வர்ணம் 17
அதில், “தேசிய அளவிலான பாரம்பரிய கைத்தறி மற்றும் பட்டு நெசவுப் போட்டியில் (National Handloom Excellence Contest), நீங்கள் வடிவமைத்த அபூர்வமான பாரம்பரியக் கைத்தறிப் புடவை இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. எனவே, வரும் குறிப்பிட்ட தேதியில் டெல்லியில் நடைபெறும் மாபெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அச்சிடப்பட்டு, தேதியும் முகவரியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
கடிதத்தைப் பார்த்த அருளுக்கு ஒரே குழப்பம்!
‘நாம எப்ப டெல்லிக்கு போட்டிக்காகப் புடவையை அனுப்பி வச்சோம்?’ என்று யோசித்து யோசித்து மனதைக் கசக்கிக் கொண்டான். அவனுக்கு எதுவும் ஞாபகத்திலேயே வரவில்லை.
திடீரென அவனது மனதிற்குள் மின்னல் வெட்டியது!
‘அடடா… அந்த ராஷியும் சாருவும் இங்க இருக்கும்போது என்னென்னவோ ஃபார்ம்லாம் ஃபில் பண்ணி கையெழுத்து வாங்குனாங்களே… அன்னைக்கு அவங்க பண்ணின வேலையா இது?!’ என்பது அவனுக்குப் புரிந்தது.
கடிதத்தைக் கையில் ஏந்தியபடி நின்றவன், மெல்லப் பெருமூச்சு விட்டான். “இவ என்னதான் என்னை ஏமாத்திட்டுப் போயிருந்தாலும்… அந்த அதிர்ச்சியில அவ போட்ட திட்டம், இந்த டெல்லி போட்டியெல்லாம் எனக்கு முற்றிலும் மறந்துதானே போச்சு!” என்று மனதுக்குள் நினைத்து நொந்து கொண்டான்.
அன்று மாலை…
பக்கத்து ஊரில் இருக்கும் தன் அக்கா குந்தவையைச் சென்று பார்த்துவிட்டு, அருளின் அப்பா அம்மா முத்தையா ஐயாவும் பார்வதி அம்மாளும் வீட்டிற்குத் திரும்பி வந்தனர்.
அருள் அமைதியாக அந்தத் தபாலை எடுத்துத் தன் தந்தையிடம் நீட்டினான்.
முத்தையா ஐயா தபாலைப் பிரித்து, அதிலிருந்த விஷயங்களைப் படித்துப் பார்த்ததும், அவரது கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன!
“அருளு… என்னப்பா இது! டெல்லியில இருந்து உனக்கு அழைப்பு வந்திருக்கா? தேசிய அளவிலான போட்டியில உன் புடவை தேர்வாகியிருக்கா?!” என்று பூரிப்போடு கத்தினார்.
பார்வதி அம்மாளும் ஓடிவந்து கடிதத்தைப் பார்த்துவிட்டு, கண்களில் நீர் மல்கக் கூப்பிய கரங்களோடு சாமி படத்தை நோக்கி வணங்கினார்.
“கடவுள் இப்பதான்பா நமக்கு ஒரு கண்ணைத் திறந்து காட்டியிருக்காரு! ஆறு மாசமா அந்தப் புடவைகள் போச்சு, பொண்ணுங்க போனாங்கன்னு நாம அடைஞ்சு கிடந்த சோகத்துக்கு… ஏதோ ஒரு வழியில நல்ல செய்தி வந்திருக்குப்பா. நீ கண்டிப்பா டெல்லிக்கு போகணும் அருள்!” என்று முத்தையா ஐயா நெகிழ்ச்சியோடு சொன்னார்.
அருள் அமைதியாக அந்த டெல்லி அழைப்பிதழையே பார்த்துக் கொண்டிருந்தான். ராஷி தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணிய அவனது மனதிற்குள், இந்த டெல்லி அழைப்பு ஒரு புதிய குழப்பத்தையும், அதே சமயம் மெல்லிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது!
டெல்லிக்குப் புறப்படுவதற்கான நாளும் வந்தது. வீட்டின் பூசையறையில் குலதெய்வத்தை வணங்கி, பெற்றோர் முத்தையா ஐயா மற்றும் பார்வதி அம்மாளின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றான் அருள்.
அருள் தனியாக நீண்ட தூரம் செல்வது இதுவே முதல் முறை என்பதால், அவனுக்குத் துணையாக அவனது அக்கா குந்தவையின் கணவர் ராஜனும் உடன் புறப்பட்டார்.
இருவரும் சிரசா மலையிலிருந்து கிளம்பி முதலில் மதுரைக்கு வந்தடைந்தனர். மதுரைக் கூடல் நகர் இரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் அதிவிரைவு இரயிலில் ஏறி அமர்ந்தனர். இரண்டு நாட்கள் தொடர் இரயில் பயணம்… ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அருளுக்கு, ஓடும் காட்சிகளுக்கு இடையே ராஷியின் நினைவுகளும், அவளது ஏமாற்றமும்தான் மீண்டும் மீண்டும் நெஞ்சை அடைத்தது.
இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு, இரயில் டெல்லி இரயில் நிலையத்தை வந்தடைந்தது.
அவர்கள் எங்கு வந்து தங்க வேண்டும் என்ற விவரம் ஏற்கனவே கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, இவர்கள் வரும் நேரத்தையும் முன்கூட்டியே விழா அமைப்பாளர்களுக்குத் தெரிவித்திருந்தனர். அதனால், இவர்களை வரவேற்பதற்காக விழா கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இரயில் நிலையத்திலேயே தயார் நிலையில் காத்திருந்தனர்.
அவர்களை மரியாதையோடு வரவேற்ற கமிட்டியினர், டெல்லியின் முக்கியப் பகுதியில் அமைந்திருந்த ஒரு த்ரீ ஸ்டார் விடுதிக்கு அழைத்துச் சென்று அறை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர்.
இரண்டு நாள் பயணக் களைப்பு தீர இருவரும் நன்றாக ஓய்வெடுத்தனர்.
மறுநாள் காலை…
அவர்களை விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக விடுதியின் வாசலில் கமிட்டியின் கார் வந்து காத்திருந்தது. அருளும் ராஜனும் கம்பீரமாக ஆடைகளை அணிந்துகொண்டு காரில் ஏறினர். டெல்லி மாநகரத்தின் அகலமான சாலைகளில் அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அந்த மாபெரும் விழா அரங்கைச் சென்றடைந்தனர்.
அந்த பிரம்மாண்டமான அரங்கத்தின் வாசலிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருந்தன!
மத்திய ஜவுளித்துறை அமைச்சர், மாநில ஆளுநர் , உலகளாவிய ஆடை வடிவமைப்பாளர்கள் எனப் பல முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்ளும் விழா என்பதால், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் அங்ஙனம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த அருளுக்கும் ராஜனுக்கும் அந்தப் பிரம்மாண்டமும், சோதனைகளும், பாதுகாப்பு நெருக்கடிகளும் பெரும் வியப்பைக் கொடுத்தன. அனைத்தையும் ஆச்சரியத்தோடு பார்த்தபடியே சோதனைகளைக் கடந்து அரங்கத்திற்குள் அடிஎடுத்து வைத்தனர்.
அரங்கத்தின் உள்ளே ஆயிரக்கணக்கான இருக்கைகள் போடப்பட்டிருக்க, வண்ண விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் அந்த இடத்தை ஒரு திருவிழாவைப் போல மாற்றியிருந்தன.
கமிட்டி உறுப்பினர்கள் அருளையும் ராஜனையும் அழைத்துச் சென்று, போட்டியில் பங்கேற்பாளர்களுக்காகத் சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்த முன்பரிசை இருக்கைகளில் அமர வைத்தனர்.
இருக்கையில் அமர்ந்த அருள்மொழிவர்மன், சுற்றிலும் இருந்த மாபெரும் கூட்டத்தையும் அரங்கத்தின் பிரம்மாண்டத்தையும் பார்த்தபடி, ‘நம் பாரம்பரிய நெசவுக்கு டெல்லி வரை வந்து இப்படி ஒரு கௌரவம் கிடைக்கிறதே’ என்ற பிரமிப்போடும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற படபடப்போடும் காத்திருக்கத் தொடங்கினான்!
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளை அலங்கரிக்க, விழா இனிதே தொடங்கியது.
வந்திருந்த சான்றோர்களையும், நாட்டின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வந்திருந்த பாரம்பரிய நெசவாளர்களையும் கமிட்டியினர் முதற்கண் வரவேற்றுப் பேசினர். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தொன்மையான நெசவுக் கலை, அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பு மற்றும் அதை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து முக்கியப் பிரமுகர்கள் உரையாற்றினர்.
அருளும் ராஜனும் மேடையில் நடப்பவற்றை மிகுந்த கவனத்தோடும் திகைப்போடும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அடுத்ததாக, அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அந்த மாபெரும் தருணம் வந்தது!
“இந்த ஆண்டின் சிறந்த கைத்தறி நெசவுப் படைப்பு” (Best National Handloom Creation of the Year) யாருடையது என்ற விருது அறிவிக்கும் நேரம் வந்தது.
அரங்கத்தின் விளக்குகள் லேசாகக் குறைக்கப்பட்டு, மேடையின் நடுவே இருந்த ஒளிக்கற்றை (Spotlight) பிரகாசித்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கம்பீரமாக மைக்கின் முன் வந்து நின்றார். அவரது கைகளில் அந்த வெற்றியாளரின் பெயர் அடங்கிய தங்க நிற உறை இருந்தது.
அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களின் மூச்சுக்காற்றும் அடங்கி, மாபெரும் அமைதி நிலவியது.
அமைச்சர் உறையைப் பிரித்து, புன்னகையோடு பேசத் தொடங்கினார்:
“இந்திய பாரம்பரிய நெசவு வரலாற்றிலேயே இதுவரை யாரும் கற்பனை கூட செய்து பார்க்காத ஒரு அதிசயத்தை, ஒரு கலைஞன் தன் விரல்களால் நெய்திருக்கிறான்!
எந்தவொரு நவீன எலக்ட்ரானிக் இயந்திரங்களோ, கணினிகளோ பயன்படுத்தப்படாமல்… வெறும் கால்களாலும், கரங்களாலும் இயங்கும் பாரம்பரியத் தறியில், ஒரு முழு மனித வாழ்க்கையையே பட்டு நூல்களில் ஓவியமாக வரைந்திருக்கிறார்கள்!
ஒரு சாதாரண நெசவாளனின் அன்றாட வாழ்க்கையையும்… ஒரு கணவன் மனைவியின் அழகான காதலையும், திருமணத்தையும், தாய்மையின் பேரன்பையும் அந்தப் புடவையின் ஒவ்வொரு இழையிலும் தத்ரூபமாக, உயிரோட்டமாக நெய்து படைத்திருக்கிறார் அந்த மாபெரும் கலைஞன்!”
அமைச்சர் அந்தப் புடவையின் சிறப்பம்சங்களை விவரித்துக் கொண்டே செல்ல… அருளின் இதயம் ‘தடதட’வென அசுர வேகத்தில் அடிக்கத் தொடங்கியது!
அவனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. ‘இது… இது கண்டிப்பா நம்ம அப்பா நெய்ததும், தாத்தா நெய்ததும், அப்புறம் நா நெய்த அந்தப் புடவைகளைப் பத்திதானே பேசுறாங்க?!’ என்று எண்ணியவனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
அமைச்சர் தொடர்ந்து கம்பீரக் குரலில் முழங்கினார்:
“தமிழ்ப் பாரம்பரியத்தின் பெருமையை அகில இந்திய அளவிலும் உலக அரங்கிலும் உயர்த்திய அந்தச் சிறந்த படைப்பாளி… தமிழ்நாட்டின் சிரசா மலையைச் சேர்ந்த திரு. அருள்மொழிவர்மன்!”
அந்தப் பெயர் அரங்கமெங்கும் ஒலித்த அடுத்த நொடி… அரங்கம் முழுவதும் கரகோஷங்களாலும் தட்டல் ஒலிகளாலும் அதிர்ந்தது!
அருள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான். அவனால் எழுந்து நிற்கக்கூட முடியாமல் கால்கள் நடுங்கின.
பக்கத்தில் இருந்த ராஜன், அளவில்லா ஆனந்தத்தில் துள்ளிக்குதித்து அருளின் தோள்களைப் பிடித்து குலுக்கினான். “அருளு! உனக்குத்தான்டா அவார்டு! உன் பேரைத்தான் கூப்பிடுறாங்கடா… எந்திரிடா!” என்று சத்தமிட்டான்.
விருதைப் பெற மேடையை நோக்கி நடப்பதற்காக அருள் மெல்ல எழுந்தான். அவனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
ஆனால், அதே நேரத்தில் அவனது மனதிற்குள் மாபெரும் புயல் வீசியது!
‘நாம் இந்த புடவைகளை ராஷி கிட்ட தானே கொடுத்தோம், அப்படி இருக்கும் போது இந்த அபூர்வப் புடவைகள் எப்படி டெல்லிக்கு வந்தன? நம்மை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டதாக நாம் நினைத்த ராஷியும் சாருவும் தான் இதையெல்லாம் செய்தார்களா?’ என்ற கேள்வி அவனது நெஞ்சை அடைத்தது.
கண்ணீரோடும், படபடப்போடும் மேடையை நோக்கி அருள்மொழிவர்மன் அடிஎடுத்து வைக்க… மேடையின் ஓரத்தில், அந்த மூன்று பட்டுப் புடவைகளும் பெரிய கண்ணாடிப் பேழைக்குள் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில் கம்பீரமாக மிளிர்ந்து கொண்டிருந்தன!
வர்ணம் மிளிரும்…

