காதல் காயங்களே 7 – 2

 

“நீ பிடிச்சாத்தான் பைக் ஸ்டார்ட் ஆகுமாம்!”

அவன் பிடித்த அடத்தில் அவளுக்குக் கடுப்பேறியது.

 

“சத்தியமா ஒரு நாளைக்கு என்னட்ட நல்லா வாங்கிக் கட்டப்போறீங்க!” என்றபடி அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். அதன்பிறகுதான் அவனுடைய பைக் புறப்பட்டது.

 

இறங்கி விடைபெறும் முகமாக அவள் பார்க்க, பைக்கை பார்க் செய்துவிட்டு வந்தான் அவன். அவளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வரிசையில் நின்று டிக்கட் எடுத்து அவனே உள்ளே கூட்டிக்கொண்டு போனான். பணம் கொடுத்தபோது அதையும் வாங்கிக்கொள்ளவில்லை. அவனிடம் மல்லுக்கட்டி வெல்ல முடியாதே. ஒரு முறைப்புடன் நிறுத்திக்கொண்டாள். புகையிரதமும் வந்து நின்றிருந்தது. அவளுக்கான சீட்டைக் கண்டுபிடித்து அவளை இருத்திவிட்டு, “இரு வாறன்!” என்றுவிட்டு இறங்கிப் போனான். அவனை விளங்கிக்கொள்ள முடியாமல் போகிறவனையே பார்த்திருந்தாள் மயூரி.

 

கோபத்தில் ஒருமைக்குத் தாவிவிட்டான் என்று நினைக்க அவனோ அதையே நிரந்தரமாக்கிவிட்டிருந்தான். இதை உணர்ந்து செய்கிறானா இல்லையா? அப்படியான நெருக்கம் அவர்களுக்குள் எப்போது உருவானது. மறுக்க அவளுக்கு வாயும் வரவில்லை மனமுமில்லை. என்னைவிட பெரியவன் தானே. சப்பைக்கட்டு கட்டிக்கொண்டாள்.

 

அந்த நேரம் நந்தினி அழைத்து, ரெயில்வே ஸ்டேஷன் போய்விட்டாளா என்று விசாரித்தாள்.

 

“ட்ரெயின் ஏறிட்டன் நந்து.”

 

“சரிடி மய்யுகுட்டி! கவனமா போ. யாராவது ஏதாவது தந்தா வாங்கிச் சாப்பிடாத. மயக்க மருந்தை போட்டு உன்ன கடத்திக்கொண்டுபோய் கசமுசா செய்து விட்டுடுவான்கள். உசாரா இரு. தேவையில்லாம யாரோடையும் கதைக்காத. போய் இறங்கினதும் மெசேஜ் அனுப்பு. அம்மா அப்பாவை நானும் சுகம் கேட்டன் எண்டு சொல்லிவிடு. காதல் காயக்காரனைப் பற்றி யோசிக்காம சந்தோசமா இரு. இந்த ஒரு கிழமை உனக்கும் உன்ர அம்மாவுக்கும் அப்பாவுக்குமானது. ஓகேயாடி மய்…ய்..யூக்குட்டி!” வேண்டுமென்றே அவனைப்போலவே அழைத்துக்காட்டிச் சீண்டியவளை மற்ற நேரமாயிருக்க கடித்துக் குதறியிருப்பாள்.

 

இப்போதோ மனம் நெகிழ்ந்து போயிற்று. அந்தச் சீண்டலில் அவள் மீதான பிரியம் இருந்தது என்றால், வார்த்தைகளில் அவள் மீதான அக்கறை தானே இருந்தது.

 

“சரிடி கிழவி! ஒருத்தரோடையும் கதைக்க மாட்டன். ஒண்டும் வாங்கிச் சாப்பிட மாட்டன். அங்க போனதும் மெசேஜ் செய்றன். அங்க நிண்டு ஃபோன் பண்ணுறன், சுகத்தை நீயே அம்மா அப்பாட்ட நேர கேளு.” என்றவளுக்கு, அவன் வருவது தெரிந்தது. “சரி நந்து! ட்ரெயின் வெளிக்கிடப்போகுது. பாய்டி!” என்றுவிட்டு, அழைப்பை வேகமாகத் துண்டித்தாள்.

 

அவன் அழைத்து வந்திருக்கும் கதை அவள் காதுக்கு எட்டியதோ மயூரி தொலைந்தாள்.

 

அவள் இருந்த பெட்டிக்குள் ஏறி வந்தவனின் கையில் மிக்ஸர் பாக்கெட், தண்ணீர் போத்தல், வாசிக்க ஏதோ ஒரு மகசின் இருந்தது.

 

“நானும் கொண்டு வந்தனான்.” எதற்கு அவனுக்கு வீண் செலவு என்று எண்ணிச் சொன்னாள் அவள். காசைக் கொடுத்தாலும் வாங்கமாட்டான்.

 

“பரவாயில்ல, இதையும் வச்சிக்கொள். உனக்கு இன்னும் கொஞ்சம் உடம்பு வச்சாலும் ஓகே தான்!” அப்படியே அவளின் அருகிலேயே அமர்ந்துகொண்டான் அவன்.

 

‘என்ன இது?’ அவனைப் பார்த்தாள் மயூரி. பேச்சில் தெரிந்த நெருக்கம் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டிருந்தது. இது நல்லதற்கு இல்லையே! போதாக்குறைக்கு இத்தனை நெருக்கத்தில் அமர்ந்துகொண்டால் என்னதான் ஆவாள் அவள்? மீண்டும் பதட்டமானாள்.

 

அவர்கள் உரசிக்கொள்ளவில்லை அவ்வளவுதான். பார்வையை ஜன்னல் புறமாகத் திருப்பிக்கொண்டாள். தள்ளியிரு என்று சொல்லமுடியாமல் நாவு வறண்டுபோயிருந்தது. இனம் புரியாத பயம் வேறு!

 

இது தவறு.. இவனைத் தள்ளி வை! என்று மனம் வேக வேகமாய் அறிவுறுத்திக்கொண்டிருக்க, மடியில் கிடந்த அவளின் கரத்தை ஒரு வலிய கரம் பற்றியது! விழிகள் விரிய வேகமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள் மயூரி.

 

அவன் பார்வை ஏந்தியிருந்த அவளின் கையிலிருந்தது. “இன்னும் கொஞ்சம் கண்டல் இருக்கு என்ன.” அவளின் விரல்களை மெல்ல வருடிக்கொடுத்தான். அந்த வருடலில் சிலிர்த்தது

 

அதை அவனும் உணர்ந்திருக்க வேண்டும். நிமிர்ந்து அவளைப் பார்த்தான். வருடிக்கொடுத்த அவனுடைய விரல்கள் மெல்லமாய் அவளுடைய விரல்களை அழுத்திக்கொடுத்தன. மயூரிக்கு வியர்க்கத் தொடங்கியது.

 

உதட்டின் மேலே அரும்பிய வியர்வைத் துளிகளைக் கண்டவனுக்கு துடைத்துவிடக் கை பரபரத்தது. “வேர்க்குது பார். துடைச்சுக்கொள்.” அவனது கண்கள் காட்டிய இடத்தைக் கண்டு அதிர்ந்துபோய் வேகமாகப் புறங்கையால் மேலுதட்டைத் துடைத்துக்கொண்டாள்.

 

“ட்ரெயின் வெளிக்கிடப்போகுது. நீங்க நடவுங்கோ!” தடுமாறிய குரலை திடமாகக் காட்ட முயன்றபடி அவசரமாகச் சொன்னாள் மயூரி. இதற்குமேலும் அவனுடைய அருகாமையை அனுமதிக்கப் பயமாயிருந்தது. அவளுடைய அந்தப் பயத்தைக் கண்டு, அவசரத்தைக் கண்டு அவன் உதட்டில் வசீகரமான முறுவல் மலர்ந்தது.

 

“கவனமா போவாய் தானே?” உண்மையிலேயே அவன் இறங்கவேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்ந்து மெல்லக் கேட்டான்.

 

அவள் தலையை அசைத்தாள். இப்படி எத்தனையோ முறை போய்வந்திருப்பாள் என்று அவனுக்கும் தெரியும். ஆனாலும், ஏன் மனம் கிடந்து அலைபாய்கிறது. ஒருவாரத்துக்கு அவளைப் பார்க்க முடியாது என்று தெரிந்ததில் இருந்து அவன் அவன் கட்டுப்பாட்டில் இல்லை.

 

“இனி ஒரு கிழமைக்கு இந்தப் பார்வை, சின்னச் சிரிப்பு, குட்டித் தலையாட்டல் ஒண்டும் இல்லை..” என்று சொன்னவனை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தாள் மயூரி. தினமும் அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி அதுதானே!

 

புகையிரதம் புறப்படுவதற்கான அனைத்து அறிகுறிகளும் ஆரம்பமாயின.

 

“ஓகே…! ட்ரெயின் வெளிக்கிடப் போகுது. இனியும் இருக்கேலாது. தனியாப்போறாய். வலு(மிகவும்) கவனம் மய்யூ. ஒரு சின்னப் பிரச்சனை எண்டாலும் ஃபோன் பண்ணு. அம்மா அப்பாவோட சந்தோசமா இரு. டெய்லி என்னோட கதைக்கவேணும்!” அவனுக்கு இறங்க மனமேயில்லை. எதை எதையோ சொல்லி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தான். அவளோ, அவனை வேடிக்கை பார்த்தபடி அவன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள்.

 

“நல்லா ஆட்டு!” அவளின் மண்டையைப் பற்றி ஆட்டிவிட்டு எழுந்துகொண்டான் அவன். “இப்பவாவது என்ர பெயர் தெரிய வேண்டாமா?”

 

மறுத்துத் தலையசைத்தாள் அவள். “உங்களைத் தெரியும் தானே. அது போதும் எனக்கு!”

 

ஒருகணம் இனிமையாக அதிர்ந்தான் அவன். பிரியும் நேரத்தில் மிகப் பிரியமான சொற்களை உதிர்த்த அவளிடம் மனதால் நெருங்கியிருப்பதாய் உணர்ந்தான். அந்த நெருக்கம் பிடித்திருந்தது. ட்ரெயின் பெட்டியை விட்டு இறங்க மனமேயில்லை.

 

“என்ன தெரியும் என்னைப்பற்றி உனக்கு?” வேறு வழியின்றி இறங்கிவந்து ஜன்னலோரம் நின்று கேட்டான் அவன்.

 

“அவசரக்காரன் எண்டு தெரியும். அடாவடிக்காரன் எண்டு தெரியும். அழுத்தம் பிடிச்சவன் எண்டு தெரியும். கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் எண்டு தெரியும். அக்கறையானவன் எண்டும் தெரியும்.” என்று அவள் அடுக்கிக்கொண்டே போக, “போதும் போதும்!” என்று நகைத்தான் அவன். “என்னைப்பற்றி நிறையத்தான் தெரிஞ்சு வச்சிருக்கிறாய். ஆனா, பெயர் மட்டும் தெரியாது!”

 

தான் பிரியப்போவதை தன் காதலிக்கு உரத்துச் சத்தமிட்டுச் சொன்னது புகையிரத வண்டி.

 

அவன் கண்களில் சட்டென ஒரு தவிப்பு. ஜன்னலைப் பற்றியிருந்த அவளின் கையைப் பற்றிக்கொண்டான். “கவனம்..” ஓராயிரம் பொருட்கள் பொதிந்த ஒற்றை வார்த்தையை மட்டுமே உதிர்த்தான். புகையிரதமும் நகரத் தொடங்கியது. அவனும் கூடவே வந்தான். அந்தக்கணம்.. அந்த நொடி.. அவனின் தொடுகை, அவனின் பார்வை, அது உணர்த்திய செய்திகள்.. நெஞ்சுக்குள் அவளுக்கும் என்னவோ செய்தது. அவனையே பார்த்தாள். இன்னும் ஒரு வாரத்துக்கு அவனைப் பார்க்க முடியாது! அப்போதுதான் அதை அவள் உணர்ந்தாள். “நீங்களும் கவனம்!” அவன் கையைப் பற்றி அவசரமாகச் சொன்னாள் அவள்.

 

புகையிரதம் மெல்லிய வேகம் எடுக்கத் தொடங்கியதில் பற்றிக்கொண்டிருந்த கைகள் பிரிந்தன. அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

 

“உங்கட பெயர் என்ன?” ஜன்னலால் எட்டிப்பார்த்து அவசரமாகக் கேட்டாள் மயூரி.

 

அவனுடைய முகம் சட்டென்று மலர்ந்துபோயிற்று! “பிரதீபன்!” என்றான், சிரிக்கும் உதடுகளோடு.

 

அவன் பெயரைத் தெரிந்துகொண்ட சந்தோசம் அவள் முகத்திலும் தெரிந்தது. “பாய் தீபன்!” கையசைத்துச் சொன்னாள் மயூரி.

 

தீபன் என்றா சொன்னாள்? சந்தோச மிகுதியில் பறக்கும் முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டிருந்தான் அவன்.

 

அதிர்ந்துபோனாள் மயூரி. “டேய்!” விரல் நீட்டி எச்சரித்தவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘என்ன தைரியம் இவனுக்கு?’

 

‘எல்லாம் நீ குடுக்கிற தைரியம் தான்டி!’ மண்டைக்குள் இருந்து மணியடித்தாள் நந்தினி.

 

அவனுக்கும் அடக்க முடியாத சிரிப்பு. அந்த முத்தத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால், இரு இதயங்களும் இனிய ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்துகொண்டன.

 

 

error: Alert: Content selection is disabled!!