காதல் காயங்களே 3 – 2

“பெயர் என்னம்மா?” இவளின் முறை வந்ததும் குறிப்பெடுத்தார் அங்கிருந்த தாதிப்பெண்.

 

“மயூரி.”

 

“வயது?”

 

“இருபத்திரண்டு.”

 

“என்ன நடந்தது?”

 

நடந்ததைச் சொன்னாள்.

 

“எங்கயெல்லாம் வலி இருக்கு?” என்று கேட்டார் அவர்.

 

சங்கடத்தோடு அருகில் நின்றவனை அவள் பார்க்க, “நான் அங்கால(அந்தப்பக்கம்) நிக்கிறன்.” என்று விலகி வந்தான் அவன்.

 

ஆனாலும், சின்னக் கிளினிக் என்பதாலும், அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லாமல் அமைதியாக இருந்ததாலும், அவள் மெல்லிய குரலில் சொல்வது அவனுக்கும் கேட்டது.

 

“தோள்ல காயம், முழங்கைலயும். அதோட இடுப்பு சரியாக நோகுது. கால்லையும் அடிபட்டிருக்கு எண்டு நினைக்கிறன்.” என்றதும் அனைத்தையும் குறித்துக்கொண்டார் தாதி.

 

“அந்த அறைக்கு வாங்க, பாப்பம்.” என்று மயூரியை அழைத்துக்கொண்டு போனார் அவர்.

 

ஒரு சின்ன ஆக்சிடென்ட். அவன் கவனமாக இருந்திருக்க நடந்தே இராது. இப்போதானால், அவளுக்கு இத்தனை இடங்களில் வலியா என்று தன்னையே நொந்துகொண்டான் பிரதீபன். சற்று நேரத்தில் அவள் வைத்தியரின் அறையிலிருந்து வெளியே வருவது தெரிந்தது.

 

வேகமாக எழுந்துகொண்டவனின் விழிகல், “என்னவாம்?” என்று வினவிற்று.

 

“பயப்படுற மாதிரி ஒண்டும் இல்லை. சிராய்ப்புத்தானே. மருந்து எழுதித் தந்தவர்.” என்றவள் மெல்லப் புன்னகைத்தாள்.

வலி முகத்தில் தெரிந்தாலும் கொஞ்சம் தெளிந்திருந்தாள்.

 

“இன்னும் வலிக்குதா?” தன்னை மீறியே கேட்டான் பிரதீபன்.

 

“பெருசா இல்ல. அதுவும் நாளைக்கு மாறிடும்.” சொல்லும்போதே வெளியே இருள் கவிவதைக் கவனித்துவிட்டு, “போவமா?” என்றாள் மயூரி.

 

அவளையும் ஏற்றிக்கொண்டு பைக்கை பார்மஸிக்கு விட்டான் பிரதீபன். அங்கு, வாங்க வேண்டிய மருந்துகளை வாங்கிக்கொண்டு புறப்படுகையில், “வீடு எங்க இருக்கு எண்டு சொன்னா, கொண்டுபோய் விட்டுடுவன்.” என்றான்.

 

“விழுந்த இடத்துக்குப் பக்கத்திலதான்.”

 

“நானும் அங்கதான் இருக்கிறன், கண்டதே இல்லையே.” என்றபடி பைக்கை விரட்டினான் அவன்.

 

“இப்ப வேலை கிடைச்சு ஆறுமாசம் தான். அதைவிட அந்த வீட்டுக்கு வந்து ரெண்டு மாசம் தான் வரும். பஸ்லதான் வேலைக்குப் போறனான். பஸ்ஸுக்கு நிக்கேக்க நான் உங்களைப் பாத்திருக்கிறன்.” என்றாள் அவள்.

 

வீட்டுக்கு வருகிற வழியில், “இங்க ஒருக்கா நிப்பாட்டுறீங்களா?” என்றாள், தயங்கிய குரலில்.

 

உடனேயே வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்திவிட்டு, “ஏதாவது வேணுமா?” என்று இதமாக வினவினான் பிரதீபன்.

 

“ஓம்.. சாப்பாடு கட்டவேணும். ஒரு நிமிசம் நிண்டீங்கள்(நின்றால்) எண்டால் ஓடிப்போய் கட்டிக்கொண்டு வந்திடுவன்.” என்றாள் மெல்ல.

 

“நீங்க நில்லுங்க. நான் வாங்கிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, அவள் மறுப்பதற்கு முதலே அவன் நடக்கத் தொடங்கியிருந்தான்.

 

அவள் இருக்கும் நிலைக்கு, இல்லையில்லை நானே வாங்குறன் என்று அவனை முந்திக்கொண்டு ஓடுவதெல்லாம் முடியாத காரியம் என்று உணர்ந்து, “இடியப்பம் கட்டுங்கோ. சின்னப் பார்சல் போதும்.” என்றவள், பணம் எடுத்துக் கொடுப்பதற்குள் அவன் கடைக்குள் சென்றிருந்தான்.

 

அவள் அவ்வப்போது இப்படிக் கட்டுவதால் விலை தெரியும். எனவே, பார்மசியில் அவன் கொடுத்த காசோடு இதையும் சேர்த்து கையில் எடுத்து வைத்துக்கொண்டாள்.

 

பார்சலோடு வந்தவனிடம் நீட்ட, “பர்ஸுக்க வச்சிட்டு ஏறுங்க!” என்றுவிட்டு, அதை வாங்காமல் அவளையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் அவன்.

 

எல்லாவற்றுக்கும் முந்திக்கொண்டு அவனே பணம் கொடுக்க, என்னவோ அவள் அவனை ஏய்ப்பதுபோல் அவளுக்கே தோன்றிவிட்டது.

 

“காசை வாங்குங்கோ, பிளீஸ்!” என்றாள் மெல்லிய குரலில்.

 

“பெருசா ஒண்டும் செலவாகேல்ல.”

 

“எண்டாலும், நீங்க கூட்டிக்கொண்டுபோய் கூட்டிக்கொண்டு வந்து விடுறதே பெரிய உதவி. இது போதும். இறங்கினதும் தருவன். வாங்குங்கோ!” அவளின் விளக்கத்தில் புன்னகை அரும்பியது அவனுக்கு.

 

ஆரம்பத்தில் பயந்தவள் போல் தெரிந்தாலும், அப்படி இல்லை போல என்று இப்போது நினைத்துக்கொண்டான்.

 

அவள் விழுந்த இடம் கடந்து சற்றுத் தூரத்திலேயே ஒரு வீட்டின் முன்னால் நிறுத்தச் சொல்லி இறங்கினாள். “நீங்க செய்தது பெரிய உதவி. அதுக்கு நன்றி. இந்தாங்கோ காசு.” என்று அவள் நீட்டியதை அப்போதும் அவன் வாங்கவில்லை.

 

அந்த வீட்டைப் பார்வையால் அளந்துவிட்டு, மாடியில் தெரிந்த அறையைக் காட்டி, “மேலயா இருக்கிறீங்க?” என்று கேட்டான்.

 

அவன் இருப்பதும் இங்கிருந்து இரண்டு தெருத் தள்ளித்தான். இங்கே அவனைப் போன்றவர்கள் வாடகைக்கு இருப்பதுதான் அதிகம். எனவே விசாரித்தான்.

 

“ஓம் மேலதான். முதல் இதைப் பிடியுங்கோவன்.” காசைக் கொடுத்துவிடுவதில் குறியாக இருந்தாள் அவள்.

 

‘இத்தனை அடம்பிடித்து அந்தப் பணத்தைத் தந்தே ஆகவேண்டுமா?’ என்பதுபோலப் பார்த்தான் பிரதீபன்.

 

அவளுக்கோ சங்கடம் அகலவேயில்லை. “ப்ளீஸ், வாங்குங்கோ. பைக்ல கூட்டிக்கொண்டு போனதே பெரிய ஹெல்ப். இல்லாட்டி இப்பவும் வீடு திரும்பியிருக்க மாட்டன்.”

 

“இதெல்லாம் என்னால தானே. சோ நான் செய்றதுதான் சரி.” என்றான் அவன்.

 

“ரெண்டுபேர்லயும் தான் பிழை. ரெண்டுபேரும் தான் பாத்து வரேல்ல. அதால உங்கள்ள மட்டும் எண்டு சொல்லவேண்டாம். இத முதல் பிடியுங்கோ.” அவளின் பிடிவாதம் கண்டு அவனுக்குள் சுவாரசியம் பிறந்தது.

 

“சட்டை கிழிஞ்சு, கை கால் எல்லாம் காயம் பட்டது உங்களுக்குத்தானே.” என்றான் சிரிப்புடன்.

 

“அதுக்கெண்டு உங்கட சட்டையை கிழிச்சு கை கால்ல காயம் வரவைக்கச் சொல்லுறீங்களா. இதெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்கு போல. ரெண்டுநாள்ல எல்லாம் மாறிடும். ஃபிரியா விடுங்க..” என்றவள் அவன் கையில் பணத்தைப் பொத்தப்போக அவன் வாங்கவே இல்லை.

 

“இப்ப வேணாம். திரும்ப ஒரு ஆக்சிடென்ட் நடந்து நான் விழுந்து காயப்பட்டா அப்ப திரும்பிச் செய்ங்க.” என்று இலகுவாகச் சொல்லியபடி பைக்கைவிட்டு இறங்கினான் அவன்.

 

‘அதுக்கெண்டு பிளான் பண்ணி ஆக்சிடென்டா நடத்த முடியும்.’ என்று எண்ணியவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

 

மருந்து பேக், உணவுப் பார்சல் இரண்டையும் கொண்டு

அவன் அவள் அறைக்குச் செல்லும் மடிப்பாக்கம் நோக்கி நடக்க, அவள் கேள்வியாகப் பார்த்தாள். “வாங்க! மாடி வரைக்கும் வாறன்.” என்று, நடந்தவனின் மீது மதிப்பு உண்டாயிற்று அவளுக்கு.

 

படியேற முடியாமல் இல்லைதான். என்றாலும் ஒவ்வொரு படியிலும் காலைத் தூக்கி வைக்கையில் அடிபட்ட முழங்காலில் உயிர் போனது. அவளின் சிரமத்தைப் பார்த்து அவனே அவளின் கையைப் பற்றி மெதுவாக மேலே அழைத்துக்கொண்டு போனான்.

 

அறையின் கதவைத் திறந்ததும் உள்ளே அழைக்கச் சங்கடம் அவளுக்கு. என்ன இருந்தாலும் அந்நியனை அறைக்குள் அழைப்பதா என்று மேலும் தயங்கினாள். அதை உணர்ந்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் பிரதீபன்.

 

“ஓகே.. நான் வாறன். கவனமா இருங்கோ. ஏதும் அவசரம் எண்டால்.. என்ர நம்பரை நோட் பண்ணுங்க..” என்றவன், இல்லை தேவையில்லை என்று அவள் சொல்ல முதலே இலக்கங்களைச் சொல்லத் தொடங்கிவிட, வாய்க்குள் வந்த வார்த்தைகளை வாய்க்குள்ளேயே அடக்கிக்கொண்டு பதிந்துகொண்டாள்.

 

“மிஸ் கோல் ஒண்டு குடுங்க பாப்பம்.” அப்படி அவள் அழைத்தபிறகே விட்டான்.

 

“சனி ஞாயிறு ஃபிரீ தானே உங்களுக்கு?”

 

ஆம் என்பதாகத் தலையை ஆட்டினாள் மயூரி.

 

“அப்ப ரெஸ்ட் எடுங்கோ மாறிடும்.” என்று, விடைபெற்றுக்கொண்டு இறங்கிச் சென்றான் அவன்.

 

அந்த ஊரில், தமிழன் ஒருவன் இப்படி இதமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொண்டது, அவள் மனத்தைக் கவர்ந்திருந்தது. அறைக்கதவைச் சாற்றிவிட்டு ஜன்னலால் அவனைப் பார்த்தாள்.

 

பைக் திறப்பைச் சுழற்றியபடியே இறங்கிச் சென்று, பைக்கில் அமர்ந்து ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு, அவன் புறப்படுவது தெரிய சின்ன முறுவலோடு உடைமாற்றிக்கொண்டு வந்தாள், மயூரி.

 

 

error: Alert: Content selection is disabled!!