காதல் காயங்களே 29 – 2

இயல்பான திருமணமாக இருந்திருக்க, புத்திமதி சொல்லியிருக்கலாம். இல்லை கூடவே வந்திருக்கச் சொல்லி பழக்கவழக்கங்களை பழக்கி எடுக்கலாம். இங்கே எதை எப்படி என்று சொல்வது?

 

பிரதீபனுக்குத் தலை வலிப்பது போலிருந்தது. “ஒரு தேத்தண்ணி தாங்கம்மா, குடிக்க.” என்று சொல்லி முடிக்க முதலே, “இப்ப தேத்தண்ணி குடிச்சிட்டு எப்ப சாப்பிடபோறீங்க. கொஞ்ச நேரத்துக்கு முதல் தான் ஐஸ் சாப்பிட்டது. அதெல்லாம் வேண்டாம் மாமி. சாப்பிடுவோம்.” என்றவள், எழுந்து அவரை நோக்கி வர புஸ்பவதியின் மனம் அப்படியே மலர்ந்துபோயிற்று.

 

அவரின் கலக்கம் அவசியமே இல்லை. எல்லாம் சரியாகும். இன்றுதானே திருமணமாகி இருக்கிறது. கொஞ்சம் பொறுக்கத்தான் வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

 

மயூரியுமே, திடீரென்று மலர்ந்த அவரின் முகத்தைப் பார்த்துவிட்டுத்தான் தான் என்ன சொன்னோம் என்பதையே உணர்ந்தாள். இயல்பாக வந்த வார்த்தைகள் தான்; ஆனால் முழுவதுமாக அவனின் மனைவியாக நின்று சொல்லியிருக்கிறாள். இது எப்படி நடந்தது? நடந்த திருமணம் மனதளவில் அவளையும் மாற்றத் தொடங்கிவிட்டதோ? மெல்லிய அதிர்வு ஒன்று மனதுக்குள் வந்துபோக மெதுவாக அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

மகளும் அவனும் மாமனாருமாக என்னவோ பேப்பர்களை வைத்துக்கொண்டு மும்முரமாக எதையோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இருந்தாலும் அவனிடம் ஒரு சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது.

 

நேற்றிலிருந்து ஓய்வில்லாமல் அவன் ஓடிக்கொண்டே இருப்பதை அவளும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள்; அதனால் உண்டான பரிவாயிருக்கலாம். அல்லது அவள் உதிர்த்த வார்த்தைகளின் கனத்தினால் இன்னுமே இரத்தப்பசை இழந்துபோயிருந்த அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் வந்த அக்கறையாயிருக்கலாம் என்று சமாதானமாகிக்கொண்டாள்.

 

புஸ்பவதி அம்மாவுக்கு விருந்தாளியாக அமர்ந்திராமல் வீட்டுப்பெண்ணாக அவருக்கு உதவிபுரிய அவள் எழுந்து வந்தது, அவள்மீது இன்னுமே நல்லபிப்பிராயத்தை உருவாக்க, “வாம்மா..” என்று அழைத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றார்.

 

ஆதிராவின் காது கேளாத தூரம் வந்ததும், “சின்னக்குட்டி ஒண்டும் கேக்க இல்லையா மயூரி?” என்று விசாரித்தார்.

 

“இல்ல மாமி. நான் வடிவா இருக்கிறேனாம் எண்டுதான் சொன்னவள்.” முறுவலோடு பகிர்ந்துகொண்டாள் மயூரி.

 

“உண்மைதானம்மா. கல்யாணம் நடந்தபிறகு உன்ர முகம் நல்ல பொலிவா இருக்கு. இப்படியே மூன்றுபேரும் சந்தோசமா இருங்கோ. அப்படியே நாளை தள்ளிப்போடாமல் இன்னொரு குழந்தையையும் பெறுங்கோ. பிறகு ஆதுக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி ஆக கூடிப்போய்டும்..” என்று தன்போக்கில் சொல்லிக்கொண்டு வந்தவர், பேச்சை நிறுத்திவிட்டு அவளின் முகம் பார்த்தார். எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. என்றாலும், அவள் மறுத்து எதுவும் சொல்லாததே போதுமாக இருக்க மாமியாரும் மருமகளுமாகச் சேர்ந்து உணவுகளை எடுத்து மேசையில் வைத்தனர்.

 

“அப்பம்மா கோழிக்கால் பொறிச்சனீங்களா?” என்று கேட்டுக்கொண்டு ஓடிவந்தாள் ஆதிரா.

 

“உனக்கு எத்தனை தரம் சொல்லுறது? வீட்டுக்க ஓடுறேல்ல எண்டு. நடந்து பழகு ஆது!” என்று மயூரி அதட்ட, புஸ்பவாதியோ, “ஓம் செல்லம். பிள்ளைக்கு அப்பம்மா கோழிக்கால் பொறியல், றால் பிரட்டல் எல்லாம் செய்து வச்சிருக்கிறன்.” என்றார் பாசமாய்.

 

“றாலுமா?” நாவில் எச்சில் ஊற துள்ளிக்கொண்டு சட்டியைத் திறந்தவளின் கையிலேயே ஒன்று போட்டாள் மயூரி. “மேசைல எல்லாரோடையும் இருந்து ஒழுங்கா சாப்பிடலாம். இப்ப போ!” என்று கண்டித்தாள்.

 

“ஹல்லோ மயூரி பிரதீபன்! கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்! ஓகேய்ய்!” என்றாள் பட்டென்று.

 

மயூரியே ஒருநொடி அதிர்ந்து விழித்தாள். “வரவர உனக்கு வாய் நல்லாத்தான் கூடிக்கொண்டு போகுது!” என்றாள் பொய்யாக ஒரு அடியைப் போட்டபடி.

 

“நான் பாக்கத்தான் புஷ்பம். என்ன டச்சு பண்ணின ஆகிடுவ பஸ்பம்.” என்றாள் அவளின் ஆதர்ச நாயகன் வடிவேலுவின் மாடுலேஷனில்.

 

அதைக்கேட்டு சட்டென்றுஅந்த வீடு முழுக்கப் பெரிய சிரிப்பலை ஒன்று நொடியில் பொங்கிப் பரவியது.

 

“அடிங்!” என்று மயூரி கையை ஓங்க, “தலைல கைவச்சா தலைப்பு செய்தில வந்திடுவ மகளே!” என்றாள் அதற்கும்.

 

அடக்கமாட்டாமல் சிரித்த அவளின் தகப்பனோ, “கிழவி! வா இங்க!” என்று அப்படியே மகளைக் கையில் அள்ளிக்கொண்டு போனான்.

 

அவள் அந்தப்பக்கம் போனதும், “பிள்ளையை பேசாதயம்மா. உனக்குத் தெரியாது மயூரி; இந்தக் குரலைக் கேக்கிறதுக்கு இந்த வீடு எத்தனையோ வருசமா தவம் கிடந்ததம்மா. நீ மனசு வச்சபடியா எல்லாம் நல்லதா நடந்திருக்கு; எங்கட பேத்தியும் எங்களுக்கு கிடைச்சிட்டாள்.” என்றார் புஸ்பவதி நெகிழ்ந்துவிட்ட குரலில்.

 

“நானும் எல்லாத்துக்கும் பேசுறேல்ல மாமி. சிலநேரம் ஆக வயசுக்கு மீறின கதைகள் கதைப்பாள். அப்பதான் சும்மா அதட்டுறது. அதுவும் இனி எங்க? அப்பா, அப்பப்பா, அப்பம்மா, அத்தைகள் எண்டு சப்போர்ட்டுக்கு நிறைய ஆக்கள் இருக்கிற துணிவில இனி இன்னும் சேட்டைகள் செய்யப்போறாள்.” என்று இதமான குரலிலேயே சொன்னாள் மயூரி.

 

திரும்பிப் பேத்தியைப் பாசமாகக் கண்களால் வருடிவிட்டு, “அவுஸ்திரேலியால வளந்தாலும் நல்லா தமிழ் கதைக்கிறாளேம்மா?” என்று ஆச்சரியப்பட்டார் அவர்.

 

“அங்க அர்ஜுன்.. அது என்ர பிரென்ட் குடும்பம் எங்களுக்குக் கீழ இருந்தவே மாமி. நான் வேலைக்கு எண்டு போனா அங்கதான் ஆதுவ விடுறனான். அவேன்ர வீட்டுல எல்லாருமே வடிவேல் ஃபேன்ஸ். எப்பவும் அவரின்ர ஜோக்ஸ் தான் டிவில போய்க்கொண்டு இருக்கும். அவயலோட(அவர்களோடு) இருந்து பாத்துத்தான் தமிழ் பிடிச்சவள். இங்க வந்தபிறகு… தேவையில்லாத சிந்தனைகள் வரவேண்டாம் எண்டு நான்தான் அவளுக்கே தெரியாமல் இந்த டிக்டாக் பக்கம் திருப்பிவிட்டனான். ஃபிரீ டைம் கிடைச்சாலே அந்த வீடியோக்கள் செய்றதுதான் ஆதுன்ர பொழுதுபோக்கே.” தன்மையாகவே தன்னுடன் உரையாடிய அவளை புஸ்பவதி அம்மாவுக்கு மிகவுமே பிடித்துப் போயிற்று.

 

தகப்பனைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க திசை திருப்பி விட்டிருக்கிறாள். கூடவே மகளைக் கலகலப்பாகவும் மாற்றியிருக்கிறாள். ஒற்றைத் தாயாக பிள்ளைகளை வளர்க்கும் அன்னையர்கள் படுகிற சிரமங்கள் சொல்லில் அடங்காததுதானே.

 

அதைவிட, எந்த இடத்திலும் தான் பாவப்பட்டவள், வஞ்சிக்கப்பட்டவள், பரிதாபத்துக்குரியவள் போன்ற தோற்றங்களை உருவாக்கி மற்றவர்களின் பார்வையில் பரிதாபத்தைப்பெற அவள் முயலவே இல்லை. முக்கியமாக அவரின் மகனை அவரிடம் குற்றம் சாட்டவே இல்லை. அவன் மீதான கோபத்தை அவர்களிடம் காட்டவேயில்லை. இப்படி எல்லாவற்றையும் நினைக்க நினைக்க அவள் மிக அருமையான பெண் என்கிற எண்ணம் தான் அவருக்கு இன்னுமின்னும் உறுதியாயிற்று!

 

அவளை இன்னுமின்னும் அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை மனம் திறந்து அவளிடமும் பகிர்ந்தார்.

 

“அருமையான பிள்ளையம்மா நீ. அதாலதான் அவனும் நான் அழுது குளறியும் இன்னொரு கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லேல்ல போல. எத்தனை பொம்பிளைகளை பாத்திருப்பன் எண்டு கேக்கிறாய். அழகில குறை வைக்காம, படிப்பில குறை இல்லாம, நல்ல வேலையா நல்ல குடும்பமா எண்டு கண்ணுக்க எண்ணெய விட்டுத் தேடிக்கொண்டு வந்தாலும் ஃபோட்டோ பாக்காமலேயே வேண்டாம் எண்டுபோடுவான்மா. எவ்வளவு கெஞ்சியிருப்பன் தெரியுமா? அசையவே மாட்டான். இவன் என்ன கல்லா? பெத்த தாய் இப்படி கிடந்து தவிக்கிறாளே இவனுக்கு இரக்கமே இல்லையா எண்டெல்லாம் நினைச்சிருக்கிறன். ஆனா, எனக்கு சின்னதா ஒண்டு எண்டாலும் தாங்கமாட்டான் மயூரி. பக்கத்திலையே இருந்து பாப்பான்மா. இந்தக் கல்யாண விசயத்தில மட்டும் நான் எவ்வளவு அழுது கெஞ்சினாலும் அசையவேமாட்டான். கடைசியா உனக்கு பிடிச்ச எவளை எண்டாலும் கூட்டிக்கொண்டு வா தம்பி எண்டு சொல்லியும் கேக்கேல்ல. பிருந்தா கதைச்சு, அவன்ர தங்கச்சியார் கேட்டு, சரி அவன்ர வயசுப் பெடியள்(பையன்கள்) எண்டா மனதில இருக்கிறதை சொல்லுவானோ எண்டு மூத்த மருமகனைக்கொண்டு கேட்டு வாயே திறக்கேல்லமா அவன். கடைசியா ஒருநாள் வந்து கேட்டான், ‘வாறவள் எனக்குப் பிடிச்சவளா இருந்தா காணுமா இல்ல வேற எதுவும் எதிர் பாக்குறீங்களா?’ எண்டு. பிறகுதான் உன்னைப்பற்றிச் சொன்னவன். அதுவரைக்கும் கும்பிடாத சுவாமி இல்ல வேண்டாத தெய்வம் இல்ல. வைக்காத நேத்திக்கடன் இல்ல. ஒரு நாள் கூட நிம்மதியா படுத்திருக்கமாட்டன். அதையெல்லாம் இப்ப நினைச்சுப் பாத்தா கனவு மாதிரி இருக்கு.” என்று மனதிலிருந்ததை எல்லாம் அவளிடம் பகிர்ந்துகொண்டார் அவளின் மாமியார்.

 

அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டாலும், ‘எல்லா வகையிலும் சிறந்த பெண்களைக் கொண்டுவந்து காட்டியும், எங்கே போனாள் என்ன ஆனாள் என்றே தெரியாத அவளுக்காகக் காத்திருந்திருக்கிறான். அவளை அவனால் மறந்துவிட முடியவில்லை.’ என்கிற செய்தி மயூரிக்கு அவளையும் மீறி இனித்துக்கொண்டு இறங்கியது. அதைவிட இந்தப் பத்து வருடங்களை அவனும் சாதாரணமாகவோ சந்தோசமாகவோ கடந்துவிடவில்லை என்று புரிந்தது. அதுதான் அன்று தியேட்டரிலும் பார்த்தாளே.

 

புஸ்பவதி அம்மா அவனைப்பற்றி அவ்வளவு சொன்னதாலோ என்னவோ அவனைப் பார்க்கவேண்டும் போல் மனதில் ஓர் உந்துதல் எழ, கறி இருந்த பாத்திரத்தைக் கொண்டே வைக்கிறவள் போன்று சென்று பார்த்துவிட்டு வந்தாள்.

 

அப்போதும் ஆதிராவுடன் சேர்ந்து என்னவோ செய்துகொண்டிருந்தார்கள் மூவரும். வேறு என்ன? ஏதாவது அடுத்த டிக்டாக்குக்கான அலுவலாகத்தான் இருக்கும்.

 

உணவு வேளையும் ஆதிராவின் கலகலப்புடனேயே முடிய, இன்னுமே சோர்ந்திருந்த மகனின் முகத்தைப் பார்த்துவிட்டு, “அறைல கொஞ்சநேரம் ஓய்வா இரு தம்பி. ரெண்டு நாளா ஓடித்திரிஞ்சது களைப்பா இருக்கும்.” என்று அவனை அனுப்பிவைத்த புஸ்பவதி பின்னாலேயே மயூரியையும் அனுப்பிவைத்தார்.

 

ஒரு ஆண்பிள்ளையின் அறையின் அத்தனை லட்சணத்தோடும் ஒழுங்காக நேர்த்தியாக இருந்தது அவனுடைய அறை. கட்டிலில் படுத்திருந்த பிரதீபன் ஒரு கையை முகத்தின்மேலே வைத்து விழிகளை மூடியிருந்தான்.

 

நேற்றிலிருந்து அவனுக்கு ஓய்வே இல்லை. இரவுணவையும் வயிற்றுக்குப் போதுமான அளவு சாப்பிடவில்லை. மயூரி கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். அன்று சொன்னானே, அம்மாவின் கட்டாயத்துக்காகச் சாப்பிடுவேன் என்று. அவ்வளவுதான் உண்டான். மனம் கேளாமல் அவனை நெருங்கி, “தலை இடிக்குதா?” என்று மெல்லக் கேட்டாள்.

 

“இல்ல..” மூடியிருந்த விழிகளைத் திறக்காமலேயே சொன்னான்.

 

“பாம் ஏதும் தடவிவிடவா?”

 

கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான் அவன். அந்த விழிகளில் எந்த உணர்வுமே இல்லை. வெறுமையாய் இருந்தது. “இந்தத் திடீர் இரக்கம் என்னத்துக்கு?” என்றான்.

 

என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையே பார்த்தபடி அவள் நிற்க, “இப்படியெல்லாம் கேக்காத. பிறகு முறையில்லாம நடத்தினதை இனி உரிமை இருக்குதானே எண்டு உனக்கு மேல பாஞ்சு நடத்தினாலும் நடத்திடுவன். எதுக்கும் தள்ளியே இரு!” என்றுவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான் அவன்.

 

முகம் சுண்டிவிட அப்படியே நின்றுவிட்டாள் மயூரி. எவ்வளவு தரமற்ற வார்த்தைகள். அதை உதிர்த்தது அவள். அப்போதுகூட அது உறைக்கவில்லை. அவன் வாயால் கேட்கும்போது பெரும் கேவலமாய் உணர்ந்து குன்றினாள்.

 

அவனுடைய கோபத்தில் நியாயம் இருப்பதாகவே அவளின் நியாய மனது எடுத்துரைத்தது. ஏனோ அவனைச் சமாதானம் செய்ய மனம் விளைந்தது. அதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.

 

அவளை அப்படியே ஏற்றுக்கொண்ட மாமியார், தேவையற்று ஒரு வார்த்தையேனும் உதிர்க்காதுபோனாலும் பாசமாய் நடத்தும் மாமனார், எல்லாவற்றுக்கும் மேலாக ஆதிராவைத் தங்கள் பேத்தியாகவே ஏற்றுக்கொண்டு பாசத்தைப் பொழியும் அவர்களின் நல்ல உள்ளம் எல்லாம் சேர்ந்து அவளைக் குற்றம் சாட்டுவது போலிருந்தது.

 

எந்தக் கேள்விகளும் இல்லாமல் அவளை மருமகளாக ஏற்றுக்கொண்டவர்களின் மகனுக்கு அவள் என்ன செய்துகொண்டு இருக்கிறாள்? கூடவே வேலையோடு வேலையாக புஸ்பவதி அம்மா அவனைப் பற்றிச் சொன்னவையும் அவன் மீதான இரக்கத்தைத் தூண்டிவிட்டிருந்தது.

 

அன்று ஒருநாள் அவன் கேட்ட கேள்விகள், திருமணத்துக்கு முதல் நாள் இரவு நந்தினி சொன்ன விளக்கங்கள், இதோ சற்றுமுன் புஸ்பவதி அம்மா பகிர்ந்துகொண்டவை எல்லாமே சேர்ந்து அவன் பக்கமாய் அவளை நகர்த்த ஆரம்பித்துத்தான் இருந்தது. ஆனாலும், ஒரு தடை.

error: Alert: Content selection is disabled!!