வர்ணம் 22
ஊர் மக்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே, அருள் மெதுவாகத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.நேராகத் தன் வீட்டிற்கு வந்த அருளுக்கு, வீட்டின் வாசல் தெளிக்கப்பட்டிருந்த சாணம் மற்றும் ஈரமண்ணின் வாசம் ஒரு தாயின் அணைப்பைப் போன்ற உணர்வைத் தந்தது.
அப்போதுதான் தாய் பார்வதி வாசலைக் கூட்டி, அழகாகக் கோலமிட்டு முடித்துவிட்டு, இடுப்பில் கையை வைத்தபடி நிமிர்ந்து உள்ளே செல்லத் திரும்பினாள். எதிர்பாராத விதமாக வாசலில் வந்து நின்ற அருளைப் பார்த்ததும், அவளது கால்கள் அப்படியே தறைதட்டி நின்றன.
கையிலிருந்த கோலப்பாத்திரம் மெல்ல நழுவப் பார்த்தது. மூன்று மாத காலப் பிரிவு… மகனின் முகத்தைப் பார்த்ததும் பார்வதியின் கண்கள் நொடியில் கலங்கிப் போயின.
“அருளு…!” என்று தழுதழுத்த குரலில் அழைத்தபடி, வாசல் படியைத் தாண்டி ஓடிவந்தாள் பார்வதி.
தாடியும், கவலையும், தூக்கமில்லாத கண்களுமாக வந்து நிற்கும் மகனின் சோர்வான முகத்தைக் கண்டதும், ஒரு தாயின் மனம் பதறியது. அருளின் கன்னங்களைத் தன் இரு கரங்களாலும் ஏந்தி, “எப்படி இருக்க தம்பி? ஆள் அடையாளமே தெரியாம இப்படி இளைச்சுப்போய் வந்து நிக்கிறியேடா…” என்று விம்மி விம்மி அழுதாள்.
அருள் தன் தாயின் கைகளைப் பற்றிக்கொண்டு, “அம்மா… நான் நல்லாதான்மா இருக்கேன். அழாதம்மா…” என்று மெல்லிய புன்னகையோடு அவளைத் தேற்ற முயன்றான்.
“டெல்லியில உன் நெசவுக்கு அவ்வளவு பெரிய பேரு கிடைச்சிருக்குனு ஊரே பேசுதுடா. ஆனா அதையெல்லாம் கொண்டாடுற சந்தோஷம் கூட இல்லாம, உன் முகத்துல என்னடா இவ்வளவு பாரம்?” என்று பார்வதி கேட்ட கேள்வி, அருளின் நெஞ்சைக் குத்தியது.
ராஷிக்காகத் தான் பட்ட வேதனைகளையும், உள்ளுக்குள் சுமந்து வந்த காதலையும் தாயிடம் சொல்ல முடியாமல், “ஒன்னுமில்லைம்மா… ரொம்ப தூரப் பயணம், அதுதான் கொஞ்சம் களைப்பா இருக்கு” என்று சொல்லிச் சமாளித்தபடி வீட்டிற்குள் காலெடுத்து வைத்தான்.
வெளியே ஊரே அவனது புகழைப் பேசிக் கொண்டிருக்க, வீட்டிற்குள் தன் தாயின் பாசக் கரங்களுக்குள் வந்த பிறகும், அருளின் மனம் அடையாறு பங்களாவில் தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் ராஷியின் பிம்பத்தையே தேடிக் கொண்டிருந்தது.
பார்வதி அருளுக்குச் சூடாகக் காபி கொடுத்துக் குடிக்க வைக்கும் போதே, அவளது மனதிலிருந்த பல மாதக் கேள்விகளும் சந்தேகங்களும் மெல்ல வெடித்துக் கிளம்பின.
“அருளு… டெல்லி வரைக்கும் உன் புகழைப் கொண்டு போய்ச் சேர்த்த அந்த ராஷி பாப்பா இப்போ எப்படிப்பா இருக்கா? ஆறு மாசத்துக்கு முன்னாடி அவளுக்கு ஏதோ ஆகிப்போச்சுனு மாப்பிள்ளை சொன்னார்… அவ உடம்பு இப்போ தேறிடுச்சாடா?” என்று பார்வதி கவலையோடு தன் மகனின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
அருகில் அமர்ந்திருந்த அருளின் தந்தை முத்தையாவும் தன் வேட்டியின் முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி, “ஆமா அருள்… அந்த பொண்ணுங்க மட்டும் அன்னைக்கு நம்ம நெசவுப் புடவைகளை டெல்லி கண்காட்சிக்குக் கொண்டு போக வழிகாட்டியிருக்கலைனா, இன்னைக்கு நம்ம குடும்பத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைச்சிருக்காது. அவளுக்கு என்னடா பிரச்சனை? ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வந்துட்டாங்களா?” என்று ஆர்வத்துடன் விசாரித்தார்.
பெற்றோர்கள் இருவரின் அன்பான கேள்விகளும், ராஷியின் மீதான அவர்களின் அக்கறையும் அருளின் நெஞ்சை அடைத்தது.
கையிலிருந்த காபிக் கோப்பையை இறுக்கமாகப் பற்றியபடி, தன் கண்கள் கலங்குவதை அவர்களுக்குக் காட்டாமல் மறைக்க முயன்றான் அருள்.
“அவ… அவளுக்கு இப்போ உடம்பு நல்லாயிடுச்சுப்பா. கோமால இருந்து மீண்டு வந்துட்டா… டாக்டரெல்லாம் இப்போ எந்த ஆபத்தும் இல்லை, வீட்லயே ஓய்வெடுக்கலாம்னு சொல்லி அடையாறு பங்களாவுக்கு அனுப்பி வச்சுட்டாங்க,” என்று அருளின் குரல் நடுங்கியது.
பார்வதி பெருமூச்சுடன் தன் நெஞ்சில் கைவைத்து, “அப்பாடா! அந்த சாமிக்குக் கண் இருக்குடா… நல்ல பொண்ணு, நல்லபடியா வரணும்னு நான் கூட தினமும் நம்ம கோயில் அம்மன்கிட்ட வேண்டியிருக்கேன். சரி, அந்த பொண்ணைப் போய் பார்த்துட்டு, அவங்க வீட்ல நிலைமையைச் சொல்லிட்டுதானே கிளம்பி வந்த?” என்று அன்போடு கேட்டாள்.
தாயின் இந்த கேள்விக்கு அருளிடம் உடனடி பதில் இல்லை. தன் நெஞ்சிற்குள் பூட்டி வைத்திருந்த காதலையும், ‘நான் அவளை நேசிக்கிறேன், அவளும் என்னை நேசிக்கிறாள்’ என்று பெற்றோரிடம் சொல்ல முடியாத தன் சூழ்நிலையையும் நினைத்து அவன் உள் மனசு துடித்தது.
“ம்… பார்த்துட்டு தான் வந்தேன் மா. அவங்க பெத்தவங்க கூடவே இருந்து பார்த்துக்கிறாங்க… இனி அவங்களுக்கு எந்த குறையும் வராது,” என மெல்லிய குரலில் கூறிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டான்.
மகன் ராஷியைப் பற்றிப் பேசும் போது அவனது குரலில் தெரியும் மாற்றத்தையும், கண்கள் சொல்லும் ரகசிய வலியையும் தாய் பார்வதி கூர்ந்து கவனித்தாள். அவனது புகழுக்குப் பின்னால் ஏதோ ஒரு மாபெரும் தியாகமும், சொல்ல முடியாத வேதனையும் மறைந்திருப்பதை அந்தத் தாயின் மனம் அரைகுறையாக உணரத் தொடங்கியது.
அருள் ஊருக்குத் திரும்பி வந்த செய்தி பரவியதுமே, டெல்லியில் அவனது நெசவு கலைக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அவனைத் தேடி வரத் தொடங்கின.
பெரிய பெரிய சொகுசு கார்களில் வந்திறங்கிய அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள், அருளுக்கு மயக்கமளிக்கும் பல ஆஃபர்களை முன்வைத்தனர்.
“அருள் சார்… உங்க திறமைக்கும், உங்க நெசவு டிசைன்களுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. நீங்க எங்க கார்ப்பரேட் நிறுவனத்தோட இணைந்து பிராண்ட் அம்பாசிடரா வேலை செய்யணும். உங்களுக்கு மாதாந்திரச் சம்பளமா லட்சக்கணக்கில் தரோம். அதுமட்டுமில்லாம, சென்னை அல்லது பெங்களூரில் உங்களோட சொந்த மேற்பார்வையில் இயங்குற பெரிய டிசைனிங் ஸ்டுடியோவும் அமைச்சுத் தரோம். நீங்க எங்களுக்காக மட்டும் பிரத்யேகமாக வேலை செஞ்சா போதும்!” என்று பளபளப்பான ஒப்பந்தப் பத்திரங்களை அவனிடம் நீட்டினர்.
அவர்கள் நீட்டிய அந்தப் பத்திரங்களையும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாபெரும் தொகையையும் அருள் ஒரு நொடி கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவனது முகத்தில் எந்தவிதப் சலனமும் இல்லை.
மிகவும் அமைதியாகவும், அதேசமயம் உறுதியானக் குரலிலும் அவர்களிடம் பேசத் தொடங்கினான் அருள்.
“சார்… நீங்க தர்ற பணமும் வசதியும் ரொம்ப பெருசுதான். ஆனா, என் கலை விற்பனைக்குத்தானே தவிர, என் சுயமரியாதையும் என் உழைப்பும் யாருக்கும் அடிமையில்லை. இது தலைமுறை தலைமுறையா என் முன்னோர்கள் எனக்குக் கத்துக் கொடுத்த எங்களோட குலத்தொழில். இதைக் கார்ப்பரேட் கம்பெனியோட லாபத்துக்காக அடகு வைக்கவோ, வேறொருத்தர் கீழ வேலை செய்யவோ நான் தயாராக இல்லை.”
“உங்களுக்கு உண்மையிலேயே எங்கள் நெசவு மீது மதிப்பிருந்தா… எங்களோட வியாபாரம் பண்ணுங்க! எங்க ஊரு நெசவாளர்கள் நெய்யுற ஆடைகளை நேர்மையான விலைக்கு வாங்கி உங்க ஷோரூம்ல வித்துக்கோங்க. அதைவிட்டுட்டு, என்னையே உங்க கம்பெனி ஊழியரா மாத்தி, என் கலையோட அடையாளத்தை அழிக்கப் பார்க்காதீங்க. என்னை மாதிரி நெசவாளர்கள் சுதந்திரமா வேலை செஞ்சா மட்டும்தான் இந்த மரபு வாழும்!”
அருளின் கம்பீரமான இந்தப் பதிலைக் கேட்ட கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு மேலே பேச வார்த்தைகளின்றிப் போயின. அவனது கொள்கைப் பிடிப்பையும், தன் கலையின் மீது அவன் வைத்திருந்த அளப்பரிய மரியாதையையும் கண்டு வியந்தபடி, அவர்கள் அமைதியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு, அருள் மெல்லத் தன் வீட்டின் கூடத்திற்குள் நடந்தான்.
அங்கே மரப் பலகைகளும், நூல்களும் நிறைந்திருந்த அவனது பாரம்பரிய கைத்தறி அவனை வரவேற்றது. மனதிலிருந்த பாரத்தையும், ராஷியைப் பற்றிய இடைவிடாத நினைவுகளையும் மறக்க, அவன் எப்போதும் புகலிடமாகத் தேர்ந்தெடுப்பது அந்தத் தறியைத்தான்.
கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, தன் குலதெய்வத்தை மனதார வணங்கிவிட்டுத் தறியில் போய் அமர்ந்தான்.
வருடந்தோறும் தங்கள் ஊர்க் கோயில் சாமிக்குத் தன் கையால் வேஷ்டி நெய்து சாற்றுவது அருளின் வழக்கம். மனதின் ஆழத்தில் இருக்கும் காதலின் வலியையும், பிரிவின் தவிப்பையும் அந்த நூலிழைகளில் வடிப்பதைக் போல, தறியை இயக்கத் தொடங்கினான்.
‘டக்… டக்… டக்…’ என்று அந்தத் தறி எழுப்பிய நாதம், வீட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது.
அருளின் கைகள் வேகமாகவும், துல்லியமாகவும் நாடாவைச் செலுத்த, ஒவ்வொரு நூலிழையும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து சாமி வேஷ்டியாக உருப்பெறத் தொடங்கியது. அருளின் கண்கள் தறியின் இழைகளில் நிலைத்திருந்தாலும், அவனது நெஞ்சம் மட்டும் அடையாறு பங்களாவில் தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் ராஷியின் பிம்பத்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது.
அருளின் நாட்கள் சிரசாமலையின் தறிச் சத்தத்தோடும், ஆறாத நினைவுகளோடும் நகரத் தொடங்கின.
தான் நேரில் சென்றால் மீண்டும் பழைய நினைவுகளும், தன் காதலின் பாரமும் அனைவரையும் சங்கடப்படுத்தும் என்பதை அருள் உணர்ந்திருந்தான். அதே சமயம், அவனால் ராஷியை முற்றிலும் மறந்து வாழவும் முடியவில்லை.
அதனால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் ராஷியின் தந்தைக்கு போன் செய்து பேசுவான்.
“ஐயா… அருள் பேசுறேன். ராஷிக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு? தலைவலி எதுவும் இல்லையே? சரியா சாப்பிடுறாளா? டாக்டர் சொன்ன மாத்திரையெல்லாம் நேரத்துக்குக் குடுக்குறீங்களா?” என்று மிகச் சாதரணமான அக்கறையோடு விசாரிப்பான்.
மறுமுனையில் அவள் அப்பா, “ரொம்ப நல்லா இருக்கா தம்பி… உடம்புல நல்ல முன்னேற்றம் இருக்கு. ஆனா, ஏனோ தெரியல… பொண்ணு ரொம்ப அமைதியாயிட்டா. யாரோடவும் அதிகமா பேசுறதில்லை. எப்பவும் ஜன்னல் வழியா வழியையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கா. நீங்க கொடுத்த அந்தப் பாசிடிவ் வைப்ரேஷனால தான் அவ பொழைச்சா… உங்களுக்கு நாங்க எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி,” என்று நெகிழ்ந்து பேசுவார்.
அவளது நலம் அறிந்த நொடி அருளின் நெஞ்சில் ஒரு மாபெரும் நிம்மதி பிறக்கும். அதேநேரம், அவள் அமைதியாகிவிட்டாள், வழியையே பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்ற வார்த்தைகள் அவனது நெஞ்சை முள்ளாய் தைக்கும்.
‘ராஷி… உனக்கு என்னைத் தேட உரிமையிருக்கு, ஆனா இந்த வர்மா சாருக்கு உன்னை வந்து பார்க்கக்கூட வழியில்லைடி’ என்று மனதுக்குள் புலம்பியபடி தன் போனை வைப்பான்.
நாட்கள் வேகமாக ஓடியது…
வழக்கம் போல பகலில் தறியில் நூல்களை நெய்வதும், இரவில் ராஷியின் நினைவுகளோடு போராடுவதுமாக அருளின் வாழ்க்கை நகர்ந்தது. சிரசாமலையில் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசும் நேரங்களிலும், தறியின் நாடா ஓடும் ஒலியிலும் அருளின் மனது அடையாறு பங்களாவின் அந்த ஜன்னல் ஓரத்தையே சுற்றிச் சுற்றி வந்தது.
காதல் தந்த வலியையும், பிரிவு தந்த தவிப்பையும் தன்னுள்ளே புதைத்துக்கொண்டு, காலத்தின் போக்கில் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தான் அருள்.
வர்ணம் மிளிரும்…

