அத்தியாயம் 7
அவன் சென்றுவிட்டான் என்றதும் அப்படியே தொய்ந்து சோபாவில் விழுந்தாள் மயூரி. மகளை எழுப்பவேண்டும் என்கிற நினைவே வரவில்லை. இன்னுமே அவன் எதிர் சோபாவில் அமர்ந்திருந்தான். ஜன்னலருகில் நின்று அவளைப் பார்த்தான். என்னவிதமான மாயத்தோற்றம் இது?
இதற்குமுதல் பலமுறை அவனைக் கண்டிருக்கிறாள் தான். என்றாலும், அவள் வீட்டில் அவளோடு, அவளுக்கருகில்.. அவள் மனதை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டுத்தான் போயிருக்கிறான்! போகமுதல் கேட்டானே ஒரு கேள்வி, ‘உன்னால இன்னொருத்தனைக் கட்டி அவனுக்கு பிள்ளையை பெறவும் முடிஞ்சிருக்கு இல்லையா?’ என்று. புசு புசு என்று கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. இல்லாமல் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறானாம்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறான்?
நம்பிக்கையின் உச்சம் காதல்! காதலின் அடிநாதம் நம்பிக்கை. அப்படியிருக்க அவன் அவளுக்குச் செய்தது என்ன? இன்று கேட்டுவிட்டுப் போன கேள்வி என்ன? மனம் குமுறியது! நிம்மதியாக இருந்தவளின் காயங்களை மீண்டும் வந்து கிளறிவிட்டுவிட்டானே!
அன்றைக்கும் இப்படித்தானே, பெயரைச் சொல்லவா என்று கேட்டு அவளைக் கிளறிவிட்டான்!
அவனிடம் விடைபெற்று கடுப்புடன் ஆபீசுக்குள் நுழைந்து, எதிர்ப்பட்ட நந்தினியை மொத்து மொத்து என்று மொத்தி எடுத்துவிட்டாள் மயூரி.
“எருமை! எருமை! உன்னை கேட்டனாடி, அவன்ர பெயரை கேட்டுச் சொல்லு எண்டு! தேவையில்லாம நீ வாய விட்டதுக்கு அவன் என்னைப்போட்டு படுத்துறான்!” தன் கை வலித்தபோதுதான் அடிப்பதையே நிறுத்தியிருந்தாள் மயூரி. அதன்பிறகுதான் மூச்சுவிட்டாள் நந்தினி.
“வலிக்குதடி நந்து!” அடிகொடுத்த நந்தினியிடமே கையைக்கொண்டுபோய் காட்டினாள் மயூரி. ஏற்கனவே ஹெல்மெட்டில் பட்டுக் கன்றிப்போயிருந்த இடம், அவளுக்கு அடித்ததில் சுள் என்று இன்னும் வலித்தது.
“விசர் நாய் கடிச்சா ஆள் மாதிரி வெறிகொண்டு அடிச்சா வலிக்காம என்னடி செய்யும்?” கேள்வியில் கோபம் தெறித்தாலும், அவளின் கையைப் பற்றி வருடிக்கொடுத்தாள் நந்தினி.
எவ்வளவுதான் கேலி கிண்டல் செய்தாலும், மயூரிக்கு ஒன்று என்றால் பெரியவளாக மாறிப் பார்த்துக்கொள்ளும் இந்த அன்புதான் மயூரியை நந்தினியிடம் கட்டிவைத்திருக்கும் மந்திரமே.
“என்னடி இது? இவ்வளவு கன்றிப்போற அளவுக்கா அடிச்சனி எனக்கு? அந்தளவுக்கு வலிக்க இல்லையே?” கேள்வி கேட்டவளை என்ன செய்வது என்று தெரியாமல் முறைத்தாள் மயூரி.
“மாடு! ஏற்கனவே அவனுக்கு அடிச்சதுல சிவந்து போச்சடி. இப்ப உனக்கும்..” என்றவள் முடிக்கமுதல், “என்னது? அவனுக்கும் அடிச்சியா?” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் நந்தினி.
“என்னடியப்பா நடக்குது உங்களுக்க? கேட்டா ஒன்றுமில்லை எண்டுறாய். ஆனா அடிக்கிற அளவுக்குப் போயிருக்கிறாய்..”
“எல்லாம் உன்னாலதான்டி! உன்னை யாரு அவனிட்ட பேரைக் கேக்கச் சொன்னது? முதல் உன்ர வாய ஊசி வச்சுத் தைக்கவேணுமடி நந்து!” என்று முறைத்தவளை கொஞ்சிக் கெஞ்சி நடந்ததைப் பிடுங்கிக்கொண்ட நந்தினிக்கு, மிச்ச நாட்களுக்கு அவளைச் சீண்ட அந்தளவும் போதுமாக இருந்தது!
அன்று வார இறுதி நாள். நண்பர்களைக் காணப் புறப்பட்டான் அவன். அந்த வீதிக்குள் நுழையும்போதே, அவள் நிற்கமாட்டாளே என்பதுதான் அவனுக்குள் பிரதானமாக ஓடியது! நாளைக்குப் பாக்கலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தாள் மயூரி. அதுவும் கையில் ஒரு பயணப்பையுடன்.
“எங்க பயணம்?” அவள் முன்னே பைக்கை கொண்டுபோய் நிறுத்திவிட்டு விசாரித்தான்.
“ஊருக்குப் போறன். அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அப்பா தனியத்தான். அதுதான் ஒரு கிழமை லீவுல போயிட்டு வரப்போறன்!” என்றுவிட்டுப் புன்னகைத்தாள்.
ஒரு வாரத்துக்கா? அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்துபோயிற்று! “இதையெல்லாம் முதலே சொல்லமாட்டியா?” அதட்டினான். அதுவும் ஒருமையில்.
இவனிடம் எதற்குச் சொல்லவேண்டும்? சொல்லும் அளவுக்கு அவன் யார் அவளுக்கு? அதுவரை இருந்த இலகுத்தன்மை அகல கேள்வியோடு ஏறிட்டாள் மயூரி.
“ஏறு, ரெயில்வே ஸ்டேஷன்ல விட்டு விடுறன்!” இறுக்கமான அவன் குரலில் அவளுக்கு ஒருமாதிரி ஆயிற்று.
“இல்லை, இப்ப பஸ் வந்திடும். அதுல போயி…டுவ..ன்!” அவன் முறைத்த முறைப்பில் தானாக ஏறி அமர்ந்திருந்தாள் மயூரி.
நடந்துகொண்டிருக்கும் எதுவுமே விளங்கவில்லை அவளுக்கு. அவன் எதற்குக் கோபிக்க வேண்டும். அதற்கு அவள் ஏன் அடங்கிப்போகவேண்டும்?
ஒரு ஹோட்டலின் முன்னே கொண்டுசென்று நிறுத்தினான் அவன். அவள் கேள்வியாகப் பார்க்க, “வா!” என்றுவிட்டு நடந்தான். அவனுடைய செய்கைகளில் மயூரிக்கும் மெல்லிய கோபம் எழுந்தது. தன் விருப்பத்தின்படி ஆட்டுவிக்கிறானே, என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறானாம் அவளைப் பற்றி?
இருவரும் அமர்ந்ததும், “என்ன வேணும்?” என்றான் அவன்.
“ஒண்டும் தேவையில்லை!”
முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்த மயூரியை ஒருமுறை பார்த்துவிட்டு, பணியாளரை அழைத்து, “ரெண்டு இடியப்ப செட் தாங்கோ. கொஞ்சத்தில் ரெண்டு இஞ்சி பிளேன் டி.” என்று சொல்லி அனுப்பிவைத்தான்.
‘இவன… நான் வேணாம் எண்டுறன். அவன் ஓடர் குடுக்கிறான். எவ்வளவு திமிர் இந்த பனங்காய் மண்டையனுக்கு!’ அவளால் பொறுக்க முடியவில்லை. “எனக்கு வாற விசருக்கு இந்தக் கதிரையைத்(நாற்காலி) தூக்கி உங்கட மண்டையிலேயே உடைப்பன்!” என்று பொங்கியவளிடம், “செய்!” என்றான் அவன் சர்வ சாதாரணமாய்.
“என்ன.. செய்யமாட்டன் எண்டு நினைப்போ?”
“ஓ… அப்ப செய்வியா நீ?” அவனது ஒரு கையின் விரல்கள் நண்டூருது நரி ஊருது நடை நடந்து அவளின் கையின் பக்கமாக வந்தது. பேச்சும் மூச்சும் நிற்க, பதில் சொல்லமுடியாமல் விரிந்த அவளின் விழிகள், நடந்துவரும் விரல்களில் நிலை குத்தியது.
“சொல்லு மய்யு, செய்வியா?” இது சற்றுமுன் அவளிடம் கோபம் கொண்ட குரல் அல்ல. மாயக்குரல். சன்னமாக ஒலித்தபோது, பதிலற்று நின்றாள் மயூரி. அதுவும், இவன் மய்யு என்று சொல்லும் பொழுதுகளில் இவளுக்கு என்னவோ செய்து தொலைக்கிறது. அவசரமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். அவனது விரல்கள் அவளின் கைக்கு வெகு நெருக்கமாகப் பற்றிவிடவா என்று கேட்டபடி நின்றிருப்பதைக் காண, பதட்டமானாள்.
உணவினைக் கொண்டுவந்து வைத்தான் பணியாள்.
“சாப்பிடு!” அவளின் கரத்தின் மீது மென்மையாகத் தட்டிச் சொன்னான்.
உண்டு முடிக்க தேநீர் வந்ததும் ஒன்றை அவள் புறமாக நகர்த்தி வைத்தான் அவன்.
“நிவ் இயருக்கும் இங்க இல்லையா?”
“இல்ல. தைப்பொங்கலுக்கு லீவு பெரும்பாலும் கிடைக்காது. அதுதான், இப்ப எடுத்தனான்.”
தலையசைத்துக் கேட்டுக்கொண்டான் அவன்.
“தனியப் போவியா? பயம் இல்லையா?” அவளின் பாதுகாப்பு மீதான அவனுடைய அக்கறை மனத்தைத் தொட, அழகாய்ப் புன்னகைத்தாள் மயூரி.
குறும்புக்காரனாக இருந்தாலும், சின்னச் சின்ன விடயங்களில் கூட அவன் காட்டும் இந்த அக்கறையும் அன்பும் தான் பல நேரங்களில் அவனது அடாவடித்தனத்துக்கு அவளை அடங்கிப்போக வைப்பது. இப்போதுகூட, காலை உணவு உண்டிருக்க மாட்டாள் என்று கணித்துத்தான் கூட்டி வந்திருப்பான்.
நெஞ்சிலே அவன் மீதான பிரியம் பெருக, அவனைப் பார்த்து இல்லை என்பதாக மட்டும் தலையை அசைத்தாள் மயூரி. அவள் அப்படிச் செய்த விதம், வெகுவாக அவன் மனத்தைக் கவர்ந்தது.
பருகி முடித்ததும் பணத்தையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர். பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள் மயூரி.
“நீ என்ர தோளைப் பிடிச்சா கையை எடு எண்டு நான் சொல்லமாட்டன்.” ஹெல்மெட் அணிந்த தலையோடு பின் பக்கமாகத் திரும்பிச் சொன்னான்
‘இவனை..’ அவளுக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. கொஞ்ச நேரமாவது நல்ல மனநிலையில் இருக்க விடுகிறானா? எப்போ பார் எதையாவது சொல்லிக்கொண்டு.
“தேவை எண்டால் நாங்க பிடிப்பம், நீங்க பைக்கை எடுங்க!” சிரிக்கும் உதடுகளை முகத்தைத் திருப்பி மறைத்துக்கொண்டு சொன்னாள் மயூரி.

