முகம் கழுவி, தலைவாரி, பொட்டு வைத்து, சுவாமி கும்பிட்டுவிட்டு பெற்றவர்களின் முன்னால் போய்நின்றாள். இருவரும் சட்டத்துக்குள் இருந்து கனிவுடன் அவளை அரவணைத்துக்கொண்டிருந்தனர். பார்க்கும்போதே விழிகளில் நீர் கோர்த்தது. அவளுக்காகவே வாழ்ந்தவர்கள். ‘உன்ன பிரதீபனின்ர கைல பிடிச்சு குடுத்திட்டன் எண்டால் நிம்மதியா போய்ச் சேந்திடுவன் மயூ செல்லம்.’ என்று ஒருமுறை அப்பா சொன்னது நினைவில் வந்தது. அந்த நிம்மதியை அவருக்கு அவள் கொடுக்கவே இல்லை.
அவரிடம் காதலைத் தைரியமாகச் சொன்னவளால் கருவுற்று இருப்பதைச் சொல்லவே முடியவில்லை. அப்பாவிடம் மகள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாள்?
கடைசிவரையிலும் தனக்கொரு மகள் இருப்பதைச் சொல்லவே இல்லை. பிரதீபனையைப்பற்றியும் அவளுடைய திருமணத்தைப்பற்றியும் அவர் கேட்கிற போதெல்லாம் ‘அவருக்கு கடமை இன்னும் முடியேல்ல அப்பா. முடிந்ததும் நடக்கும்’ என்று பொய் சொல்லிச் சமாளித்துவிடுவாள். அப்படி பிரதீபனைப் பற்றி விசாரிக்கிற பொழுதுகளில் எல்லாம் வாய் கூசாமல் சொன்ன பொய் எல்லாமே இப்போது அவளை நெருப்பெனச் சுட்டன! அதனால் தானோ என்னவோ கடைசி வருடங்களில் அவனைப்பற்றிக் கேட்பதைக்கூட விட்டுவிட்டார் அவளின் அப்பா.
கண்ணாடிக்குள் இருந்தவரை விரல்களால் வருடினாள் மயூரி.
அவரும் இருந்திருக்கலாம். இல்லையென்றால், அவளாவது அப்பா இருக்கும்போதே இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆதிராவைக்கூட காட்டாமல் விட்டுவிட்டாளே. எவ்வளவு பெரிய பிழையைச் செய்துவிட்டாள்!
வேதனை தாங்கமாட்டாமல் பெற்றவர்களின் படத்தின் மீதே சாய்ந்துகொண்டாள். மன்னிப்பைக்கூட கேட்கமுடியாது நிலையில் விதி அவளை நிறுத்திவிட்டதே! அவர்கள் இருவரும் அவளின் தலையைத் தடவி விடுவதுபோல் ஒரு உணர்வு. மனம் கசியக் கண்களை மூடிக்கொண்டாள். எவ்வளவு நேரம் கடந்ததோ மனம் மெல்ல மெல்ல அமைதி அடைந்தது. சமையலறைக்குள் நுழைந்தவளுக்கு, நீண்ட நாட்களுக்குப் பின்னர் காலைத் தேநீரை ரசித்துப்பருகும் ஆசை எழுந்தது.
தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டுப் புலர்ந்துகொண்டிருந்த பொழுதினை வேடிக்கை பார்த்தாள். இருள் விலகி வெளிச்சம் படர்ந்துகொண்டிருந்தது. சூரியன் மெல்ல மெல்ல வான் பரப்பு முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான், அவளின் தீபனைப் போலவே!
அவனை எண்ணியதுமே உடலில் ஒரு பரவசம். அதுவரை பெற்றவர்களின் பாசத்தில் கசிந்த மனது அவனது ஆக்கிரமிப்பு மிகுந்த காதலில் மயங்கிற்று! தண்ணீர் கொதித்ததும், ஒரு கப்பினை எடுத்துவைத்து தனக்குப் பிடித்தமாதிரியே தேநீரை ஊற்றியபோது, பின்னிருந்து இறுக்கமாக அணைத்தான் பிரதீபன்.
“என்ன விட்டுட்டு எங்கயடி ஓடி வந்தனீ(வந்தாய் நீ)” என்றான் கோபம் போல்.
அப்படியே மனம் மயங்கிற்று மயூரிக்கு. “ஆது வந்தாலும்..” என்றாள்.
“குட்டி நல்ல நித்திரை. கிச்சன் கதவையும் மூடியாச்சு.”
‘கள்ளன்! எல்லாம் பக்கா பிளான்!’ சிரிப்பில் மலர்ந்தது அவளின் அதரங்கள்.
அவனோ, இறுக்கி அணைத்தபடி பின்கழுத்தில் உதட்டினைப் பதித்துவிட்டு அவளின் தோள்வளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். தேகமெங்கும் அவனது மூச்சுக்காற்றின் வெப்பம் மின்னலாய் பரவக் கிறங்கினாள் மயூரி.
நொடிகள் சுகமாய் கழிய அவனின் நிலை மாறவே இல்லை. அணைப்பின் இறுக்கமும் தளரவில்லை. “தீபன்.” என்றாள் மெல்ல.
அவனிடம் சத்தமில்லை.
அவன் இயல்பாய் இல்லை என்று மனம் சொல்ல, “என்ன?” என்றாள் வாஞ்சையோடு.
அப்போதும் சத்தமில்லை. “என்னை தொடக்கூடாது எண்டு சொல்லியிருக்கிறன்.” குறும்புடன் மொழிந்தாள். தன்னுடைய அணைப்பை இறுக்கினான் அவன். அவள் சொல்வதைக் கேக்கமாட்டானாம். அதரங்கள் அழகான சிரிப்பில் விரிய, “என்னோட கதைக்கமாட்டீங்களா?” என்றாள்.
கழுத்து வளைவில் புதைந்திருந்த உதடுகளை அங்கேயே ஒற்றி எடுத்தான். ‘இத மட்டும் செய்வானாம்..’ தேகமெங்கும் புது இரத்தம் பாய்ந்தது அவளுக்கு.
“தீபன்..” மீண்டும் நெருக்கமான குரலில் அழைத்தாள்.
“ம்”
“என்னை ஒருக்கா பாருங்களன்..”
அவளின் கெஞ்சலில் தோள் வளைவிலேயே தாடையைப் பதித்து அவன் பார்க்க, “ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“என்னில கோவம் இல்லையே?” என்றான் ஏக்கமாய் முகம் பார்த்து.
அவள் மெல்ல முறுவலித்தாள். அவன் மீதான அவளின் கோபத்தின் ஆழத்தைத் தான் கொரோனா வைரஸ் நிரூபித்துவிட்டதே! “இல்லை. ஆனா ஏன் கேக்கிறீங்க?”
“இரவு நீயா என்னட்ட வந்தது.. மனதே நிறைஞ்சு போச்சு மயூ. ஆனா, எனக்காக வந்தியா மயூ” அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தபடி கேட்டான்.
“ஏன் அப்படி கேக்கிறீங்க?”
“செத்துடுவானோ எண்டுற(என்கிற) பயத்தில பாவம் பாத்து…” என்றவனின் வாயிலேயே ஒன்று போட்டாள் மயூரி.
“இல்லாட்டி.. நிறைய கதைச்சிட்டோம். பாவப்பட்டவன் இனியாவது சந்தோசமா இருக்கட்டும் எண்டு நினைச்சு வந்தியா?”
“போதும் உங்கட விளக்கம். எனக்கே உங்கள கட்..” இருந்த கோபத்தில் படபடக்க ஆரம்பித்தவள் அதற்குமேல் சொல்லமுடியாமல் நிறுத்திவிட்டுத் தடுமாற, “சொல்லு மயூ உனக்கே..” என்று எடுத்துக்கொடுத்தான் அவன்.
“ம்… உங்கள கட்டிப்பிடிக்கவேணும் மாதிரி இருந்தது. போதுமா இப்ப?” என்று முறைத்தாள் அவள்.
வெட்கத்தைக்கூட கோபமாகக் காட்டும் அவளின் மீது ரசனையுடன் நிலைத்த அவன் விழிகள் தடுமாறி விலகியது.
மயூரிக்குச் சிரிப்பாய் இருந்தது. என்ன ஆயிற்று இவனுக்கு? இது இவன் இயல்பு இல்லையே? அவனுக்குள் இருப்பதை படிக்க முனைந்தாள்.
அவன் தனக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். இரவு முழுவதையுமே அவளின் அணைப்புக்குள் கடந்தவனுக்கு எழுந்ததுமே அவள் வேண்டும் என்றுதான் மனம் குரங்குச் சேட்டை செய்தது. அதுதான் வந்த வேகத்திலேயே அணைத்திருந்தான். அவள் திரும்பி நின்று அவனைப்பார்த்தபோது அவனுக்குள் ஒரு சலனம். அழகிய முகம். அவள் தீட்டிக்கொண்டதாளோ என்னவோ உச்சித் திலகத்தின் மீது ஒரு காதலே பிறந்தது. நேசத்தைச் சுமந்த விழிகள் இரண்டு. அளவான நாசி. சதைப்பற்றுடன் கூடிய சிவந்த அதரங்கள். அந்த அதரங்கள் முத்துப்பற்கள் மின்ன முறுவலித்து முத்தமிடத் தூண்டிக்கொண்டிருந்தன.
கட்டுப்பாட்டினை இழந்து அவன் முத்தமிட மீண்டும் எதையாவது சொல்லிவிடுவாளோ என்று பயந்தான். சூடு கண்ட பூனையாயிற்றே அவன். “எனக்கும் ஒரு தேத்தண்ணி மயூ!” என்றுவிட்டு விலகிப்போக, அவனது கரம் பற்றி நிறுத்தினாள் மயூரி.
“விடு மயூ!” அவளின் முகம் பாராமல் சொன்னவனை மீண்டும் தன்னருகில் கொண்டுவந்தாள். அவன் தோளைப்பற்றி முகத்தைத் தன்புறமாகத் திருப்பினாள்.
அவளின் முகத்தில் ஏக்கத்துடன் படிந்த விழிகள், வேகமாக மீண்டும் விலகிக்கொண்டது. அவன் மறைத்தாலும் அவள் கண்டுகொண்டாளே! மெல்ல எம்பி அவன் உதடுகளைத் தன் அதரங்களால் மூடினாள். ஆச்சரியத்தில் விழிகளை விரித்த பிரதீபனின் கைகள் அவள் இடையைத் தன்னுடன் இறுக்கமாய் வளைத்தது. முத்தம் நீடித்தபோது அவன் பிடி இறுகிற்று! மயூரியின் கைகள் அவனுடைய பிடரி கேசத்துக்குள் நுளைந்து அளைந்தது. உயிரையே கரைக்கும் ஆழ்ந்த முத்தம். பிரதீபனின் விழிகள் கிறக்கத்துடன் மூடிக்கொண்டன.
அந்த முத்தத்தைக் கொடுத்து முடிப்பதற்கு அவளுக்கு நீண்ட நேரமெடுத்தது. மெல்ல முடித்துவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். கிறங்கியிருந்த அவன் விழிகள் தாகத்தோடு இன்னுமே அவள் இதழ்களிலேயே படிந்திருந்தது. நாணம் சொட்ட செல்லமாய் முறைத்துவிட்டு மீண்டும் எம்பி அவன் உதடுகளை மூடினாள்.
அவன் தாகத்தை தீர்த்துவிடும் வேகம் அவளிடம். அவன் கேட்பதைக் கொடுத்துவிடும் ஆவல். இப்போதும் நீண்ட நேரம் தான் பிடித்தது. ஆனால், இடையை வளைத்திருந்த கரங்களின் இறுக்கம் தளர்ந்தபோதுதான் விடுவித்தாள். மனது நிறைந்துபோக தன்னவளை மார்போடு அணைத்துக்கொண்டான் பிரதீபன். “பத்து வருசமாச்சு மயூ. வயசும் போகுது.” என்றான் காதோரமாய்.
“ஆது வந்தாலும் தீபன்..” அந்தப் பேச்சை வளர்க்காமல் மெல்லச் சொன்னாள் மயூரி.
“முத்தம் கொடுத்தா அதை திருப்பி கொடுக்கோணும் எண்டு இந்த வீட்டில ஒரு சட்டம் இருக்காமே..” கட்டைவிரலால் அவளின் இதழ்களைத் தடவியவாறே சொன்னான் அவன்.
முகம் சிவக்க வேகமாகத் திரும்பிக்கொண்டாள் மயூரி. ஆற்றிய தேநீர் ஆறிப்போய் அவளைப் பார்த்துச் சிரித்தது. முதல் போலவே இப்போதும் பின்னிருந்து கட்டிக்கொண்டான் அவன்.
“ஆது நல்ல நித்திரை.” என்றான்.
எதற்கு இந்த அறிவிப்பு என்று தெரியாதா? “சரி. நீங்க தள்ளுங்கோ தேத்தண்ணி ஊத்தப்போறன்.”
“கடன்பட எனக்கு விருப்பமில்லை மயூ..” செவி மடல்களை உதடுகள் உரசச் சொன்னான் அவன்.
கள்ளன்! அவனுக்குச் சாதகமாய் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வான்! மனதினில் வெட்கியவள், “இப்ப நீங்க என்னை விடப் போறீங்களா இல்லையா?” பொய்யாக அதட்டினாள்.
“நீதானேடி நான் விலகினாலும் என்ன விட்டு போகாதீங்க தீபன் எண்டு இரவு சொன்னனீ. மாத்தி மாத்தி கதைக்காத மயூ!” என்றவன் அவளின் சிவந்த கன்னத்தை பற்கள் படக்கடித்தான். சுகமான வலி. அனுபவித்து இன்புற்றாள் மயூரி.
“இப்பவும் நான் தான் சொல்லுறன், தள்ளுங்கோ!” என்றவள் அவன் கையிலேயே ஒரு அடியைப் போட, “போடி!” என்றபடி முகத்தை சுருக்கிக்கொண்டு அவளை விடுவித்தான் அவன்.

