காதல் காயங்களே – 30

அத்தியாயம் 30

 

 

 

“என்னம்மா இது?”

 

அன்று பக்கத்துவீட்டுத் தோழியுடன் விளையாடிவிட்டு வந்த ஆதிராவின் கண்ணுக்குள் வந்து விழுந்த முடியைக் காதோரமாய் ஒதுக்கி விட்டபடி கேட்டான் பிரதீபன்.

 

விழிகளை உருட்டி உள்ளுக்கு வேகமாகப் பார்த்துவிட்டு தகப்பனைக் கிட்ட வரச்சொன்னாள் ஆதிரா. அவள் சைகை காட்டிய அழகில் முறுவல் மலர, அவளிடம் குனிந்தான். “அது அப்பா சுவிங்கம் சப்பேக்க பபிள்ஸ் விட்டன். அது தலமுடில ஒட்டிப்போட்டுது. அதுதான் வெட்டி விட்டனான். அம்மாட்ட சொல்லாதீங்கோ பேச்சு விழும்.” என்றாள் ரகசியமாய்.

 

அதற்குள் மயூரி வர படக்கென்று நிமிர்ந்து கொண்டு கண்ணால் கவனம் காட்டினான். ஆதிராவும் வேகமாக முடியைக் காதோரமாக இழுத்துவிட்டுக்கொண்டாள். என்றாலும் அள்ளிப் போட்டிருந்த போனிடெயிலுக்குள் ஒரு இழை மட்டும் பிரிந்து காதோரமாக நின்றதைக் கவனித்து, “என்ன ஆது இது?” என்றாள் மயூரி.

 

ஆதிராவுக்குள் மெல்லிய பயம் வந்திருந்தது. தலைமுடியில் விளையாடினால் அன்னைக்குப் பிடிக்காது என்று தெரியும். எனவே, “ஒண்டுமில்லம்மா. நான் குளிக்கப்போறன்!” என்றபடி வீட்டுக்குள் ஓடமுயன்றவளைப் பிடித்து நிறுத்தினாள் மயூரி.

 

“எங்க ஓடுறாய்? இங்க வா!” என்று அழைத்துத் தன் முன்னே நிறுத்தி,

 

“இது ஏன் வெட்டுப்பட்டிருக்கு?” என்று முடியைக் காட்டிக் கேட்டவளின் விழிகளில் கண்டிப்பு வந்திருந்தது.

 

“என்ன எண்டு தெரியாதா உங்களுக்கு? தலைமுடிதான்.” சமாளிக்க முயன்றாள் ஆதிரா.

 

முறைத்தாள் மயூரி. “இதை யாரு வெட்டினது?”

 

தாயை ஏமாற்ற முடியாது என்று தெரிந்துவிட, தகப்பனிடம் பார்வை சென்றுவர, “ஒருத்தரும் வெட்ட இல்ல. அது அப்படித்தான் எனக்கு.” என்றாள்.

 

“ஒவ்வொரு நாளும் தலை பின்னிவிடுற எனக்கு தெரியாதா? பொய் சொன்னா அடிச்சுப்போடுவன் ஆது. உண்மையைச் சொல்லு? என்ன நடந்தது?” எனும்போதே சின்னவளின் கண்கள் கலங்கிற்று.

 

தாய் விசாரிக்கும்போது தான் தலையிடக்கூடாது என்றுதான் அதுவரை அமைதியாக இருந்தான் பிரதீபன். மகள் கலங்கவும் அதற்குமேல் தங்கமாட்டாள் என்று விளங்க, “அது பபிள்கம் ஒட்டியிருக்கு. அதால வெட்டி இருக்கிறாள்.” என்று உள்ளதைச் சொல்லிச் சமாளிக்கப் பார்த்தான்.

 

“அதுக்கு ஏன் பொய் சொல்லவேணும் ஆது?”

 

“முடி வெட்டினதுக்கு நீ பேசுவாய் எண்டு பயத்தில..” என்றவனை முறைத்தாள் மயூரி. “அவளுக்கு நீங்க என்ன வாயா? பொய்ய சரளமா சொன்னவளுக்கு உண்மையை சொல்ல பயமாமோ?” என்றவள், அவன் என்னவோ சொல்ல வர, “நான் அவளிட்ட கேட்டுக்கொண்டு இருக்கிறன்!” என்று அவனை நிறுத்திவிட்டு மகளிடம் திரும்பினாள்.

 

“வாடி முன்னுக்கு! இந்த வயசிலேயே அம்மாட்ட மறைக்க வெளிக்கிட்டியோ நீ? அப்ப இன்னும் நாலு வயசு போனா என்னவெல்லாம் செய்வாய்? இதுக்க பொய் வேற. இனி பொய் கதைப்பியா?” என்றவள் வாயிலேயே ஒன்று போட்டுவிட, வேகமாக அவளை இழுத்துத் தனக்குப்பின்னால் நிறுத்திக்கொண்டான் பிரதீபன்.

 

“சின்னப்பிள்ளை அவள். பொய் சொல்லக்கூடாது எண்டு சொல்லிக்கொடுக்கிறதை விட்டுப்போட்டு என்னத்துக்கு அடிக்கிறாய்?” அவன் அதட்ட அதற்குள் அழுதுகொண்டு வீட்டுக்குள் ஓடியிருந்தாள் ஆதிரா.

 

“அவள் செய்தது பிழை. அதை திருத்துறதை விட்டுப்போட்டு அவளுக்கு முன்னால இப்படி கதைச்சா நாளைக்கு இன்னும் துணிவா நாலு பொய் சேர்த்துச் சொல்லுவாள். அதுதான் வேணுமா உங்களுக்கு?” என்று சீறினாள் மயூரி.

 

“மயூ! சின்னப்பிள்ளை மாதிரி கதைக்காத. அவள் செய்தது பிழைதான். அப்படிச் செய்யக்கூடாது, பொய் சொல்லக்கூடாது எண்டு சொல்லிக்குடு. அடிக்காத எண்டுதான் சொல்லுறன்.”

 

“இவ்வளவு நாளும் நான் சொல்லிக் குடுக்கேல்ல எண்டு சொல்லுறீங்களா? அவளுக்கு நல்லா தெரியும், பொய் சொன்னா எனக்கு பிடிக்காது எண்டு. தெரிஞ்சும் சொல்லியிருக்கிறாள் எண்டால்.. அவ்வளவு துணிவு அவளுக்கு. அதுக்கு காரணம் நீங்க. நீங்களும் சேர்ந்துதான் மறைக்க வெளிக்கிட்டநீங்க. இப்பவே அவளுக்கு களவும் பொய்யும் பழக்கிறீங்களா?” என்று அவனிடமும் பாய, அவளை முறைத்தான் அவன்.

 

“யோசிக்காம கதைக்காத மயூ! அப்பதான் என்னட்டயும் சொல்லிக்கொண்டு இருந்தவள். அதுக்கிடைல நீ வந்திட்டாய். இல்லாட்டி சொல்லச் சொல்லியிருப்பன். முதல், இதென்ன ஒரு சின்ன விசயத்துக்குப்போய் இந்தப்பாடு படுறாய்.” அவனுக்கு என்னவோ இந்த விடயத்தில் மயூரி அளவுக்கதிகமாகக் கோபப்படுவது போலிருந்தது.

 

“எல்லாம் சின்ன விசயத்தில தான் ஆரம்பிக்கும். பிறகுதான் என்னை மாதிரி அவளும் எல்லாத்தையும் மறைச்சு யாரிட்டையும் வயித்தில வாங்கிக்கொண்டு வருவாள்.” என்று சொல்லி முடிக்க முதலே கையை ஓங்கிவிட்டிருந்தான் அவன்.

 

“பளார் ஒண்டு விட்டன் எண்டா தெரியும்! ஒரு அம்மா கதைக்கிற கதையாடி இதெல்லாம்?” அடக்கப்பட்ட குரலில் சினமிகுதியில் சீறினான் அவன்.

 

நடுங்கிப்போனாள் மயூரி. அச்சத்தில் விரிந்த விழிகளோடு அவனையும் ஓங்கிய கையையும் மாறி மாறிப் பார்க்க, “ச்சேய்!” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக அகன்றான். வீட்டின் வெளியே இருந்த கைப்பிடிச் சுவரில் கைகளை ஊன்றிக்கொண்டு வெளியை வெறித்தவனுக்கு அவளை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை.

 

தன்னையும் தாழ்வாக நினைத்து, அதனாலேயே மகளையும் அதட்டி உருட்டி.. இப்போது இருவரும் இரண்டு மூளையில் அழுதுகொண்டு நிற்பார்கள்.

 

இதில் அவன் கையை ஓங்கியதும் அவள் பயந்து மிரட்சியோடு பார்த்தது வேறு வருத்தியது. மீண்டும் உள்ளே சென்றான்.

 

முதலில் கண்ணில் பட்டது ஆதிரா தான். அறைக்குள் முகத்தை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

இவனைக் கண்டதும் முறைத்துவிட்டுத் திரும்பி அமர்ந்துகொண்டாள். உதட்டோரம் அரும்பிய முறுவலோடு சென்று அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான். அவள் தள்ளி அமர இவனும் மீண்டும் இடித்துக்கொண்டு அமர்ந்தான்.

 

“நான் உங்களோட கோவம்.”

 

“ஆனா நான் ஆது செல்லத்தோட கோபம் இல்லையே!”

 

“அம்மா உங்களுக்கா அடிச்சவா. எனக்குத்தான் அடிச்சவா..” அவன் தடுத்துநிறுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு அதில் இருந்தது.

 

‘அம்மாக்காரிய மாதிரியே பாயிண்டா கதைக்கிறாள்.’

 

“அம்மா ஏன் அடிச்சவா எண்டு தெரியுமா உனக்கு?” ரகசியம் போல் கேட்டான் அவன்.

 

“முடி வெட்டினதுக்கு..”

 

“இல்லையே..”

 

முறைத்தாள் அவனுடைய மகள்.

 

“அதை நீ சொல்லாம மறைச்சதுக்கு.”

 

“அதுக்கு அடிக்கிறதா?”

 

“ஒரு பிழை செய்றதே பிழை. அதை மறைக்கிறது இன்னும் பிழை எல்லா..” இதமான குரலில் எடுத்துச் சொன்னான் தகப்பன்.

 

அவளுக்கு கண்கள் கலங்கிற்று. “அம்மா பேசுவா எண்டுதான் மறைச்சனான்.”

 

“அது சரியோ பிழையோ..?”

 

“பிழை…” என்று சொல்லவந்தவள், தன் பிழையைத் தன் வாயாலேயே சொல்லவைக்கப்பார்த்த தகப்பனை முறைத்துவிட்டு, “நீங்க போங்க நான் உங்களோட கதைக்கமாட்டன்” என்றுவிட்டு ஓட எட்டிப்பிடித்து நிறுத்தினான் அவன்.

 

தலை குனிந்து நின்ற மகளின் முகத்தை நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தான். “அப்பாவை பாக்கவேணும் ஆது.”

 

“ஒரு பிழை செய்தா என்ன? தெரியாம செய்றது தானே. ‘ஓம்.. பிழை செய்திட்டேன் சொரி அம்மா’ எண்டு சொன்னா, அம்மா பேசிப்போட்டு விடப்போறா. அவ்வளவுதானே. அந்தளவு தைரியம் எங்கட ஆதுக்குட்டிக்கு இல்லையா என்ன?” என்றான் அவன்.

 

அவளின் கண்ணீர் தகப்பனின் கையில் பட்டுச் சிதறியது.

 

“கண்ணம்மா.. அழக்கூடாது! இங்க வா.” என்று மகளை மடியில் அமர்த்திக்கொண்டு அவளின் முகத்தைத் துடைத்துவிட்டான்.

 

“அம்மாக்கு என்ன கவலை சொல்லு.. இண்டைக்கு இந்த சின்ன விசயத்தையே மறைச்ச ஆது நாளைக்கு பெரிய விசயங்களை மறைச்சு அதால அதைவிட பெரிய பிரச்சனைகள் வந்தா என்ன செய்றது எண்டுற பயம். இப்பவே கண்டிச்சு வச்சா நாளைக்கு என்ன ஒரு பிரச்சனை எண்டாலும், மறைக்காம நீ வீட்டை வந்து சொல்லுவாய் எல்லா. அப்பதானேம்மா அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பிள்ளைக்கு வந்த பிரச்னைக்கு முடிவு காணமுடியும். நீ இன்னும் சின்னப்பிள்ளை செல்லம். ஆனாலும் நீயும் கேள்விப்பட்டிருப்பாய் தானே, பொம்பிளை பிள்ளைகளை பயப்படுத்தி வீட்டை சொல்லக்கூடாது எண்டு நிறைய பிழைகளை ஆக்கள் செய்ய வைக்கிறவே தானே. அதனாலதான் என்ன நடந்தாலும் மறைக்காமல் பிள்ளைகள் வீட்டை வந்து சொல்லவேணும். பயப்பட கூடாது. அத நினைச்சுத்தான் அம்மா அடிச்சவா. நீயே சொல்லு தலைமுடி வெட்டினது எல்லாம் ஒரு விசயமா? அம்மா இப்படி நடந்துபோச்சு எண்டு சொல்லியிருக்க, இனி பபிள் விடேக்க கவனமா விடோணும் ஆது எண்டு சொல்லி முடிச்சிருப்பா. நீங்க மறைக்கப்பாத்ததாலதான் அம்மா அடிக்கவேண்டி வந்தது. விளங்கினதா?” என்றான் அவன்.

 

அவள் மெல்லத் தலையாட்டினாள். “இதுதான் என்ர செல்லம். ஒண்டு சொல்லிக்குடுத்தா அதை கேப்பாள். இன்றைக்கு ஆது ஒரு விசயம் படிச்சிருக்கிறா. வெளில என்ன நடந்தாலும் அதை மறைக்காம அம்மாட்டையோ அப்பாட்டையோ வந்து சொல்லவேணும் எண்டுறதுதான் அது. செய்வீங்க தானே?” என்று கேட்டான்.

 

அவள் ஆம் என்பதாகத் தலையாட்டினாள். “அவள் அப்பான்ர செல்லம்!” என்றவன் மகளை உச்சி முகர்ந்தான். “இப்ப நீங்க என்ன செய்யவேணும்?” பதிலை அவளிடமே விட்டான்.

 

அவளோ தகப்பனைக் கூர்ந்து பார்த்தாள். ‘பெரிய மனுசி எண்டு நினைப்பு’ உதட்டோரம் சிரிப்பில் துடித்தாலும் காட்டிக்கொள்ளாமல் தானும் அவளைப் பார்த்தான் அவன்.

 

அவனின் காதோரமாகக் குனிந்து, “அம்மாக்கு சொரி சொல்லோணுமா?” என்று கேட்டாள். அவன் ஆம் என்பதாகத் தலையசைக்க, அடுத்த நொடியே மின்னலாய் துள்ளிக்கொண்டு ஓடிப்போய் சமையலறையில் நின்ற அன்னையை இடையோடு கட்டிக்கொண்டாள் ஆதிரா.

 

“சொரி அம்மா. இனி ஒண்டும் மறைக்கமாட்டன். தலைமுடி வெட்டினா உங்களுக்கு பிடிக்காது எண்டுதான் மறைச்சனான்.” மயூரியை இழுத்துத் தன் உயரத்துக்கு ஏதுவாகக் கொண்டுவந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டுச் சொன்னாள் ஆதிரா.

 

மயூரியின் மனம் அப்படியே குளிர்ந்து போயிற்று! “இவ்வளவு நேரம் ஏனடி என்னோட கதைக்கேல்ல?” குழந்தையாய் மாறி மகளிடமே சிணுங்கிவிட்டு, அவளின் கன்னத்தில் தானும் முத்தமிட்டாள் மயூரி.

 

“நீங்க ஏன் அடிச்சனீங்க? வாயால சொல்லி இருக்கலாம் தானே?” என்று எதிர்கேள்வி கேட்டாள் மகள்.

 

“அடிப்பாவி! உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறன் பொய் சொல்லாத எண்டு?”

 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்களும் எனக்கு சொரி சொல்லுங்கோ!” என்று நின்றாள் ஆதிரா.

 

மயூரிக்குச் சிரிப்பு வந்தது.

 

“சரியடி பெரிய மனுசி. சொரி சொரி சொரி ஆயிரம் சொரி..” என்றவள் முத்தமழையில் மகளை நனையவைத்தாள்.

 

“இனி அடிக்கக்கூடாது. எதுவா இருந்தாலும் வாயால குணமா சொல்லோணும் சரியா!” என்றுவிட்டு கிளுக்கிச் சிரித்தவளை அணைத்தபடி நிமிர்ந்த மயூரி, தங்களைப் பார்த்துக்கொண்டு நின்ற பிரதீபனைக் கண்டுவிட்டு அப்படியே நின்றாள்.

 

அவனோ இவள் பார்க்கவும் அங்கிருந்து அகன்றுபோனான்.

 

அவன் கண்களில் என்ன இருந்தது? ஏக்கமா? இல்லை, மகளுக்கு அள்ளியள்ளி வழங்குகிறவள் என்னை மட்டும் ஏனடி தண்டிக்கிறாய் என்கிற கோபமா? என்னை மன்னிக்கவே மாட்டாயா என்கிற இறைஞ்சுதலா? இல்லை எல்லாமா? அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவனுடைய எத்தனையோ விளக்கங்கள் உண்டாக்காத பாதிப்பை அந்த ஒற்றைப் பார்வை அவளிடத்தில் உண்டாக்கிவிட்டிருந்தது. மயூரியின் மனம் குழம்பிப் போயிற்று. கூடவே ஒரு பரிதவிப்பும்!

 

 

 

error: Alert: Content selection is disabled!!