வர்ணம் 10
ராஷியின் மனம் அருளை ஒருமுறை பார்க்க முடியாதா என்று ஏங்கியது. தன்னிடம் தன் உணர்வுகளை மறைத்து விலகிய அந்த எளிய நெசவாளனின் முகம் அவளது மனக்கண்ணில் வந்து போனது.
“பரவாயில்லைங்க அம்மா… அருள்கிட்ட அப்புறமா போன்ல பேசிக்கிறோம். நீங்க உடம்பைப் பார்த்துக்கோங்க,” என்று ராஷி மெல்லிய குரலில் சொன்னாள்.
பார்வதி அம்மாள் சமையலறைக்குச் சென்று, தான் கைப்படச் செய்த முறுக்கு, அதிரசம் மற்றும் புது அரிசியைச் சிறிய பைகளில் கட்டி அவர்களிடம் கொடுத்தார். “பத்திரமா போயிட்டு வாங்கடிம்மா… பண்டிகை முடிஞ்சதும் கண்டிப்பா மறுபடியும் வரணும்,” என்று தாயைப் போல வழியனுப்பி வைத்தார்.
இருவரும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தார்கள். செம்மண் பாதையில் நடந்து செல்லும்போது, ராஷி அருளின் தறிக் கூடத்தையும், அவர்கள் இருவரும் ஒன்றாகச் செலவிட்ட அந்த இனிய தருணங்களையும் திரும்பிப் பார்த்தபடி நடந்தாள்.
‘சொல்லிக்கொள்ளாமல் கிளம்புகிறோம்… அருள் மாலை வந்து பார்த்தால் எப்படி எதிர்வினை ஆற்றுவான்?’ என்ற கேள்வி அவளது நெஞ்சில் அலைமோதியது.
கனத்த இதயத்தோடு ராஷியும் சாருவும் சென்னைக்கான பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்.தனது அப்பாவிற்குப் பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதால், தான் சென்னைக்குத் திரும்பும் விஷயத்தை ராஷி யாரிடமும் சொல்லவே இல்லை.
இரவுப் பயணத்திற்குப் பிறகு, விடியற்காலையில் பேருந்து கோயம்பேடு வந்தடைந்தது. அங்கிருந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து நேராகத் தன் வீட்டின் வாசலில் வந்து இறங்கினாள்.
காலையிலேயே வீட்டின் கதவை அடைத்துக்கொண்டு பூசை அறையில் விளக்கேற்றி வைத்திருந்தார் அவளது தாய் குமாரி. விளக்கேற்றி முடித்துவிட்டு வந்த நேரம், வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டது.
“இவ்வளவு விடியற்காலையில யாருப்பா பெல்லை அழுத்துறது?” என்ற யோசனையுடனும் முணுமுணுப்புடனும் குமாரி வந்து கதவைத் திறந்தார்.
கதவு திறந்த அடுத்த நொடி… “குமாரிம்மா…” என்று சந்தோஷத்தில் கத்தியபடி ராஷி கதவை நோக்கிப் பாய்ந்தாள்!
மூன்று நீண்ட மாதங்களுக்குப் பிறகு, கிராமத்து நெசவுப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திடீரெனத் தன் கண்முன்னே வந்து நிற்கும் மகளைப் பார்த்த குமாரியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“ராஷி… செல்லம்!” என்று பூரிப்பில் அலறியவர், தன் மகளைத் தழுவி, மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.
“எப்படி டி இருக்க? ஒரு வார்த்தை வரேனு சொல்லவே இல்லையேடி …இப்படி திடீர்னு வந்து நிக்கிற?” என்று ஆனந்தக் கண்ணீருடன் மகளது முகத்தை வருடி முத்தமிட்டார்.
“அப்பாவுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் சொல்லாம வந்தேன் மா! அப்பா எங்க?” என்று வீட்டின் உள்ளே ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தாள் ராஷி.
வழக்கம் போலக் காலை நேர நடைப்பயிற்சிக்காக மாடியிலிருந்து புகழ் எழுந்து கீழே வந்தார். வரவேற்பறையில் பையோடு நின்றிருந்த தன் மகளைப் பார்த்த கணமே, அவர் அப்படியே அதிர்ந்துபோய் உறைந்து நின்றார்.
“ராஷி…”
அவர் வாயிலிருந்து மெல்லிய முணுமுணுப்பாய் வந்த வார்த்தை, அடுத்த கணமே பெரு மகிழ்ச்சியாக மாறியது. பின்னர் வேகமாக வந்து, தன் மகளை இறுக்கமாகத் தழுவிக் கொண்டார்.
“எப்படிடி இருக்க என் செல்லம்? உடம்பெல்லாம் சௌக்கியமா? ஒரு வார்த்தை சொல்லாம இப்படி திடீர்னு வந்து நிக்கிற?” என்று பதற்றமும் பாசமும் கலந்த குரலில் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே மகளின் தலையை வருடி உச்சி முகர்ந்தார்.
புகழோ கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர். பிடிவாதமாக நினைத்திருந்தால் தன் மகளை எந்த ஒரு ஆடம்பர வாழ்க்கையிலும் மிதக்க வைத்திருக்க முடியும். ஆனால், தந்தையின் பணத்தின் நிழலில் வாழாமல், தன் சொந்த லட்சியத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக, சகல வசதிகளையும் துறந்து எங்கோ ஒரு தொலைதூரக் கிராமத்திற்குச் சென்று நெசவுத் தொழிலைக் கற்றுக்கொள்ள ராஷி துணிந்தாள்.
ஒரு கோடீஸ்வர வீட்டுப் பொண்ணாக இருந்தும், அந்தச் சிரமமான கிராமத்து வாழ்க்கையையும் நெசவுப் பயிற்சியையும் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டு, தன் இலக்கை நோக்கி ஓடும் மகளின் ஆர்வத்தையும் உழைப்பையும் நினைத்துப் பார்த்த புகழோவுக்கு மனமெல்லாம் பெருமிதத்தால் நிறைந்தது.
“அப்பா, உங்களையும் அம்மாவையும் பொங்கல் விடுமுறைக்கு ஆச்சரியப்படுத்தத்தான் சொல்லாம வந்தேன்!” என்று ராஷி புன்னகையோடு கூற, தன் மகளின் தன்னம்பிக்கையைக் கண்டு புகழோ பெருமையோடு அவளை மீண்டும் அணைத்துக்கொண்டார்.
கிராமத்துப் புதுப் மனிதர்கள், அருளின் மீதான இனிய நினைவுகள், அதே சமயம் பெற்றவளின் இந்த மிதமிஞ்சிய பாசம் என ராஷியின் சென்னை வருகை ஒரு புதிய உணர்ச்சிப் பூர்வமான புயலோடு தொடங்கியது!
நெசவாளர் சங்க மீட்டிங் முடிந்து, இரவு வெகுநேரம் கழித்துதான் அருள் வீட்டிற்குத் திரும்பியிருந்தான்.
களைப்போடு வந்து அமர்ந்தவனுக்குப் பார்வதி அம்மாள் சூடான உணவைப் பரிமாறினார். சாப்பிட்டுக்கொண்டே, அன்று மீட்டிங்கில் நடந்த விஷயங்களை, நெசவாளர்களுக்குக் கிடைக்கவிருக்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றி தன் அப்பா முத்தையாவிடமும் அம்மாவிடமும் அருள் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது, அவனுக்குச் சோற்றை மடித்துப் பரிமாறிய பார்வதி அம்மாள், இயல்பான குரலில், “அப்புறம்ப்பா… நம்ம ராஷி பாப்பாவும் சாருவும் ஊருக்குக் கிளம்பிப் போயிட்டாங்கப்பா,” என்றார்.
“என்னது… ஊருக்குப் போயிட்டாங்களா?!”
அருளின் நெஞ்சில் இடி விழுந்தது போல் இருந்தது. கையில் இருந்த உணவை அப்படியே நிறுத்திவிட்டான். அவனுள் ஏதோ ஒன்று சட்டென்று உடைந்து, பதைபதைத்துப்போனான். ‘சொல்லிக்கொள்ளாமல் கூடவா போய்விட்டாள்? ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை என்னிடம் சொல்லத் தோன்றவில்லையா?’ என்ற கேள்வி அவனைக் குடைந்தது.
ஆனால், தன் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியையும் தடுமாற்றத்தையும் பெற்றோருக்குக் காட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். உடனே தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தொண்டையைச் செருமி, “ஓ… அப்படியா… பொங்கலுக்கு ஊர்ல குடும்பத்தோட பண்டிகை கொண்டாடப் போயிருக்காங்களாக்கும்,” என்று எதுவுமே நடக்காதது போலக் காட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்தான்.
ஆனால், அன்று இரவு அருளுக்குத் தூக்கம் வரவில்லை. தறிக் கூடத்துப் பலகையில் சாய்ந்து படுத்திருந்தவனுக்கு, ராஷி அமர்ந்திருந்த இடமும், அவள் தறியைக் தொட்டுப் பழகிய அந்த நொடிகளும், மழை நாளில் அவளது கைகள் தன் கைகளைப் பற்றிய அந்தச் சிலிர்ப்பான தருணமுமே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தன.
பொங்கல் பண்டிகையும் வந்தது. ஊரெங்கும் கரும்பும், பொங்கலுமாக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால், அருளின் மனது மட்டும் அந்தத் தறிக் கூடத்து நிசப்தத்திலேயே கிடந்தது.
பொங்கல் முடிந்து, மேலும் இரண்டு நாட்கள் கடந்து சென்றன.
நாள்கள் நகர நகர அருளின் தவிப்பு மிதமிஞ்சியது. தினமும் காலையில் எழுந்ததுமே, ‘இன்றாவது ராஷி வந்துவிடுவாளா?’ என்ற எதிர்பார்ப்போடு தெருவின் முனையைப் பார்ப்பான். தறி ஓசையின் நடுவே யாராவது நடந்து வரும் சத்தம் கேட்டால், அது ராஷியாகத்தான் இருக்கும் என்று ஓடிவந்து எட்டிப் பார்ப்பான். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
“அடச்சே… போன் நம்பரையாவது வாங்கி வச்சிருக்கலாம்… அவங்ககிட்ட ஒரு வார்த்தை கேக்குறதுக்காவது வழி இருந்திருக்கும்,” என்று தன் மடத்தனத்தை நினைத்துத் தன்னைத்தானே நொந்துகொண்டான்.
அவள் ஒரு பெரிய இடத்துப் பெண், தங்களுக்குள் எந்தப் பந்தமும் இல்லை என்று தன் மனதை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றாலும், கடந்த ஐந்து நாட்களாக அவளது பிரிவு அருளைப் பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது. அவளது சிரிப்பும், அந்த அழகிய விழிகளும், அவன் மீது அவள் காட்டிய அன்பும் அவனுள் காதலாக அல்ல… அவனது மூச்சாகவே மாறியிருந்தது!
அந்த ஐந்து நாட்களும் அவனுக்கு ஒவ்வொரு நொடியும் நரகமாக நகர்ந்தன. அவள் இல்லாத அந்தத் தறிக் கூடம் அவனுக்குப் பாழ்நிலமாகத் தோற்றமளித்தது!ஐந்து நாட்கள்… பத்து நாட்கள் என நாட்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து, இரண்டு முழு வாரங்கள் கடந்திருந்தன. அருளின் மனது ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவித்துச் சோர்ந்து போயிருந்தது.
அன்று மதிய வேளை. அருள் வீட்டின் பின்புறம் உள்ள சாயப்பட்டறையில், புதிய பட்டு நூல்களுக்குச் சாயம் காய்ச்சித் தோய்க்கும் தீவிரமான வேலையில் ஈடுபட்டிருந்தான். கைகளில் சாயம் படிந்திருக்க, புகையும் வெப்பமுமாக அவன் வேலை செய்துகொண்டிருந்ததால், வீட்டின் முன் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை.
அப்போதுதான், வீட்டின் வாசலில் அந்தச் சத்தம் கேட்டது!
இரண்டு வாரங்கள் கழித்து, தோழிகள் இருவரும் தங்கள் பயணப் பைகளோடு மீண்டும் அந்த வீட்டின் வாசலில் வந்து இறங்கினார்கள்.
வாசலில் அவர்களைப் பார்த்ததும் பார்வதி அம்மாள் ஓடிவந்து, “அடடே… வாங்கம்மா, வாங்க! என்னடி பாப்பா… ரெண்டு நாள்ல வந்துடுவோம்னு சொல்லிட்டு இவ்வளவு நாளா ஆக்குனீங்க? நாங்க கூட இனிமே வரமாட்டீங்களோனு பயந்தே போயிட்டோம்!” என்று அன்போடு ஆதங்கப்பட்டார்.
சாருவும் ராஷியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.
“அய்யோ அம்மா… ரொம்ப நாள் கழிச்சுச் சென்னைக்குப் போனதால, வீட்ல சொந்தக்காரங்க, அப்பா அம்மா யாரையுமே எங்களை விடவே இல்லை. ‘இன்னும் ரெண்டு நாள் இருங்க, இன்னும் ரெண்டு நாள் இருங்க’னு சொல்லி அப்படியே த தங்க வச்சுட்டாங்கக்கா… அதான் வர லேட் ஆயிடுச்சு,” என்று சாரு நிலைமையைச் சாமர்த்தியமாகச் சமாளித்தாள்.
ராஷியின் கண்கள் சுற்றிலும் துழாவி அருளைத் தேடின. அவளது உள்ளம் அவனைக் காண்பதற்காகத் தவித்துக்கொண்டிருந்தது.
“அம்மா… அருள் எங்க?” என்று ராஷி மெல்லிய குரலில், தன் ஆர்வத்தை மறைக்க முயன்றபடி கேட்டாள்.
“அவனாமா… பின்னாடி சாயப்பட்டறையில நூல் தோாய்ச்சிக்கிட்டு இருக்கான்டி பாப்பா. நீங்க வந்த விஷயம் அவனுக்கு இன்னும் தெரியாது,” என்றார் பார்வதி. “சரி, நாம வீட்டுக்குப் போவோம்” என்று இருவரும் பேசிக்கொண்டே, தாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.
பத்து நாட்களுக்கு மேலாகப் பூட்டியே கிடந்ததால், வீடு முழுவதும் லேசாகத் தூசி படிந்து காணப்பட்டது. இருவரும் பைகளை ஓரமாக வைத்துவிட்டு, ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டம் வரச்செய்து, வீட்டைத் துடைத்துச் சுத்தம் செய்தனர்.
வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, களைப்பில் ராஷி கட்டிலில் அமர்ந்து ரெஸ்ட் எடுக்கத் தொடங்கிய நேரத்தில், “அப்பாடி… உடம்பெல்லாம் ஒரே மினுமினுன்னு பிசுபிசுப்பா இருக்குடி. நான் பின்னாடி தோட்டத்தில் இருக்குற கிணத்துல போய்க் குளிச்சிட்டு வர்றேன்,” என்று சொல்லிவிட்டுச் சாரு டவலை எடுத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் போய்விட்டாள்.
ராஷி மெல்லக் கண்களை மூடிச் சாய்ந்த நொடி… வீட்டின் முன்கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது.
‘யார் இந்த நேரத்தில்?’ என்ற யோசனையோடு ராஷி எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
கதவைத் திறந்த அடுத்த நொடி… அங்கே ருத்ரமூர்த்தியாக அருள் நின்றிருந்தான்!
அவனது கண்களில் சிவப்பும், கடந்த பதினைந்து நாட்களாக அனுபவித்த வேதனையின் கொதிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன. ராஷியைப் பார்த்ததும் எதுவும் பேசாமல், புயல் போல வீட்டின் உள்ளே பாய்ந்து வந்தான்.
வேகமாக உள்ளே வந்தவன், சுற்றிலும் தன் கூர்மையான பார்வையால் சாரு இருக்கிறாளா என்று தேடினான். அவள் அங்கே இல்லை என்பதை உறுதிசெய்துகொண்ட அடுத்த கணமே, அவனது நிதானம் முற்றிலும் கைநழுவிப் போனது!
சட்டென்று ராஷியின் கையைப் பிடித்து வளைத்து, அவளை அங்கிருந்த சுவரோடு சேர்த்துச் சாய்த்து இறுக்கினான்!
அவளது உடலும் அவனது கம்பீரமான உடலும் உரசி நிற்க, அருளின் மூச்சுக்காற்று ராஷியின் முகத்தில் சூடாகப் பட்டது. அவனது முகம் அவளது காதோரம் நெருங்கி வர, அவனது குரல் கோபத்திலும் தவிப்பிலும் நடுங்கியது.
“இத்தனை நாள் எங்குடி போனாய்?!” என்று அவளது காதோரத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்!
அருளின் இந்த எதிர்பாராத அதிரடியிலும், அவன் வாயிலிருந்து வந்த அந்த அதிகாரப்பூர்வமான “டி” என்ற வார்த்தையிலும் ராஷி முற்றிலும் திகைத்துப் போனாள்!
அவனது நெஞ்சின் வேகமான துடிப்பும், அவளது கைகளைப் பற்றியிருந்த அவனது பிடியின் இறுக்கமும்… தன்னைக் காணாமல் அவன் எந்த அளவுக்குப் பைத்தியமாகியிருக்கிறான் என்பதை அவளுக்கு எந்த ஒளிவுமறைவுமின்றி வெளிச்சம்போட்டுக் காட்டின!
வர்ணம் மிளிரும்….

