“அவர் அப்பா நல்ல மாதிரி. உண்மையாவே நல்ல பிரென்ட். நிறைய ஹெல்ப்பும் செய்திருக்கிறார். இங்க வரேக்க, என்னைக் கண்டுட்டு ரெயில்வேக்கு கொண்டுவந்து விட்டதும் அவர்தான். அவர் ஒரு சின்னப் பிழை செய்திட்டார். ஆனா.. அதுக்கு நானும் காரணம் எண்டு நினைக்கிறன். அதுதான், இனி அவரோட பெருசா கதைக்கவேணாம் எண்டு நினைச்சன். நான் இடம் குடுக்கப்போய்த்தானே அவர் அப்படி நடந்தவர் எண்டு இண்டு(இன்றைக்கு) முழுக்க மனம் சரியில்ல. அதுதான், வந்து சேர்ந்திட்டன் எண்டு அவருக்குச் சொல்லவே இல்லை. போனதும் சொல்லச் சொன்னவர். மெசேஜ் அனுப்பி இருக்கிறார். நான் பாக்கேல்லை. அது ஒரு மாதிரி இருக்கு.” தெளிவாக ஆரம்பித்தாலும் சொல்லி முடிக்கையில் குரல் உள்ளே போயிருந்தது.
கூடவே ஒரு கலக்கமும்! என்ன பிழை செய்தான் என்று கேட்டுவிடுவாரோ? இனி அவனோடு கதைக்காதே என்று விடுவாரோ. அவள் மனது அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்றே தெரியாமல் குழம்பி நின்றாள்.
செல்வேந்திரனோ உடனே பதிலிறுக்கவில்லை. மகளையே பாத்திருந்தார்.
“என்னப்பா?” மெல்லிய அச்சம் மனத்தைக் கவ்வ வினவினாள் மயூரி.
“பிரென்ட்ஸ் எண்டால்.. அதுவும் ஆண் பெண் பிரென்ட்ஷிப் எண்டால் நம்ம சமூகத்தில வாற பிரச்சனைதான் இது. என்னதான் நல்ல பிரென்ட் எண்டு சொன்னாலும், பெண் நண்பிகளுக்கு குடுக்கிற அத்தனை உரிமையையும் அல்ல அனுமதியையும் ஆண் நண்பர்களுக்குக் குடுக்கேலாது. அப்படி ஒரு விசயம் தான் இப்ப உனக்கு நடந்திருக்கு எண்டு நான் நினைக்கிறன்.” என்றவரை, வியப்பில் விழிகள் விரியப் பார்த்தாள் மயூரி. எத்தனை நுணுக்கமாக அவளின் பிரச்னையை இனம் கண்டுகொண்டுவிட்டார். இதனால் தானே இன்னுமே அவளுக்கு அப்பா என்றால் ஒரு பெருமை, ஒரு நாயக விம்பம்.
“அந்தத் தம்பி என்ன பிழை செய்தார் எண்டு எனக்குத் தெரியாது மயும்மா. ஆனா, அதையே உன்ர பிரென்ட் நந்தினி செய்திருந்தாலும் உனக்கு இப்படி இருந்திருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
மறுத்துத் தலையசைத்தாள் மயூரி. அவள்தான் கன்னத்திலேயே முத்தமிடுவாளே!
“அப்ப, நீ யோசிக்க வேண்டியது அந்தத் தம்பி என்ன நோக்கத்தில அதைச் செய்தார் எண்டு. நோக்கம் பிழையா இருந்தா விலகத்தான் வேணும். அல்லது, செய்தபிறகு அவரே பிழை எண்டு உணர்ந்து இருக்கலாம். சில நேரங்கள்ல ஒரு வேகத்தில செய்துபோட்டு, பிழை விட்டுட்டோமே எண்டு வருந்துவீனம். அப்படி, கொஞ்சம் அதிகப்படியாத்தான் நடந்திட்டன் எண்டு அந்தத் தம்பியே உணர்ந்து இருக்கவும் கூடும். இனி அவர் எப்படி நடக்கிறார் எண்டுறதை வச்சு முடிவு எடு.” என்று, முடித்தார் பெற்றவர்.
உண்மையிலேயே மனதிலிருந்த பாரம் அனைத்துமே விலகிப்போயிருந்தது அவளுக்கு. அப்பா சொன்னதுபோல, ஒரு உணர்வுகளின் உந்துதலில் நடந்த விசயம் மட்டும் தானே அது. தெளிவு வந்ததும், ஒரு குற்ற உணர்ச்சி வந்தமர்ந்தது. நாம் தான் சின்ன விசயத்தைப் பெரிதாக்கி அவனை நோகடித்துவிட்டோமோ? கோபத்தில் இருப்பானே. என்ன எழுதியிருப்பான் என்கிற கேள்வி மண்டைக்குள் குறுகுறுக்க ஆரம்பித்திருந்தது. அவள் வேறு இன்று முழுக்க அவனுடைய அழைப்பை ஏற்கவே இல்லையே!
அருகில் அப்பா இருந்ததில், அவளால் அவளின் ஆர்வத்துக்குத் தீனி போடுகிறவளாக உடனேயே ஃபோனை எடுத்துப் பார்க்க முடியவில்லை.
மகள் படுகிற பாட்டைப் பார்த்து உதட்டுக்குள் ஒளிந்துகொண்டிருந்த சிரிப்புடன் எழுந்துகொண்டார் செல்வேந்திரன். “ உனக்கும் அந்தத் தம்பிக்கும் இடையில ஏதா…வது சம்திங் சம்திங்..?” என்றவரை, அதிர்ந்துபோய்த் திரும்பிப் பார்த்து முறைத்தாள் மயூரி.
“உங்களை.. எனக்கு வாற கோவத்துக்கு.. கடிச்சு விட்டுடுவன் அப்பா. போங்க.. போய் படுங்க!” என்று, துரத்தினாள்.
அவரின் புன்சிரிப்பு விரிந்தது.
“அப்படியே இருந்தாக்கூட நல்லவனா எண்டு மட்டும் தான் அப்பா பாப்பன்.”
“செல்..வேந்திரன்! காணும் போங்க! இங்க அப்படி ஒரு கத்தரிக்காயும் இல்ல!” அதற்குமேல் அவர் ஏன் அங்கிருக்கப் போகிறார். அதுதான் அவருக்குத் தேவையானவற்றை அவள் சொல்லிவிட்டாளே!
“குட்நைட் கண்ணா! அந்தத் தம்பியோட மறக்காம கதை!” என்றுவிட்டு அறைக்குள் ஓடிவிட்டார்.
அவர் மறைந்த வேகத்தைக் கண்டு அவள் உதடுகளிலும் சிரிப்பு முளைத்தது! “ச்ச்சோ ச்சுவீட் அப்பா!” என்று கொஞ்சிக்கொண்டாள்.
அடுத்த நொடியே அவளின் கையில் ஃபோன் இருந்தது. பத்துத் தடவைகளுக்கு மேல் அழைத்திருந்தான். நிச்சயமாகப் பொறுமை முற்றிலும் இழந்து கோபத்தின் உச்சியில் இருப்பான். எப்படி இதைச் சீராக்கப் போகிறோம் என்று தெரியாமல் உதடு கடித்தாள்.
மெல்ல அவன் அனுப்பிய செய்திகளுக்குள் நுழைந்தாள்.
“மயூ! ஃபோனை எடு!” என்று முதன் முதலில் அனுப்பி இருந்தான்.
“நீ வேணுமெண்டுதான் எடுக்க இல்ல.. எனக்குத் தெரியும்!” அவளைக் கண்டுகொண்டிருக்கிறான். இப்போது, தவறு இளைத்துவிட்டவள் போன்று அவளுக்குத்தான் ஒருமாதிரி ஆயிற்று.
“இதை உன்னட்ட எதிர்பார்க்கேல்ல! செய்கைகள் உணர்த்தாத எதையும் வார்த்தைகள் உணர்த்தாது! பாய்! முடிந்தால் போய் சேர்ந்திட்டன் எண்டு ஒரு மெசேஜாவது அனுப்பு!” அதற்குமேல் எதுவுமே அனுப்பவில்லை அவன்.
அவ்வளவு கோபத்திலும் போய்ச் சேர்ந்துவிட்டதைச் சொல்லச் சொல்லியிருக்கிறான். அந்த அக்கறையில் அப்பாவை நினைவூட்டினான். இப்போது ஏனோ, அவள்தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டது போலாயிற்று!
ஃபோனாலே மண்டையில் ஒரு அடியைப் போட்டுவிட்டு வேகமாக அவனுக்கு அழைத்தாள்.
“என்னப்பாத்தா உனக்கு என்ன அவ்வளவு சீப்பா தெரியுதா? ஃபோன் எடுக்கேல்ல, மெசேஜுக்கு ரிப்லை இல்ல. பிறகு எதுக்கு இப்ப எடுத்தனி? எந்தப் போதி மரத்தில ஞானம் பிறந்தது?” உச்சபட்ச கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் பிரதீபன்.
இத்தனை நாட்களாக இனிமையான ஒருவனாக மட்டுமே பார்த்துப் பழகியவனின் முதல் கோபம் அவளை ஆழமாகப் பாதிக்க, வார்த்தைகளற்று நின்றுவிட்டாள் மயூரி.
“தீபன்.. சா..” என்று சொல்வதற்கு முதலே, “அம்மா தாயே! ஒண்டும் வேண்டாம். ஆளை விடு. இந்தளவுக்கு கேவலப்படுத்துறவளோட கதைக்க எனக்கும் விருப்பமில்லை. நீ எனக்கு பெரிய இவளும் கிடையாது! வை ஃபோனை!” என்றுவிட்டு, முகத்தில் அறைந்தாற்போல் அவனே பட்டென்று வைத்தும் விட்டிருந்தான்.
மளுக் என்று மயூரிக்குக் கண்ணீர் நிறைந்து போயிற்று! என்னமாதிரி வார்த்தைகளைக் கொட்டிவிட்டான். நான் அவனுக்கு பெரிய இவள் கிடையாதாமே! எப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டான். ஒரு வார்த்தை.. ஏன் இப்படி நடந்தாய் என்று ஒரு வார்த்தை கேட்க முடியவில்லையாமா அவனுக்கு?
ஆத்திரமும் அழுகையுமாக அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள். “நான் செய்தது பிழைதான். அதுக்காக நீங்க இப்படியெல்லாம் கதைச்சிருக்கக் கூடாது! எனக்கு உங்கள்ள கோபம் இல்ல. என்னிலதான் கோபமா இருந்தது. எண்டாலும் சொரி. நீங்க செய்த எல்லா ஹெல்ப்புக்கும் நன்றி! இனி உங்களை டிஸ்டப் செய்ய மாட்டேன்.” என்றுஅனுப்பிவிட்டு ஓடிப்போய் கட்டிலில் விழுந்திருந்தாள்.

