காதல் நெய்த வர்ணம் – 13

வர்ணம் 13

அருளின் வேதனையைக் கண்டு பொறுக்க முடியாத ராஷி, மெல்ல அவனருகே சென்றாள்.

சாருவும் பார்வதி அம்மாளும் கவலையோடு நின்றிருக்க, ராஷி மிகவும் அமைதியான, அதே சமயம் உறுதியான குரலில் பேசத் தொடங்கினாள்.

“அருள்மொழிவர்மன் சார்…”

அவளது அந்த அழைப்பில் அருள் நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்களில் தேங்கியிருந்த ஏமாற்றத்தை ராஷியின் பார்வைகள் துடைப்பது போல் இருந்தன.

“உங்க படைப்போட அருமை தெரியாத ஒரு கூட்டத்துக்கிட்ட போயி, உங்க கலையை நிறுக்கப் பார்த்தது உங்க தப்புதான். போலித்தனத்தை விரும்பறவங்களுக்கு அசலான கைத்தறியோட மதிப்பு எப்படித் தெரியும்? ஒரு வைரத்தோட மதிப்பு காய்கறி விக்கிறவனுக்குத் தெரியாது அருள்… அதை ஆபரணமா மாத்துற ஜுவல்லருக்குத்தான் தெரியும்.”

ராஷியின் அந்த வார்த்தைகள் அருளின் நெஞ்சில் சட்டென்று ஒரு புது நம்பிக்கையை பாய்ச்சின.

“மெஷின்ல நிமிடத்துல நெய்யுற சேலையும், நீங்க உங்க ஒவ்வொரு மூச்சுக்காற்றையும் நூலாக்கி நெய்யுற இந்தச் சேலையும் ஒண்ணாக முடியாது. இப்போ இருக்கிற தலைமுறைக்கு இதோட மதிப்பு புரியலனா என்ன… புரிய வைக்க வேண்டியதுதானே? கண்காட்சியில வாங்குறவங்க மட்டும்தான் உங்க வாடிக்கையாளர்களா? ஏன், உலகத்துக்கே உங்க நெசவைக்கொண்டு போக வழியே இல்லையா என்ன?”

ராஷி பேசப் பேச அருளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவனது தவிப்பையும் சோகத்தையும் போக்க அவள் காட்டிய அந்த அக்கறையும், அவளது அறிவார்த்தமான யோசனையும் அவனது மனப் பாரத்தை மொத்தமாக இறக்கி வைத்தது.

“நாங்க இருக்கோம் அருள். இந்தத் தலைமுறைக்கு ஏத்த மாதிரி உங்க பாரம்பரிய நெசவை எப்படி சந்தைப்படுத்துறதுனு சாருவும் நானும் பிளான் பண்றோம். உங்க உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காம நாங்க விடமாட்டோம்,” என்று ராஷி அழுத்தமாகச் சொன்னாள்.

அவள் தனக்காக, தன் கலைக்காக நின்ற அந்த நொடியில் அருள் மீண்டும் அவளிடம் தன்னை மொத்தமாகத் தோற்றான். பழைய காயங்கள், சந்தேகங்கள் எல்லாம் காற்றில் பறந்துபோக, அவனது பார்வையில் மீண்டும் பழைய காதலும் நன்றியும் பொங்கி வழிந்தன.

சாரு புன்னகையோடு, “ஆமாண்ணா! ராஷி சொல்றதுதான் சரி. நவீன உலகத்துக்கு நம்ம பாரம்பரியத்தை எப்படி கொண்டு போகணும்னு எங்களுக்குத் தெரியும். நீங்க கவலைப்படாதீங்க!” என்று ஆமோதித்தாள்.

பார்வதி அம்மாள் தன் மகனின் முகம் தெளிவடைந்ததைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார்.

அன்று இரவு…

அருள் தன் தறிக்கூடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு அமர்ந்திருந்தான். பகலில் ராஷி பேசிய வார்த்தைகள் அவனுள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. ‘எவ்வளவு பெரிய மனசு அவளுக்கு… நான் நான் காதலை சந்தேகப்பட்டும், என் கலைக்கு ஒரு கஷ்டம்னு வந்ததும் முதல் ஆளா வந்து நிக்கிறாளே!’ என்று அவளை நினைத்து உருகிப் போனான்.

அப்போது, தறிக்கூடத்து நிழலில் ஒரு உருவம் தெரிந்தது. ராஷிதான் அங்கு வந்து நின்றிருந்தாள்.

அருள் மெல்ல எழுந்து அவள் முன் வந்தான். இருவருக்கும் இடையே அந்த அமைதியான இரவில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.

“ராஷி…” என்று அருளின் குரல் உடைந்து ஒலித்தது. “அன்னைக்கு நான் உன்னைக் காயப்படுத்தியிருக்கக் கூடாது. உன் அன்பைச் சந்தேகப்பட்ட என்னோட இந்த முட்டாள்தனத்தை மன்னிச்சுடுடி…” என்று தன் இரு கரங்களையும் கூப்ப முற்பட்டான்.

ராஷி சட்டென்று அவனது கரங்களைப் பற்றித் தடுத்தாள். அவளது கண்களில் லேசான கண்ணீரும், அதையும் தாண்டிய காதலும் மின்னியது!

ராஷி அவனது கரங்களை இறுகப் பற்றியபடி, அவனது விழிகளை நேராய்ப் பார்த்தாள்.

“இனிமே ஒருதடவை கூட என் அன்பையோ, நான் வந்த நோக்கத்தையோ சந்தேகப்பட்டுப் பேசக் கூடாது அருள்… நான் சென்னைக்கு ஓடிப்போகவோ, உங்களை ஏமாத்தவோ இங்க வரல. உங்க உழைப்பையும் உங்க நேர்மையையும் பார்த்துதான் என் மனசு உங்களை விரும்புச்சு,” என்று மென்மையான, அதே சமயம் அழுத்தமான குரலில் சொன்னாள்.

அருளின் கண்கள் கலங்கின. அவளது கைகளின் கதகதப்பில் அவனது இத்தனை நாள் தவிப்பும், ஏமாற்றமும் கணப்பொழுதில் கரைந்து போயின.

“இனிமே என் உயிர் போனாலும் அப்படி யோசிக்க மாட்டேண்டி… சென்னைக்கு போனப்போ உன்னை விட்டுப் பிரிஞ்சு இருந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகமா இருந்துச்சு. என் கலையை விட, என் உழைப்பை விட… எனக்கு நீதான்டி முக்கியம்,” என்று அருள் தழுதழுத்த குரலில் சொல்லி, அவளது கரங்களைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவனது நெஞ்சுக்கூட்டின் வேகமான துடிப்பை உணர்ந்த ராஷியின் முகத்தில் அழகான புன்னகை மலர்ந்தது. இத்தனை நாட்களாக இருவருக்குள்ளும் இருந்த மௌனப் போரும், விலக்கமும் அந்த இரவின் அமைதியில் முற்றிலும் முடிவுக்கு வந்தன.

“சரி… முதல்ல அந்தச் சோக மூஞ்சியை மாத்துங்க அருள்மொழிவர்மன் சார்! நாளைல இருந்து நாம புதுசா வேலை செய்யப்போறோம்,” என்று ராஷி லேசான கேலியோடு சொன்னாள்.

அருள் தன் கலங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “புது வேலையா? என்ன பண்ணப்போறோம் ராஷி?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

“உங்க பாரம்பரிய நெசவை ஆன்லைன் மூலமா உலகத்துக்கே கொண்டு போகப்போறோம்! சென்னை கண்காட்சியில இருக்கிறவங்க உங்க கலைக்கு மதிப்பு கொடுக்கலனா என்ன… உலகத்துல இருக்கிற கலை ரசிகர்களுக்கு இதோட உண்மையான மதிப்பை நாம புரிய வைப்போம். சாருவும் நானும் சேர்ந்து ஒரு வெப்சைட், அப்புறம் சோசியல் மீடியா பேஜ் ஆரம்பிச்சு உங்க சேலைகளை டிஜிட்டல் முறையில புரமோட் பண்ணப்போறோம்,” என்றாள் ராஷி.

அருளுக்கு அவள் சொல்வது முற்றிலும் புதிய உலகமாக இருந்தாலும், அவளது தன்னம்பிக்கையும் திட்டமும் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

“எனக்கு இதெல்லாம் புதுசுடி… ஆனா நீ கூட இருந்தா நான் எதையும் செய்வேன்,” என்று அருள் காதலோடு சொன்னான்.

மறுநாள் காலை…

தறிக்கூடத்தில் ஒரே உற்சாகமயமாக இருந்தது. சாரு தன் லேப்டாப்போடு வந்து உட்கார, ராஷி அருளின் கைத்தறிச் சேலைகளை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுக்கத் தொடங்கினாள். அருள் தறியை இயக்கும் அழகையும், நூல்களுக்குச் சாயம் காய்ச்சும் நேர்த்தியையும் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

பார்வதி அம்மாளும் முத்தையா ஐயாவும் பிள்ளைகள் செய்வதை ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அருள்… இந்தச் சேலையை அப்படியே கையில பிடிங்க,” என்று ராஷி கேமராவைப் பார்த்தபடி சொல்ல, அருள் சேலையைப் பிடித்தபடி ராஷியையே பார்த்தான்.

கேமரா கிளிக் ஆன அந்த நொடியில்… அருளின் கையில் பாரம்பரிய நெசவின் பெருமையும், அவனது பார்வையில் ராஷி மீதான ஆழமான காதலும் அழகாகப் பதிவாகியிருந்தன!தினமும் தறிக்கூடத்தில் அருள் உழைக்கும் விதத்தையும், சாயம் காய்ச்சி பட்டு நூல்களைப் பக்குவப்படுத்தும் அழகையும், சேலைகளின் அரிய வேலைப்பாடுகளையும் சாருவும் ராஷியும் நுணுக்கமாக வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துச் சேமித்து வைத்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல, அவர்களிடம் ஏராளமான அருமையான வீடியோ பதிவுகள் சேர்ந்தன. ஆனால், அந்தக் கிராமத்தில் போதிய இணைய வசதியோ அல்லது அந்த வீடியோக்களைத் தரமாகத் தொகுத்து உலகிற்கு வெளிப்படுத்தும் தொழில்நுட்ப வசதிகளோ இல்லை.

ஒருநாள் மாலை, எல்லாரும் தறிக்கூடத்தில் அமர்ந்திருந்தபோது சாரு விஷயத்தைப் பற்றிப் பேசினாள்.

“ராஷி… நாம எடுத்து வச்சிருக்க வீடியோக்கள் எல்லாமே வேற லெவல்ல வந்துருக்குடி! ஆனா, இங்க இருக்குற நெட்வொர்க்கையும் லேப்டாப்பையும் வச்சு இதைச் சரியான முறையில எடிட் பண்ணி சோசியல் மீடியால டிரெண்ட் பண்ண முடியாது. சென்னைக்கு போனாதான் இதையெல்லாம் முறையா எடிட் பண்ணி, ஒரு நல்ல வெப்சைட் லான்ச் பண்ண முடியும்,” என்றாள் சாரு.

ராஷி யோசனையோடு அருளைப் பார்த்தாள். “ஆமா அருள்… சாரு சொல்றது உண்மைதான். நாம பண்ணப்போற இந்த முயற்சி சும்மா சாதாரணமா இருக்கக் கூடாது. உலகத்துல இருக்குற எல்லாரோட கவனத்தையும் ஈர்க்கணும்னா, சென்னைக்கு போய்தான் இதோட எடிட்டிங் வேலைகளைப் பண்ணி அப்டேட் பண்ணனும்,” என்றாள்.

அருளின் முகத்தில் லேசான தயக்கம் குறுக்கிட்டது. “சென்னைக்கா… திருப்பியுமா?” என்று மெல்லக் கேட்டான்.

ராஷி அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்டு புன்னகைத்தாள். “பயப்படாதீங்க அருள்மொழிவர்மன் சார்! அன்னைக்கு நீங்க ஏமாற்றத்தோட வந்தீங்க… ஆனா இந்தத் தடவை உங்க உழைப்புக்கான வெற்றியோட வரப்போறீங்க. இந்த முறை நாம மூணு பேருமே சென்னைக்கு போறோம். எங்களோட சேர்ந்து நீங்களும் மெட்ராஸுக்கு வாங்க,” என்றாள் உறுதியான குரலில்.

“நானா… நான் அங்க வந்து என்ன பண்ணப்போறேன்?” என்று அருள் ஆச்சரியமாகக் கேட்டான்.

“உங்க நெசவோட கதையை உங்க வாயாலயே உலகத்துக்குச் சொல்லப்போறீங்க! அங்க எடிட்டிங் நடக்கும்போது கூடவே நீங்களும் இருந்தாதான், அந்த வீடியோவுல உண்மையான உணர்வு வரும். அதுமட்டுமில்லாம, சென்னை பெரிய பெரிய டிசைனர்கள்கிட்ட உங்க சேலைகளைக் காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்று ராஷி திட்டம் போட்டாள்.

முத்தையா ஐயாவும், “போயிட்டு வாப்பா அருள்… பிள்ளைக சொல்றதுலயும் நியாயம் இருக்கு. ஊர்ல இருக்குற தறியை நான் பாத்துக்குறேன்,” என்று தைரியம் சொன்னார்.

பழைய நினைவுகளால் தளர்ந்துபோன அருளுக்கு, ராஷியின் கரம் கொடுத்த நம்பிக்கையும் அவளது திட்டமும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன.

“சரி… நீ சொல்றபடியே செய்வோம்! என் நெசவோட அருமையை உலகத்துக்குக் காட்டுவோம்,” என்று அருள் உற்சாகத்தோடு ஒப்புக்கொண்டான்.

மூவரும் சென்னைக்குப் புறப்படத் தயாராகினர். அருள்மொழிவர்மனின் பாரம்பரிய நெசவு, ராஷியின் காதலோடும் நவீனத் தொழில்நுட்பத்தோடும் இணைந்து சென்னை மண்ணில் ஒரு புதிய புரட்சியைப் படைக்கப் புறப்பட்டது!ராஷியும் சாருவும் தங்களின் ஆராய்ச்சி மற்றும் களப்பணிக்காகச் சிரசு மலைக் கிராமத்திற்கு வந்து சேர்ந்‌து, அதற்குள் ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன.

அந்த ஆறு மாத காலத்தில், அருளின் தறிக்கூடம் தான் அவர்களின் உலகமாக மாறியிருந்தது. அருள் அவர்களுக்கு நெசவுக் கலையை வெறும் தொழிலாக இல்லாமல், தன் மூச்சாகவும் உணர்வாகவும் கற்றுக் கொடுத்திருந்தான். அருள் நுணுக்கமாகக் கற்பித்த ஒவ்வொரு நெசவு முறையும், நூல்களுக்குச் சாயம் காய்ச்சும் பாரம்பரிய உத்திகளும், தறியை இயக்கும் நேர்த்தியும் என அத்தனை விஷயங்களையும் சாருவும் ராஷியும் தங்கள் கேமராக்களில் படம்பிடித்தும், குறிப்புகளாகக் குறித்து வைத்தும் சேமித்திருந்தார்கள்.

இப்போது அந்தத் தரவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நவீன வடிவில் ஒரு முழுமையான ஆவணமாக மாற்றுவதற்கான நேரம் வந்தது.

மலைக் கிராமத்தின் அமைதியில், தங்களின் மடிக்கணினியில் உட்கார்ந்து, தாங்கள் சேகரித்த அத்தனை புகைப்படங்கள், வீடியோக்களின் முக்கியக் காட்சிகள், அருளின் விளக்கவுரைகள் என அனைத்தையும் அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்து அடுக்கும் பணியில் இறங்கினார்கள்.

அருளின் ஒவ்வொரு அசைவிலும் இருந்த நேர்த்தி, அவன் சேலைகளில் கொண்டு வந்த பாரம்பரிய டிசைன்களின் வரலாறு, நூல்களின் ரகசியச் சேர்க்கை என அனைத்தையும் தொழில்நுட்ப ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் தொகுக்க அவர்களுக்கு முழுதாக ஒரு வாரம் தேவைப்பட்டது. தூக்கமில்லாத இரவுகளுக்குப் பிறகு, அந்த வண்ணப் பக்கங்களைக் கொண்ட கோப்பு முழு வடிவம் பெற்றது.

ஆனால், அதைத் தரமாக அச்சிட்டு அருளின் கைகளில் கொடுக்க வேண்டும் என்பதால், இருவரும் சிரசா மலையிலிருந்து கீழே இறங்கி, அருகில் இருந்த டவுனுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறிய கணினி மையத்தில் கொடுத்து, பளபளக்கும் ஆஃப்செட் பேப்பரில் அழகான வண்ண அச்சுப் பிரதிகளாக எடுத்து, அதை ஒரு நேர்த்தியான ஸ்பைரல் பைண்டிங் புத்தகமாக மாற்றிக் கொண்டு கிராமத்திற்குத் திரும்பினார்கள்.

மாலை நேரம்… தறிக்கூடத்தில் அருள் வழக்கம்போல நெசவு வேலையை முடித்துவிட்டு, நூல்களை சரி செய்து கொண்டிருந்தான்.

ராஷியும் சாருவும் மெல்ல அவனருகே சென்றார்கள். ராஷியின் கைகளில் அந்தப் பிரம்மாண்டமான கோப்பு இருந்தது.

வர்ணம் மிளிரும்….

error: Alert: Content selection is disabled!!