வர்ணம் 14
“அருள்மொழிவர்மன் சார்…” ராஷியின் மெல்லிய குரலில் ஒருவிதமான பெருமிதம் கலந்திருந்தது.
அருள் நிமிர்ந்து பார்த்து, “வா ராஷி… என்ன இது? கையில ஏதோ பெரிய புஸ்தகம் மாதிரி வச்சிருக்கீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
சாரு புன்னகையோடு, “அண்ணா, நாங்க சிரசாமலைக்கு வந்து ஆறு மாசம் ஆச்சுல… இந்த ஆறு மாசத்துல நீங்க எங்களுக்குக் கத்துக்கொடுத்த நெசவுக் கலை, அதோட நுணுக்கம் எல்லாத்தையும் வச்சு ஒரு பைல் ரெடி பண்ணியிருக்கோம். இதோ பாருங்க!” என்று சொல்லி, ராஷியின் கையிலிருந்த கோப்பை வாங்கி அருள் முன் நீட்டினாள்.
அருள் தன் கைகளைத் துண்டால் துடைத்துக் கொண்டு, மிகுந்த தயக்கத்துடனும் மரியாதையுடனும் அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டான்.
அதன் முகப்புப் பக்கத்திலேயே, அருள் தறியில் அமர்ந்து மிக ஆழமாக நூலை ஊடுருவும் ஒரு கலை நயமிக்க புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. கீழே “அருள்மொழிவர்மனின் பாரம்பரியக் கைத்தறி – ஓர் கலை ஆவணம்” என்று கம்பீரமாக எழுதப்பட்டிருந்தது.
அருள் மெல்ல முதல் பக்கத்தைப் பிரித்தான்.
அடுத்தடுத்த பக்கங்களைப் பார்க்கப் பார்க்க, அவனது கண்கள் அகல விரிந்தன! அகில உலகத் தரத்திலான புகைப்படங்கள்; ஒவ்வொரு பக்கத்திலும் அருள் கற்றுக்கொடுத்த நெசவு உத்திகள், வண்ணப் பிரிகைகள், பாவு நூலைச் சரிசெய்யும் முறைகள் என அனைத்தும் அட்டவணைப்படுத்தப்பட்டு, விளக்கப் படங்களுடன் அழகாக அச்சடிக்கப்பட்டிருந்தன.
அருள் திகைத்துப் போய் நின்றான்!
அவனது உதடுகள் லேசாக நடுங்கின. பக்கங்களை வேகமாகத் திருப்பியவனுக்குப் பேச்சு மூச்சே வரவில்லை. தான் சாதாரணமாக, அன்றாட வேலையாகச் செய்து காட்டிய விஷயங்கள் ஒவ்வொன்றும், இப்படி ஒரு வரலாற்று ஆவணமாக, கலைப் படைப்பாகப் பக்கங்களில் மிளிரும் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
“ராஷி… சாரு பாப்பா… இது… இதெல்லாம்…” என்று அருள் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான்.
“என்ன அண்ணா… திகைச்சு போய் நிக்கிறீங்க?” என்று சாரு சிரித்தாள்.
அருள் அந்தப் புத்தகத்தில் இருந்த தன் புகைப்படத்தையும், அதன் கீழே அச்சிடப்பட்டிருந்த அவனது விளக்கங்களையும் உற்றுப் பார்த்தபடி, “நானா… நானா இவ்வளவு விஷயங்களை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன்? எனக்குத் தெரிஞ்ச இந்த எளிய நெசவு வேலைக்குள்ள இவ்வளவு பெரிய கலை இருக்குதா? இதை இப்படியெல்லாம் அழகா மாத்த முடியுமா?!” என்று ஆச்சரியத்தின் உச்சத்தில் வினவினான்.
அவனது குரலில் இருந்த தவிப்பையும், தன் கலையின் மீது அவனுக்கு ஏற்பட்ட புதிய பிரமிப்பையும் பார்த்த ராஷியின் நெஞ்சில் பெருமிதம் பொங்கியது.
“ஆமா அருள்… இதெல்லாம் நீங்க எங்களுக்குக் கத்துக்கொடுத்ததுதான்! உங்க உழைப்பும், உங்க பாரம்பரிய அறிவும் சாதாரணமானது இல்லைங்கறதை நீங்க முதல்ல புரியணும். இந்த ஆவணத்தை வச்சுதான் நாம அடுத்து சென்னைக்கு போயி உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறப்போறோம்,” என்று ராஷி அவனது விழிகளைப் பார்த்து ஆழமானக் குரலில் சொன்னாள்.
அருளுக்குத் தன் கைகளில் இருக்கும் புத்தகத்தைப் பார்ப்பதா அல்லது தன் திறமைக்கு இப்படி ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டிக் கொடுத்திருக்கும் ராஷியைப் பார்ப்பதா என்று தெரியவில்லை.
அவனது கண்களின் ஓரத்தில் லேசாக ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. தன் வாழ்க்கையிலேயே தன் உழைப்பிற்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்ததில்லை என்பதை உணர்ந்தவன், அந்தப் புத்தகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்!அருளின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரையும், அவன் அந்த ஆவணத்தைப் புளகாங்கிதத்தோடு நெஞ்சோடு அணைத்துக்கொண்டதையும் பார்த்த ராஷி, மெல்லிய புன்னகையோடு அவனை நோக்கிப் பேசத் தொடங்கினாள்.
“அருள்… நாங்க நாளைக்கு காலையில ஊருக்குக் கிளம்புறோம். போயிட்டு இதை ஃபர்ஸ்ட் காலேஜ்ல சப்மிட் பண்ணிட்டு, அப்புறம் உங்களுக்குக் கூப்பிட்டுச் சொல்றோம்.”
திடீரென ராஷி ‘சென்னை’ போகிறோம் என்று குறிப்பிட்டதும், அருளுக்கு ஒரு வினாடி உள்ளுக்குள் லேசாகத் திடுக்கென்றிருந்தது.
உண்மையில், ஊருக்குப் போவதைப் பற்றி ராஷி ஒரு வாரத்திற்கு முன்பே அருளிடம் தெளிவாகச் சொல்லியிருந்தாள். ஆனால், அவளது நினைவுகளிலும், நெசவுக் கலையின் நுணுக்கங்களிலுமே மூழ்கியிருந்த அருளுக்கு, நாட்கள் இவ்வளவு வேகமாக ஓடி, அவர்கள் ஊருக்குக் கிளம்பும் நேரமும் வந்துவிட்டதே என்பது இப்போதுதான் உறைத்தது!
அருள் தன் தடுமாற்றத்தைச் சமாளித்துக்கொண்டு, “சரிமா… பத்திரமா போயிட்டு வந்து தகவல் சொல்லுங்க,” என்று ராஷியிடம் மிகவும் மென்மையாகச் சொன்னான்.
அவளது முகத்தில் தெரிந்த அதி தீவிரமான அர்ப்பணிப்பும் அன்பும், பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் அந்த ஆழமான அக்கறையையும் தன்னம்பிக்கையையும் அவனுக்கு மீண்டும் உணர்த்தின. ‘பெண்களை ரொம்ப சுலபமா இடைபோட்டுட முடியாது…’ என்று அருளின் மனம் அவளை எண்ணிப் பெருமிதம் கொண்டது.
அப்போது வரை அமைதியாக இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சாரு, திடீரென அருளைப் பார்த்துத் தன் கைகளைக் கட்டிக்கொண்டு செல்லமாகக் சண்டை போடத் தொடங்கினாள்.
“அதெல்லாம் இருக்கட்டும் வர்மா அண்ணா… இதுவரைக்கும் உங்களுடைய தனித்திறமையான, அந்த ரொம்ப விசேஷமான பட்டுப் புடவையை எங்ககிட்ட காமிச்சதே இல்லையே?!”
சாருவின் அந்தக் கேள்வியைக் கேட்டதும், அருள்மொழிவர்மன் லேசாகப் புன்னகைத்தான்.
“நீங்களும் இதுவரைக்கும் அதைப் பத்திக் கேட்டதே இல்லையே பாப்பா… அதான் காட்டல,” என்று சிரித்துக்கொண்டே இயல்பாகப் பதிலளித்தான்.
சாரு விடவில்லை! தன் போலிப் கோபத்தை முகத்தில் வரவழைத்துக்கொண்டு, “ஏன்ணா… நாங்க கேட்டாதான் காட்டுவீங்களா? அப்ப ‘பாப்பா’ன்னு சும்மா பேருக்குத்தான் கூப்பிடுறீங்களா அண்ணா? உண்மையாவே தங்கச்சியா நினைச்சிருந்தா இந்நேரம் நீங்களே கூப்பிட்டுக் காட்டியிருக்கணும்ல?” என்று நறுக்கென்று கேள்வி கேட்டாள்.
“ஐயோ! அம்மாத் தாயே… ஆள விடுடி தாயே!” என்று பதறிய அருள், சிரித்துக்கொண்டே பாய்ந்து வந்து சாருவின் வாயைக் கையால் பொத்தினான்.
சாரு அவனது கையை விலக்க முயல, தறிக்கூடமே அவர்களின் சிரிப்பொலியால் நிறைந்தது.
அருள் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, சாருவின் தலையைக் கோதி, “என் அக்கா குந்தவையையும், உன்னையும் நான் என்னைக்குமே வேறா நினைச்சதே இல்லை பாப்பா… உன்கிட்ட காட்டாம எனக்கு யார்கிட்ட இருக்கு?” என்று மிகவும் உருக்கமாகச் சொன்னான்.
அவனது குரலில் இருந்த உண்மையான அண்ணன் பாசமும், தன் அக்கா குந்தவையின் மீதான பிரியமும் சாருவின் மனதை நெகிழச் செய்தது.
“வாங்க ரெண்டு பேரும் என் கூட…” என்றபடி அருள் முன்னே நடக்க, ராஷியும் சாருவும் ஆவலுடன் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
வீட்டின் உள்ளே சென்ற அருள், பூசையறைக்குச் சென்றான். அங்கிருந்த சாமி படங்களுக்குப் பக்கத்தில், வழக்கமாகப் பூட்டியே இருக்கும் ஒரு சிறிய மரக்கதவு இருந்தது. அந்த அறையின் கதவை அருள் மெல்லத் திறந்து, விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, இருவரையும் உள்ளே வருமாறு கையசைத்து அழைத்தான்.
அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்த நொடியே, ஒருவிதமான தெய்வீக நறுமணமும், தூய பட்டின் மணமும் கமழ்ந்தது. அந்த அறையின் நடுவே, பாதுகாப்பாக ஒரு பெரிய தேக்குமரப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது!மரப்பெட்டியின் அருகே சென்ற அருள்மொழிவர்மன், ஒரு நொடி தன் இரு கரங்களையும் கூப்பி, கண்களை மூடித் தன் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் மனதார வணங்கினான்.
பின்னர், கவனமாக அந்தத் தேக்குமரப் பெட்டியைத் திறந்தான். அதற்குள் பட்டுத் துணியால் மிகவும் பாதுகாப்பாகப் போர்த்தி வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்று இருந்தது. அதை மிகுந்த பக்தியோடும் பொக்கிஷத்தைப் போலவும் மெதுவாக வெளியே எடுத்தவன்,அங்கிருந்த சிறு பலகையில் அமர்ந்து, போர்த்தப்பட்டிருந்த பட்டுத் துணியை மெல்ல விலக்கி, முதல் புடவையை விரித்துக் காட்டினான்.
அந்தப் புடவையைப் பார்த்த அடுத்த நொடி… ராஷியும் சாருவும் மூச்சடைத்துப் போய், வார்த்தைகளின்றித் திகைத்து நின்றார்கள்!
அங்கு அவிழ்ந்த அந்தப் பட்டுச் சேலை வெறும் துணி அல்ல… ஒரு மனிதனின் வாழ்வியலையே வண்ண நூல்களால் எழுதப்பட்ட காவியம்!
புடவையின் முந்தானையில் ஒரு கணவனும் மனைவியும் திருமணக் கோலத்தில் மணமேடையில் அமர்ந்திருப்பது போல தத்ரூபமாக நெய்யப்பட்டிருந்தது. அடுத்தடுத்த மடிப்புகளில், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது, அவளுக்கு அழகிய குழந்தை பிறப்பது, அந்தப் பிஞ்சு குழந்தை தவழ்ந்து வளர்வது என ஒரு பெண்ணின் தாய்மையின் அற்புதப் பயணம் அத்தனை கலைநயத்தோடு, நூல்களின் இடைவெளியில் உயிரோட்டமாக மிளிர்ந்தது!
இருவரும் ஆச்சரியத்தின் உச்சத்தில் நிற்க, அருள் அடுத்தடுத்துப் புடவைகளைப் பிரித்துக் காட்டத் தொடங்கினான்.
ஒவ்வொரு புடவையும் ஒரு புராணத்தையும், மாபெரும் வாழ்வியல் கதையையும் தன்னுள்ளே தாங்கியிருந்தது.
“அண்ணா… இதெல்லாம்…?” என்று சாரு ஆச்சரியம் தாங்காமல் வினவ முயன்றாள்.
அருள் தன் முன்னோர்களின் நினைவில் கண்கள் பனிக்க, “இது… எங்க அப்பா தன் கையால நெய்தது பாப்பா… இது எங்க தாத்தா காலத்து நெசவு,” என்று முதல் இரண்டு புடவைகளையும் தொட்டுக் காட்டி நெகிழ்ந்தான்.
அதன்பின்னர், கடைசியாக இருந்த ஒரு விசேஷமான பட்டுச் சேலையை மெல்லப் பிரித்து இருவரின் முன்னும் ஏந்திக் காட்டினான்.
“இது… நான் நெய்தது!” என்று அருள் அமைதியான, அதே சமயம் கம்பீரமான குரலில் சொன்னான்.
அந்தப் புடவையைப் பார்த்ததும் ராஷிக்கும் சாருவுக்கும் இதயத் துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது!
அப்படி ஒரு கலைநயம்! உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான ராஜகோபுரம், அதிலுள்ள நுணுக்கமான சிற்பங்களோடு தத்ரூபமாக நெய்யப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக, அந்த பிரம்மாண்டக் கோயிலுக்குள் ஒரு கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்போடு கைகோர்த்துக்கொண்டு உள்ளே நடந்து போவது போன்ற காட்சி… பார்ப்பவர் கண்ணை உறிஞ்சும் வண்ணம் அவ்வளவு ஜீவளையோடு நெய்யப்பட்டிருந்தது!
அந்தப் புடவையைப் பார்த்த ராஷியின் நெஞ்சிற்குள் ஏதோ ஒரு மின்னல் வெட்டியது. அவளது மனதிற்குள் ஒரு மாபெரும் எண்ணம் தீயாகப் பற்றியது.
அருளின் கலையை உலகத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்லப்போகும் மாபெரும் சாவி இந்த மூன்று புடவைகள்தான் என்பதை அவள் நொடியில் உணர்ந்துகொண்டாள்!
ராஷி மெதுவாக முன்னே வந்து, அந்தப் புடவையின் அழகில் தன் விரல்களைப் பதித்தாள். பின்னர், நேராக அருளின் விழிகளைப் பார்த்தாள்.
“அருள்… இந்த மீனாட்சி அம்மன் கோயில் புடவையும்… அதுபோக நீங்க நெசவாளர்களின் வாழ்க்கையை மையமா வச்சு நெய்திருந்த அந்த ரெண்டு புடவையும்… இந்த மூணு புடவைகளையும் எனக்குத் தர்றீங்களா?” என்று மிக ஆழமான, வேண்டுகோள் கலந்த குரலில் கேட்டாள்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் அருள் ஒரு நொடி திடுக்கிட்டுத் தயங்கி நின்றான்!
அவை சாதாரணப் புடவைகள் அல்ல… தலைமுறை தலைமுறையாகத் தன் குடும்பத்தின் வேர்வையாலும், உயிராலும், ரத்தத்தாலும் நெய்யப்பட்ட அவர்களது பரம்பரைச் சொத்துக்கள்! அவனது குலதெய்வத்திற்குச் சமமான அந்தப் பொக்கிஷங்களை இதுவரை வீட்டின் அந்தச் சிறிய அறையை விட்டு வெளியே எடுத்ததே இல்லை.
அருளின் முகத்தில் குறுக்கிட்ட அந்த ஒரு நொடித் தயக்கத்தையும், அவனது மனப் போராட்டத்தையும் ராஷி அப்பட்டமாகப் புரிந்து கொண்டாள்!
வர்ணம் மிளிரும்…

