காதல் காயங்களே 33 – 2

தன் அணைப்பை இறுக்கியபடி அவளைப் பார்த்தான் பிரதீபன். அவளுக்குள் இருக்கிற தடையை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவளின் இந்தத் துன்பத்தை அவனால் ஆற்றிவிட முடியும். ஆனால்.. ஏனோ மனம் ஒப்ப மறுத்தது. அவளாகவே தெளிந்து அவனிடம் வரட்டும்.

 

அந்த அணைப்பில் எண்ணங்கள் கலைந்து அவனைப் பார்த்தாள் அவள்.

 

“நீ என்னத்துக்கு வீட்டுக்கும் காலர் வச்ச பிளவுஸ் போடுறாய்? எனக்கு தெரிஞ்சு ஆபீஸ்க்கு மட்டும் தான் இப்படி நீ போறத பாத்திருக்கிறன்.” என்று, பேச்சை மாற்றினான். இத்தனை நாட்களாக அவள் வீட்டுக்கு அணிவதும் அப்படியான வகைதான்.

 

“எப்பவும் போடேல்லையே. ஆது நிக்கிற நேரம் தான் இப்படி போடுறன்.” என்றாள் அவள்.

 

அவனும் யோசித்துப் பார்த்தான். உண்மைதான். ஆதிரா இல்லாத நான்கு நாட்களும் நைட்டி கூட அணிந்திருக்கிறாள். இப்போது மட்டும் ஏன்? கேள்வியாகப் பார்த்தான் அவன்.

 

அவனைப் பாராமல் விழிகளைத் தளைத்துக்கொண்டாள் மயூரி.

 

“என்ன மய்யு?” அவளுடைய தடுமாற்றம் ஆர்வத்தை கிளப்பியது.

 

“தாலிக்கொடி போட்டிருக்கிறன். அதுதான்.”

 

“சரி போட்டிருக்கிறாய். அதுக்கு என்ன?” அவனுக்குப் புரியவில்லை. இளஞ்சிரிப்புடன் கேட்டான்.

 

“ஆது கண்டா கேப்பாள்..” அவளின் குரலே வெளியே வரவில்லை.

 

முகம் மலர அவளின் முகத்தை ஏந்தித் தன் முகம் பார்க்கவைத்தான் பிரதீபன். குடையாய் கவிழ்ந்தது அவளின் இமைகள். “கழட்டிவைக்க விருப்பமில்லையா?” என்றான்.

 

“ம்ம்”

 

“ஏன்?”

 

“இத உங்களிட்ட இருந்து வாங்குறதுக்கு பத்து வருசம் தவம் இருந்திருக்கிறன் தீபன்.” விழிகளோடு விழிகள் உறவாடச் சொன்னாள் மயூரி. இரு சொட்டுக் கண்ணீர் காதோரங்களை நனைத்தது.

 

“என்ர மய்யு…” அவளின் கண்ணீரைத் தன் கரம் கொண்டு துடைத்துவிட்டான் அவன்.

 

“இவ்வளவு நாளும் கழட்ட இல்லையா நீ?”

 

இல்லை என்று தலையசைத்தாள் அவள்.

 

“இந்தளவுக்கு அன்பை வச்சிக்கொண்டுதான் என்னைப்போட்டு படுத்தி எடுக்கிறியாடி?”

 

“அப்படி என்ன படுத்தினானாம்? நீங்க கேக்கிறதையெல்லாம் தந்துகொண்டுதான் இருக்கிறன்.” முறைப்புடன் சொன்னாள் அவள்.

 

“கேக்காததையும் கெதியா தரப்பார்!” முகம் சிவந்தவளின் நெற்றியில் ஆதுரமாக முத்தமிட்டு, “நாளைக்கு கேஃபியோ எடுக்கிறாங்கள் தானே. அப்ப கடைக்குப்போவம்.” என்றான் அவன்.

 

சொன்னதுபோலவே அடுத்தநாள், ஆதிராவையும் அழைத்துக்கொண்டு கையுறை, முகத்துக்கு மாஸ்க் சகிதம் மூவருமாகப் புறப்பட்டனர். ஒரு நகைக் கடையில் பிள்ளையார் பெண்டனுடன் கூடிய செயின் வாங்கினான் பிரதீபன். மயூரி கேள்வியாகப் பார்க்க ‘பொறு’ என்று விழி முடித் திறந்தான்..

 

நேரே காரைக் கோயிலுக்கு விட்டான். அங்கே ஆதிராவின் பெயரில் ஒரு அர்ச்சனையை செய்துவிட்டு அவள் கழுத்தில் செயினைப் போட்டுவிட்டான். விழிகள் விரிய, “எனக்காப்பா?” என்று, செயினைக் கையில் தூக்கிப் பார்த்தபடி கேட்டாள் ஆதிரா.

 

“செல்லத்துக்குத்தான். அன்றைக்கு அம்மாக்கும் ஒண்டு போட்டுவிட்டனான். அத காட்டு மயூ.” என்றான் அவளிடம். அவள் அவனைப்பார்க்க காட்டு என்றான் கண்களால். மயூரி கழுத்தில் கிடந்ததைக் காட்டினாள்.

 

“அது என்ன தெரியுமா? கல்யாணம் கட்டின ஆக்கள் போடுற தாலிக்கொடி. உன்ர அம்மா அப்பாவில இருந்த கோபத்தில இவ்வளவு நாளும் போடேல்ல. இப்ப திரும்ப போடுறா. நீயும் வீட்டுல இருக்கிற நாட்கள்ல இதை போடலாம் சரியா. பள்ளிக்கூடம் போகேக்க போடக்கூடாது.” என்றவன் காரில் வரும்போது, “அம்மா போட்டிருக்கிற தாலிக்கொடி பற்றியோ இல்ல நீங்க போட்டிருக்கிற இந்த செயின் பற்றியோ யாரிட்டையும் கதைக்க கூடாது. இது இல்லாத ஆக்கள் நிறையப்பேர் இருப்பினம் கண்ணம்மா. பிறகு அவேக்கு, ‘இப்படி எனக்கு இல்லையே’ எண்டு கவலையா இருக்கும். எப்பவுமே மற்ற ஆக்களின்ர மனதை நாங்க நோகடிக்க கூடாது. விளங்கினதா?” என்று மயூரி அணிந்திருப்பது தாலிக்கொடி, அவளது செயின் என்பதையும் அவளுக்குத் தெரியப்படுத்தியவன், அதை வெளியில் சொல்லாதபடியும் பார்த்துக்கொண்டான்.

 

ஆதிரா யாரிடமாவது சொல்ல, உன் அப்பா அம்மாவுக்கு இப்போதுதான் தாலியை காட்டினாரா என்று யாராவது கேட்க எதற்கு இதெல்லாம் என்று சிந்தித்து அவன் செயல்பட்டதை எண்ணிக் கண்ணாலேயே அவனைப் பாராட்டினாள் மயூரி.

 

‘வீட்டுக்கு போனதும் பரிசு தா.’ என்று கண் சிமிட்டினான் அவன்.

 

கொடுக்கலாம் என்றே அவளுக்கும் தோன்றியது. அவனைப்போலவே பறக்கும் முத்தம் ஒன்றை உதடுகளால் மட்டுமே கொடுத்துவிட்டுச் சிரிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். காரைச் செலுத்த மிகவுமே சிரமப்பட்டான் பிரதீபன்.

 

இரவு எப்போதடா வரும் என்று காத்திருந்தான். சிரிப்புடன் அவளையே தொடரும் அவன் பார்வைகளை அவள் அறியாமல் இல்லை. வெட்கம் தானாய் முளைத்தது. முடிந்தவரை அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். அவன் உதட்டினில் அவளைக் கண்டுகொண்ட உல்லாசச் சிரிப்பு. தேவையில்லாமல் ஒரு பறக்கும் முத்தத்தைக் கொடுத்து அவனைச் சீண்டிவிட்டது புரிந்து போயிற்று!

 

இதே பறக்கும் முத்தத்தை இரயில் நிலையத்தில் வைத்து அவன் தந்த நினைவுகளும் நெஞ்சில் வந்து இனிமை சேர்த்தது.

 

இரவு, மகளை உறங்கவைக்க அவன் அறைக்குள் சென்றுவிட மற்ற அறைக்குள் புகுந்துகொண்டிருந்தாள் மயூரி. படுக்கச் செல்வதை நினைத்தாலே அவளுக்குள் என்னவோ செய்தது. என்னவோ எதுவுமே அறியாதவள் போன்று. அதுவேறு அவளின் மனதே அவளை எள்ளி நகையாடியது. பத்து வருட இடைவெளி எல்லாவற்றையுமே புதிது போலவே அறிமுகம் செய்ய, அதைக் கையாளும் வகை தெரியாமல் தடுமாறினாள்.

 

அவனிடம் தனிமையில் மாட்டிக்கொண்டால் இன்னுமே ஆபத்து என்று தெரிந்து, நல்லபிள்ளையாக அவன் முகம் பாராமல் சென்று ஆதிராவின் அருகில் படுத்துக்கொண்டாள் மயூரி. முற்றிலும் உறங்கியிராத ஆதிரா, ஊரடங்கு தளர்த்தியதை அனுபவிக்கும் பொருட்டு அன்று அதிகமாக சைக்கிள் ஓடியதாலோ என்னவோ உழன்றபடி அன்னையின் மீது காலையும் கையையும் விசிறியிருந்தாள். உறங்குகின்ற வரை அப்பாவின் அருகாமை வேண்டும். உறங்கியதும் அம்மா வேண்டும் அவளுக்கு.

 

எத்தனை நேரம் தான் அவனைப் பாராதவள் போலவே கிடப்பது. மெல்ல விழிகளை உயர்த்தியபோது விடிவிளக்கின் வெளிச்சத்தில் கண்ணால் அழைத்துக்கொண்டிருந்தான் அவன். ‘பேசாம படுங்கோ!’ அவள் முறைத்தும் அடங்கவில்லை.

 

ஆதிரா நன்கு உறங்கியதும், “ரெண்டுபேருக்கும் நான் வேணுமெண்டால் நானும் என்ன செய்ய” அவனிடம் நகர்ந்துகொண்டே பொய்யாக முணுமுணுத்தாள் மயூரி. அவளைத் தன்னிடம் மிக நெருக்கமாய் கொண்டுவந்து, “எனக்கு தரவேண்டியதை தந்திட்டு மகளைப் போய் கவனி.” என்றான் அவன் காதோரமாக.

 

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” அவளுக்குத் தெரியும் அந்த மோசக்காரன் எதற்கு அடிபோடுகிறான் என்று. பொய்யாக அதட்டினாள்.

 

“தெரியாதா உனக்கு?” கண்களில் மயக்கத்தோடு காதலும் தெரிய திரும்பிப் படுத்து அவளின் இடையை வளைத்தான் அவன். “கார்ல தந்ததை தா!” என்றான் காதோரமாக.

 

அவன் நெற்றியில் முத்தமிட்டவள் விலக அவனோ அவளை விட மறுத்தான். “இது காணாது.”

 

செல்லமாக முறைத்தாள் அவள். “எல்லாம் காணும் தீபன் படுங்கோ.” என்று மிரட்டியவளை விடவேயில்லை.

 

“நான் தரவா.” என்றான் கிசுகிசுப்பாக. அவன் தரவேண்டும் என்றுதான் அவள் கொடுக்காமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறாள். அந்த நினைவில் அவளுக்குக் கன்னங்கள் சூடாயிற்று. இருள் காட்டிக்கொடுக்காது என்கிற தைரியத்தில், “தேவையில்லை!” என்றாள் கோபம் போல.

 

“வேணாமா மய்யு” என்றான் கிறங்கிய குரலில்.

 

‘இழுத்துவச்சு தாறதா விட்டுட்டு வேணாமாவாம்.’

 

“வேணாம்!” சிரிப்பில் பளபளத்த கண்கள் அவளின் சேட்டையைச் சொல்லிவிட, “அலையவிடுறியாடி என்ன?” என்று, அவனுடைய கையும் உதடுகளும் கொடுத்த சுகமான தண்டனைகளில் துடித்துப்போனாள் மயூரி. அன்று முழுக்க அவளின் மனதும் உடலும் எதிர்பார்த்தது அதைத்தானே. என்னவோ தெரியவில்லை; அன்று அவள் அவளாகவே இல்லை. அவனுக்கும் அவனுடைய அருகாமைக்கும் மனம் ஏங்கிற்று!

 

அவனைவிட்டுப் பிரிய மனமற்று அவனுடனேயே அவள் ஒன்றிக்கொள்ள, “ஆது தந்தா என்ன செய்வாய் மயூ?” என்றான் ரகசியக் குரலில்.

 

அவள் உதடு கடிக்க, “உன்ர மகளுக்கு மட்டும் தான் திருப்பிக் குடுப்பியா?” என்றான்.

 

அவனைப் பார்க்க முடியாமல், கிறக்கத்தில் மயங்கிய விழிகளை அவள் தளைத்துக்கொள்ள, “எனக்கும் தா மயூ!” என்றான்.

 

கன்னத்தில் முத்தமிட மயூரி போக, தடுத்துத் தன் உதடுகளைக் காட்டினான் அவன்.

 

புதிதாய் முளைத்துவிட்ட வெட்கத்தில் கொடுக்க முடியாமல் அவள் மறுத்துத் தலையசைக்க, “நான் தாறது எல்லாம் உனக்குச் சொந்தம். நீ தாறது எல்லாம் எனக்குச் சொந்தம். உனக்கு வேணும் எண்டு கேக்கேக்க எல்லாம் நான் தாறேன் தானே. அதேமாதிரி நான் கேக்கேக்க நீயும் தரோணும் மயூ.” என்றான் அவன்.

 

அவளுக்கு மெல்லச் சிரிப்பு வந்தது. “நான் எப்ப உங்களிட்ட கேட்டனானாம்?”

 

“நான் தாற நேரமெல்லாம் நீ கேட்டுத்தான் தந்தனான் மயூ. உன்ர மனசுக்க நீ என்ன நினைக்கிறாய் எண்டு உன்ன விட எனக்குத் தெரியும்.”

 

“இப்ப என்ன நினைக்கிறனாம்?” கண்களில் மையலுடன் கேட்டாள் அவள்.

 

“இவனை கொஞ்சம் ஏங்க விட்டுட்டு குடுப்பம் எண்டு நினைக்கிறாய்.” என்றவனை அதற்குமேல் பேசவிடாமல் செய்திருந்தாள் மயூரி.

 

கிறங்கிக்கிடந்த அவன் விழிகளின் வேண்டுதலை நிறைவேற்ற முயன்றவள் தானே கிறங்கிப்போனாள். ஒருகட்டத்தில் அவளாகவே தன்னை அவனிடம் ஒப்படைக்கத் தொடங்கினாள். அதை உணர்ந்தும் முன்னேற முனையவில்லை பிரதீபன். ஆழ முத்தம் ஒன்றை அழுத்தமாய் பதித்துவிட்டு, அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு “படு!” என்றான் இதமான குரலில்.

 

விழிகளை மூடிக்கொண்ட மயூரிக்கு கண்களுக்குள் கண்ணீர் நிறைந்து போயிற்று. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள். உணர்வுகளின் பிரவாகத்தில் அவளே உந்தியும் விலகி நிற்கிறவனிடம் தான், ‘முறையற்றுச் செய்ததை முறையோடு செய்ய நினைக்கிறாயா?’ என்று கேட்டாள் அவள்.

 

எவ்வளவு சீண்டினாலும் இல்லறத்துக்குள் அவளை அவன் இழுக்கவே இல்லை. சின்னச் சின்னத் தீண்டல்களால் அவள் மேலிருக்கும் பிரியத்தை மட்டும் உணர்த்திக்கொண்டிருந்தான். அதுதான்அவளைக் குத்தியது; கண்ணீர் உகுக்க வைத்தது!

 

 

 

error: Alert: Content selection is disabled!!