காதல் நெய்த வர்ணம் – 21

வர்ணம் 21

மானிட்டரில் இதயத் துடிப்பின் அளவுகள் லேசாக மாறுபட, ராஷியின் கண்கள் மெல்லத் துடித்தன. நீண்ட ஒன்பது மாத கால இருளைக் கிழித்துக்கொண்டு, அவளது கண்ணிமைகள் மெதுவாக விலகின!

அறைக்குள் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில், எதிரே கண்ணீரோடும் தாடியோடும் நின்றிருந்த அருளின் முகத்தை ராஷியின் பார்வைகள் முதன்முதலாகப் தெளிவடையாமல் பார்த்தன.

அவளது உதடுகள் மிகவும் பலவீனமாக, சத்தமே இல்லாமல் மெல்ல அசைந்தன…

“வ… வர்மா…”

அந்த ஒரு வார்த்தை அவளது தொண்டையிலிருந்து வெளிப்பட்ட அடுத்த நொடி, அருளின் நெஞ்சமே வெடித்துவிடும் போல் இருந்தது! அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.

“ராஷி…!” என்று கதறியவன், உடனே கதவைத் திறந்து வெளியே ஓடிச்சென்று, “டாக்டர்… டாக்டர்! ராஷி கண் விழிச்சுட்டா… ராஷி பேசுறா டாக்டர்!” என்று சத்தமாகக் கூச்சலிட்டான்.

டாக்டர்களும், வெளியே காத்துக்கொண்டிருந்த அவளது பெற்றோர்களும் பதறியடித்துக்கொண்டு அறைக்குள் ஓடிவந்தனர்.

மருத்துவர்கள் அதிவேகமாக அவளைப் பரிசோதித்துவிட்டு, ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றனர். “திஸ் இஸ் அ மிராக்கிள்! கோமாவிலிருந்து இவ்வளவு சீக்கிரம் அவங்க மீண்டு வந்ததுக்குக் காரணமே பக்கத்துல இருந்து தொடர்ந்து கொடுத்த இந்த பாசிடிவ் வைப்ரேஷனும் பேச்சும்தான். ஷி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்!” என்று கூறி அருளை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

ராஷியின் பெற்றோர் கதறி அழுதுகொண்டே அருளின் கைகளைப் பிடித்துக் கொண்டனர்.

ராஷி மெல்லத் தலையைத் திருப்பி, தன் அருகே கண்ணீரோடு நின்றிருந்த அருளையே பார்த்தாள். அவளது கண்களில் ‘என் வர்மா என்னை விட்டுப் போகல’ என்கிற மாபெரும் நிம்மதியும், அளவற்ற காதலும் பிரகாசித்தது.

தன் காதலனின் கரம்பற்றி, மரணத்தின் பிடியிலிருந்தும் கோமாவின் இருளிலிருந்தும் வெற்றி பெற்றுத் திரும்பி வந்திருந்தாள் ராஷி!

மகளை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தவர்கள் அருளின் காலில் விழப் போக அய்யா என்ன பண்றீங்க என்று பதறினான்.

“இல்லை தம்பி! எங்க உயிரையே திருப்பித் தந்திருக்கீங்க… கடந்த ஒன்பது மாசமா என் பொண்ண நினைச்சு நாங்க அழாத நாளில்லை. கோமாவில் உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தவளை, போராடி மீட்டுக் கொண்டு வந்த நிஜமான தெய்வம் தம்பி நீங்க!”

குமாரியின் வார்த்தைகளைக் கேட்ட அருளின் மனது அப்படியே உருகிப் போனது.

இத்தனை மாதங்களாக அவர்கள் அனுபவித்த நரக வேதனையும், மகளைப் பற்றிய அவர்களின் அஞ்சாத தவிப்பும் அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

குமாரி கண்ணீர்மல்கத் தன் நெஞ்சைத் தொட்டுப் பேசியபோது, அருளால் மேற்கொண்டு அவர்களைத் தடுக்க முடியவில்லை.

அவர்களின் பேரன்பும் நன்றியும் அருளை அசைத்துப் பார்த்தன. வார்த்தைகள் வராமல் தவித்த அருள், குமாரியின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “அம்மா, தயவுசெய்து அழாதீங்க… இது என் கடமை. உங்க பிரார்த்தனைதான் அவளை மீட்டுக் கொண்டு வந்திருக்கு,” என்று ஆறுதலாகக் கூறி அவர்களைச் தேற்ற முயன்றான்.”தம்பி… நீங்க மனிதன் இல்லை, எங்களுக்குக் கிடைச்ச நடமாடும் சாமி தம்பி!”

குமாரி நெஞ்சில் கைவைத்து, கண்கள் ததும்பக் கூறிய அந்த வார்த்தைகள் அருளின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சிந்திய அந்தப் பெற்றோரின் பேரன்பும் நன்றியும் அருளின் நெஞ்சை நெகிழச் செய்தாலும், அவனுள் ஒரு பேரிடி இறங்கியது போல் இருந்தது.

ராஷி கோமாவிலிருந்து கண் விழித்துவிட்டாள்… அவளது உயிரும் மீண்டுவிட்டது. ஆனால், ‘நாங்கள் காதலர்கள்’ என்று அந்த நொடிகள் தந்த பரவசத்தில் உரக்கச் சொல்லிவிடும் சூழல் அங்கில்லை. இத்தனை மாதங்களாக மகளைப் பறிகொடுத்துவிட்டு, மரணத்தின் வாசலில் நிறுத்திப் பார்த்து துடித்துப்போன அந்தப் பெற்றோருக்கு, இப்போது தேவைப்பட்டதெல்லாம் அவளது மீட்சியும் நிம்மதியும்தான்.

இந்தச் சூழலில், தங்கள் காதலை வெளிப்படுத்தி அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியையோ, குழப்பத்தையோ தர அருள் விரும்பவில்லை. தங்களின் காதலை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ, அதை எதிர்கொள்ளும் மனநிலையோ இப்போது அவளது குடும்பத்தினருக்கு இல்லை என்பதை அவன் ஆழமாக உணர்ந்திருந்தான்.

‘தான் அவளது உயிரைக் காப்பாற்றிய ஒரு ஆசிரியராகவோ அல்லது நல்லெண்ணம் கொண்ட மனிதராகவோ மட்டுமே அவர்கள் நினைவில் இருக்க வேண்டும்; அதுவே ராஷியின் தற்போதைய நலனுக்கு நல்லது’ என்று தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான்.

உள்ளுக்குள் ஊற்றெடுத்த காதலையும், அவளைப் பிரியப்போகும் எண்ணற்ற வலியையும் தன் புன்னகைக்கு பின்னால் மறைத்துக் கொண்டான் அருள். ராஷி சற்று தேறி, மயக்க நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு வந்ததும், அவளது பார்வையில் தெரிந்த எல்லையற்ற காதலைத் தன் இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

அன்று மாலையே, மருத்துவமனை வளாகத்தில் மெல்லிய இருள் படரத் தொடங்கிய நேரம்…

யாரிடமும் பெரிய அளவில் விடைபெறாமல், தன் சிறிய பயணப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு அருளின் கால்கள் தானாகவே சிரசாமலை செல்லும் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கின.

மருத்துவமனையின் கதவைக் கடக்கும் முன் ஒரே ஒருமுறை திரும்பிப் பார்த்தான். அங்கு, கண்ணீரோடு தன் மகளின் முகம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த பெற்றோரும், கட்டிலில் பலவீனமாக அமர்ந்தபடி கதவையே பார்த்துக்கொண்டிருந்த ராஷியும் தெரிந்தார்கள்.

அவளது பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தன் கண்களை மூடி அடக்கிக் கொண்ட அருள், மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்: “உன் உயிர் மீண்டுவிட்டது ராஷி… அதுபோதும் எனக்கு. இந்த வர்மாவோட காதல் உன்னை எப்பவும் பாதுகாக்கும். ஆனா இப்ப நான் விலகிப்போறதுதான் உனக்கும் உன்னோட குடும்பத்துக்கும் அழகு.”

நெஞ்சைப் பிளக்கும் வலியோடு, சிரசாமலையின் குளிர்ந்த காற்றையும், அமைதியான மலைப் பாதையையும் நோக்கி அவன் பயணம் தொடர்ந்தது. அவனது ஒவ்வொரு அடியிலும் காதல் சுமந்த கனமும், தியாகம் தந்த அமைதியும் மட்டுமே துணையாக இருந்தன.ராஷி கோமாவிலிருந்து முழுமையாகக் கண் விழித்து, ஆபத்து கட்டத்தைத் தாண்டிவிட்டாள் என்ற செய்தி எட்டிய அடுத்த கணமே, சாருவால் சும்மா இருக்க முடியவில்லை. அதிக காயங்கள் இப்போது ஆறிக்கொண்டு வருவதால் பதறியடித்தபடி வீல் சேரில் தனது தோழியை பார்க்க வந்தாள்.

மருத்துவமனை அறையின் கதவைத் திறந்த சாருவுக்கு, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த ராஷியைப் பார்த்ததும் கால்கள் தளர்ந்தன.பலத்த காயங்களுடன் சாருவுக்கு டெம்ரவரி மெமரி லாஸ் ஆகியிருந்தது. நினைவின்றி உயிரற்ற பொம்மை போல் கிடந்த தன் தோழி, இன்று தன் உயிரோட்டமான கண்களால் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் சாருவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது.

“ராஷி…” என்று தழுதழுத்த குரலில் அழைத்தபடி வீல் சேரில் வந்து, ராஷியின் கையைப் பிடித்துக் கொண்டாள் சாரு.

ராஷியும் தன் பலவீனமான கைகளால் சாருவை இறுகப் பற்றிக்கொண்டு, அவளது தோளில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள். நீண்ட நாட்களாகத் தனக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த பயமும், வேதனையும், அந்த அழுத்தமான கட்டிப்பிடித்தலில் கண்ணீராக வெளியேறியது.

“நீ திரும்ப வந்துட்டடி… எனக்கு நம்பிக்கையே போயிடுச்சுடி ராஷி… நீ என்னை விட்டுட்டு போயிடுவியோனு எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என்று சாரு கதறியபடி அவளது தலையைக் கோதிவிட்டாள்.

“நான் வந்துட்டேன் சாரு… ஆனா…” என்று தயங்கிய ராஷி, சுற்றிலும் தன் கண்களைச் சுழற்றினாள்.

அவளது தேடல் யாரைப் பற்றியது என்பதை சாரு உடனடியாகப் புரிந்துகொண்டாள். கண் விழித்த நொடியிலிருந்து தன் பார்வையால் தேடிய அந்த ‘வர்மா சார்’ அருகில் இல்லாதது, ராஷியின் நெஞ்சில் ஒரு மெல்லிய பாரத்தை ஏற்றியிருந்தது.

தோழியின் பார்வையில் இருந்த ஏகப்பட்ட கேள்விகளையும், உள்ளுக்குள் மறைந்திருந்த காதலையும் உணர்ந்த சாரு, அவளது கரங்களை மென்மையாகப் பற்றி ஆறுதல் கூறத் தொடங்கினாள்.மருத்துவர்கள் ராஷியை முழுமையாகப் பரிசோதனை செய்து, அவளது உடல்நிலை முற்றிலும் சீராக இருப்பதை உறுதிசெய்த பின், வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.

ஒன்பது மாத கால இருளுக்கும் மௌனத்திற்கும் பிறகு, ராஷி அடி எடுத்து வைத்ததும் அடையாறில் இருக்கும் அந்த பிரம்மாண்டமான பங்களா மீண்டும் உயிர்பெற்றது. இழந்த தன் சுவாசத்தை மீண்டும் கண்டுகொண்டது போல, அந்த வீட்டின் ஒவ்வொரு மூளையும் புது வெளிச்சத்தால் நிறைந்தது.

வாசலிலேயே ராஷியின் தாய் குமாரி, மகளுக்குத் திருஷ்டி சுற்றி நெற்றியில் திலகமிட்டு கண்ணீரோடு வீட்டிற்குள் வரவேற்றார். தோழி சாரு, ராஷியின் கைகளைப் பற்றிக்கொண்டு அவளுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். பூக்களாலும், அன்பாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த பங்களா இப்போதுதான் உண்மையான உயிர்ப்புடன் இருந்தது.

ஆனால், அத்தனை கூச்சல்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் இடையே, ராஷியின் மனம் மட்டும் அமைதியற்றுத் தவித்தது.

தன் அறைக்குள் நுழைந்த ராஷி, மெதுவாகச் சென்று ஜன்னலருகே நின்றாள். அடையாறு பங்களாவின் அந்த பிரம்மாண்டம், அருளின் நினைவுகளைத்தான் அவளுக்கு அதிகமாக்கியது. ‘வர்மா… என்னை இந்த மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து, இந்த வீட்டிடம் ஒப்படைத்துவிட்டு நீங்க மட்டும் எங்கே போனீங்க?’ என்று அவளது மனம் ஏங்கியது.

அவளது உடலின் ஒவ்வொரு நரம்பிலும் உயிர் பாய்ந்திருந்தது; ஆனால், அவளது ஆன்மாவோ சிரசாமலையின் அமைதியான மலைப் பாதையில், தனக்காக வழிகளைத் துறந்து சென்ற அருள்மொழிவர்மா என்பவனின் பின்னே பயணித்துக் கொண்டிருந்தது.

சென்னையிலிருந்து புறப்பட்ட அருளின் பேருந்து, விடியற்காலைப் பொழுதில் சிரசாமலையின் அடிவாரத்தை அடைந்தது. பேருந்தின் கதவுகள் திறக்க, அந்த மலைக்கிராமத்தின் குளிர்ந்த காற்றும், ஈரமண்ணின் வாசனையும் அவனை முதன்முதலாக வரவேற்றன.

மூன்று மாதங்களுக்குப் பிறகு தன் சொந்த மண்ணில் காலைெடுத்து வைக்கும் அருளின் முகத்தில் ஒருவித களைப்பும், நெஞ்சில் ராஷியைப் பிரிந்த ஆறாத வலியும் படர்ந்திருந்தது.

பேருந்து நிலையத்திலிருந்து ஊருக்குள் நடக்கும் வழியிலேயே, விடிந்து விடியாத அந்த அதிகாலைப் பொழுதிலும் அருளைப் பார்த்த கிராம மக்கள் ஓடிவந்து சூழத் தொடங்கினர்.

“வாப்பா அருள்! நல்லா இருக்கியா? மூணு மாசமா ஊர்ப்பக்கமே ஆளக் காணோமே!” என்று பெரியவர்கள் நலம் விசாரித்தனர்.

அதைவிட மேலாக, அவன் ஊரில் இல்லாத இந்த மூன்று மாத காலத்தில், அவன் உருவாக்கிய பாரம்பரிய நெசவு ஆடைகளுக்கு டெல்லியில் கிடைத்த மாபெரும் அங்கீகாரமும் புகழும் ஊர் முழுவதும் பரவியிருந்தது.

“தம்பி அருள்! டெல்லி தேசியக் கண்காட்சியில நம்ம ஊரு நெசவுப் புடவைகளுக்கு உன்னாலதான் அவ்வளவு பெரிய பெருமை கிடைச்சிருக்கு! பேப்பர்ல எல்லாம் உன் பேரப்போட்டுப் பாராட்டியிருக்காங்கப்பா!” என்று ஊர்ப் பெரியவர் ஒருவர் அருளின் தோளைத் தட்டிப் பெருமிதத்தோடு பாராட்டினார்.

சுற்றி நின்ற இளைஞர்களும், நெசவுத் தொழிலாளர்களும், “நம்ம ஊரு கலையை டெல்லி வரைக்கும் கொண்டு போய் சேர்த்த பெருமை உன்னையே சேரும் அருள்!” என்று அவனை மகிழ்ச்சியோடு வாழ்த்தினர்.

ஊர் மக்களின் அன்பும், தன் உழைப்புக்குக் கிடைத்த புகழும் அருளின் மனதிற்கு ஒரு சிறிய ஆறுதலைத் தந்தன. ஆனால், அந்தப் பாராட்டுகளுக்கு இடையே புன்னகைத்த அருளின் மனதுக்குள், ‘இந்தப் புகழும் பெருமையும் எனக்குக் கிடைப்பதற்குக் காரணமானவள் இன்று அடையாறு பங்களாவில் என்னைத் தேடிக்கொண்டிருப்பாளே…’ என்ற நினைவே மேலோங்கி நின்றது.

வர்ணம் மிளிரும்…

error: Alert: Content selection is disabled!!