வர்ணம் 2
அதிகாலை 5:30 மணி.
பேருந்து சிரசாமலை கிராமத்தின் பிரதான சாலையில் வந்து நின்றது. “சிரசாமலை வந்தாச்சு இறங்குங்க!” என்று நடத்துனர் குரல் கொடுக்க, ராஷியும் சாருவும் பைகளைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
பேருந்து கிளம்பிச் சென்றதும், அந்த இடமே அமைதியில் மூழ்கியது.
மார்கழி மாதத்து அதிகாலைக் குளுமை உடலைச் சிலிர்க்க வைத்தது.லேசான பனி மூட்டம் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் தங்கத் துகள்கள் போல மிதந்து கொண்டிருந்தது. தொலைவில் சேவல்கள் கூவும் சத்தமும், கோவில் மணியோசையும் மெல்லக் கேட்டன.
“அப்பாடி… என்ன ஒரு அமைதி, என்ன ஒரு காத்து ராஷி!” என்று சாரு ஆச்சரியத்துடன் தன் தோள்களைக் குறுக்கிக் கொண்டாள்.
சென்னை நகரத்தின் ஆரவாரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட உலகமாக இருந்தது சிரசாமலை கிராமம்.
அங்கே காலை வெயில் மெதுவாகப் பரவும்போதே, ஊரின் ஒடுக்கமான தெருக்களெங்கும் “டக்… டக்… டக்…” என்ற தறி நெய்யும் சத்தம் ஒரு சீரான இதயத் துடிப்பைப் போலக் கேட்டுக்கொண்டிருக்கும்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் செல்லும் பாதை தார்ச்சாலையாக இல்லை; ஈரப்பதம் நிறைந்த செம்மண் பாதையாக விரிந்திருந்தது.
அதிகாலைப் பனியில் நனைந்திருந்த அந்தச் செம்மண்ணின் நறுமணம் ராஷியின் நாசியைத் தீண்டியது. நகரத்துச் செங்கற்களுக்கும் கான்கிரீட் கட்டிடங்களுக்கும் இடையே வளர்ந்தவளுக்கு, அந்த மண் வாசனை ஒரு புதிய உலகத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைக் கொடுத்தது.
தோளில் கனமான பைகளுடன் ராஷியும் சாருவும் அந்தச் செம்மண் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள். ராஷியின் ஷூக்கள் செம்மண்ணில் தடம்பதித்தன.
“ராஷி… பார்த்து நடடி! மண் கொஞ்சம் பிசுபிசுன்னு இருக்கு, வழுக்கிடப் போகுது,” என்று சாரு தன் பையைச் சரிசெய்தபடியே எச்சரித்தாள்.
“பரவாயில்லடி … இந்த மண்ணைத் தொட்டு நடக்கும்போதே ஏதோ ஒரு புது சக்தி வர்ற மாதிரி இருக்கு பாரேன்,” என்றாள் ராஷி கண்களில் விரிந்த ஆச்சரியத்தோடு.
சூரியன் இன்னும் முழுமையாக உதிக்கவில்லை. வானம் லேசான இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அப்போது, வழியில் எதிரே செம்பு பாத்திரங்களில் தண்ணீர் தூக்கிக்கொண்டு வந்த சில கிராமத்துப் பெண்கள், இவர்களைப் பார்த்ததும் தங்கள் நடையைக் குறைத்தார்கள். ஜீன்ஸ், குர்தி அணிந்து, தோளில் பெரிய பைகளுடனும் கேமராவுடனும் செம்மண் பாதையில் நடந்து வரும் இரண்டு நகரத்துப் பெண்களையும் அவர்கள் ஆச்சரியத்தோடும், யோசனையோடும் பார்த்தனர்.
“யாருடி இது? இந்த நேரத்துல புதுசா ரெண்டு பொண்ணுங்க ஊருக்குள்ள வருதுங்க?” என்று ஒரு பெண் தன் பக்கத்தில் இருந்தவளிடம் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
கையில் வாளியுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர், தன் துண்டால் தலையைச் சுற்றியபடி நின்று, இவர்களை மேலிருந்து கீழ் வரை கூர்ந்து கவனித்தார்.
நகரத்து மனிதர்கள் கிராமத்திற்கு வந்தாலே ஏதோ ஒரு ஆபத்து அல்லது நிலம் வாங்க வரும் இடைத்தரகர்களாகத்தான் இருக்கும் என்ற ஒருவித தயக்கமும் சந்தேகமும் அந்த ஊர் மக்களின் பார்வையில் இருந்தது. அதை ராஷியும் சாருவும் உணர்ந்தார்கள்.
“ராஷி… எல்லாரும் நம்மளையே ஒரு மாதிரி பார்க்குறாங்கடி. எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு,” என்று சாரு ராஷியின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“பயப்படாத சாரு… புதுசா யாரைப் பார்த்தாலும் அப்படிப் பார்க்குறது இயல்புதானே? நம்ம மனசுல எந்தத் தவறான எண்ணமும் இல்லை. மெல்ல அவங்ககிட்ட பேசினா எல்லாம் சரியாயிடும்,” என்று புன்னகையோடு கூறினாள் நிலா.
அப்போது, எதிரே மாடுகளுக்குப் புல் தூக்கிக்கொண்டு வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்து, ராஷி மரியாதையோடு தலை வணங்கி, “அக்கா… ஊர் தலைவர் வீடு எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” என்று தமிழில் மிக மரியாதையாகக் கேட்டாள்.
அந்தப் பெண் ராஷியின் அன்பான குரலையும், மரியாதையான அணுகுமுறையையும் பார்த்துத் தன் சந்தேகப் பார்வையைத் தளர்த்தி விட்டு
வழிகாட்ட, இரு பெண்களும் ஊர் தலைவர் மாணிக்கம் என்பவரது வீட்டை நோக்கி நடந்தார்கள். அது ஊரின் நடுவே பெரிய தூண்களுடன் கம்பீரமாக அமைந்திருந்த ஒரு பழைய செங்கல் வீடு.
அதிகாலை நேரமாதலால், ஊர் தலைவர் திண்ணையில் அமர்ந்து சுடச்சுடத் தேநீர் அருந்தியபடியே, சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார். செம்மண் பாதையில் பைகளுடன் நடந்து வரும் இரு பெண்களைக் கண்டதும் திண்ணையில் இருந்தவர்கள் பேச்சு பேச்சை நிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்தனர்.
ராஷியும் சாருவும் திண்ணை அருகே சென்று நின்றார்கள்.
“வணக்கம் அய்யா,” என்று ராஷி கைகூப்பி மரியாதையாகக் கூறினாள்.
ஊர் தலைவர் மாணிக்கம் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டே அவர்களை மேலிருந்து கீழ் வரை பார்த்தார். “வணக்கம்மா… யாரு நீங்க? இந்த அதிகாலை நேரத்துல வெளியூர்ல இருந்து வந்திருக்கீங்க போல இருக்கு? என்ன விஷயம்?” என்று கம்பீரமான, அதே சமயம் நிதானமான குரலில் கேட்டார்.
ராஷி சற்றும் தயங்காமல், தன் இயல்பான தெளிவான குரலில் பேசத் தொடங்கினாள்:
“அய்யா, என் பேரு ராஷி. இது என் தோழி சாரு. நாங்க சென்னையில ஆடை வடிவமைப்பு படிச்சிருக்கோம். நம்ம நாட்டோட பாரம்பரியக் கலைகள் பலவும் அழிஞ்சுகிட்டு வருது. குறிப்பா, கைத்தறி நெசவாளர்களோட உழைப்பும் அவங்களோட கலையும் வெளியுலகத்துக்குச் சரியா தெரியறதில்லை.
அந்த நெசவுக் கலையைப் பத்தி நேர்ல பார்த்து, அவங்களோட வாழ்க்கையைக் கத்துக்கிட்டு, அதை உலகளவில கொண்டு போறதுக்காக ஒரு ஆராய்ச்சித் திட்டமா நாங்க இங்க வந்திருக்கோம். எங்கள் கல்லூரி பேராசிரியர் மூலமாக இந்த ஊரைப் பத்திக் கேள்விப்பட்டுதான் வந்தோம்,” என்றாள்.
ஊர் தலைவர் லேசாகப் புன்னகைத்தார். ஆனால் அவரது பார்வையில் ஒரு சிறிய யோசனை இருந்தது.
“அம்மா… சென்னையில இருந்து வர்ற பெரிய இடத்துப் பொண்ணுங்க மாதிரி தெரியுறீங்க. நம்ம ஊரு எளிய மக்களோட ஊரு. இங்க வசதி வாய்ப்பெல்லாம் கம்மி. அப்புறம், நெசவு தொழில்ங்கிறது இப்போ ரொம்ப நலிவடைஞ்சு போச்சு. இதை வச்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க? போட்டோ எடுத்துட்டுப் போய் ஏதாச்சும் பிசினஸ் பண்ணப் போறீங்களா?” என்று நேரிடையாகவே கேட்டார்.
சாரு லேசாகப் பதற்றமடைய, ராஷி அமைதியாகப் பதில் அளித்தாள்:
“இல்லை அய்யா… நாங்க வியாபாரம் பண்ண வரல. இந்த மண்ணோட நெசவுக் கலைக்கு இருக்கிற உண்மையான மதிப்பையும், அதை நெய்யுற மனிதர்களோட உழைப்பையும் உலகத்துக்குக் காட்ட வந்திருக்கோம். நாங்க இங்க சில நாட்கள் தங்கி இதைக் கத்துக்க உங்க அனுமதி வேணும். ஊர் தலைவரா நீங்க ஆசீர்வதிச்சு அனுமதி கொடுத்தாத்தான் நாங்க இங்க இருக்க முடியும்,” என்று மரியாதையுடன் கேட்டுக் கொண்டாள்.
ராஷியின் பேச்சில் இருந்த உண்மையும், ஆடம்பரமில்லாத அந்த மரியாதையான அணுகுமுறையும் ஊர் தலைவரை வெகுவாகக் கவர்ந்தது.
அவர் திண்ணையிலிருந்து எழுந்து வந்து, “நல்ல விஷயம்மா. கலையை மதிக்கிறவங்களை இந்த ஊரு எப்பவும் கைவிட்டதில்லை” என்றவர் சற்றே உரத்த குரலில் வீட்டிற்குள் நோக்கிச் சொன்னார்:
“ஏய்… பாக்கியம்! இங்க கொஞ்சம் வெளியே வாயேன்!”
அவரது மனைவி பாக்கியம் புடவைத் தலைப்பால் கைகளைத் துடைத்தபடியே வாசலுக்கு வந்தார். வெளியூர் பொண்ணுங்க இருவர் நிற்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன் கணவரைப் பார்த்தார்.
“பாக்கியம்… இந்தப் பொண்ணுங்க சென்னையில இருந்து வந்திருக்காங்க. நம்ம ஊரு நெசவுத் தொழிலைப் பத்தி ஆராய்ச்சி பண்ண போறாங்களாம். இவங்களுக்கு நம்ம பக்கத்துத் தெருவுல இருக்குற நம்ம சின்ன வீட்டுல தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணிடு. அது சும்மாதானே பூட்டி இருக்கு. அப்புறம்… முதல்ல ரெண்டு பேருக்கும் சுடச்சுட நல்லா இஞ்சி போட்ட டீ கொண்டா!” என்றார் அன்போடு.
ராஷியும் சாருவும் நெகிழ்ந்து போனார்கள்.
“ஐயா… ரொம்ப நன்றிங்க ஐயா! ஆனா உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்க கிராமத்துல வேற ஏதாச்சும் சின்ன இடம் இருந்தா கூட தங்கிப்போம்,” என்றாள் ராஷி தயக்கத்துடன்.
“இதுல என்னமா சிரமம் இருக்கு? பொம்பளப் புள்ளைங்க தனியா வந்திருக்கீங்க. ஊர் தலைவரா உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என் கடமை. அந்த வீடு நல்லா வசதியாத்தான் இருக்கும். நீங்க தாராளமா தங்கி உங்க வேலையைப் பாருங்க,” என்றார் தலைவர் சிரித்தபடி.
சிறிது நேரத்தில் பாக்கியம் அம்மாள் ஆவி பறக்கும் சுடச்சுட இஞ்சித் தேநீரைக் கண்ணாடி டம்ளரில் கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தார். அந்த அதிகாலைக் குளிரில், அந்தத் தேநீரின் கதகதப்பும், கிராமத்து மனிதர்களின் அன்பும் ராஷிக்கும் சாருவிற்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
இருவரையும் நிதானமாகப் பார்த்த மாணிக்கம் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினார்:
“அம்மாடி… நீங்க வந்து கேட்ட இந்த விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தருது. எங்க தாத்தன் பூட்டன் காலத்திலிருந்தே இதைப் போல ஆர்வமா வந்து நெசவு பற்றி, அதன் நுணுக்கங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு வர்றவங்களுக்கு… காலம் காலமா சலிப்பேயில்லாம சொல்லிக் கொடுக்கிறது இந்த ஊர்ல ஒரே குடும்பம்தான்! அது நம்ம சாமி ஐயா குடும்பம்!”
ராஷியும் சாருவும் தேநீரைப் பருகியபடியே ஆர்வத்துடன் தலைவரின் பேச்சைக் கவனித்தனர்.
ஊர் தலைவர் தொடர்ந்தார்:
“அந்தக் காலத்துல இருந்தே வெளியூர்ல இருந்தும், கல்லூரிகள்ல இருந்தும் உங்களைப் போல சில பிள்ளைங்க எல்லாம் வந்து படிப்ப விஷயமா, ஆராய்ச்சி விஷயமா நெசவைப் பத்தித் தெரிஞ்சுகிட்டு போவாங்க. சாமி ஐயா தன் வாழ்நாள் முழுக்க இந்த நெசவுக் கலையைத்தான் தன் மூச்சா வச்சிருந்தார்.
இப்போ அந்தப் பரம்பரையில, அந்த சாமி ஐயாவோட பேரன் அருளுதான் அதை அப்படியே விட்டுப்போகாம கையில் பிடிச்சிருக்கான். அந்த அளவுக்கு அந்த மண்ணோட நெசவுக் கலை மேல அவனுக்குக் காதலும் மரியாதையும் அதிகம். இப்போ வந்து படிக்கிற பிள்ளைகளுக்குக் கத்துக் கொடுக்கிறது, சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறதுன்னு எல்லாமே நம்ம அருளுதான் பண்ணிக்கிட்டு இருக்கான்.”
மாணிக்கம் ஐயா வெளியே நின்று கொண்டிருந்த ஊர்ப் பையனை நோக்கி உரத்த குரலில் கூப்பிட்டார்:
“டேய் முருகா… அப்படியே ஓடிப்போய் சாமி ஐயா வீட்டு அருளுகிட்ட விஷயம் சொல்லிட்டு வாடா! சென்னையில இருந்து ரெண்டு பொண்ணுங்க நெசவு பத்திக் கத்துக்க வந்திருக்காங்களாம், பார்த்துக்கச்சொல்லி நான் சொன்னேன்னு சொல்லு!”
பையன் ஓடியதும், மீண்டும் ராஷியைப் பார்த்து புன்னகைத்தார் ஊர் தலைவர்.
“நான் சொல்லிக் கொடுக்க அருளுக்கு ஆள் அனுப்பி சொல்லியிருக்கேம்மா. நீங்க தயங்காம அங்க போகலாம். உங்களுக்கு நெசவு பத்தி என்னென்ன வேணுமோ, அத்தனை நுணுக்கங்களையும் அருளு உங்களுக்குத் தெளிவா சொல்லிக் கொடுப்பான். நீங்க என்ன வேணுமோ அங்கே போய் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்கம்மா,” என்றார் பெருமிதத்தோடு.
“ரொம்ப நன்றிங்க ஐயா! நீங்க செஞ்ச இந்த உதவியை நாங்க மறக்கவே மாட்டோம்,” என்று நெகிழ்ச்சியோடு சொல்லி விட்டு சாவியை வாங்கிக்கொண்டு சென்றனர்.
தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டே பக்கத்துத் தெருவில் இருந்த அந்த அழகான சிறிய ஓட்டு வீட்டைத் திறந்து உள்ளே போக வீடு சுத்தமாக இருந்தது.
பைகளை உள்ளே வைத்துவிட்டு,இருவரும் அந்த வீடு மற்றும் தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு உள்ளே வந்தனர்..
“சாரு… ஊர் தலைவரோட ஆசிர்வாதமும் கிடைச்சாச்சு, தங்குறதுக்கு இடமும் கிடைச்சாச்சு. இனி நாம வந்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்! வா… நேரா அந்த அருள் வீட்டிற்குப் போவோம்,” என்றாள் ராஷி உற்சாகத்தோடு.
வர்ணம் மிளிரும்….

