காதல் காயங்களே 4 – 1

அத்தியாயம் 4

 

 

 

அவன் சென்றபிறகுதான் அவளே அடிபட்ட இடங்களை நன்றாகப் பார்த்தாள். தோளில் இருந்த சிராய்ப்பை விட முழங்கால் சிரட்டையில் உருவாகியிருந்த காயம் தான் உயிர் போவதுபோல் சுண்டிச் சுண்டி வலித்தது. ‘கொஞ்சமாவது கவனமா இருக்க மாட்டியாடி எரும!’ தன்னையே திட்டிக்கொண்டாள்.

 

‘அப்பா வேற பாத்துக்கொண்டு இருப்பாரே..’ அப்போதுதான் நினைவு வர, வேகவேகமாக உணவை உண்டு வைத்தியர் சொன்ன மாத்திரைகளை விழுங்கிவிட்டு அவருக்கு அழைத்தாள்.

 

“ஏனம்மா இவ்வளவு நேரம்?” அவர் கேட்ட விதத்திலேயே தன் அழைப்புக்காகக் காத்திருந்திருக்கிறார் என்று விளங்கிவிட பாசத்தில் கனிந்தமனம் கனத்தும் போயிற்று!

 

அவரிடம் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு, இருட்ட முதல் உணவு வாங்கிக்கொண்டு வரப்போவதாகச் சொல்லிச் சென்றபோதுதான் இத்தனையும் நடந்திருந்தது.

 

“பிரெண்ட் ஒருத்திய கண்டாப்போல கதைச்சிக்கொண்டு நிண்டதுல நேரம் போயிட்டுது அப்பா. நீங்க சாப்பிட்டீங்களா?” நடந்ததைச் சொன்னால் பதறிப்போவார். அவளுக்கும் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. பிறகு எதற்கு உண்மையைச் சொல்லி அவரைக் கலங்கடிப்பான்?

 

“ஓம் அம்மா. சாப்பிட்டு நியூஸ் பாத்துக்கொண்டு இருக்கிறன். நீ என்ன வாங்கிக்கொண்டு வந்தனி?” ஒருவிதச் சோர்வும் களைப்பும் அவர் குரலில் தென்பட்டது.

 

“தனியா இருக்கிறது கஷ்ட்டமா இருக்காப்பா?” குரல் அடைக்கக் கேட்டாள் மயூரி.

 

அவர்களுக்கு அவள் ஒருத்திதான். அதுவும் பத்துவருடக் காத்திருப்பின் பின் பிறந்தவள். கச்சேரியில் கிளார்க்காக வேலை பார்த்து ஓய்வில் இருப்பவர் செல்வேந்திரன். அவளின் அன்னை இந்திராவதிக்கு சின்ன வயதில் இருந்தே இழுப்பு நோய் உண்டுதான். ஒருசில வருடங்களுக்கு முதல் அவரை அது கட்டிலோடு கட்டிலாகப் படுக்க வைத்துவிட்டிருந்தது. எப்போதாவது அதிசயமாய் எழுந்து நடமாடுவார். அவ்வளவுதான். அவரைப் பார்த்துக்கொள்வதே செல்வேந்திரனுக்குப் பெரிய வேலை. சிலநேரங்களில் அவருக்கே முடியாமல் அமர்ந்துவிடுவார். அதைச் சொன்னால் வேலையும் மண்ணாங்கட்டியும் என்றுவிட்டு வந்துவிடுவாள் மயூரி என்று தெரியும். எனவே மறைத்து, “என்னம்மா கஷ்டம்? அதோட, எனக்கும் பொழுது போகவேணுமே?” என்றார் இலகுவான குரலில்.

 

“பொய்யைச் சொல்லாதீங்க அப்பா! நான் வேலையை விட்டுட்டு வரக்கூடாது எண்டுதானே மறைக்கிறீங்க? எனக்கு எல்லாம் தெரியும்; நீங்க நடிக்கத் தேவையில்லை!” தன்னிடம் உள்ளதைச் சொல்கிறார் இல்லையே என்கிற செல்லக்கோபம் அவளுக்கு. அவளின் படபடப்பைக் கண்டு அவருக்கு உண்மையிலேயே சிரிப்பு அரும்பியது.

 

“தெரியாத அந்த ஊரிலையும் இப்பிடி வாய் காட்டுறேல்ல பிள்ளை. கவனமா இருக்கோணும். சரியோ?” கண்டிப்பும் கனிவுமாய் சொன்னார் செல்வேந்திரன்.

 

“நான் சொல்லுறதை நீங்க கேக்கமாட்டிங்க. ஆனா, நீங்க சொல்லுறதை மட்டும் நான் கேக்கவேணுமோ. நான் ஒண்டும் குழந்தைப்பிள்ளை இல்ல. எனக்கு எல்லாம் தெரியும். நீங்க போய் படுங்கோ, சரியோ. முளிச்சுக்கொண்டிருந்து டிவி பாக்கிறேல்ல சொல்லிப்போட்டன்!” அவரை மிரட்டி, சிரிக்கவைத்து, ‘நீ வச்சதும் ஓடிப்போய் படுத்திடுவன்.’ என்று அவரின் வாயாலேயே வாக்குறுதி வாங்கிவிட்டுத்தான் வைத்தாள் மயூரி.

 

அருகில் இருந்து அவள் கவனிக்கவேண்டிய காலம். படித்து முடித்து வேலைக்கு அலைந்தபோது, கிடைக்கும் என்கிற நம்பிக்கையே இல்லாமல் விண்ணப்பித்த வேலை கிடைத்துவிட்டிருந்தது. அவர்களைப் பிரிந்து வர அவளுக்கு விருப்பமே இல்லை. செல்வேந்திரன்தான், ‘உன் எதிர்காலம் இந்த வேலைல தான் தொடங்குதம்மா. போ; நான் இருக்கிறன் தானே. அம்மாவை பாப்பன்.’ என்று பிடிவாதமாக அவளை அனுப்பி வைத்திருந்தார்.

 

‘ஆனா, அப்பாவும் அம்மாவும் அங்க. நான் இங்க எண்டு எத்தனை நாளைக்கு…’ விடை தெரியாத கேள்வியோடு கட்டிலில் சரிந்தவளை உறக்கம் வந்து மெல்ல அணைத்துக்கொண்டிருந்தது.

 

காலையில் கண் விழிக்கையிலேயே நேரம் ஒன்பதைத் தாண்டியிருந்தது. அடித்துப் போட்டது போன்ற உறக்கம். சோம்பலாய் கட்டிலில் உருண்டபோது, சுளீர் என்று தாக்கிய நோவில், “அம்..மா!” என்று முனகினாள். அப்போதுதான் விழுந்தது நினைவே வந்தது. நேற்றைக்குக் காட்டிலும் இன்றைக்குத்தான் அதிகமாக வலிப்பதாய் உணர்ந்தாள். காய்ந்துபோயிருந்த சிராய்ப்பும் காயமும் அசைகையில் உண்டான வெடிப்பில் இன்னும் எரிந்தது.

 

“நாசமா போனவனே! கொஞ்சம் பாத்து வந்திருக்கக் கூடாதாடா! கோதாரி பிடிச்சவன்(கடன்காரன்)!” அவனைத் திட்டிக்கொண்டு எழுந்தாள்.

 

முகம் கழுவி காலைக்கடன்களை முடித்து வந்து பார்த்தபோது, “ஹாய் குட்மார்னிங். இப்ப பரவாயில்லையா? ஹெல்ப் வேணுமெண்டால் சொல்லுங்கோ. ஹாப்பி வீக்கெண்ட்!” என்று அனுப்பியிருந்தான் அவன்.

 

அவள் முகத்தில் முறுவல் அரும்பிற்று! சற்றுமுன் தானே அவனைத் திட்டினாள்.

 

தெரியாமல் நடந்ததுதான். தப்பித்து ஓடாமல் வைத்தியரிடம் காட்டி அழைத்து வந்ததுமல்லாமல், காலையில் மறக்காமல் விசாரிக்கவும் செய்கிறானே. நல்லவன் தான் போலும்!

 

அவனுடைய அதே, “ஹாய் குட்மோர்னிங், ஹாப்பி வீக்கெண்ட்.” உடன் சேர்த்து, “இப்ப பரவாயில்லை, நன்றி!” என்று அனுப்பிவிட்டாள்.

 

சற்று நேரத்தில் சந்தோசத்தைக் காட்டும் எமோஜி ஒன்று வந்து விழுந்தது. அதற்கு என்ன பதில் கொடுப்பது என்று யோசித்துவிட்டு, எதை அனுப்ப நினைத்தாலும் அது அதிகம் போலிருக்க எதுவும் வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டாள்.

 

இருந்த பானை டோஸ்ட் செய்து நுட்டெல்லாவை பூசி தேநீருடன் காலை உணவை முடித்துக்கொண்டாள். அப்பா அம்மாவுடன் கதைத்துவிட்டு, ஆடைகளை அலசும் வேலையையும் முடிக்க நந்தினி அழைத்தாள். இங்கு வேலைக்கு வந்தபிறகு உடன் வேலை புரிகிறவளாக இருந்து இப்போது நல்ல நண்பியாக மாறிப்போனவள். “போரடிக்குது மயூ. எங்கயாவது வெளில போவமாடி? பீச்? இல்ல சும்மா நடப்பமா?”

 

வீட்டு வேலையை பார்ப்பதற்குள்ளேயே அவளுக்கு வலி பின்னி எடுக்கிறது. இதில் பீச்சாம்.

 

“கடுப்பக் கிளப்பாம ஓடிப்போய்டு!” என்று ஆரம்பித்து, நேற்று நடந்ததை எல்லாம் சொன்னாள்.

 

“அடடடடா! காதல் ஒன்று மோதலில் ஆரம்பிச்சு இருக்கு போலவே. சரி சொல்லு ஹிரோ எப்படி இருப்பான்?” அவள் குறும்புடன் வம்பிழுக்க கடுப்பாகிப்போனாள் மயூரி.

 

“மனுசருக்கு நோவுல உயிர் போகுது. இதுக்க ஹிரோ எப்படியாம்? கிட்ட இருந்தாய் எண்டு வை. அந்த மோதலை உனக்கே டெமோ காட்டுவன்! ஃபோன் எண்டபடியா தப்பிட்ட நந்து!”

 

“கோபம் மாதிரி நடிக்காத மயூ! இரவிரவா அவனை நீ நினைக்கேல்ல எண்டு சொல்லு.. நினைச்சு உனக்குள்ள சிரிக்கேல்ல எண்டு சொல்லு.. கனவில அவன் வரேல்ல எண்டு சொல்லு.” என்று விடாமல் அவளைப்போட்டுப் பந்தாடினாள் நந்தினி.

 

“மாடு! கனவில அவன் வரவே இல்ல ஆனா நினைச்சனான்..” என்று அவள் சொல்லிமுடிக்க முதலே, “அதுதான்டி ஆரம்ப நிலை. இப்ப நினைப்ப. பிறகு கனவு வரும். அது காதலாகும். போகப்போக அது தானாவே டெவலப் ஆகிடும். நானே வந்து அந்த நல்ல காரியத்தை ஆரம்பிச்சு வைக்கிறன்.” என்று சொல்லி வைத்தவள், சொன்னதுபோலவே மாலை வந்தாள்.

 

அறைக்குள் நுழைந்ததுமே, “எங்கடி, உன்ர ஹிரோ தந்த காதல் காயங்களை எல்லாம் காட்டு.” என்றவளை, காயம் பட்ட கையாலேயே அடித்தாள் மயூரி.

 

“மாடு! அதையே பிடிச்சு தொங்காதயடி! கேக்க எனக்கே கன்றாவியா இருக்கு!” என்ற மயூரியைப் பிடித்துத் தன்முன்னே நிறுத்திவிட்டு, அவள் முகத்தையே கூர்ந்து நோக்கினாள் நந்தினி.

 

அவளின் தீவிரத்தில் சிரிப்புப் பொங்க, “என்னடி வேணும் உனக்கு இப்ப?” என்றாள் மயூரி.

 

“என்ர கண்ணைப் பார். என்னையே பார். இப்ப சொல்லு, இண்டைக்கு உன்ன வந்து பாத்தவன் தானே?”

 

“வரேல்ல. மெசேஜ் அனுப்பினவன்.”

 

“அடிப்பாவி! ஃபோன் நம்பரைக்கூட பரிமாறிட்டிங்களாடி? நான் நினைச்சதை விட நீ வேகமாத்தான் இருக்கிறாய்.”

 

தலையில் அடித்துக்கொண்டாள் மயூரி. அவளின் குணம் தெரிந்தும் உண்மையைச் சொன்ன அவளை என்னதான் செய்வது?

 

நந்தினியோ அடுத்த கணமே உக்கிரமாக முகத்தை மாற்றி, “நான் பாக்காம, நான் அக்செப்ட் பண்ணாம என்னெண்டு நீ அவனைக் காதலிக்கலாம்? நட்புக்கு துரோகம் செய்திட்டாய் மயூரி. நம்மட தூய அன்பை களங்கப் படுத்திட்ட மயூரி!” உணர்ச்சிபொங்கப் பேசியவளை பொறுத்துப் பொறுத்துப் பார்த்து முடியாமல் போட்டுத் தாக்கத் தொடங்கியிருந்தாள் மயூரி.

 

“நடந்தது ஒரு ஆக்சிடென்ட். அவன் நல்லவனா இருக்கப்போய் டொக்ட்டரிட்டையும் கூட்டிக்கொண்டுபோய் கொண்டுவந்து விட்டவன். அதுக்குப்போய் என்ன கற்பனையடி உனக்கு மாடு!”

தோழிக்கு அடித்தவளுக்கு அன்று தெரியவில்லை, இதே அவன் நெஞ்சில் தரப்போகிற சூட்டுக் காயத்தையும் தாங்கப்போகிறாள் என்று!

 

அன்று திங்கட்கிழமை. வளமை போன்று அந்தச் சந்தியில் அவளுக்கான பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருந்தாள் மயூரி. அவன் பைக்கில் வருவது தெரிந்தது. அவனைப் பார்த்துச் சிரிப்பதா, அவளை அவனும் காண்பானா, முதலில் அவனைக் கண்டதாகக் காட்டிக்கொள்வதா என்று காரணமில்லாத பல குழப்பங்கள் அவளைச் சூழ்ந்தது.

 

கடைசியில் அவனைக் காணவே இல்லை போன்று பஸ் வருகிற பாதையை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்ப, சர்ர் என்று பைக்கைக் கொண்டுவந்து அவளின் முன்னே நிறுத்தினான் அவன். மெல்லிய மகிழ்வான அதிர்வு அவளுக்குள். “ஹாய் குட்மோர்னிங்!” என்றான் உற்சாகமாய்.

 

“குட்மோர்னிங்!”

 

“வேலைக்குப் போற அளவுக்கு ஓகேயா?” அவள் அணிந்திருந்த ஜீன்சும் டாப்பும் தோள் காயத்தை மறைத்துவிட்டதில் அவன் பார்வை ஒருமுறை தோளுக்குச் சென்றுவிட்டு வந்தது.

 

தெரியாமல் மோதிவிட்டு குற்றவுணர்வில் அவன் படும் பாட்டைப் பார்த்து மயூரி சிரித்தாள்.

 

“இதெல்லாம் ஒரு விசயமா பாஸ்! அதெல்லாம் எப்பவோ மாறிட்டுது. ஃபிரியா விடுங்க!” முகம் முழுக்கச் சிரிப்புடன் சொன்னவளைக் கண்டு, ஹெல்மெட்டின் வழியே தனியாகத் தெரிந்த அவன் விழிகளில் அவள் இப்படியெல்லாம் கதைப்பாளா என்கிற ஆச்சரியம் பரவியது!

 

“வாங்களன் டிராப் செய்றன்.” அவனும் சங்கடம் அகன்று இலகுவாகக் கதைதான்.

 

‘ஆகா… இத மட்டும் நந்தினி கேக்கவேணும். கல்யாணமே கட்டி வச்சிடுவாள்!’ உதட்டினில் அடக்கிய சிரிப்பு மயூரியின் கண்களில் தெறித்தது.

 

அதைக் குறித்துக்கொண்டவனின் புருவங்கள் உயர்ந்தது! ‘இவள் பொல்லாதவள்!’ தன்னைக் குறித்து என்னவோ நினைத்துச் சிரிக்கிறாள் என்று விளங்கிற்று அவனுக்கு. அது கொடுத்த புன்சிரிப்புடன், “ஹல்லோ மேடம்! ஹெல்ப் பண்ணலாமே எண்டுற நல்ல எண்ணத்திலதான் கேட்டனான்!” என்றான் அவன்.

error: Alert: Content selection is disabled!!