமும் வீசியது. கைகள் நடுங்க மார்போடு அணைத்துக்கொண்டாள். என்ன இருந்தாலும் அவளுக்குள் இருந்து துடிப்பது அவனை உயிராய் நேசித்த இதயமல்லவா! இரண்டு சூடான கண்ணீர் துளிகள் வேட்டியில் பட்டுச் சிதறின.

 

வரும்போதே ஆதிராவுக்கு என்று வாங்கிவந்த உணவைச் சூடாக்கிவிட்டு, தேநீருக்கும் தண்ணி வைத்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருந்தாள். வீட்டுக்குள் வந்ததுமே தாயிடம் தெரிந்த வித்தியாசத்தைக் கண்டுகொண்டிருந்தாள் ஆதிரா.

 

“அம்மா, எங்கம்மா போனீங்க இண்டைக்கு? நல்ல வடிவா இருக்கிறீங்க?” ஓடிவந்து அவள் கேட்ட முதல் கேள்வியே அதுதான்.

 

என்ன சொல்வது என்று தெரியாமல் பிரதீபனைப் பார்த்தாள் மயூரி. அவளின் முகம் பாராமல் மகளை அழைத்து மடியில் இருத்திக்கொண்டான் அவன்.

 

“அம்மாவும் அப்பாவும் இன்றைக்கு கோயிலுக்கு போனனாங்க(போன+நாங்க=போனோம் நாங்கள்). நீங்களும் சாப்பிட்டு வாங்கோ. மூண்டு பேருமா போயிட்டு வருவோம்.” என்றான் அவன்.

 

ஆதிரா உணவை முடித்ததும் மூவருமாகக் கோயிலுக்குச் சென்றனர். கண்ணை மூடிக் கடவுள் சன்னிதானத்தில் நின்றவளுக்கு வேண்டுதலாய்க் கேட்பதற்கு எதுவுமே இல்லை போல் இருந்ததில் விரைவிலேயே கும்பிட்டு முடித்திருந்தாள்.

 

பிரதீபன் நிறைய நேரமாய்க் கண்களை மூடி தீவிரமாக என்னவோ வேண்டிக்கொண்டிருந்தான். தன் தாயை நம்ப வைப்பதற்காக திருநீறு சந்தனம் மட்டும் பூசிக்கொண்டு கோயில் வளாகத்தில் நின்று செல்ஃபி எடுத்து அனுப்பியவன் நினைவில் வந்தான். அப்படியானவனுக்கு இன்றைக்கு என்ன வேண்டுதல்? எதுவாய் இருந்தாலும் அவன் கேட்பதைக் கொடுத்துவிடு தெய்வமே என்று அவள் உள்ளம் தானாய் எண்ணிக்கொண்டது.

 

அப்படியே மனைவி மகளை பார்க்குக்கு அழைத்துப்போனான் பிரதீபன். மூவருமாக ஐஸ் வாங்கிச் சாப்பிட்டார்கள். நேரமானதும் இரவுணவுக்காக புஸ்பவதி அம்மாவின் அழைப்பை ஏற்று அங்கே சென்றனர்.

 

முகம் மலர மகிழ்ச்சியோடு, “வாம்மா, வா தம்பி.. செல்லக்குட்டி வாவாவா ஓடிவா..” என்று மூவரையும் சந்தோசமாய் வரவேற்றார் புஸ்பவதி. திருநாவுக்கரசுக்கும் பேத்தியைக் கண்டது பெரும் சந்தோசம். “செல்லம்மா!” என்றார் வாஞ்சையோடு.

 

“அப்பப்பா, நான் எழுதி தந்ததை பாடமாக்கினீங்களா?”

 

“ஓ.. நான் எப்பவோ பாடமாக்கிட்டன். உன்ர அப்பம்மா தான் தடுமாறிக்கொண்டு இருக்கிறா..” பேத்தியை மடியில் ஏந்திக்கொண்டு பாசம் பொழிந்தார் அவர்.

 

“என்னப்பா எழுதி தந்தவள்? ஒரு இரவு இங்க தங்கினதுக்கு படிக்கிற அளவுக்கு போயாச்சா?” என்றவனை ஆராய்ந்தது புஸ்பவதியின் விழிகள்.

 

உற்சாகமாகக் காட்டிக்கொள்ள முயன்றாலும் என்னவோ குறைந்தது அவனிடத்தில்.

 

மயூரியைப் பார்த்தார். அவள் அவனருகில் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

 

“ஏதாவது குடிக்கிறியாமா?” உபசரித்தாலும், ‘இவர்களி

டம் எதை எப்படி என்று எடுத்து விளக்குவது?’ என்று தெரியாது அந்த முதிர்ந்த பெண்மணியே தடுமாறினார்.

 

error: Alert: Content selection is disabled!!