காதல் காயங்களே 5 – 1

அத்தியாயம் 5

 

 

 

இரண்டு நாள் விடுமுறையும் முடிந்து, அன்று வழமைபோன்று பஸ்சுக்காகக் காத்திருந்தாள் மயூரி. அவனும் வருவான் என்று தெரியும். ‘இண்டைக்குச் சிரிக்கக்கூடாது! தெரியாட்டி பெயரை கேக்கவேணுமாமே! ஏன் அவனா சொல்ல மாட்டானாமோ? அவர் பெரிய கொம்பர்! அவரின்ர பெயர் தெரிஞ்சு கொள்ளத்தான் இங்க நாங்க அலையுறம்!’

 

அதுவரை அவனுடைய பெயர் அவளுக்கு ஒரு விசயமாகவே இல்லை. அது தெரியாது என்பதே கருத்தில் இல்லை. அப்படியிருக்க, எதேர்ச்சையாக அவள் சொன்னதை நந்தினி அவனிடம் கொண்டு போனதில், ‘சொல்லவா சொல்லவா?’ என்று மெசேஜில் கேட்டுக்கேட்டே இந்த இரண்டு நாட்களில் அதை ஒரு விசயமாக அவனே மாற்றிவிட்டிருந்தான்.

 

அதனாலேயே அவனுடைய பெயரைத் தெரிந்துகொள்வதற்காக சிறிதேனும் முயற்சி எடுக்கக் கூடாது என்பது அவளின் முடிவு.

 

அதற்கு விடமாட்டேன் என்று, கடந்த இரண்டு நாட்களும் ‘கண்டு பிடிச்சாச்சா?’, ‘தெரிஞ்சுகொள்ள ஆசை எண்டா சொல்லுங்கோ, நானே சொல்லுறன்’ என்று சும்மா இருந்தவளை அவன்தான் சொறிந்துவிட்டிருந்தான்.

 

உள்ளுக்குள் மட்டும் இவ்வளவு எடுப்பெடுக்கும் அவனுடைய பெயரை அவனது உதவியே இல்லாமல் அறிந்துகொள்ளும் ஆர்வம் துளிர் விட்டிருந்தது!

 

அவனும் வந்தான். தூரத்திலேயே கண்டுவிட்டாள். ‘கண்டமாதிரி காட்டிக்கொள்ள கூடாது!’ அப்படியே நின்றுகொண்டாள். ஆனால், அவன் வருவான் என்று உள்மனம் சொல்லிற்று. நினைத்தது போலவே, பைக்கைக் கொண்டுவந்து அவளின் முன்னால் நிறுத்தினான்.

 

“குட்மோர்னிங் மய்..யூரி!” என்றபடி.

 

அவனுக்கு அவளின் பெயர் தெரியுமாம்! எப்படிச் சீண்டுகிறான்? முறைப்போடு பார்த்தவளை நகைப்போடு வளைந்த அவன் உதடுகள் இன்னும் உசுப்பேற்றியது!

 

“தெரிஞ்ச மனுசரை கண்டால் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு தலையாட்டல் எல்லாம் தரவேணும். அதைவிட்டுட்டு கண்டும் காணாதமாதிரி நிக்கக்கூடாது மய்யூரி!”

 

“கண்டாத்தானே?”

 

இப்போது அவன் கண்கள் சிரித்தது. அந்தக் கண்களிடம் பொய்யுரைக்க முடியாமல் பார்வையைத் திருப்பினாள் மயூரி.

 

“அப்ப நான் வந்தத காணவே இல்ல?”

 

“இல்ல! காணவேயில்ல!” அவளின் உதடுகள், தாம் பொய்யுரைப்பதைக் காட்டிக்கொடுக்கும் விதமாகச் சிரித்துவிட்டிருந்தன.

 

அந்தச் சேட்டைக்காரனும் அவளைக் கண்டுகொண்டான் என்று பற்கள் தெரியச் சிரித்தான்.

 

“பச்சைப்பொய் சொன்ன மய்யுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?” சத்தமாக யோசித்தான் அவன்.

 

மய்யுவா? டேய்! என்னடா நடக்குது இங்க? நந்தினி வந்து மண்டைக்குள் மணியடித்தாள். மயூரி மய்யூரி ஆகி மய்யுவாகச் சுருங்கியதில் கடுபாகிப்போய்ப் பார்த்தாள். பெற்றுப் பெயர் வச்சவன் மாதிரி கூப்பிடுறானே!

 

“ஓகே! இண்டைக்கு நான் டிராப் செய்வன். இல்ல, ‘பிளீஸ் பிளீஸ் உங்கட பெயரைச் சொல்லுங்கோ?’ என்று கேக்கவேணும். ரெண்டுல ஒண்டு!” அவன் சொன்னதைக்கேட்டுத் திகைத்தாலும், புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்தினாள் மயூரி.

 

“ரெண்டும் நடக்காது! இப்ப பஸ் வந்திடும். நீங்க நடையைக் கட்டுங்கோ!” அவள் சொல்லி முடிக்க முதலே அவளுக்கான பஸ் வந்து நின்றது.

 

ஆனால் என்ன, சற்று நேரத்தில் அவனது பைக்கில் அவனோடு சென்றுகொண்டிருந்தாள் மயூரி! கடுகடுக்கும் முகத்தோடு!

 

பஸ்ஸில் ஏற விடாமல், பைக்கை அவளுக்குக் குறுக்கே குறுக்கே கொண்டுவந்து நிறுத்தித் தடுத்து அவளை ஒருவழியாக்கி இருந்தான். பஸ்ஸில் இருந்தவர்கள் பார்ப்பதைக் கண்டுவிட்டு அவள் முறைக்க, “பெயரைக் கேட்டா சொல்லிப்போட்டு நான் என்ர பாட்டுக்கு போய்டுவன்!” என்று, அப்போதும் வெகு இலகுவாகச் சொன்னான் அவன்.

 

அதற்கு மறுப்புத் தெரிவித்ததில் இதோ அவனோடு போய்க்கொண்டிருக்கிறாள். நினைக்க நினைக்க அவனைக் கடித்துக் குதறும் வெறி வந்தது.

 

“வடிவா பிடிச்சுக்கொள்ளுங்கோ மய்யூரி! திரும்பவும் அண்டைக்குமாதிரி விழுந்து எழும்புறேல்ல.”

 

பின் மண்டையிலேயே ஓங்கிக் குத்தவேண்டும் போலிருந்தது அவளுக்கு. அன்றைக்கு அது நடக்காமல் இருந்திருக்க இன்றைக்கு இந்த அநியாயம் பிடித்தவனின் இழுவைக்கு இழுபடாமல் இருந்திருக்கலாம். கண்ண பிடரிக்க வச்சுக்கொண்டு நடந்ததால் வந்த வினை!

 

“சத்தத்தையே காணேல்ல மய்யூரி?” கண்ணாடி வழியே அவளைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டான் அவன். அந்த மூக்கிலே ஒரு குத்துக் குத்தி இரத்தத்தை வழியவிட்டால் எப்படி இருக்கும் என்று கொலைவெறியோடு ஓடியது அவள் கற்பனை. பஸ்ஸில் இருக்கிறவர்கள் பார்க்கிறார்களே என்று மானத்துக்கு அஞ்சி அவன் பைக்கில் ஏறிய தன் முட்டாள் தனத்தை நொந்துகொண்டாள்.

 

“என்ர பெயர் மயூரி! அதை முதல் ஒழுங்கா சொல்லப் பழகுங்கோ!”

 

“சரி மய்..யூயூரி!”

 

“அடேய்! எருமைக்கு பிறந்தவனே! பெயரை ஒழுங்கா சொல்லிப் பழகடா!” என்றவள், சற்றுமுன் நினைத்ததை செயலாக்கிவிட்டிருந்தாள். என்ன, அவனுடைய பின் மண்டையில் ஓங்கிக் குத்தியதில், ஹெல்மெட்டில் கை பட்டு, “அம்மா..!” என்று அவள்தான் அலறினாள். அவனுடைய தலை ஒருமுறை முன்னுக்குப் போய்விட்டு வந்திருந்தது. அவ்வளவுதான்!

 

உடனேயே வீதியின் கரையாக வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான் அவன். கையைப் பிடித்துக்கொண்டு சுளித்த முகத்தோடு அவனை முறைத்தவளைக் கண்டு சிரிப்புத்தான் பீறிட்டுக்கொண்டு வந்தது!

 

“முதுகில குத்தியிருக்க வேண்டியதுதானே. ஹெல்மெட் போட்டிருக்கிற தலையில யாராவது குத்துவினமா?” அடக்கப்பட்ட சிரிப்புடன் வாய் சொன்னாலும், கை அவளின் கையை ஆராய்ந்தது. சற்றுச் சிவந்துவிட்டிருந்த இடத்தைத் தடவியவனுக்கு இப்போது அவளைப் பார்க்கப் பாவமாயிற்று!

 

“வலிக்குதா?” அந்தக் கேள்வியில் சட்டென்று கண்ணீர் திரண்டுவிட, அதை அவனுக்குக் காட்டப்பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மயூரி.

 

“ஹேய் மய்யு! சும்மா விளையாட்டுக்குத் தானே. சொரி இனி கேக்கமாட்டன். ஓகே யா?” அவளின் கண்ணீரைப் பொறுக்கமாட்டாமல் வேகமாகச் சொன்னான் அவன்.

 

“அடி வெளுத்துவிட்டுடுவன் பிடிச்சு! மய்யுவாம் மய்யு! மயூரி எண்டு ஒழுங்காச் சொல்லுங்கோ!” திடீரென்று சீறியவளைக் கண்டு ஒருகணம் திகைத்துப் பின் சிரிக்கத் தொடங்கியிருந்தான் அவன்.

 

அவளுக்கும் கோபத்தை இழுத்துப்பிடிக்க முடியாமல் சிரிப்புத்தான் வந்தது.

 

அவளின் சிரிப்பைக் கண்டபிறகுதான் அவனுக்குள்ளும் சொல்லத்தெரியாத ஒரு நிம்மதி பரவியது! “ஏறு!” நேரமாவதை உணர்ந்து அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.

 

“கை நோகுதா இன்னும்?” பின் கண்ணாடி வழியே அவளிடம் இதமாக விசாரித்தான்.

 

அந்தக் குரலில் தெரிந்த கரிசனை, அக்கறை அவள் இதயத்தைத் தொட்டது. சிறுபிள்ளை போன்று அடம்பிடித்து அவளைச் சீண்டி ஒருவழி செய்துவிட்டு இப்போது நல்லபிள்ளையாகச் சமாதானம் செய்கிறானே.

“இல்ல. இப்ப பரவாயில்ல!” சிரித்த முகத்தோடு சொன்னாள்.

 

அவன் கண்ணாடி வழியே பார்க்க, “ரோட்டை பாத்து ஒட்டுங்கோ!” என்றாள் மிரட்டலாக.

 

அவளின் ஆபிசில் முன்னால் இறங்கிக்கொண்டவள், விடைபெற்றுச் சென்றாள். போகிறவளையே பார்த்திருந்துவிட்டு, “மயூரி! என்ர பெயரச் சொல்லவா?” என்று குரல் கொடுத்தான் அவன்.

 

நின்று திரும்பி கை எடுத்துக் கும்பிட்டாள் மயூரி. “ஆளை விடுங்க சாமி! உங்கட பெயரும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம்! ஓடிப் போங்க!” என்றுவிட்டு சென்று மறைந்தாள் அவள்.

 

மெல்ல நகைத்தவன் பைக்கைக் கிளப்பினான். பைக்கில் மோதி விழுந்து, சிராய்ப்புக்களோடும் காயங்களோடும் நின்றவளைப் பயந்த சுபாவம் கொண்ட அமைதியான பெண் என்று நினைத்தான். காசு தர அடம்பிடித்தபோது அப்படி இல்லையோ என்று தோன்றியது. அடுத்த திங்கள் ‘காயமெல்லாம் மாறிட்டுது. ஃபிரியா விடுங்க பாஸ்!’ என்றவளை குறும்புக்காரிதான் என்று காட்டிக்கொடுத்தது. அந்தக் குறும்புத்தனம் அவனை ஈர்த்ததுதான். அதன் பிறகான நாட்களில் அவள் தரும் சின்னப் பார்வை, சின்னச் சிரிப்பு, ஒரு தலையசைப்பு எல்லாமே ஒரு நட்புணர்வை அவள்பால் உருவாக்கியது. அந்தச் சின்னச் சின்னச் செய்கையாலேயே அவனை ஈர்க்கிறோம் என்று தெரியாமலேயே ஈர்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

 

அவள் மீது உருவாகியிருக்கும் இந்தக் கவர்ச்சி அவனுக்கு மிகவுமே பிடித்திருந்தது. காதல் என்று வரையறுத்துவிடுகிற அளவுக்கு இல்லையானாலும் தன் செய்கைகளால் அவனைக் கவர்ந்துகொண்டிருந்தாள்.

 

இப்போதெல்லாம் காலையில் தயாராகும்போதே, நிற்பாளா என்று நினைத்தான். வார இறுதிகளில் அவ்விடத்தைக் கடக்கையில் அவள் நிற்கும் இடத்தைத் தடவி விழிகள் ஏமாந்தது. இந்தப் பெயர் கேட்கும் விளையாட்டை அவனும் திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லைதான். அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி உருவாக்கிவிட்டிருந்தான்.

 

அவள் காலையில் தன்னைக் கண்டும் காணாததுபோல் நின்றதைக் கண்டு, “பச்சக்கள்ளி!” என்று செல்லமாகத் திட்டிக்கொண்டான். அவளின் அந்த நடிப்புத்தான் அவனை இழுத்ததும்; அவளிடம் வம்பிழுக்க வைத்ததும். மெய்யாகவே கோபப்பட முடியாமல் பொய்யாக அவள் முறைத்த முறைப்பில் மறைந்துகிடந்த சிரிப்பில் அவன் மனதில் உற்சாகம் பொங்கியதும் உண்மை. அதில்தான் பிடிவாதமாக அவளை இழுத்துக்கொண்டு வந்திருந்தான்.

 

இதோ, சற்றுமுன் கூட ‘உங்கட பெயர் தெரியவே வேணாம்’ என்று கையெடுத்துக் கும்பிட்டவளிடம் கூடத்தான் அவன் மனம் ஈர்க்கப்பட்டது!

 

‘இது எங்கேபோய் முடியப்போகுதோ?’ பைக்கை வழமையாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றி சிகை கோதியவனின் உதட்டினில் உற்சாக விசில் பறந்தது!

 

இப்படி அவனது பெயரை வைத்துத்தான் அவர்களுக்குள் எல்லாமே ஆரம்பித்தது. இன்றானால் எவ்வளவு இலகுவாக அவனைப் பிரதீபன் என்கிறாள்.

 

error: Alert: Content selection is disabled!!