காதல் காயங்களே 9 – 3

 

“ஹாய் டார்லிங்! கேகே கதைச்சவனா?”

 

“அது யாரடி கேகே?”

 

“காதல் காயக்காரன். என்னவோ தெரியாதவள் மாதிரி நடிக்கிறியேடி மய்யு.”

 

“பக்கத்தில இருந்தாய் எண்டு வை. வெளு வெளு எண்டு வெளுத்துப்போடுவன். அந்த லூசனோட எனக்கு என்ன கதை. அவன் எடுக்கவும் இல்ல நான் கதைக்கவும் இல்ல.” அவனில் இருந்த கோபத்தையும் சேர்த்து அவளிடம் காட்டினாள் மயூரி.

 

“இது நம்புற மாதிரி இல்லையே..” என்று சலசலத்து, மயூரியின் பொறுமையை நன்றாகவே சோதித்துவிட்டு செல்வேந்திரனிடமும் கதைத்துவிட்டு வைத்தாள் நந்தினி.

 

அவளோடு கதைத்து முடித்து வருவதற்குள், தன்னுடைய சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவாரே கோழித்தூக்கம் ஒன்றினைச் செல்வேந்திரன் போட்டுவிட்டிருந்தார். தலை ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்க தளர்வாய்க் கைகளையும் கால்களையும் நீட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டு இருந்தவரையே பார்த்துக்கொண்டு நின்றாள் மயூரி.

 

‘பாவம் அப்பா. தனியா இருந்து கஷ்டப்படுறார்..’ என்னதான் அவர் சொன்னாலும், வயதான காலத்தில் அம்மாவைக் கவனித்துக்கொள்வது அதுவும் தினமும் என்பது அவருக்கு அதிகப்படிதான். அதனால் தான் இந்தத் தூக்கம். இந்தக் களைப்பு. என்ன, அதை அவளிடம் காட்டிக்கொள்ளவோ பகிரவோ அவர் தாயாராயில்லை. தங்களோடு இருந்து அவள் முடங்கிவிடக்கூடாது என்று நினைக்கிறார்.

 

மனம் பாரமாக சத்தமின்றி வெளியே வந்தவளுக்கு பிரதீபனோடு கதைக்கவேண்டும் போலிருந்தது. தன் கவலைகளை அவனிடம் பகிர்ந்துவிட ஏங்கினாள். அவளுக்கான ஆறுதல் அவனிடம் இருப்பது போலிருக்க, அவனுக்கு அழைக்கப்போனவள் நிறுத்திவிட்டாள். மீண்டுமொருமுறை, முகத்தில் அறைவது போன்று அவன் நடந்துகொண்டால் அவளால் தாங்க இயலாது!

 

‘ப்ளீஸ் தீபன், ஒருக்கா எடுங்கோவன். எனக்கு உங்களோட கதைக்கவேணும் மாதிரி இருக்கு!’ என்று அனுப்பிவைத்தாள். அப்படியே அங்கிருந்த தென்னையின் கீழே பாய் ஒன்றை விரித்துவிட்டு மனச்சோர்வுடன் அமர்ந்தவளின் மடியில் ஓடிவந்து அமர்ந்துகொண்டது அவர்களின் டைகர்.

 

அதன் தலையைத் தடவிக்கொடுத்தாள். மனம் முழுவதிலும் பிரதீபன்தான் நிறைந்திருந்தான்.

 

அங்கே, அலுவலகத்தில் தன்னிருக்கையில் அமர்ந்திருந்த பிரதீபனின் மனம் எப்போதோ அவளின் பால் சாய்ந்துவிட்டிருந்தது. ஒரு வீம்பில் தான் இவ்வளவு நேரமும் பிடிவாதமாக அமர்ந்திருந்தான். ‘உங்களோட கதைக்கவேணும் மாதிரி இருக்கு’ என்று அவள் அனுப்பியதை வாசித்த நொடியில் அவன் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. உடனேயே அவளின் இலக்கங்களை அழுத்திவிட்டிருந்தது அவனின் விரல்கள்.

 

“தீபன்..” எடுத்ததுமே தழுதழுத்த குரலில் அவன் பெயரைத்தான் உச்சரித்தாள் மயூரி. பெற்றவர்களின் நினைவு கூட அக்கணத்தில் அவளிடமிருந்து விலகி, அவன் தன் கோபத்தை விடுத்து அழைத்துவிட்டான் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கியது.

 

ஒருகணம் பேச்சற்றுப்போனான் பிரதீபன். முதன் முதலாக அலைபேசி வழியாக செவிகளை மிகவுமே நெருக்கமாகத் தீண்டிய அவளின் அழைப்பில் அவனது உடல் முழுவதிலும் ஒருவித சிலிர்ப்பு. கண்களை மூடி அந்தச் சுகத்தைத் தனக்குள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டான்.

 

அவள் அழைக்கையில் மாத்திரம் அவனுடைய பெயர் எப்படித்தான் இப்படி மிகுந்த அழகாகிப்போகிறதோ தெரியவில்லை.

 

ஏனோ இந்தக்கணமே அவளைப் பார்க்கவேண்டும் போல ஒரு உந்துதல் எழுந்துபோயிற்று. “சுகமா இருக்கிறியா மய்யு?” உணர்வுகளின் உந்துதலில் மனதுக்கு மிகவுமே நெருக்கமான குரலில் வினவினான்.

 

காதோரமாய் கிசுகிசுத்த அந்தக் கம்பீரக் குரலின் கரகரப்பில் பேச்சற்றுப்போனாள் மயூரி. அவளுக்குள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதையே கணிக்க முடியாத ஒரு மாயச் சுழலில் மனம் மூழ்கிக்கொண்டிருந்தது.

 

“நீங்க என்னோட கதைக்கேல்ல.” மனச் சிணுக்கத்தோடு சொன்னாள் அவள்.

 

அதனால் அவள் சுகமாய் இல்லை என்கிறாளா? ‘மய்யு…’ உள்ளம் கிறங்கிற்று அவனுக்கு! ஒரு கை ஃபோனை காதருகில் பற்றியிருக்க மறுகையால் கேசத்தைக் கோதிக்கொடுத்தான் பிரதீபன்.

 

“நான் கதைக்காட்டி என்ன மய்யு?”

 

“என்ன கதைக்கிறீங்க? நீங்க கதைக்காட்டி எனக்கு கவலையா இருக்காதா?”

 

“பிறகு ஏன் நீ கதைக்காம இருந்தனீ மய்யு?”

 

அதுதானே! அவள் உதடு கடித்தாள்.

 

அவளிடம் பதில் இல்லை என்றதுமே அவனுக்குப் புரிந்துபோயிற்று, அவள் என்ன செய்துகொண்டிருப்பாள் என்று. “அதை விடு!” என்றான் சன்னச் சிரிப்புடன்.

 

சட்டென முகம் சூடாகிப்போயிற்று அவளுக்கு. “அடி வாங்கப் போறீங்க!” அந்தக் கோபத்திலும் அவளின் நாணம் வெளிப்பட்டதில் சின்னதாய் சிரிப்பைச் சிந்தினான் அவன். செவிகளைத் தீண்டிய அந்தச் சிரிப்பில் மனம் மயங்கியது அவளுக்கு.

 

“எவ்வளவு எண்டாலும் அடி மய்யு ஆனா கதைக்காம மட்டும் இருக்காத. எந்தப் பிரச்சனையும் கதைச்சா மட்டும் தான் தீரும்!” மெல்லச் சொன்னான் அவன்.

 

“சொரி தீபன்..”

 

“இன்னும் எத்தனை தடவைதான் இதையே சொல்லுவாய்?” சற்றே இலகுநிலைக்கு அவன் திரும்பியிருந்தான்.

 

“உங்கட கோபம் போறவரைக்கும்.”

 

“அப்ப சொல்லிக்கொண்டே இரு பாப்பம்..”

 

“என்னது?”

 

“என்ர கோபம் போறவரைக்கும் சொல்லிக்கொண்டே இரு எண்டனான்.” அமர்த்தலாகச் சொன்னான் அவன்.

 

ஒருகணம் அமைதியாக இருந்தாள் மயூரி.

 

“சொரி தீபன்.. சொரி தீபன்.. சொரி தீபன்.. சொ..” மெய்யாகவே அவள் சொல்ல ஆரம்பித்ததில் பிரதீபனின் நிலைதான் மகா மோசமாய் போயிற்று!

 

“மய்யு! நிப்பாட்டு போதும்!” அவசரமாகத் தடுத்தான்.

 

“கோபம் போயிட்டுதா?” அவனுடைய கோபம் தீருவது ஒன்றே முக்கியம் போல் அவள் கேட்டதில் அவன் தன்னிலை இழந்திருந்தான்.

 

“என்னை ஏனடியப்பா இந்தப்பாடு படுத்திறாய்? உன்னை யாரோவா தூரத்தில வைக்க என்னால முடியேல்ல மய்யு. அதாலதான், நீ திடீரெண்டு பேரைக்கேட்ட சந்தோசத்தில நடந்த ஒன்றுதான் அது. பிழையான வேற எந்த எண்ணமும் இல்ல. அதுக்குப்போய்..” அதற்குமேல் அவனுடைய விளக்கத்தைக் கேட்க இயலாமல் இடையிட்டாள் மயூரி.

 

“அச்சோ தீபன் கோவிக்காதீங்கோ பிளீஸ்! எனக்கு உங்களில் கோபம் எண்டுறதை விட, நீங்க அப்படி நடக்கிற அளவுக்கு இடம் கொடுத்திட்டேனோ எண்டு என்னிலதான் பயமா இருந்தது. என்னை நம்பி அனுப்பின அம்மா அப்பாக்கு நேர்மையா நடக்க இல்லையோ எண்டு.. அதுல குழம்பி உங்களையும் நோகடிச்சிட்டன்..” என்று அவள் சொன்னபிறகுதான் சற்றே அமைதியானான் அவன்.

 

“சரி விடு! நானும் அப்படி நடந்திருக்கக் கூடாதுதான். ஆனா, ஏதாவது பிடிக்காட்டி சொல்லு மயூரி. அதைவிட்டுட்டு கதைக்காம இருக்காத!” என்றுவிட்டு, “அம்மாவும் அப்பாவும் சுகமா இருக்கினமா?” என்று, அவளின் பெற்றவர்களைப் பற்றி விசாரித்தான்.

 

அவன் கேட்டதுமே மளுக் என்று கண்கள் குளமாகிற்று. தொண்டை அடைக்க அம்மாவின் உடல் நிலையைப் பகிர்ந்துகொண்டாள். “எனக்கு ஏனோ பயமா இருக்கு தீபன்.” சொல்லும்போதே உடைந்துபோனாள். அவளை ஆட்டிப்படைக்கும் இனம் புரியாத பயத்தை, நந்தினியிடம் கூட பகிரமுடியாத கலக்கத்தை அவனிடம் பகிர்ந்துகொண்டாள் மயூரி.

 

அந்தக்கணமே பறந்து சென்றாவது அவளருகில் அமர்ந்து அவளைத் தேற்றிவிட பரபரத்துப் போயிற்று அவன் மனது. அது முடியாமல் போனதில், “சும்மா கண்டதையும் நினைச்சுப் பயப்படுறேல்ல மய்யு. அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல மாறிடும். பழைய மாதிரி அம்மா எழும்பி நடப்பா பார். நீ அழுது அம்மா அப்பாவை இன்னும் கவலைப்படுத்தாத. சரியா?” குழந்தைக்கு எடுத்துச் சொல்வதுபோல எடுத்துச் சொன்னான் அவன்.

 

“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டாள் அவள். அவன் சொன்னதாலேயே அப்படியே நடந்துவிடும் என்கிற ஒரு நம்பிக்கை.

 

“சரி! அப்ப உடனே ஒரு செல்பி எடுத்து அனுப்புங்க மய்யுக்குட்டி! உங்கட அழகை நான் ரசிக்கவேணுமே!” என்றதுமே, “உங்களை.. ஏன் தீபன் இப்படி? கதைக்காம இருந்து கொடுமை செய்தீங்க எண்டால் கதைச்சும் கொடுமை செய்யாதீங்க பிளீஸ்! நான் அழவே இல்ல!” என்று படபடத்தவளின் மனநிலை கணத்திலேயே மாறிப்போயிற்று!

 

“இப்படியே இரு! இதுதான் உனக்குப் பொறுத்தமா இருக்கு. அதைவிட்டுட்டு கண்ணீர் சோகம் எல்லாம் செட்டே ஆகேல்ல!” என்றுவிட்டு, வைத்தான் அவன்.

 

 

error: Alert: Content selection is disabled!!