காதல் காயங்களே 6 – 2

 

“ஆது பாவமெல்லா மயூரி. உன்ர அப்பா எண்டால் உனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியும். அம்மா அப்பாவை வேலைக்காக பிரிஞ்சு இருந்த காலத்திலயே என்ன பாடு பட்டனி(பட்டாய் நீ)? அப்படித்தானே அவளுக்கும் இருக்கும். ஆனா நீ.. அவளுக்காக கூடி யோசிக்காம தனியா வந்திருக்கிறாய்.” என்று, அவளைக் குற்றம் சாட்டினான் அவன்.

 

அவள் முகத்தில் மெல்லிய சீற்றம் வந்தமர்ந்து.

 

“எனக்கு வாய்ச்சது நல்ல அம்மா அப்பா. அவளுக்கு.. அப்பாவும் நல்லதா வாய்க்க இல்ல அம்மாவும் நல்லதா வாய்க்க இல்ல!” என்றாள் இறுகிப்போன முகத்தோடு.

 

தன்னையும் நல்ல தாய் இல்லை என்கிறாள். முகம் கருத்துப் போயிற்று அவனுக்கு.

 

“இது பிழை மயூரி!” அவனால் அந்த விளக்கத்தை ஏற்கவே முடியவில்லை.

 

சினத்தில் சிவந்தது அவள் முகம். “சிலருக்கு சில கொடுப்பினைகள் கிடைக்கிறேல்ல. அப்படித்தான் அவளும். ஆனா, அப்பா இல்லாட்டி என்ன அவளுக்கு எல்லாமா நான் இருக்கிறன். அவளைவிட மோசமான நிலைல எத்தனையோ குழந்தைகள் இந்த உலகத்தில வாழத்தான் செய்யினம். அப்படி பாக்கேக்க அவளுக்கு அப்பா மட்டும் தான் இல்லை.”

 

எத்தனை தெளிவாகக் கதைக்கிறாள். இதையெல்லாம் சொல்வது மயூரி என்று அவனால் நம்பவே முடியவில்லை. மயூரிக்கு அப்பா என்றால் உயிர். அவளே, தான் பெற்ற மகளின் தகப்பன் என்கிற உறவைப் பறித்து வைத்திருக்கிறாளே.

 

“எண்டாலும்..”

 

“என்ன எண்டாலும்? இதுவே தகப்பன் உயிரோட இல்லாட்டி? அப்ப என்ன சொல்லுவீங்க? நான் அப்படித்தான் நினைச்சிருக்கிறன்! தேவையெண்டுவந்தால் அவளுக்கும் அதையே சொல்லுவன்.” என்றாள் பட்டென்று.

 

விதிர்விதிர்த்துப்போனான் பிரதீபன். அவன் அறிந்த மயூரின் மனது மிகவுமே மென்மையானது. பூப்போன்றது. அவளைப்போலவே. ஆனால் இந்த மயூரி? கடினமானவளாக, இரக்கமற்ற நெஞ்சம் கொண்டவளாக யாரோவாகத் தெரிந்தாள்.

 

“இதுக்கு.. உன்ர இந்த நிலைமைக்கு நான்.. எங்கட.. ரிலேஷன்ஷிப்தான் காரணமா?” வந்ததில் இருந்து அவனைத் தின்றுகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டான் பிரதீபன்.

 

அவள் பதில் சொல்லவில்லை. டீயை மட்டும் பருகினாள்.

 

விளங்கிய விசயத்தின் கனம் தாங்கமாட்டாமல் இருக்கையிலேயே உறைந்தான் பிரதீபன். அவன் தாடை இறுகிப்போயிற்று. இன்று ஆதிரா அப்பா இல்லாமல் நிற்க அவனா காரணம்? அவளிடம் ஓடியது அவன் விழிகள்.

 

சிரித்துக்கொண்டிருக்கும் அந்தச் சின்ன இதயத்துக்கு விளங்குமா, அவளின் குடும்பத்தைக் குலைத்தவன் அவன் என்று. கடவுளே.. மயூரிக்குச் செய்ததே பெரும் பாவம். அந்த முள்ளு சாகும்வரை அவன் நெஞ்சில் குத்திக்கொண்டே தான் இருக்கப் போகிறது. இதில், இந்த மொட்டின் வாழ்விலும் விளையாடி இருக்கிறானே. உதடுகள் கோடாய் அழுந்தின. வலியோடு அவளைப் பார்த்தான். உன்னைப் புரிகிறது என்கிற பார்வையைக் கூடத் தரமறுத்தாள் அவள். எப்படித் தருவாள்? எழுந்து ஜன்னலோரம் சென்று நின்றான். அப்போதும் சுவாசிக்க முடியாமல் தொண்டை அடைத்தது.

 

“எனக்காகவாவது நீ இன்னொருமுறை கதைக்கக் கூடாதா?” என்றான் வறண்டுபோன குரலில்.

 

அவள் கேள்வியாக மட்டுமே பார்த்தாள்.

 

“அம்மா கல்யாணத்துக்கு பாக்கிறா. நீ இப்படி இருக்கேக்க நான் எப்படி ஒரு வாழ்க்கைக்க சந்தோசமா போறது?”

 

அவளின் இதழோரம் சீறலாகச் சிரிப்பு முளைத்தது. “நீங்க உங்கட வாழ்க்கைக்க போறதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?”

 

“சம்மந்தமே இல்லையா?” ஆழ்ந்த குரலில் கேட்டான். என்ன இருந்தாலும், அவனுக்கும் அவளுக்கும் ஒன்றுமே இல்லை என்பதை அவனால் இன்னுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி இருக்க வாய்ப்பே இல்லைதான். ஆனால் இருந்ததே இல்லையா என்ன?

 

“நிச்சயமா இல்ல.” என்றாள் அவள். அவன் என்னவோ சொல்லவர, அதற்கு அவள் அனுமதிக்கவில்லை. “எனக்கு நான் முக்கியம். என்ர மகள் முக்கியம். எங்கள் ரெண்டுபேருக்காகவுமே அதைப்பற்றி இன்னொருமுறை யோசிக்க நான் தயாரா இல்லை எண்டேக்க உங்களுக்காக ஏன் யோசிக்க? முதல் நீங்க யார் எனக்கு?” என்றாள் அவன் விழிகளைப் பார்த்து.

 

“மய்…” வலியோடு புறப்பட்ட வார்த்தை அவளின் உக்கிரப் பார்வையில் அப்படியே நின்றுபோயிற்று!

 

“சேர வழியே இல்லையா?” மீண்டும் கேட்டான்.

 

அவள் மறுத்துத் தலையசைத்தாள். “எனக்கு விருப்பம் இல்ல!”

 

ஏன் என்கிற கேள்வி நுனி நாக்குவரை வந்தது. எப்படிக் கேட்பான்? என்ன சொல்லிவிடுவாளோ என்கிற பயமும் மறுபக்கம் தடுத்தது.

 

இந்த மயூரிக்கு வேறு முகத்தில் அடித்தாற்போன்று எதையுமே சொல்ல நன்றாக வருகிறதே!

 

“ஆதிராவுக்காக ஒருக்கா ட்ரை பண்ணலாமே!”

 

எனக்காகத்தான் மாட்டாய். உனக்காகவும் வேண்டாம். அவளுக்காகவாவது என்று கெஞ்சிற்று அவன் விழிகள்!

 

அதை விளங்கிக்கொண்ட மயூரியின் கீழுதடு ஒருமுறை வளைந்து நேராயிற்று! இந்தச் சிரிப்புக்கு என்ன பொருள் கொள்வது? விளங்காமல் பார்த்தான். இறுக்கமான உடல் மொழியோடு ஒரு சொல்லையேனும் வீணாக உன்னிடம் உதிர்க்கமாட்டேன் என்பதுபோல அமர்ந்திருந்தாள்.

 

“அப்படி என்ன குறை கண்டவனாம் உன்னில? காதல் எல்லாம் இளம் வயதில எல்லாரின்ர வாழ்க்கையிலையும் வாறதுதான்!” பொறுக்கமுடியாத சினத்தோடு சிடுசிடுத்தான். தவறு இளைத்தவன் அவன். தண்டனை அவளுக்கும் ஆதிராவுக்குமா?

 

“என்னைப்போல ஒருத்தியோட எந்த நல்ல ஆம்பிளை வாழுவான்?” நிதானமாக அவனிடமே கேட்டாள்.

 

விக்கித்துப் போனான் பிரதீபன்.

 

அவன் நின்ற நிலை கண்டு ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்தாள் மயூரி! “எங்களைப்பற்றி நீங்க யோசிக்கத் தேவையில்லை பிரதீபன்!”

 

அவன் விழிகள் அவளிலேயே நிலைத்தன. மிக நிதானமாக நேர்த்தியாக நீ உன் வேலையைப் பார் என்கிறாள். என் விசயத்துக்குள் மூக்கை நுழைக்காதே என்கிறாள். அதெல்லாம் சரிதான். கணவனைப் பிரிந்து வாழ்கிறாள் என்று தெரிந்த பிறகும், அந்தக் குழந்தை அப்பா இல்லாமல் வளர்கிறாள் என்று அறிந்த பிறகும் அவன் எப்படி அப்படிப் போவான்? அவனுக்குள் கிடந்து குத்தும் இந்த முள்ளை என்ன செய்வது?

 

“நீங்க ரெண்டுபேரும் தனியா இருக்கிறதை பாத்துக்கொண்டு.. ப்ச்! நான் ஒருக்கா உன்ர ஹஸ்பண்ட்டோட கதைக்கவா?”

 

உண்மையாகவே அவள் வேதனையை உணர்ந்துதான் கேட்டான் பிரதீபன். அவளோ, அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தாள். அதிர்வோடு பார்த்தான் பிரதீபன். இவளுக்கு என்ன ஆகிற்று?

 

கண்ணில் நீர் வரச் சிரித்துவிட்டுக் கேட்டாள் மயூரி. “எப்ப இருந்து நீங்க இவ்வளவு நல்லவனா மாறினீங்க பிரதீபன்? ஆச்சரியமா இருக்கே கேக்க?” என்றவளின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்துபோயிற்று! தீவிரம் குடிகொண்ட விழிகளோடு அவனை நோக்கிச் சொன்னாள். “திரும்பவும் சொல்லுறன். என்னைப்பற்றியும் என்ர மகளைப் பற்றியும் நீங்க யோசிக்கத் தேவையில்லை. எங்களை பாத்துக்கொள்ள எனக்குத் தெரியும்.” அவளின் பேச்சை மறித்து அவன் என்னவோ சொல்லவர அவள் கைநீட்டித் தடுத்தாள்.

 

“ஓம்! நீங்க நினைக்கிறது விளங்குது! ஒரு காலத்தில எனக்கும் உங்களுக்கும் ஒரு பந்தம் இருந்ததுதான். அதை காலத்துக்கும் தொடருற எண்ணமும் இருந்ததுதான். எனக்கும் நினைவிருக்கு. ஆனா அதெல்லாம் முடிஞ்சுபோச்சு! பழைய கதை. இண்டைக்கு நீங்க யாரோ, நான் யாரோ. யாரோவான நீங்க அனாவசியமா யாரோவான எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்!” முடிவாய்ச் சொல்லிவிட்டு எழுந்துகொண்டாள், “இனி ஆதிராவை எழுப்பவேணும்!” என்றபடி.

 

இதுக்குமேல கதைக்க ஒன்றுமில்லை, நடையைக் கட்டு என்கிறாள். அவனுக்கு முகம் கன்றிப்போயிற்று! வேகமாக வீட்டு வாசலை நோக்கி இரண்டு அடி எடுத்துவைத்தவன் நின்று அவள் முகம் பார்த்தான். “இந்தக் கேள்வியை கேக்கக் கூடாதுதான். கேக்கிறதுல அர்த்தமும் இல்ல. ஆனா.. கேக்காம போகவும் முடியேல்ல. உன்னால இன்னொருத்தனைக் கட்டி அவனுக்கு பிள்ளையை பெறவும் முடிஞ்சிருக்கு இல்லையா?” என்றான் வறண்ட குரலில்.

 

அவள் அசரவில்லை. “உங்களுக்கு வீட்டுல பெண் பாக்கிறதா சொன்னீங்களே..” நக்கல் சிரிப்போடு சொன்னாள் அவள்.

 

“அதுக்குப் பத்து வருசம் பிடிச்சது” என்றுவிட்டு நடந்தவனை,

“பிரதீபன்!” என்ற, மயூரியின் அழைப்புத் தடுத்து நிறுத்தியது.

 

நின்று திரும்பிப் பார்த்தான்.

 

“இனி இங்க வராதீங்க!”

 

அன்று சொன்ன அதே வார்த்தைகள்! ஆனால், அன்றைக்கு அதுதான் அவளைக் கடைசியாகப் பார்ப்பான் என்று நினைக்கவில்லை. இன்றைக்கோ இனிமேல் அவளைப் பாராமல் இருந்தால் நல்லது என்று நினைத்தான். எதுவாயினும், அவள் அதைச் சொன்னகணம் அவன் முகம் பெரும் சீற்றத்தைக் காட்டியது! மறுகணமே அனைத்தையும் மறைத்துக்கொண்டது!

 

“அதுதான் நெருங்கி வரவே முடியாத தூரத்துக்கு போய்ட்டியே! இனி வந்து என்ன வராட்டி என்ன?” என்றவன் விறுவிறு என்று வெளியேறிவிட்டிருந்தான்.

 

 

error: Alert: Content selection is disabled!!