காதல் நெய்த வர்ணம் – 16

வர்ணம் 16

சிரசா மலையின் அந்தப் பனி படர்ந்த இரவில், மேலே பிரகாசித்த நிலவின் வெளிச்சத்தில்… தென்ன ஓலைகளின் மீது கிடந்த அந்த இரு காதலர்களின் உடல்களும் மனங்களும் காதலின் தகிப்பில் உருகிக் கொண்டிருந்தன!

அருள் அவளது காதோரம் லேசான காதல் மொழிகளையும், இன்பக் கிளுகிளுப்புப் பேச்சுகளையும் மெல்ல முணுமுணுக்க… ராஷிக்குள்ளும் பரவசம் பொங்கியது.

அவள் அவனது மார்பில் செல்லமாகத் தட்டி, “இத்தனை நாளா சாமியார் மாதிரி இருந்துட்டு, இன்னைக்கு மட்டும் தொடுறதுல ரொம்ப மிஞ்சுறாரு ஐயா!” என்று குறும்போடு கேலி செய்தாள்.

அருள் அவளது இடுப்பை இன்னும் கொஞ்சம் கிள்ளி, “இவ்வளவு அழகா முன்னாடி நின்னுகிட்டு இருந்தா பின்ன என்னடி பண்ணுவான் மனுஷன்? என்னை நீதான்டி இப்படிப் பேசிப் பேசியே கெடுத்து வச்சுட்ட!” என்றான் போலியான கோபத்துடன்.

“யாரு… நானா கெடுத்து வச்சேன்?!” என்று ராஷி அதிர்ச்சியடைவது போல நடித்து, “ஒண்ணுமே தெரியாம, படிப்பு பொய் சொல்லக் கூடாதுன்னு நேர்மையா வந்த பச்சை மண்ணுப் பிள்ளையை நீதான்யா பிடிச்சு கெடுத்து வச்ச!” என்று திருப்பிக் கேட்டாள்.

“இல்லடி, நீதான் என்னைக் கெடுத்து வச்ச…” என்று அருள் சாதிக்க, “இல்லை நீதான்…” என்று இருவருமாக மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் காரணங்காட்டிச் செல்லமாகச் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர். சிரிப்பும் முத்தங்களுமாக நேரமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

திடீரென அருளுக்கு ஒரு விழிப்புணர்வு வந்தது. நிலவின் வெளிச்சத்தில் ராஷியின் முகம் சிவந்திருப்பதையும், தன் கட்டுக்கடங்காத காதலையும் உணர்ந்தவன், ‘இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தா நம்மைக் கடந்து என்ன வேணாலும் நடந்துடும்’ என்பதைப் புரிந்து கொண்டான்.

சுதாரித்துக் கொண்டு, மெல்ல அவளது அணைப்பை விலக்கி எழுந்து உட்கார்ந்தான்.

“சரிடி… மணி ரொம்ப ஆச்சு, நீ மெல்ல உள்ள போய்ப் படு. நானும் வீட்டுக்குப் போறேன். இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்தோம்னா… அப்புறம் உன் வயித்துல குட்டி வர்மா வந்துருவான்!” என்று சற்றே குறும்பான எச்சரிக்கையோடு சொன்னான்.

அவனது பேச்சைக் கேட்டு ராஷியின் முகம் பூப்போலச் சிவந்தது. லேசாகச் சிரித்தபடி ஓலைகளில் இருந்து எழுந்தவள், அருளின் பக்கத்தில் குனிந்து அவனது காதோரம்…

“அதுக்கெல்லாம் நீ இன்னும் சரிப்பட்டு வரமாட்ட வர்மா சார்!” என்று சவாலாக முணுமுணுத்துவிட்டுச் சிரித்தாள்.

அவன் திகைத்துப்போய் “என்னடி சொன்ன?!” என்று எட்டிப் பிடிப்பதற்குள், ஒரு மான் போலத் துள்ளி ஓடிய ராஷி, தோட்டத்தில் பாய்ந்து சென்று வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, ‘டப்’பெனக் கதவைச் சாத்திக் தாழிட்டுக் கொண்டாள்!

வெளியே தென்னந்தோப்பில் நின்றிருந்த அருள்மொழிவர்மன், கதவு சாத்தப்பட்ட சத்தத்தைக் கேட்டு, தன் நெஞ்சைத் தடவியபடி… ராஷியின் அந்தச் செல்லக் குறும்பையும் காதலையும் நினைத்து நிலவொளியில் தனியாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.மறுநாள் விடியற்காலை…

ராஷியும் சாருவும் தங்களின் பயணப் பைகளைச் சரிபார்த்துத் தயாரானார்கள்.

ஊருக்கு கிளம்புவதற்கு முன், முதலில் அந்த ஊர் தலைவரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் விடைபெறச் சென்றனர்.

ஆறு மாதங்களாகத் தன் ஊரில் தங்கிப் பணிபுரிந்த பெண்களைப் பார்த்த ஊர் தலைவர் புன்னகையோடு, “ரொம்ப நல்லதுமா… ரெண்டு பேரும் வயசுப் பொண்ணுங்க, இதுவரைக்கும் இந்த ஊர்ல எந்தக் குறையும் இல்லாம பத்திரமா இருந்தீங்க. இனிமேல் பத்திரமா உங்க வீட்டுக்கு போய்ச் சேர்ந்துட்டு போன் பண்ணிச் சொல்லுங்க,” என்றார்.

தொடர்ந்து, நகரத்து வாழ்க்கைக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும் தேவையான சில அனுபவப்பூர்வமான அறிவுரைகளையும் அப்பாவைப் போல எடுத்துக் கூறினார்.

இருவரும் அவருக்கு மனதார நன்றி கூறிவிட்டு, நேராக அருளின் வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டு வாசலிலேயே அருள், முத்தையா ஐயா, பார்வதி அம்மாள் அனைவரும் இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

ராஷியும் சாருவும் யோசிக்காமல் சட்டென்று முன்னே வந்து, அருள்மொழிவர்மனின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்!

அருள் பதறிப்போய், “ஐயோ! என்ன ராஷி… என்ன பாப்பா இது? எழுந்திரீங்க!” என்று கைகளைப் பிடித்துத் தூக்கித் தடுத்தான்.

சாரு புன்னகையோடு, “பாடம் சொல்லிக் கொடுத்த குருவுக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல அண்ணா? அதுதான்!” என்றாள்.

ராஷியும் அவனது விழிகளைப் பார்த்தபடி, “ஆமா அருள்… கலையைக் கத்துக் கொடுத்த ஆசிரியருக்கு நாங்க செய்யுற சின்ன மரியாதை இது,” என்றாள். அருளின் நெஞ்சம் அந்த வார்த்தைகளில் நெகிழ்ந்து போனது.

பின்னர், பார்வதி அம்மாளிடமும் முத்தையா ஐயாவிடமும் சென்று, “நாங்க போயிட்டு வர்றோம்மா… ஐயா, பத்திரமா பார்த்துக்கோங்க,” என்று விடைபெற்றனர். பார்வதி அம்மாள் இருவரையும் அணைத்து, வழிநடத்தி அனுப்பி வைத்தார்.

பயணப் பைகளோடும், அதைவிடக் கனமான நினைவுகளோடும் இருநரட பேருந்து நிலையத்திற்குச் செல்லத் தயாரானார்கள்.

பிரிவின் வேதனை அருளின் கண்களிலும், ராஷியின் பார்வையிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. நேற்றைய இரவின் கதகதப்பும், காதலின் தவிப்பும் இருவரின் நெஞ்சிலும் தீயாக எரிய… சிறிதும் மனமே இல்லாமல், கனத்த இதயத்தோடு சிரசு மலையிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டார்கள்!

அன்று இரவு 10 மணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்ததும், ராஷி உடனே போனை எடுத்து அருள்மொழிவர்மனுக்கும் ஊர் தலைவருக்கும் பாதுகாப்பாக வந்து சேர்ந்த தகவலைச் சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அதன் பின்னர் ராஷியும் சாருவும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டிற்குச் சென்றதும், ஆறு மாத காலப் பிரிவுக்குப் பிறகு தங்கள் மகளைப் பார்த்த இருவரின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

இரவு நேரத்தில், ஆளுக்கொரு சூடான காபியைக் கையில் வைத்துக்கொண்டு, ராஷியும் சாருவும் சிரசு மலையில் தாங்கள் தயார் செய்த அந்தப் பிரம்மாண்டமான ‘ஆவணக் கோப்பை’ தங்களின் பெற்றோர்களிடம் காட்டினார்கள்.

அதில் அச்சிடப்பட்டிருந்த பட்டுச் சேலைகளின் புகைப்படங்கள், நெசவின் நுணுக்கங்கள், அருளின் பாரம்பரிய முறைகள் என அனைத்தையும் பார்த்த பெற்றோர்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டனர்!

“என்னது… நாம உடுத்துற சாதாரண நெசவுல இவ்வளவு பெரிய கலை, வரலாறு, உழைப்பு இருக்கா? இவ்வளவு அருமையா இத ஆவணப்படுத்தியிருக்கீங்களா!” என்று காபியைக் குடித்தபடியே ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

“ஆமாம்பா… இதையெல்லாம் நாங்க அங்க கண்ணாரப் பார்த்தோம். இதைக் காலேஜ்ல சப்மிட் பண்ணி, அடுத்து பெரிய அளவுல கொண்டு போகப்போறோம்,” என்று ராஷி பெருமிதத்தோடு சொன்னாள்.

“ரொம்ப சந்தோஷம்மா… இந்த உழைப்பு வீண் போகாது. நாளைக்கு இதை நல்லபடியா காலேஜ்ல சப்மிட் பண்ணிட்டு வாங்க,” என்று பெற்றோர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

அந்த இரவும் இனிமையாகக் கடந்து சென்றது.

மறுநாள் காலை…

ராஷியும் சாருவும் கல்லூரிக்குக் கிளம்பும் முன், “வர்மா சார்… நாங்க கிளம்பிட்டோம். காலேஜ்ல சப்மிட் பண்ணிட்டு கூப்பிடுறோம்,” என்று அருளின் மொபைலுக்குச் செல்லமாக மெசேஜ் தட்டிவிட்டு, மிகுந்த எதிர்பார்ப்போடும் புத்துணர்ச்சியோடும் கல்லூரி நோக்கிப் புறப்பட்டனர்!நேரமும் கடந்து சென்றது…

காலை போய், மதியம் போய், மாலையும் வந்தது; இரவும் வந்து சேர்ந்தது.

ராஷியிடமிருந்து எந்தவொரு போனோ, மெசேஜோ வராததால் அருளின் மனம் லேசாகத் தவிக்கத் தொடங்கியது. இறுதியாகப் பொறுமை இழந்து, அருள் வர்மாவே அவளது எண்ணிற்கு அழைக்க, “தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது” அல்லது “சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்றே பதில் வந்தது.

‘ஒருவேளை பயணத்துல சார்ஜ் தீர்ந்து போயிருக்குமோ… இல்ல காலேஜ் ப்ராஜெக்ட் வேலையா பிஸியா இருப்பாளோ…’ என்று தன் மனதைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

ஆனால், மறுநாளும் அவளிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை. அவனது மொபைல் ஒலிக்கும்போதெல்லாம் ‘ராஷியாகத் தான் இருக்கும்!’ என்று பதறியடித்துக்கொண்டு ஓடிப்போய் போனை எடுப்பான். ஆனால் எதிர்முனையில் சிம் கார்டு கம்பெனிக்காரர்களோ அல்லது தெரிந்த நண்பர்களோதான் பேசினார்களே தவிர, ராஷியின் குரல் கேட்கவே இல்லை!

நாட்கள் மெல்ல உருண்டோடி வாரங்களாயின… வாரங்கள் கடந்து மாதங்களாயின!

அப்படி இப்படி என்று முழுதாக ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.

இந்த ஆறு மாத காலத்தில் ராஷியிடமிருந்தோ, சாருவிடமிருந்தோ ஒரே ஒரு போன் காலோ, குறுஞ்செய்தியோ கூட வரவில்லை!

தறிக்கூடத்தில் நெசவு ஓடிக்கொண்டிருந்தாலும், அருளின் வீட்டில் நிம்மதி முற்றிலும் போயிருந்தது. பார்வதி அம்மாளும் முத்தையா ஐயாவும் கவலையோடு அமர்ந்திருந்தனர்.

“என்ன ஆச்சுன்னே தெரியலையே அருள்… பொண்ணுங்க ரெண்டும் பத்திரமா போய்ச் சேர்ந்தாங்களே, பிறகு எந்த பேச்சும் இல்ல…ஏதாச்சு பிரச்சனையான்னு தெரியலையே!” என்று பார்வதி அம்மாள் புலம்பினார்.

முத்தையா ஐயா தன் நெஞ்சைப் பிடித்தபடி, “அதைவிட… நம்ம பரம்பரைச் சொத்தான அந்த மூணு அபூர்வ பட்டுப் புடவைகளும் அவங்ககிட்டதான் இருக்குப்பா! மெட்ராஸ் நமக்கு புதுசு… அங்க போய் எப்படித் தேடுறதுன்னும் தெரியல. அவங்க ரெண்டு பேர் மேல வச்ச நம்பிக்கையில அவங்களோட மெட்ராஸ் முகவரியைக் கூட நாம வாங்கி வச்சுக்கலையே!” என்று தன் அசட்டுத்தனத்தை நினைத்து நொந்துபோனார்.

தறியின் ஓரத்தில் அமர்ந்திருந்த அருள்மொழிவர்மனின் முகம் இருண்டு போயிருந்தது.

அவனது கண்களில் காதலுக்குப் பதிலாக இப்போது விரக்தியும், கசப்பும், ஏமாற்றமும் குடியேறியிருந்தன.

‘இவ்வளவுதானா?’ என்று அவனது மனம் தனக்குள்ளேயே கேள்வி கேட்டுப் புழுங்கியது.

‘ஏழை நெசவாளனோட கலை நுணுக்கங்களை எல்லாம் அழகா ஆவணப்படுத்தி எடுத்துட்டுப் போயிட்டா… நாம உயிர் போலக் காத்து வச்சிருந்த பரம்பரை பட்டுப் புடவைகளையும் தூக்கிட்டுப் போயிட்டா! பணக்காரி… கடைசியில அவ புத்தியைக் காட்டிட்டா இல்ல?’ என்று தன் நெஞ்சில் ஈட்டியால் குத்துவது போல நினைத்து நொந்துபோனான்.

தான் உயிர் உருகக் காதலித்தவள், தன் நம்பிக்கையை மட்டுமல்ல… தன் பரம்பரை கௌரவத்தையும், காதலையும் சேர்த்து மிதித்துவிட்டுச் சென்றுவிட்டாள் என்ற எண்ணம் அருளின் மனதை நரக வேதனையில் தள்ளியது!

கடந்த சில நாட்களாகவே அருளின் முகத்தில் படிந்திருந்த இருளையும் மௌனத்தையும் பார்த்த பார்வதி அம்மாளும் முத்தையா ஐயாவும், ‘நம்ம பரம்பரைப் பட்டுப் புடவைகள் கைவிட்டுப் போச்சேங்கிற கவலையிலதான் பையன் இப்படி வாடிப்போய் இருக்கான்’ என்று நினைத்துத் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டனர்.

ஆனால், அருளின் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த காதல்தீ அவனுக்கு மட்டுமே தெரிந்த நரகம்!

தன் ஆருயிர்க் காதலி தன்னை இப்படி ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டாளே… அவள் காட்டிய அன்பும், அந்த நிலவொளி இரவில் கொடுத்த முத்தங்களும், பேசிய காதல் மொழிகளும் அத்தனையும் வெறும் பொய்தானா? தன் பாரம்பரியத்தையும், காதலையும் ஒரே நேரத்தில் ஒரு பணக்காரப் பெண் ஏளனம் செய்துவிட்டுப் போய்விட்டாளே என்று நினைத்து நினைக்க அவனது மனம் நொந்து நூலாகிக் கொண்டிருந்தது.

ஒருவழியாகத் தன் மனதோடு போராடி, தன்னுள் எழுந்த வேதனையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மீண்டும் தன் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றான். தறிக்கூடத்தில் அமர்ந்து, நூல்களை வரிசைப்படுத்தி, ஒரு புதிய புடவையை நெய்யத் தொடங்கியிருந்தான். தறியின் ‘டக் டக்’ சத்தம் மட்டுமே அந்த அறையை நிரப்பிக் கொண்டிருந்தது.

அப்போது வாசலில்… “சார்… போஸ்ட்!” என்ற குரல் கேட்டது.

வீட்டில் பெற்றோர் இருவருமே இல்லாததால், அருள் தறியை நிறுத்திவிட்டு மெல்ல எழுந்து சென்று அஞ்சல்காரரிடம் இருந்து அந்தத் தபாலைப் பெற்றுக் கொண்டான்.

அது ஒரு அதிகாரப்பூர்வமான தபால் கவரில் வந்திருந்தது. ‘என்னவாக இருக்கும்?’ என்ற குழப்பத்துடன் அதைப் பிரித்துப் பார்த்த அருளுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது!

அது டெல்லியில் இருக்கும் மத்திய ஜவுளித்துறை மற்றும் பாரம்பரிய நெசவாளர் அமைச்சகத்திடமிருந்து வந்திருந்த அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம்!

வர்ணம் மிளிரும்..

error: Alert: Content selection is disabled!!