காதல் காயங்களே 34 – 2

“இல்ல நானும் அந்தளவுக்கு உலகமே தெரியாத சின்னப்பிள்ளை இல்லை தானே. நான் மறுத்திருந்தா நீங்க நெருங்கி இருக்க மாட்டீங்க. உண்மையாவே தீபன் அந்தநேரம் எனக்கும் துளியளவு இடைவெளி கூட இல்லாத நெருக்கம் வேணுமாத்தான் இருந்தது.”

 

அவனோ மறுப்பாகத் தலையசைத்தான். “நீ மறுக்கேல்ல எண்டுறதாலேயே நான் நடந்துகொண்டது சரி எண்டு ஆகிடாது மயூ! உனக்கும் எடுத்துச் சொல்லி அதைத் தடுத்திருக்க வேணும்.” என்றான் அவன்.

 

இத்தனை நாட்களாக தொடங்காமலேயே இருவரும் தள்ளிப்போட்ட ஒன்று தானாகவே ஆரம்பித்திருந்ததில் அதை தெளிவாகப் பேசிவிட எண்ணினான் பிரதீபன்.

 

“நடந்ததை, நான் நடந்துகொண்டதை எல்லாம் நினைச்சுப்பாக்கேக்க என்ர மனது என்னை குத்தாது எண்டு நினைக்கிறியா மயூ. குத்தும். கேவலமா இருக்கும். என்ன மனுசனடா நீ எண்டு என்ர மனதே என்னை கேக்கும். ஆனா என்ன, அதை நினைச்சு திரும்ப கிடைச்சிருக்கிற வாழ்க்கையை அழிச்சிடக்கூடாது எண்டு நினைப்பன். அதையே நினைச்சு கவலைப்படுறதைவிட மிச்சம் இருக்கிற வாழ்க்கையிலையாவது உன்னை சந்தோசமா வச்சிருக்க வேணும் எண்டு நினைப்பன்.” என்று அவன் சொன்னபோது, இப்போது அவளுக்கும் புரிந்தது.

 

“நீ நினைச்சிருந்தா அர்ஜுனை கட்டி நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். அது பிழையும் இல்ல. ஆனாலும், ஒருத்தனை மனதில நினைச்சோம், அவனோட வாழ்ந்தோம், அவன்ர பிள்ளைக்கு தாயாகி இருக்கிறோம் எண்டு அவனை வெறுத்தாலும் மகளோட மட்டுமே வாழ்ந்த நீ கேவலமானவள் இல்ல மயூ. எந்த இடத்திலையும் என்னை தேடி நீ வரவே இல்லை பாத்தியா; அந்த நிமிர்வு எல்லாருக்கும் வராது. பிறந்த வீட்டுல உதவி இருந்தா கூட ஓரளவுக்கு தனிச்சு வாழலாம். ஆனா நீ யாருமே இல்லாம குழந்தையை பெத்து, அவளை வளத்து வேலைக்குப்போய் சொந்த வீடு, வாகனம், தரமான வாழ்க்கை என்று பொருளாதார ரீதியிலையும் நிமிர்ந்துதான் நிக்கிறாய். உன்ன நினைச்சு நீ பெருமைப்படவேணும் மயூ. தனியா வாழுற பெண்களுக்கு நீ நல்ல ஒரு உதாரணம். முன்மாதிரியான பெண். அதை முதல் விளங்கிக்கொள்.” என்றான் தெளிவாக.

 

இனி எந்தக்காலத்திலும் ‘நான் தவறானவள், நல்ல மகளாக நடக்கவில்லை’ என்கிற எண்ணம் அவளுக்கு வந்துவிடவே கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான் பிரதீபன். அதனால், நீ அப்படியானவள் அல்ல என்று ஆழமாக அவளின் மனதில் பதியவைத்தான்.

 

அவன் சொல்லச் சொல்ல உண்மைதானே என்றுதான் அவளுக்கும் தோன்றியது. உண்மையிலேயே இத்தனையையும் நாம் செய்திருக்கிறோம் தானே என்று தன்னைக்குறித்தே மெல்லிய பெருமையும் அவள் முகத்தில் தோன்றிற்று. அவன் தோளில் வாகாகச் சாய்ந்துகொண்டாள்.

 

“வாழ்க்கைல தவறு விடாத மனுசரே இல்ல மயூ. விட்ட தவறுல இருந்து பாடம் படிக்கவேணும். அந்த இடத்தில இருந்து நிமிரவேணும். நீ நிமிர்ந்து இருக்கிறாய். சுயமா, சொந்தக்காலில் யாரின்ர உதவியும் இல்லாம. சத்தியமா சொல்லுறன், மாமா என்றைக்கும் உன்னை நினைச்சு பெருமைதான் படுவார். கோவமோ கவலையோ படவே மாட்டார்.” அடித்துச் சொன்னான் அவன்.

 

“இருக்கும் தீபன். இப்ப நீங்க சொல்லச் சொல்லத்தான் எனக்கும் விளங்குது. ஆனா, உங்களை பிரிஞ்ச பிறகு நான் அப்பாவையும் வந்து பாக்க இல்ல. ஆதிரா இருக்கிறதையும் சொல்ல இல்ல. முதல் வயிறு காட்டிக் குடுத்திடும். பிறகு ஆதுவை விட்டுட்டு வரேலாது. கூட்டிக்கொண்டு வந்து காட்ட துணிவில்லை. எப்படி அப்பான்ர முகம் பாத்து இதையெல்லாம் சொல்லுவன் சொல்லுங்கோ? நீயா இப்படியெல்லாம் செய்தாய் எண்டு ஒரு பார்வை அவர் பாத்தா காணும் என்ர உயிர் அந்த இடத்திலேயே போய்டும். அந்தப் பயத்தில கடைசி காலத்தில அவரை தனியாவே விட்டுடன். அதைத்தான் என்னால தாங்கிக்கொள்ளவே முடியேல்ல. இப்ப எடுத்த இந்த முடிவை அவர் இருக்கேக்க எடுத்திருக்க அவரும் நான் வாழுற வாழ்க்கையை கண் நிறைய பாத்திட்டு போயிருப்பாரே தீபன்.”

 

சாய்ந்துகொள்ள தோள் கிடைத்ததிலா அல்லது அவனுடைய அனுசரணையில் கிடைத்த நிறைவினாலா தன் மனதில் இருப்பத்தைச் சொன்னாள் மயூரி.

 

“செய்ய கூடாததை எல்லாம் துணிஞ்சு செய்த எனக்கு அதைச் சொல்ல மட்டும் தைரியம் வரேல்லையே. கடைசிவரைக்கும் மறைச்சிட்டேன். கடைசியா அப்பா ஹாஸ்ப்பிட்டல்ல இருந்த நேரமாவது ஆதுவை காட்டியிருக்கலாம். அதைக்கூட செய்யேல்ல நான். அவர் தன்ர கடைசி நாட்கள்ல இருக்கிறார் எண்டு தெரிஞ்சதுல அப்பவும் சொல்ல இல்ல.”

 

அவன் அவளையே பார்த்தான்.

 

“என்ன பாக்கிறீங்க? நீங்க இவ்வளவு சொல்லியும் புலம்புறனா?”

 

“நீ எல்லாத்தையும் சொல்லுறாய் எண்டு வை. மாமாவும் மாமியும் என்ன சொல்லுவினம்?” என்று கேட்டான் அவன்.

 

“கவலைப்படுவினம் தான். ஆனாலும், என்ர சந்தோசம் என்ன எண்டுதான் யோசிப்பினம்.(யோசிப்பார்கள்)”

 

“என்னோட வாழவேணாம் எண்டு சொல்லுவினமா?”

 

“கடைசிவந்தாலும் இல்ல. என்ர விருப்பத்தை மட்டும் தான் பாப்பீனம்.(பார்ப்பார்கள்) ”

 

“பிறகு என்ன? அவே உன்ன மன்னிச்சதாவே நினை. என்ர அம்மாவை யோசிச்சுப்பார். அவ்வளவு கோபப்பட்டாலும் கடைசில மாட்டன் எண்டு நின்ற உன்னையும் சம்மதிக்க வச்சு கல்யாணம் தானே நடத்தி வச்சவா. அவே இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பினம். அதுவும் மாமா… உன்ர அப்பா கோவப்பட்டே இருக்கமாட்டார். ஓரளவுக்கு ஊகிச்சு இருப்பார்.” என்றான் அவன்.

 

“எப்படி சொல்லுறீங்க?”

 

“அது.. நாங்க விரும்பினது தெரியும் தானே. பிறகும் இத்தனை வருசம் கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லேல்ல எண்டா ஏதோ பிரச்சனை எண்டு கண்டு பிடிச்சிருப்பார்.” என்று சமாளித்தான்.

 

“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டாள் மயூரி. அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது. மகளைப்பற்றிய சின்ன விடயத்தைக்கூட உன்னிப்பாகக் கவனிப்பவர் அவர். அத்தனை அன்பு அவளில். அந்த அன்பில் திளைத்து வாழ்ந்த நாட்கள் நினைவில் வர இதழ்களில் முறுவல் மலர்ந்தது. தேவகி ஆன்ட்டியை சைட் அடித்த அப்பா, அதை போட்டுக்கொடுத்தபோது அப்பாவைப் பார்த்துச் சிரித்த அம்மா நினைவில் வர, குழந்தையாய் ஓடிப்போய் அவர்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு வந்தாள்.

 

தீபனுக்கு ஏனோ ஆதிராவைப் பார்ப்பது போலவே இருந்தது. மீண்டும் அவன் தோளில் சுகமாகச் சாய்ந்துகொண்டாள் மயூரி. மனதில் இருப்பதை அவனிடம் பகிர்ந்துகொண்டதாலோ என்னவோ இதமாய் இருந்தது. அவனுடைய வார்த்தைகளும் அவளின் வேதனைகளை ஆற்றியிருந்தது.

 

அவளை அணைத்திருந்தவனும் இதமாய் வருடிக்கொடுக்க அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

என்ன என்று கண்ணால் கேட்டான் அவன்.

 

“என்னில உங்களுக்கு கோவமே இல்லையா?”

 

அவன் சிரித்தான். அவனுடைய அணைப்பு இறுகியது.

 

என்ன உணர்ந்தாளோ, “நடந்த எல்லாத்துக்கும் சொரி தீபன்!” என்றாள் கண்கள் கலங்க.

 

“நீ எனக்கு சொரி சொல்லுவியா?” என்றவன், அதெல்லாம் தேவையே இல்லை என்பதுபோல் தலையசைத்தான்.

 

“ஆனா மயூ எப்படி அப்படி மின்னல் மாதிரி மறைஞ்சு போனனி(போனாய் நீ)?” நெடுநாள் மனதை அரித்த கேள்வியைக் கேட்டான் அவன்.

 

“உன்ன தேடி தெருத்தெருவா விசரன்(லூசன்) மாதிரி அலைஞ்சனான். நாங்க சுத்தி திரிஞ்ச இடம், போன கோயில், படம் பார்த்த தியேட்டர் எண்டு ஒரு இடம் விடேல்ல. ரெண்டு நாள்ல வந்திடுவாய், பத்து நாள்ல வந்திடுவாய், என்னை பிரிஞ்சு உன்னால போகேலாது, என்ர மயூ என்னை விட்டு போகமாட்டாள் எண்டு அவ்வளவு நம்பினான். ஆனா நீ என்ன விட்டுட்டு போயே போய்ட்டாய். அதை நம்புறதுக்கே எனக்கு கொஞ்சநாள் பிடிச்சது.” என்றவன், அந்த நாட்களுக்கே போய்விட்டான் என்று வலியில் துடித்த முகமே சொல்லிற்று.

 

“நீ இருந்த வீட்டு வாசல்ல நாய் மாதிரி எத்தனையோ நாள் காவல் காத்திருக்கிறன். நான் நிக்கிறதை பாத்திட்டுத்தான் நீ வெளில வரேல்லையோ எண்டு ஒளிச்சிருந்து எல்லாம் பாத்திருக்கிறன். அந்த ரூமுக்கு வேற ஒரு ஆள் வாடகைக்கு வந்தபிறகுதான் நீ அங்க இல்லை எண்டு என்ர மனம் நம்பினது.”

 

கேவல் வெடிக்கும் போலிருந்தது மயூரிக்கு. இன்னும் அவனுக்குள்ளேயே ஒண்டினாள். கட்டில், கப்போர்ட், மேசை எல்லாம் அறையை வாடகைக்குத் தரும்போதே இருந்ததில் அன்று அவன் போன நிமிடமே தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தாள் அவள். உடுப்புடவைகளும் லாப்டாப்பும் தானே. அவனின் குணம் தெரிந்துதான் இரவோடு இரவாக மறைந்திருந்தாள். அன்றைக்குச் சரியாக்கப்பட்டது இன்றைக்கு கண்ணீர் உகுக்க வைத்தது.

 

“நந்தினியைக்கூட கண்டுபிடிக்க முடியேல்ல. பாக்கிற நேரமெல்லாம் அவாவை கழட்டி விட்டுட்டு உன்னை கூட்டிக்கொண்டு போறதிலேயே குறியா இருந்த நான் அவவின்ர நம்பரை கூட வாங்கி வைக்க இல்லையே எண்டு என்னையே திட்டி இருக்கிறன்.” என்றவன், “அப்படி என்னெண்டு மயூ ரெண்டுபேருமே மாயமா போனீங்க?” என்று மீண்டும் நெடுநாள் சந்தேகத்தைக் கேட்டான்.

 

“அது முதலே நந்துக்கு அவுஸ்திரேலியாவில ஆறுமாத புராஜெக்ட் குடுத்திருந்தவே. நீங்க இலங்கைக்கு வந்து ரெண்டு நாள்ளையே அவள் வெளிக்கிடுறதா இருந்தது. அதாலதான் எனக்கும் அங்க போகிற ஐடியா வந்தது. அவள்தான் அந்த வேலையும் வாங்கித் தந்தவள். நான்…” என்றவள் தயங்கிவிட்டு, “போறவரைக்கும் அவளின்ர சித்தி வீட்டுலதான் இருந்தனான்.” என்றாள் அவன் முகம் பாராமல்.

 

“யார்.. அந்த டொக்டரா?” என்றான் நம்ப மாட்டாமல். “ஆனா நான் அவவின்ர கிளினிக் வந்து விசாரிச்சனானே.. அவா இல்லை எண்டு சொன்னாவே. நந்தினின்ர நம்பர் கேட்டும் தரேல்ல அந்த மனுசி.” அவராவது தந்திருக்க இத்தனை வருடத் துன்பத்தைத் தவிர்த்து இருக்கலாமே.

 

“தெரியும். நீங்க தேடி வருவீங்க எண்டும் தெரியும். நான்தான் அப்படிச் சொல்ல சொன்னனான்.” என்றாள் அவன் முகம் பாராமல்.

 

அப்படியே அமைதியாகிப்போனான் பிரதீபன். சற்றுநேரத்துக்கு பேச்சே வரவில்லை அவனுக்கு. அந்த நேரங்களில் அவன் பட்டபாடுகளை அவனாலேயே வார்த்தைகளில் வடிக்க முடியாது. அதற்கு இன்றைக்கு கோவப்பட்டோ குறைபட்டோ என்ன காணுவான்? ஒரு பெரிய மூச்சை இழுத்துவிட்டான்.

 

“சொரி தீபன்..” அவன் தோளை வருடி மெல்லச் சொன்னாள் மயூரி.

 

“விடு! உனக்கும் அப்ப பெரும் கோவம் இருந்திருக்கும்.” என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

 

“ஆனா மயூ ஆது ஏன் மூண்டாம் வகுப்புக்கு இப்பதான் போறா. நாலு எல்லா படிக்கவேணும்.” நினைவு வந்தவனாகக் கேட்டான்.

 

“அவுஸ்திரேலியாவில சரியாத்தான் போனவள் தீபன். இங்க வந்த நேரம் ஆறுமாதம் பள்ளிக்கூடம் போகேல்ல. பிறகு அப்பாவும் மோசம் போனதும் எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை. அப்ப வேலையும் இல்ல. ஆதுதான் அந்த நேரம் ஆறுதல். பள்ளிக்கூடம் விடேல்ல. ஒரு வருசம் பிந்தித்தான் சேர்த்தனான். அதுதான் ஒரு வகுப்பு குறைவா போறாள்.” என்றவளை துயருடன் பார்த்தான் அவன்.

 

“நான் துணையா பக்கத்தில நிண்டிருக்கவேண்டிய எந்த நேரத்திலையும் நிக்க இல்ல என்ன?” என்றான் வேதனை மிகுந்த வறண்ட புன்னகையோடு.

 

அந்த முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. அவளைச் சீண்டி, அவளோடு விளையாடி, கண்ணாலேயே அவளைக் காதலிக்கும் அவன் மட்டுமே வேண்டும் என்று மனம் சொல்ல, “போதுமே தீபன். இந்த சோகம் இந்த அழுகை இந்த வேதனை எல்லாம். காணும் காணும் எண்டுற அளவுக்கு அழுதிட்டோம். பத்து வருடத்தை பலியும் குடுத்திட்டோம். இன்னும் ஏன் அதையே கதைப்பான்?” என்றாள் அவன் கன்னம் வருடி.

 

“உனக்கு கவலையா இல்லையா மாமாக்கு மறைச்சது? ஆது இருக்கிறதை அவருக்கு சொல்ல இல்ல எண்டு?” என்றான் அவளையே பார்த்து.

 

error: Alert: Content selection is disabled!!