அத்தியாயம் 8
புகையிரதம் நகர்ந்துகொண்டிருந்தது. அவள் மட்டும் நினைவுகளில் அவனிடமே தேங்கிப் போயிருந்தாள். இன்னும் அவன் அனுப்பிய பறக்கும் முத்தம் உருவாக்கிய நடுக்கம் அவளில் இருந்து வெளியேறவே இல்லை.
அவனின் அருகாமையும் வார்த்தைகளும் உருவாக்கிவிட்டிருந்த உணர்வுகளின் ஆதிக்கம் அதிகரித்திருந்த வேளையில் அந்த நிகழ்வை ஒருவித துள்ளலோடு கடந்துவிட்டவளுக்கு, நிதானம் திரும்பிக்கொண்டிருந்த இந்தப்பொழுது ‘அதிகமாகவே அவனுக்கு இடம் கொடுத்துவிட்டோமோ?’ என்று தோன்றத் தொடங்கியிருந்தது.
என்ன இருந்தாலும் அந்த முத்தம் சற்றே அதிகப்படிதானே! ஆனால், அதிலேதும் தப்பான எண்ணம் இருப்பதாய் இப்போதும் அவள் மனம் உணர்த்தவில்லை. ஒரு உந்துதலில் பெயரைக் கேட்ட சந்தோசத்தில் நடந்ததாய்த் தானிருக்க வேண்டும்! ஆனாலும்…
அதைவிட அவளை உறுத்துவது, அவள் நடந்துகொண்ட விதம்தான். அதை எண்ணித்தான் இன்னுமே பயந்தாள். அவனை அவள் ‘அங்கேயே நில்’ என்பதாக எந்த இடத்திலும் அறிவுறுத்தவில்லை. எல்லையைத் தாண்டி வராதே என்று சிறு குறிப்பிலேனும் உணர்த்தவில்லை. மாறாக அவனுடைய செய்கைகளில் தடுமாறிப்போயிருக்கிறாள். மறைமுகமாக ரசித்து, அதற்கெல்லாம் தானும் இசைந்திருக்கிறாள். அதையே அனுமதியாகக் கொண்டு அவனும் நெருங்கியிருக்கிறான்.
‘தவறாக நடக்கிறோமோ?’ நினைத்த மாத்திரத்தில் கலங்கிப்போனாள். அப்பா அம்மா நம்பித்தானே அவளை இவ்வளவு தூரத்தில் தனியாக அனுப்பிவைத்தார்கள். நந்தினியிடம் கூட அவன் வந்ததை மறைத்தாளே! செய்யும் செயலிலும் நடத்தையிலும் தவறில்லையானால் எதற்கு மறைக்க நினைத்தாள்?
‘இனியாவது கவனமா இருக்கவேணும். அவனுக்கு இடம் கொடுக்கக் கூடாது.’ குற்ற உணர்ச்சியில் குன்றியவள் உறுதியாக முடிவெடுத்துக்கொண்டாள். என்றைக்குமே அவளின் முடிவுகளை மாற்றிப்போடப் பிறந்தவன் அவன். அப்போதும் அவளுக்கு அழைத்தான்.
ஒருகணம் திடுக் என்று அதிர்ந்தாள் மயூரி.
‘இதென்ன.. ஒருநாளும் இல்லாமல் இன்று.. அழைக்கிறான்..’ ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அழைப்பை ஏற்கவில்லை. மனம் தடுமாறியது. இது வேண்டாம். அவனைத் தள்ளி நிறுத்து. இது கூடாது. நீ எடுக்காமல் இருந்தால் அவனும் விளங்கிக்கொள்வான். ‘தூரவே நில்’ என்று அவனுக்கு உணர்த்தக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் இது. பயன்படுத்திக்கொள். உள்ளம் உணர்த்த அதற்கு உடன்பட்டாள்.
எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறவளாக அலைபேசியின் சத்தத்தை நிறுத்திவிட்டு வெளியே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டாள். மனம் மட்டும் பரிதவித்துக்கொண்டிருந்தது. அழைத்து அழைத்துப் பார்த்துவிட்டுச் செய்தி அனுப்பியிருக்க வேண்டும். மடியில் கிடந்த ஃபோன் அமைதியாக செய்த சத்தங்களில் உணர்ந்துகொண்டாள். எடுத்துப் பார்க்கவே இல்லை.
ஊருக்குச் சென்று இறங்கியபோது மத்தியானத்தைத் தாண்டி இருந்தது. நல்ல உயரத்தில் இன்னுமே கம்பீரம் குன்றாமல், அடர்ந்த மீசையும் தலை நிறைந்த கேசத்தோடு கண்களில் அன்பைத் தேக்கியபடி மகளின் வரவுக்காகக் காத்திருந்த தந்தையைக் கண்டதும், அனைத்துச் சஞ்சலங்களையும் மறந்து, “அப்பா!” என்றபடி ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள் மயூரி!
“சுகமா இருக்கிறியா கண்ணம்மா?” ஆதூரமாய் மகளை அணைத்துக் கேட்டார் அவர்.
“மயூரிக்கு என்ன குறை?” என்றவள், சட்டென்று விலகி நின்று மேலும் கீழுமாக அவரை ஆராய்ந்தாள்.
“என்ன செல்வேந்திரன்? கொஞ்சம் உடம்பு வச்ச மாதிரி இருக்கு? நான் இல்லை எண்டுற சந்தோசத்தில் ரெண்டு பிடி கூடச் சாப்பிடுறீங்க போல? தொப்பை லைட்டா எட்டிப் பாக்குது! தலைக்கு வேற டை அடிச்சிருக்கிறீங்க. இந்திராவதிக்கு வருத்தம்(நோய்) எண்டதும் யாரையும் சைட் அடிக்கிறீங்களோ?” அவரின் வயிற்றில் ஒரு பஞ்ச் விட்டபடி கேட்டாள் மயூரி.
அவளின் பேச்சை ரசித்துப் பெருங் குரலில் சிரித்தார் அவர். பின் அவளின் காதோரமாகக் குனிந்து, “முன் வீட்டுக்கு ஒரு யங் லேடியும் மகனும் வந்திருக்கினம்.” என்று, உதட்டில் முளைத்த சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டியபடி சொன்னார்.
அவரை முறைத்தாள் மயூரி. “இதெல்லாம் ஒரு பெரிய மனுசன் பேசுற பேச்சா செல்வேந்திரன்? பொறுங்க, உங்களை அம்மாட்ட போட்டுக்குடுத்து ரெண்டு வாங்கித் தந்தாத்தான் நீங்க திருந்துவீங்க.” என்று, அவள் சலசலத்தபோது அவர் கண்களில் மெல்லிய தடுமாற்றம் வந்து போயிற்றோ? அவள் கவனிப்பதற்குள் மீண்டும் அவளிடம் வம்பு வளர்க்கத் தொடங்கியிருந்தார்.
தகப்பனோடு சலசலத்தபடி வீட்டுக்கு வந்தவளுக்குத் தாயைக் கண்டதும் கண்கள் கலங்கிப் போயிற்று. முதல் பார்த்ததற்கு பாதியாக மாறிப் போயிருந்தார். ‘சுகமா இருக்கிறியா பிள்ள?’ என்று கேட்பதற்கே மூச்சு வாங்கினார். கலங்கிய விழிகளை அவரிடம் காட்டாமல் மறைத்துக்கொண்டு வெளியே வந்து, “என்னப்பா இது?” என்று, கலக்கத்தோடு தகப்பனிடம் கேட்டாள்.
“நோய் அவளைப்போட்டு வதைக்குதம்மா!” வேதனையோடு சொன்னவரும் அவளின் விழிகளைச் சந்திக்கவில்லை. “நீ உடுப்பை மாத்திக்கொண்டு வா சாப்பிடுவம். உனக்கு விருப்பமான சிக்கன் பிரியாணிதான் செய்தனான்.” என்றபடி சமையலறைக்குச் சென்று மறைந்தவரைக் கண்டு இப்போது அவளின் புருவங்கள் சுருங்கிற்று.
எதையும் மறைக்கிறாரோ? இப்போது அவரையும் கவனித்துப்பார்த்தால், ஓய்ந்து தெரிவது போலிருந்தது. அவர் அடித்துக்கொண்ட டையும், சிரிப்பும் பொய்யோ? என்னவோ சரியாக இல்லை. அவள் மனம் சொன்னது.
‘சரி ஒரு கிழமைக்கு இங்கேதானே. செல்வேந்திரன் என்ன மறைக்கிறார் எண்டு கண்டு பிடிக்கிறன்!’ என்று எண்ணிக்கொண்டு குளித்துவிட்டு வந்தாள்.
நந்தினியிடம் வந்து சேர்ந்ததாக அழைத்துச் சொல்லிவிட்டு வைத்தவளுக்கு, பிரதீபனும் காத்திருப்பான் என்கிற நினைவு வந்து அலைக்கழித்தது. அழைத்துச் சொல்வோமோ? மெசேஜ் அனுப்புவோமோ? அனுப்பப்போனால் அவன் அனுப்பிய மெசேஜ்களை பார்க்கவேண்டி வரும். அவள் அழைப்பை ஏற்காததற்கு மனதில் வலிக்கிறபடி எதையாவது எழுதி வைத்திருந்தான் என்றால்? அந்தப் பயத்திலேயே எடுத்துப் பார்க்கவுமில்லை, வந்து சேர்ந்துவிட்டதை அவனுக்குச் சொல்லவும் இல்லை.
உணவு முடிந்து மெல்லிய உறக்கமும் கொண்டு எழுந்தவளுக்கு, பிரதீபனுக்குச் சொல்லவில்லையே என்கிற நினைவு மறக்காமல் நின்று மண்டைக்குள் குறுகுறுத்தது. தன்னோடு வாயடித்துக்கொண்டிருந்தாலும் அவள் அவ்வப்போது யோசனையில் அப்படியே அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு விசாரித்தார் செல்வேந்திரன்.
“அது அப்பா.. ஒன்றுமில்லை.. ” முதலில் தடுமாறிவிட்டு, அவரிடமே கேட்போம் என்று முடிவு எடுத்தவளாய், “அது அப்பா, ஒரு பிரென்ட், அதுவும் ஆம்பிள பிரென்ட்..” எனும்போதே செல்வேந்திரனின் விழிகள் சிரிக்கத் தொடங்கியிருந்தது.
“அப்பா!” என்று பல்லைக் கடித்தாள் மயூரி. “நீங்க எனக்கு அப்பா. ஆம்பிளை பிரென்ட் எண்டு சொல்லுறன் சிரிக்கிறீங்க! முறைக்கவேணும். என்ன அப்பா நீங்க?” என்று படபடத்தாள்.
“நான் ஏன் முறைக்கவேணும்? அவர் உனக்கு பிரென்ட். பிறகு என்ன ஆம்பிளை பொம்பிளை?”
அதுதானே! அவளுக்கும் மெல்லக் கண் திறப்பது போலிருந்தது. தகப்பனின் விசாலமான எண்ணத்தைக் கண்டு வியந்துபோனாள். கூடவே ஒரு நிம்மதி. இதுதான் அவளின் அப்பா. இல்லாவிட்டால் அவ்வளவு தூரத்துக்குத் தனியே அனுப்புவாரா?

