காதல் காயங்களே 35 – 1

அத்தியாயம் 35

 

ஐந்து வருடங்களின் பிறகு..

 

தங்களின் மகன் அபிதனுக்குப் பத்தாவது பிறந்தநாள் விழாவினை, நண்பர்கள் சூழக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர் நந்தினி குடும்பத்தினர்.

 

அதற்குப் போவதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள், மயூரி. எத்தனை வருடத்து நட்பு. சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் அறிமுகமானவர்கள். இன்றோ, உறவுக்காரர்கள் போன்று நெருக்கமாய் வாழ்ந்தனர். ‘நேரத்துக்கே வாடி’ என்று சொல்லியிருந்தாள் நந்தினி.

 

“ஆதுக்குட்டி இங்க ஒருக்கா வாங்கோ செல்லம்.” மென்மையாக உடலைத் தழுவும் சேலைதான். ஆனாலும் பிளிட்ஸ் ஒழுங்காக நிற்கமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருந்ததில், மகளை உதவிக்கு அழைத்தாள் மயூரி.

 

“வாறன் அம்மா!” விறாந்தையில் இருந்து குரல் கொடுத்துவிட்டு, “அப்பம்மா, தம்பிய ஒருக்கா பாருங்கோ. அம்மாட்ட என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாறன்.” என்றுவிட்டுத் தாயிடம் நடந்தாள் ஆதிரா.

 

“என்ர குஞ்சு அப்பம்மாட்ட வாங்கோ!” தரையில் விளையாடிக்கொண்டிருந்த பேரனை அவர் அழைக்க, “ம்ஹூம்!” என்று பெரிதாகத் தலையை அசைத்து மறுத்துவிட்டு, அப்பப்பாவிடம் ஓட்டம் பிடித்தான். நான்கு வயது சுட்டி அவனுக்கு ஈடு கொடுத்து விளையாடுகிறவர் அவர்தான்.

 

 

இங்கே, அறைக்குள் மகளைக் கண்டதும், “இந்தப் பிளிட்ஸ ஒருக்கா பாரம்மா.” என்றாள் மயூரி. “ஒழுங்கா நிக்குதே இல்ல.”

 

“இத நீங்க அயர்ன் செய்திருக்க வேணும் அம்மா.” என்றுவிட்டு, “உயத்தி பிடிங்கோ.” என்றபடி அவளின் காலருகில் அமர்ந்து, அழகாக மடிப்புக்களைப் பிடித்தாள் ஆதிரா.

 

“ஊசி குத்திவிடுவமா அம்மா. போகேக்க கழட்டிவிட்டா அப்பிடியே நிக்கும்.”

 

“அப்பிடித்தான் செய்யவேணும். நான் உள்ளுக்குச் செருகினதும் உயரம் பாத்திட்டு குத்து.” என்றவள் வயிற்றில் செருக, அவள் உள்ளே தள்ளிய வேகத்தில் பயந்து, “ஐயோ அம்மா! மெல்லச் செய்ங்கோ. குட்டித் தங்காக்கு நோகப்போகுது!” என்றவள், முழங்காலிலேயே நின்றபடி இடையோடு அணைத்து எட்டுமாத வயிற்றில் தன் இதழ்களை ஆசையாக ஒற்றி எடுத்தாள்.

 

மயூரியின் முகம் அப்படியே மலர்ந்து போயிற்று! ஆசையோடு தன் பெண்பிள்ளையைப் பார்த்தாள். இந்த அக்கறையும் அன்பும் அச்சு அசல் தகப்பன் தான். மகளின் முகம் பற்றி அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “நல்ல வடிவா இருக்கிறீங்க செல்லம்.” என்றாள் அவளிடம்.

 

வேலைப்பாடுகள் நிறைந்த நீலவண்ண சோளியில், விரித்துவிட்ட அடர்ந்த கூந்தலோடு மிகுந்த அழகுடன் ஜொலித்துக்கொண்டிருந்தாள் பதினைந்து வயது நிரம்பிய அவர்களின் குமர்பிள்ளை.

 

“உங்களுக்கும் இந்த சாறி நல்ல வடிவா இருக்கு அம்மா.” என்றவள், “அப்பான்ர ஷேர்ட் அயர்ன் செய்தனீங்க தானே?” என்று கேட்டு, அங்கே கட்டிலில் அயர்ன் செய்து, விரித்து வைக்கப்பட்டிருந்த ஷேர்ட்டை, ஹங்கரில் மாட்டிக் கசங்காமல் தொங்கவிட்டாள்.

 

“தம்பிக்கு இதைப் போட்டுவிடு செல்லம். தலையை மட்டும் இழுத்துக்கொண்டு ஓடிவாறன் ” என்று மயூரி கொடுத்த நீலவண்ணக் குர்தாவை, பிரபாவுக்கு அணிவித்துவிட்டு, தலைவாரி, முகத்துக்குப் பவுடரும் போட்டுவிட்டாள் ஆதிரா.

 

பேத்தி இதையெல்லாம் செய்யும்வரை பேரனை மடியில் பிடித்து வைத்துக்கொண்டு பாத்திருந்த புஸ்பவதி அம்மாவுக்கு, மனம் நிறைந்தே போயிற்று. உண்மையிலேயே இது மயூரியின் வளர்ப்பு. செல்லம் மட்டுமே கொடுத்துக் கெடுக்காமல் மிகுந்த பொறுப்புடனும் மகளை வளர்த்திருந்தாள்.

 

அதற்குள் மயூரியும் தயாராகி வெளியே வர,

“வெளிக்கிட்டிட்டோம் எண்டு தம்பிக்குச் சொல்லிட்டியாம்மா?” என்று வினவினார் புஸ்பவதி.

 

மண்டபத்தில் தான் பிறந்தநாள் விழா என்பதில் அதை ஒழுங்கு செய்வது, மேசைகளுக்கு விரிப்பு விரிப்பது, குளிர்பான போத்தல்களை அடுக்கி வைப்பது, நாற்காலிகளை ஒழுங்காக அடுக்கி விடுவது என்று, நந்தினியின் கணவனுக்கு உதவி செய்யக் காலையிலேயே போயிருந்தான் பிரதீபன்.

 

“ஓம் மாமி. மெசேஜ் அனுப்பிட்டன். வந்துகொண்டு இருக்கிறாராம்.” என்றபடி அவள் அமர்ந்துகொள்ள, ஓடிவந்து அவளின் வயிற்றைக் கட்டிக்கொண்டான் பிரபாகரன்.

 

அக்காவுக்கும் தம்பிக்கும் எப்போதுமே அவளின் வயிற்றோடுதான் விளையாட்டு. அதை எண்ணி முறுவலித்தவளிடம், உள்ளே சென்று சற்றுமுன்னர் பிழிந்து வைத்த பழச்சாறினைக் கொண்டுவந்து நீட்டினார் புஸ்பவதி.

 

அதில் மகனுக்கும் ஒரு மிடறு கொடுக்க, “சின்னவன் சாப்பிட்டான் மயூரி. இப்ப குடுக்க உடுப்புல சிந்திப்போடுவான். நீ குடியம்மா. பலகாரம் செய்றன் அது இது எண்டு இண்டு உனக்கு வேலை கூடிப்போச்சு.” என்றார் புஸ்பவதி.

 

சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான் பிரதீபன். அவனைக் கண்டதுமே, “அப்பா!” என்று அவனிடம் ஓடினான் பிரபாகரன்.

 

இனிமையான இல்லறம் கொடுத்த மகிழ்வு முகத்தில் துலங்க, நாற்பதின் அடையாளமாக ஒன்றிரண்டு நரைகளோடு, முகம் முழுக்கச் சிரிப்புடன் அப்படியே மகனை வாரித் தூக்கி, “குர்தாவில மாப்பிள்ளை மாதிரியே இருக்கிறான் என்ர மகன்.” என்றபடி தூக்கிப்போட்டுப் பிடித்தான் பிரதீபன்.

 

சின்னவன் கிழுக்கிச் சிரித்தான். “சாப்பிட்ட எல்லாம் வெளில வரப்போகுது. பிள்ளையை இறக்கிவிட்டுட்டு நீ போய் வெளிக்கிடு தம்பி.” என்ற திருநாவுக்கரசு பேரனை இப்போது தான் வாங்கிக்கொண்டார்.

 

அதற்குள் பேரனுக்கான பால், மாற்றுடை, டயப்பர் எல்லாம் அடங்கிய பாக்கினைக் கொண்டு அங்கு வந்தார் புஸ்பவதி அம்மா. “உன்னைக் கண்டபிறகு சின்னக்குஞ்சன் ஒரு இடத்தில இருக்க மாட்டான். நாங்க வெளில நிக்கிறோம். கெதியா வெளிக்கிட்டுக்கொண்டு வா தம்பி.” என்றவர் கணவரோடு பேரனையும் கொண்டு வெளியேற,

 

“அப்பா, நான் எப்படி இருக்கிறன் எண்டு நீங்க சொல்லேல்ல!” என்று போர்க்கொடி தூக்கியபடி அவன் முன்னே வந்துநின்று சோளியுடன் ஒரு வட்டமடித்தாள் ஆதிரா.

 

“என்ர மகளுக்கு என்ன குறையாம்? நல்ல வடிவா இருக்கிறாள். என்ன.. உங்கட அம்மாக்குத்தான் சாறி பெருசா வாய்க்கேல்ல!” அவன் வந்ததிலிருந்து அவனையே பார்வையால் தொடர்ந்துகொண்டிருந்த மயூரியைக் கண்களில் குறும்பு மின்ன வம்பிழுத்தான் அவன்.

 

“எனக்கு இங்க புருசனே வாய்க்கேல்ல எண்டு நான் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறன். இதுல சாறி வாய்ச்சா என்ன வாய்க்காட்டி என்ன?” என்று திருப்பிக் கொடுத்துவிட்டு அவள் எழுந்துகொள்ள, “அம்மா! அப்பிடிச் சொல்லாதீங்கோ! என்ர அப்பா நல்ல அப்பா. என்னப்பா?” என்று சலுகையுடன் தகப்பனுக்காக வாதாடினாள் அவனின் மகள்.

 

“அப்பிடிச் சொல்லு செல்லம்!” என்றபடி மயூரியைச் சீண்டும் பார்வை பார்த்தான் பிரதீபன். “உன்ர அப்பா ‘நல்ல அப்பா’தான். அத நான் ஏற்றுக்கொள்றன்.” என்று, செவ்விதழ்கள் சிரிப்பில் நெளியச் சொன்னாள் மயூரி.

 

தாய்மையின் பொலிவுடன் சேலையில் மனம் கொய்தவளை மகளறியாமல் முறைத்தான் அவன்.

 

“பாத்தீங்களா அப்பா, அம்மாவே சொல்லிட்டா..” உள்ளர்த்தம் விளங்காமல் மகிழ்ந்தாள் மகள்.

 

“சரிசரி. நீங்க போய்க் குளியுங்கோ தீபன். நேரமாகுது.” என்று அவனை அறைப் பக்கமாக அனுப்பிவிட்டு, மகளைக் கூட்டிக்கொண்டு போய்க் கொண்டுபோக வேண்டிய பலகார பாக்கினை அவளிடம் கொடுத்து, கார் டிக்கிக்குள் வைக்கச் சொன்னாள் மயூரி.

 

அப்படியே பிரதீபனுக்குக் குடிக்கப் பழச்சாறையும் ஒரு கோப்பையில் வார்த்து எடுத்துக்கொண்டு அறைக்கு நடந்தாள். அங்கே, அவனும் குளித்துவிட்டு வர, ஆதிரா எடுத்து வைத்திருந்த நீலநிற சட்டையையும் கறுப்பு ஜீன்ஸையும் எடுத்துக்கொடுத்தாள். அதைப் பார்த்துவிட்டு, “என்னடியப்பா, யூனிபார்ம் மாதிரி எல்லாரும் நீலம்.” என்று சிரித்தான் பிரதீபன்.

 

“எல்லாம் உங்கட மகளின்ர வேலை. அப்பிடித்தான் மச்சிங்கா போகவேணுமாம். மாமா மாமியும் நீலம்தான். கவனிச்சீங்களா?” என்று கேட்டுச் சிரித்தவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டான் அவன்.

 

“நான் கோவமா இருக்கிறன்!”

 

“ஏனாம்?” முறுவல் அரும்பக் கேட்டாள் அவள்.

 

“நான் உனக்கு நல்ல புருசன் இல்லை எண்டு சொல்லிப்போட்டாய் மய்யு.” என்றபடி அவளின் கழுத்தில் தன் இதழ்களை ஒற்றினான் அவன்.

 

“ஓம்! நீங்க கொடுமைக்கார புருசன்! மோசக்கார புருசன். ஒண்டுக்கும் உதவாத புருசன்!” என்று அவள் சொல்லிக்கொண்டு போகப்போக அவனுடைய அணைப்பும் இதழ் ஒற்றலும் அதிகரித்துக்கொண்டே போயிற்று!

 

“தீபன்! காணும் கெதியா வெளிக்கிடுங்கோ!” அவன் குணம் அறிந்து அதட்டினாள் மயூரி.

error: Alert: Content selection is disabled!!