“இல்லை எண்டு சொன்னேனா நான்?”
இவள் மகா பொல்லாதவள். அவனுக்கு மீண்டும் அதுதான் தோன்றியது! கள்ளத்தனமாகச் சிரித்து அவனுக்குள் குறுகுறுப்பை உண்டாக்கிவிட்டு ஒன்றுமே நடவாததுபோல் நடிக்கிறாளே!
“அம்மா தாயே! நான் ஒன்றுமே கேக்கேல்லை. ஆளை விடுங்க! பாய்!” என்றுவிட்டு பைக்கை உதைத்துக்கொண்டு அவன் பறந்துவிட, அவள் உதட்டினில் மலர்ந்த சிரிப்பு அடங்க நிறையநேரம் எடுத்தது.
அங்கும், சென்றுகொண்டிருந்தவனுக்கும், ‘எதற்குச் சிரித்தாள்?’ என்கிற குறுகுறுப்பும் கேள்வியும் அடங்கவே இல்லை.
அதன்பிறகு தினமும் காலையில் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு ஒரு தலையாட்டல் அவர்களுக்குள் நிகழ்ந்துகொண்டே இருந்தது. அவனைக் காணும்போதெல்லாம், அன்று அவன் ஓடிய விதத்தை எண்ணி அவள் இதழ்களில் குறுஞ்சிரிப்பு தவழ்ந்துகொண்டே இருந்தது. அதை உணர்ந்து பொய்யாக முறைத்தபடி அவனும் கடந்துகொண்டிருந்தான். பேசிப்பழகாத அழகான நட்பொன்று மென்மையாய் வளர்ந்துகொண்டிருந்தது.
அன்று கிறிஸ்ம்ஸ கொண்டாட்டம். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதா என்று நந்தினியோடு கடற்கரைக்கு வந்திருந்தாள் மயூரி.
“ஹீரோவோட பிறகு கதைக்கவே தில்லையாடி நீ?” நந்தினி அந்தப் பேச்சை விடவே இல்லை.
“உன்ன… அவனோட எனக்கு என்னடி கதை வேண்டிக்கிடக்கு? நடந்த விசயம் முடிஞ்சு பட்ட காயமும் மாறிப்போச்சு. நாங்க ரெண்டுபேரும் எல்லாத்தையும் மறந்திட்டம். நீதான் இன்னும் அதையே தூக்கிக்கொண்டு திரியிறாய்.” இதையே பலமுறை சொல்லிவிட்டாள் மயூரி. நந்தினி கேட்பதாகவே இல்லை.
“வரலாறு பொய் சொல்லாதே மயூ! மோதல் காதல்ல முடிஞ்சே ஆகவேணும்!” சொல்லிக்கொண்டு வந்த நந்தினி சட்டென்று நின்றாள். கூர்மையாக மயூரியைப் பார்த்தாள். “என்ன ‘எல்லாத்தையும்’ மறந்தனீங்க? அந்த எல்லாத்தையும் ஒருக்கா திருப்பிச் சொல்லு பாப்பம்!” என்றவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள் மயூரி.
“பீச்சா கிடக்கு. இல்லையோ உன்ன தள்ளி விழுத்திப்போட்டு குரல்வளையை நசிப்பனடி நந்து!” இவர்களின் சண்டையைக் காட்டிலும் பெரிய சத்தம் ஒன்று சற்றுத் தூரத்திலேயே கேட்க இருவரின் விழிகளுமே, அந்தப்பக்கமாகத் திரும்பியது.
அது ஒரு இளம் ஆண்களின் கும்பல். எல்லோர் கைகளிலும் கோக் அல்லது ஃபன்டா டின்கள். உற்சாகம் துள்ளும் அங்க அசைவுகளோடு ஒருவரை மற்றவர் வாரியபடி உலகம் மறந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த எல்லோரின் பார்வையையும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருந்தார்கள்.
“வாழ்ந்தா இவங்களை மாதிரி வாழவேணுமடி! பார், ஒவ்வொருத்தனும் வாழ்க்கையை அனுபவிக்கிறான்.” அவர்கள் மீதே பார்வை இருக்கச் சொன்னாள் நந்தினி.
“நமக்கு என்னடி குறைச்சல்? நாங்களும் தான் பீச்சுக்கு வந்திருக்கிறோம். அவங்களை மாதிரியே சண்டையும் பிடிக்கிறோம். சந்தோசமா இருக்கிறோம்.” மயூரிக்கு அவளின் பேச்சில் உடன்பாடில்லை.
“போடி இவளே. உனக்கு ஒரு கண்ராவியும் விளங்காது. இப்ப நாம சத்தமா சிரிச்சுக் கதைச்சம் எண்டு வை, சுத்தியிருக்கிற சனம் நம்ம பரம்பரையையே இழுத்துக் கதைக்கும். ஆனா ஆம்பிளைகளை கதைக்காது. நல்லா வாய் பாக்கும்.”
“சரி விடு! அவர்கள் என்னவாவது செய்யட்டும். நாங்க எங்கட வேலையை பாப்பம்.” என்று சொல்லி, அங்கிருந்த உப்பும் மிளகாய் தூளும் தடவிய மாங்காய்த் துண்டுகளை இரண்டு பையில் வாங்கிக்கொண்டாள் மயூரி.
அலைகள் நனைக்காத தூரத்தில் மணற்பரப்பில் இருவரும் அமர்ந்துகொண்டனர். மாலை நேரம். நல்ல காற்று. பலவகையான மனிதர்கள். காற்றோடு வந்து நாசியை வருடிச் சென்ற கடலைப் பிரட்டல் வாசம். செவ்விளநீர் விற்பவரின் சத்தம், குழந்தைகளின் சிரிப்பு கூடவே அந்தக் கும்பலின் கலகலப்பு என்று இதமான மனநிலையை உருவாக்கி விட்டிருந்தது அந்தக் கடற்கரை.
அந்தச் சூழலை ரசித்தபடி உண்டுக்கொண்டிருந்த இருவருக்கும் நடுவால் பின்னிருந்து முன்னே பாய்ந்த ஒருவன், போகிற போக்கில் மயூரியின் மாங்காய் பையையும் பிடுங்கிக்கொண்டு ஓட திகைத்துப்போனாள் மயூரி.
“பிட்பாக்கெட் தான் கேள்விப் பட்டிருக்கிறன். இது என்னடி மாங்காய் பாக்கெட்டா இருக்கு.” என்று நந்தினி கேட்க, “அதுதானே..” என்று பார்த்தால் இவளைத் திரும்பிப் பார்த்துக் குறும்புடன் கண்ணடித்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தான் அவன்.
“அடப்பாவி!” மயூரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“யாரடி? உனக்குத் தெரியுமா?” என்றாள் நந்தினி.
“இவன்தான் அந்த அவன். பைக்கால இடிச்சவன்..”
“ஓ….. அந்தக் காதல் காயங்கள்.. அது இவன் தானா?”
“எருமைமாடு! அவன்ர காதில விழுந்தா என்ன நினைப்பான்? காதலும் கத்தரிக்காயும். அவன்ர பெயர் கூடி எனக்குத் தெரியாது! அவனைப்போய்..” பதறிப்போனாள் மயூரி. அவர்களுக்குள் இருப்பது அழகானதொரு நட்பு. அதைக் கெடுக்கப்பார்க்கிறாளே இந்த நந்தினி!
“அவன் ஓடின வேகத்துக்கு இப்ப இந்தியாவை தொட்டிருப்பான். நீ வேற!” என்றபோது, ஒரு மாங்காய்த் துண்டை வாயில் போட்டபடி சிரித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான் அவன்.
‘சின்னப்பிள்ளைத்தனமா இல்ல!’ அவன் செய்கையில் உண்டான சிரிப்பு கண் முகமெங்கும் பரவ அவளும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னடி நடக்குது இங்க?”
“அவன் மட்டும் தாண்டி நடக்கிறான்.”
“ஹாப்பி கிறிஸ்மஸ்!” என்றபடி மாங்காய் பையை நீட்டினான் அவன்.
“ஹாப்பி கிறிஸ்மஸ்!” என்று அவள் வாங்குவதற்குள் நான்கைந்து தடியர்கள் வந்து அப்படியே அவனை அள்ளிக்கொண்டுபோய் கடலுக்குள் வீசினர்.
அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் மயூரி. ஒருமுறை மூழ்கி எழுந்து, முற்றிலும் நனைந்து நின்றவனைக் கண்டு அடக்கமாட்டாமல் கலகலவென்று சிரிக்கத் தொடங்கியிருந்தாள். தான் சிரிப்பதைக் கண்டு அவன் முறைக்கிறான் என்று தெரிந்தும் அடக்கமுடியவில்லை. அங்கே அவனோ ஒவ்வொருவராய் பிடித்திழுத்து தண்ணீரில் தள்ளிவிட அதுவே அவர்களுக்குள் விளையாட்டாகிப் போயிற்று!
கடைசிவரையிலும் அவளது மாங்காய்த் துண்டுகள் அடங்கிய பை அவள் கைக்குக் கிடைக்கவே இல்லை. அதுவும் சேர்ந்து கடலுக்குள் குளித்துக்கொண்டிருந்தது.
“என்ன சொல்லு.. பாய்ஸ் பாய்ஸ்தான்டி. என்ன படிச்சு என்ன ஐடில வேலை செய்தாலும் இப்படி நாங்க விளையாட முடியுமா சொல்லு? பிறகு, இண்டைக்கு இரவே முழு சோசியல் மீடியாவிலையும் எங்கட வீடியோவாத்தான் இருக்கும்.” என்றாள் நந்தினி.
அவனையும் அவனது குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் பார்க்கையில் முதன் முறையாக உண்மைதானே என்று தோன்றியது மயூரிக்கு.
அவனைப்போலவே அந்த இடத்தில் துள்ளலோடு ஓட முடிந்தால்.. அலைகளில் நனைய முடிந்தால்.. யாரும் பார்ப்பார்களா என்கிற எண்ணமே இன்றிச் சிரிக்க முடிந்தால்.. நொடிப்பொழுதையும் வாழும் அவனைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாக உணர்ந்தாள். இப்போதும் ஒருவனின் சட்டைக்குள் மணலை அள்ளிப் போட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்தான் அவன்.
இருள் கவியத்தொடங்கவும், “வா நந்து நடப்பம்!” என்று, எழுந்துகொண்டவளின் விழிகள் சொல்லிக்கொண்டு புறப்பட, சுழன்று அவனைத் தேடியது.
“இது கடைசில காதல் காலங்கள்ல தான் முடியப்போகுது.. நான் சொல்லுறன் பார்!” என்று ஆருடம் சொன்னாள் நந்தினி.
“எருமை எருமை எருமை! இந்தக் கதையை விடவே மாட்டியா!” என்று அவள் மண்டையில் எட்டிக் குட்டினாள் மயூரி.
தனியாக இருக்கையில் அவள் செய்யும் கிண்டல்களை இலகுவாக ஏற்றவளுக்கு, அவன் அருகில் இருக்கையில் இதெல்லாம் அவன் காதில் விழுந்து அவளைத் தவறாக நினைத்துவிடுவானோ என்கிற பயமே பதட்டத்தைக் கொடுத்தது.
“ஐயோ அம்மா! இவ்வளவு கோவப்படுறவள் என்னத்துக்கடி கண்ணால அவனைத் தேடுறாய்?” மண்டையை தேய்த்துவிட்டபடி கேட்டாள் நந்தினி.
“தெரிஞ்சவன். அவனை இங்க கண்டுட்டம். வெளிக்கிடுறோம் எண்டு சொல்லிட்டு போறேல்லையா? அதுக்குப்போய்..” வாய் அவளோடு வாயடித்துக் கொண்டிருந்தாலும், கண்கள் அவனது கும்பலைக் கண்டுபிடித்து, அவனைத் தனியாகத் தேடிப் பிடித்தது. அவனும் அதேநேரம் நண்பனின் தோளில் கையைப் போட்டபடி பார்க்க, சின்னதாகத் தலையசைத்து விடைபெற்றாள்.
அவனும் உதட்டு முறுவலோடும் கண்களில் சிரிப்புடனும் தலையசைத்து அனுப்பிவைத்தான். மயூரியின் பார்வையோடு பயணித்த நந்தினியும் இதையெலலாம் பார்த்துவிட, ‘கண்ணால கதைக்கிறது எல்லாம் நல்லா நடக்குது. இதுக்க ஒண்டும் இல்லையாம். இத சொன்னா திரும்பவும் குட்டுவாள்.’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு கையசைத்து அவனை அழைத்துவிட்டிருந்தாள்.
“ஏய்! என்னத்துக்கடி அவனைக் கூப்பிடுறாய்?” ஏடாகூடமாக கதைத்துவிடுவாளோ என்று அஞ்சிப் படபடத்தாள் மயூரி.
அதைக் காதிலேயே வாங்கவில்லை நந்தினி. வந்தவனிடம், “நீங்கதானே இவளை இடிச்சது?” என்று கேட்டாள்.
“இல்லையே!” மயூரியைப் பார்த்தபடி சொன்னான் அவன்.
“ஏய் என்னடி? ஆளை மாறிக்கீறி சொல்லுறியா?”
நந்தினிக்குப் பதில் சொல்லாமல் ஏன் இப்படிச் சொல்கிறான் என்று விளங்காமல் மயூரியும் அவனைப் பார்த்தாள்.
“நான் இடிக்கேல்ல. என்ர பைக் தான் இடிச்சது.”
விரிந்த மயூரியின் விழிகள் அவனை முறைத்தாலும், சிரித்துவிடத் துடித்த இதழ்களை அடக்கப் பெரும் பாடுபட்டுப்போனாள்.
அவனின் நக்கலில் கடுப்பாகிப்போனாள் நந்தினி. “ஹல்லோ! இடிச்சா மட்டும் காணாது. உங்கட பெயரையும் சொல்லவேணும். பெயர் கூடத் தெரியாது எண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறாள் அவள்!”
இதைக்கேட்டு அதிர்ந்தாள் மயூரி. “ஐயோ இல்ல. இவளின்ர கதையை நம்பாதீங்கோ!” அவசரமாகச் சொன்னாள்.
“தெரியாட்டிக் கேக்கவேணும். இல்லை, தெரிஞ்சுகொள்ளவேணும். என்ன மயூரி நான் சொல்லுறது சரிதானே?” என்றான் அவன்.
இப்போது அவனை முறைத்தாள் மயூரி. “எனக்கு ஒண்டும் தெரியவும் வேணாம். தெரிஞ்சுகொள்ள விருப்பமும் இல்ல! நீ வாடி இருட்டுது!” என்றவள், அவனிடம் ஒரு வெட்டும் பார்வையை வீசிவிட்டு நந்தினியை இழுத்துக்கொண்டு நடந்தாள்.

