அத்தியாயம் 6
இரவு முழுக்க பிரதீபனுக்கு உறக்கமில்லை. மிகவும் அழகாகவும் மென்மையாகவும் ஆரம்பித்த உறவு, ஏன் இப்படிக் கலைத்துப்போட்ட கோலம் போன்று மாறிப்போனது? வருடங்கள் பத்து ஓடித் தொலைந்துபோயிற்றுத்தான். ஆனாலும், அவளைக் கண்டபொழுதில் அன்று கொண்ட பிரியம் நெஞ்சுக்குள் வந்துநின்று அடைத்தது. இளம் வயதில் கண்ட கனவுகளும் கொண்ட காதலும் கலையாத சித்திரங்கள் தானே.
கூடவே அவள் என்ன சிரமங்களை எல்லாம் தன் திருமணவாழ்வில் எதிர்கொண்டாளோ என்கிற வேதனையும் சேர்ந்து வாட்டியது. எப்படியும், அதில் அவனது பங்குதான் அதிகமாய் இருக்கும். இன்னொரு பக்கம், அவனைப் பிரிந்த இரண்டே வருடங்களில் அவளால் இன்னொருவனை மணந்து ஒரு குழந்தைக்கு அன்னையாகவும் முடிந்திருக்கிறதே என்பதை ஏற்கமுடியவில்லை.
எது எப்படியோ, அவளை அவன் இழந்தது இழந்ததுதான். குறைந்தபட்சமாக, அவளின் வாழ்வை முடிந்தவரை சீராக்கினால் மட்டுமே அவன் வாழ்வுக்குள் அவனால் புகுந்துகொள்ள முடியும். அதனால், காலத்தைக் கடத்துவதில் அர்த்தமில்லை என்று, காலையிலேயே புறப்பட்டு வந்து அவள் வீட்டு பெல்லை அழுத்திக்கொண்டிருந்தான்.
அதிகாலையில் விழிப்பது மயூரிக்குப் பழக்கமான ஒன்றுதான். ஆதிரா பள்ளிக்கூடம் செல்லமுதல் வேண்டியவைகளைக் கவனிக்க வேண்டும். அவளுக்கான மதிய உணவு, மாலை இருவரும் வீடு திரும்பிய பிறகான உணவுக்கு தேவையானது என்று காலையிலேயே அனைத்தையும் செய்து வைத்துவிடுவாள். எப்படியும் களைத்து விழுந்துதான் மாலை வருவாள். அந்தக் களைப்போடு இந்த வேலைகளைக் கவனிக்க முடிவதில்லை. ஓய்வாக மகளோடு இருக்கத்தான் மனமும் உடலும் விரும்பும். அதுவே, அதிகாலையில் எழுந்துவிட்டால், அந்த உசாரில் அனைத்தையும் முடித்துவிடுவாள். அன்றும் அப்படித்தான். எழுந்து முகம் கழுவி, துடைத்த துவாலையை தோளில் போட்டபடி சமையல் கட்டுப்பக்கம் நகர்ந்தவளைத் தடுத்தது வீட்டின் அழைப்புமணி.
யாராய் இருக்கும் என்கிற கேள்வி மயூரிக்கு வரவேயில்லை. நேற்றே அவனை எதிர்பார்த்தாள். அதுதான் அவன் இயல்பு. அப்படியிருக்க இன்றைய அவனது வருகை கொஞ்சம் பண்பட்டிருக்கிறான் என்றுதான் சொன்னது. கதவைத் திறந்து, எந்த அதிர்வும் இன்றிக் கேள்வியாக அவனை ஏறிட்டாள்.
பிரதீபனால் தான் சட்டென்று பதிலிறுக்க முடியாமல் போயிற்று! அவளின் கண்கள் மிகுந்த திடத்தோடு அவனை நேருக்குநேர் எதிர்கொண்டது!
“உள்ளுக்கு வரலாமா?”
இப்போதும் அவள் ஏன் என்பதாகதான் ஏறிட்டாள். நிதானமாக எல்லாவற்றையும் கதைக்கவேண்டும் என்று வந்தவனுக்கு, வாசலில் நிறுத்திவைத்தவளின் செயலில் கோபம் வந்துவிடும் போலிருந்தது.
“மயூரி! நான் ஒண்டும் பிழையான எண்ணத்தோட இங்க வரேல்ல. கொஞ்சம் கதைக்கவேணும்.” அழுத்தமாகச் சொன்னான்.
அதன் பிறகுதான் வழிவிட்டாள் மயூரி.
சென்று சோபாவில் அமர்ந்துகொண்டான் பிரதீபன். அவளைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அது முறையும் அல்ல அழகுமல்ல என்று மனம் சொல்ல, ஹாலினைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினான்.
வெள்ளை நிற மார்பில் பதித்த அளவான ஹால். கறுப்பிலான லெதர் சோபா செட். அருகிலேயே பிங்க் நிறத்திலான கூடை நாற்காலி, அதற்குச் சொந்தக்காரி யார் என்று சொல்வதுபோல் ஒரு பெரிய பார்பி டால் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்ததுமே ‘மயூரியின் பெண்ணை’ பார்க்கும் ஆவல் உண்டாயிற்று. பெரிய திரை கொண்ட எல்ஈடி டிவி. அதற்கு கீழே, ‘பிளே ஸ்டேஷன்’ செட். அதனுடைய கேம் சிடிக்கள் சிலது டிவி மேசையில் கலைந்து கிடந்தது. ஆங்காங்கே பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், மேக்கப் கிட் என்று கிடந்து ஒரு குழந்தை கோலோச்சும் வீடு என்று சொல்லிற்று! அதுவே அவன் இழப்பைக் கிளறிவிடப் போதுமாயிற்று!
அவன் வீட்டில் எல்லாமே வைத்தது வைத்த இடத்தில் பளிச்சென்று இருக்குமே!
“டீ கொண்டுவாறன்.” சொல்லிவிட்டு உட்புறமாக நகர்ந்தவளைப் பார்த்தான் பிரதீபன்.
‘இவளுக்கு நான் வந்தது அதிர்ச்சியே இல்லையா? என்னவோ இயல்பு போல.. டீ கொண்டுவரப் போகிறாளே.’ அவனால் அவளைக் கணக்கிட முடியவில்லை.
சுவரில் ஒரு போட்டோ. அம்மாவும் மகளுமாய். மயூரி அமர்ந்திருக்க, அவளின் தோளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள் ஆதிரா. பார்த்ததுமே, ‘அட! இவளா மயூரியின் பெண்?’ என்று புருவங்கள் உயர்ந்தது. அவளை அவனுக்குத் தெரியும்! அன்று, தியேட்டரில் பார்த்ததும் இவளைத்தான். அம்மா வருவா என்றது மயூரியைத்தான். அவ்வளவு பக்கத்தில் அவளை வைத்துக்கொண்டு நினைவுகளில் தேடியிருக்கிறான் இவன்.
அதைவிட, இவள் இந்த ஆதிரா டிக்டாக் செய்கிற சுட்டிப்பெண். அன்றைய குழம்பிய மனநிலை அதைக் கண்டுபிடிக்காதபோதும் இன்று கண்டுகொண்டான். அதுவும் பிக்பாஸ் லோஸ்லியாவை அப்படியே பிரதி செய்வதில் மிகுந்த கெட்டிக்காரி! சாக்க்ஷியின் ‘அவ்வா அவ்வா’வைக்கூட மிகவுமே ரசிக்கும்படி செய்வாளே! அதுவும் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ரைச் செய்துகாட்டுவதில் அவள் கிங். அவளின் டிக்டாக்கைப் பார்க்கிறபோதெல்லாம், ‘மிகுந்த குறும்புக்காரி’ என்று நினைத்திருக்கிறான். அவன் உதட்டினில் புன்சிரிப்பு அரும்பிற்று! அன்று, உனக்கும் அவளைத் தெரியுமடா என்று ஜெய் கூடச் சொன்னானே! அவனுக்கு வெகு அருகிலேயே இருந்திருக்கிறார்கள். அவன்தான் கவனிக்காமல் இருந்திருக்கிறான்.
அவன் கண்கள் ஆதிராவிடம் அவளின் தாயின் சாயலைத் தேடி அலைந்தது. தாயின் கழுத்தை விடவே மாட்டேன் என்பதுபோல் வளைத்திருந்தாள். அந்த அணைப்பில் தெரிந்த நெருக்கத்தில் அவன் இதயம் தவித்தது. கன்னத்தோடு கன்னம் உரசும் அன்பில் ஏங்கிப்போனான். அவளையே பார்த்திருந்தான். சிரிக்கும் அந்தப் பூக்குவியலை அப்படியே கைகளில் வாரிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. மயூரியின் முகத்திலும் தான் எவ்வளவு பெரிய புன்னகை. எந்தச் சோகத்தையும் காணோம். ஒற்றைக் குழந்தை போதும் போல, உலகின் அத்தனை துயர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்க. எவ்வளவு பெரிய சொர்க்கத்தைத் தொலைத்துவிட்டான்! மெல்ல மெல்ல அவன் கண்கள் பனித்துப் போயிற்று!
“டீ!” திடீரென்று கேட்ட குரலில் மோனம் கலைந்து திரும்பினான் பிரதீபன். நிகழ்ந்துகொண்டிருந்த அந்தக் காட்சி அவனைத் தாக்கியது. இப்படி எத்தனையோ நாட்கள் அவள் கையால் பருகியிருக்கிறான். அன்றெல்லாம் கனவில் கூட நினைத்ததில்லை; பெரும் பிரிவொன்று அவளை ஒரு பக்கமாகவும் அவனை ஒரு பக்கமாகவும் பிடுங்கி வீசும் என்று. இன்று..? கப்பை வாங்கிக்கொண்டே அவன் விழிகள் தன் வேதனைகளை அவளிடம் பகிர முயன்றது. அதற்கு அனுமதியளிக்காமல் தன்னுடைய கப்புடன் சென்று எதிர் சோபாவில் அமர்ந்துகொண்டாள் மயூரி.
“ஆதிரா இன்னும் எழும்ப இல்லையா?” அவள் பெயரைச் சொல்லும்போதே கனிந்து பிரியத்துடன் ஒலித்தது அவன் குரல். ஏன் என்று தெரியவில்லை. அள்ளி அள்ளிக் கொடுக்கும் அன்புக்குச் சொந்தக்காரியாகத் தெரிந்தாள் ஆதிரா. விழிகள் போட்டோவில் இருக்க டீயினைப் பருகினான். எப்போதுமே அவளின் கைமணம் தனிதான். உயிரையே சென்று நிரப்பிற்று அவள் தந்த தேநீர்.
மயூரியின் பார்வை ஒருமுறை அவனைத் தொட்டுச் சென்றது. “இல்ல.” என்று பதிலிறுத்தாள்.
மீண்டும் ஒரு கனமான அமைதி. அவன் மனதுக்குள் கேள்விகள் நிறைய இருந்தது. அதையெல்லாம் கதைக்கத்தான் வந்திருக்கிறான். எதை எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு ஆரம்பித்தான்.
“ஆதிரா கேக்கமாட்டாளா, அப்பா எங்க எண்டு?”
அவள் கேள்வியாகப் பார்த்தாள்.
என்ன கேட்கிறாள் என்று அவனுக்கும் விளங்கிற்று!
“நீயும் உன்ர ஹஸ்பண்டும் பிரிஞ்சு இருக்கிறீங்களாம் எண்டு நேற்று ஜெய் சொன்னவன். தெரிஞ்சமாதிரியோ, இல்ல அவன் எனக்குச் சொன்னதையோ உனக்குச் சொல்லவேண்டாம் எண்டுதான் சொன்னவன். ஆனா, தெரியாதமாதிரி காட்டிக்கொண்டு அதைப்பற்றி உன்னட்ட என்னெண்டு விசாரிக்கிறது? பிளீஸ், அவனிட்டயோ அவன்ர வைஃப்ட்டையோ இதைப்பற்றி கேக்காத. நான் வற்புறுத்தி கேட்டதால மட்டும் தான் சொன்னவன்.”
அதற்கு ஒன்றும் சொல்லாமல், “சொல்லித்தான் வச்சிருக்கிறன்.” என்று, சுருக்கமாய் முடித்துக்கொண்டாள் மயூரி.
அவனுக்கு நெஞ்சில் தைத்தது. இந்தச் சின்ன வயதில் இதெல்லாம் விளங்குமா அவளுக்கு? விளங்கினாலும் அதையெல்லாம் ஏற்று, பக்குவமாக நடக்கத்தான் தெரியுமா?

