மகன் பட்ட வேதனையையும், அவனது உள்ளுக்குள் இருக்கும் மாபெரும் தியாகத்தையும் உணர்ந்த தாய் பார்வதியின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. தன் மகனின் நெஞ்சை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், அவனது மனப் போராட்டத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு அவனைத் தேற்ற வார்த்தைகளின்றி மெளனமாய் அவனது கண்ணீரைத் துடைத்து விட்டாள்.தாயின் மடியில் தன் பாரத்தையெல்லாம் இறக்கிவைத்து அழுத பிறகு, அருளின் மனது சற்று லேசானது போல் இருந்தது. ஆனால், அந்த ஆறுதல் தற்காலிகமானது மட்டுமே.
அடுத்தடுத்த நாட்கள் சிரசாமலையில் அருளுக்கு மிகவும் கனமாகவே நகர்ந்தன.
மகன் படும் வேதனையை தினமும் கண்ணாரப் பார்த்த தாய் பார்வதிக்குத் தூக்கம் வரவில்லை. தறியில் அமர்ந்து இயந்திரத்தனமாக நெய்யும் அருளின் பார்வையில் இருந்த ஜீவனற்ற தன்மையும், இரவில் அவன் ஜன்னலையே பார்த்தபடி முழித்திருப்பதும் அவளது நெஞ்சை உருக்கியது.
‘தன் மானத்தையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்ள என் மகன் தன் உயிர்க் காதலையே பலி கொடுக்கப் பார்க்கிறானே… காப்பாற்றியவன் சாமி என்றால், அவனைக் காதலித்த பொண்ணு என்ன பாவம் செய்தாள்?’ என்று பார்வதி யோசிக்கத் தொடங்கினாள்.
அன்று அதிகாலை…
தறியில் நூலை மாட்டிக்கொண்டிருந்த அருளின் அருகே வந்த பார்வதி, அவனது கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“அருளு… தறியை நிறுத்துடா,” என்றாள் தீர்க்கமான குரலில்.
அருள் நிமிர்ந்து தாயைப் பார்த்தான். அவளது முகத்தில் எப்போதும் இல்லாத ஒரு உறுதி தென்பட்டது.
“அம்மா… என்னமா?”
“நாம சென்னைக்குப் போறோம் அருள். அடையாறு பங்களாவுக்கு!”
அருள் அதிர்ச்சியோடு எழுந்தான். “அம்மா! என்ன பேசுறீங்க? நான் தான் தெளிவா சொன்னேனே… அவங்க வீட்ல போய் நான் எப்படி காதலைப் பத்திப் பேசுவேன்? அவங்க என்னைச் சாமியா…”
பார்வதி மகனின் பேச்சை இடையிலேயே மறித்தாள்.
“நீ பேச வேண்டாம் அருள்… ஒரு தாயா நான் பேசுறேன்! அவங்க உன்னைச் சாமியாப் பார்த்தா அது அவங்க நன்றியுணர்வு. ஆனா, அந்தப் பொண்ணு உன்னைத் தன் உயிராப் பார்த்திருக்கா. நீ ஓடி வந்துட்ட… ஆனா அந்தப் பொண்ணு இன்னமும் உனக்காகத்தானே காத்துக்கிட்டு இருக்கு?”
அருள் மெளனமாகத் தலைகுனிந்தான்.
“ஒரு பொண்ணோட மனசை உடைச்சுட்டு, அவ பெற்றோரோட மரியாதையைக் காப்பாத்துறதுல எந்தப் பெருமையும் இல்லைடா. நீ உன்னோட காதலை அவங்ககிட்ட பிச்சையா கேட்கல… நேர்மையா தான கேட்கப்போற? ‘உங்க பொண்ணைக் காப்பாத்துனதுக்காக நான் காதலைக் கேட்கல; உங்க பொண்ணைக் காப்பாத்துறதுக்கு முன்னாடியே நாங்க ரெண்டு பேரும் காதலிச்சோம்’னு உண்மையை உரக்கச் சொல்வோம். ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் அவங்க இஷ்டம். ஆனா, இந்தப் ஒளிவு மறைவு நமக்கு வேணாம்டா,” என்று பார்வதி கூறினாள்.
தாயின் வார்த்தைகளில் இருந்த நியாயமும் தைரியமும் அருளின் நெஞ்சில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தன.
அடையாறு பங்களாவை நோக்கி…
மறுநாள் காலையிலேயே பார்வதியும் அருளும் சென்னைக்குக் கிளம்பினர்.
பயணம் முழுவதும் அருளின் இதயம் சீரற்றுத் துடித்தது. அடையாறு பங்களாவின் வாசலில் போய் நின்றபோது, அருளின் கால்கள் லேசாக நடுங்கின.
வீட்டின் மணியை அடித்தனர்.
கதவைத் திறந்த குமாரி, வாசலில் அருளையும் அவனது தாயையும் கண்டதும் பேரதிர்ச்சியும் பெரும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
“தம்பி! அருள் தம்பி… வாப்பா… வாங்கம்மா! உள்ள வாங்க!” என்று பதறியடித்துக்கொண்டு அவர்களை வரவேற்றார். “ராஷி… இங்க பாரேன் யாரு வந்திருக்காங்கன்னு!” என்று வீடே அதிரக் கூச்சலிட்டார்.
மாடியிலிருந்து மெல்ல இறங்கி வர முயன்ற ராஷி, வரவேற்பறையில் நின்றிருந்த அருளையும் அவன் அருகே நின்றிருந்த ஒரு தாயையும் பார்த்ததும் அப்படியே உறைந்து போனாள்! அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.
ஆனால், இந்த முறை அருள் ஓடி ஒளிந்துகொள்ளவில்லை.
ராஷியின் தந்தை புகழும் அங்கு வந்து சேர, இரண்டு குடும்பங்களும் எதிரெதிரே அமர்ந்தன. வீடே பேரமைதியில் மூழ்கியிருக்க, பார்வதி மெல்ல நிமிர்ந்து குமாரியையும் அவளது கணவரையும் பார்த்துப் பேசத் தொடங்கினாள்…பார்வதி தன் தொண்டையைச் செருமிக் கொண்டு, மிகவும் அமைதியாகவும் கண்ணியமாகவும் பேசத் தொடங்கினாள்.
“அம்மா குமாரி… ஐயா… நாங்க எதுக்காக இங்க வந்திருக்கோம்னு உங்களுக்குச் சந்தேகமா இருக்கலாம். என் மகன் அருள் உங்ககிட்ட ஏதோ ஒன்றை மறைச்சுக்கிட்டு ரொம்ப நாளா மனசுக்குள்ளேயே உருகிக்கிட்டு இருக்கான். அதை ஒரு தாயா நான் தான் உங்ககிட்ட வெளிப்படையா பேச வந்திருக்கேன்,” என்றாள்.
குமாரியும் அவளது கணவரும் புரியாமல் பார்வதியை பார்த்தனர்.
பார்வதி தொடர்ந்து, “என் மகன் உங்களோட பொண்ணைக் காப்பாத்துனது உண்மைதான். ஆனா… அந்த ஆபத்து வர்றதுக்கு முன்னாடியே, எங்கள் ஊரில் வச்சே என் மகனும் உங்க பொண்ணு ராஷியும் ஒருத்தரையொருத்தர் ஆழமாக காதலிச்சிருக்காங்க அம்மா!” என்று தயங்காமல் உண்மையை உடைத்தாள்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் குமாரியும் அவளது கணவரும் அதிர்ச்சியோடு ராஷியைத் திரும்பிப் பார்த்தனர். ராஷி தன் தலையைக் குனிந்தபடி, கண்களில் நீர் வழிய மெளனமாக நின்றிருந்தாள்.
பார்வதி தழுதழுத்த குரலில் தொடர்ந்தாள்: “என் மகன் உங்ககிட்ட இந்த காதலைச் சொல்லாததுக்கு ஒரே காரணம்தான்… ‘நம்ம பொண்ணைக் காப்பாத்துனதுக்கு கைமாறா காதலைக் கேக்குறானோ’னு நீங்க தப்பா நினைச்சுருவீங்களோங்கிற பயம்தான். நீங்க அவனைச் சாமியா கும்பிடும்போது, அவனால தன் காதலைச் சொல்ல முடியல. ஆனா… காதலையும் உண்மையையும் மறைச்சுட்டு அவனால வாழ முடியலம்மா.”
அறை முழுவதும் சில நொடிகள் பேரமைதி நிலவியது.
திடீரென, ராஷியின் தந்தை புகழ் எழுந்து வந்து அருளின் தோள்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். அவளது தாய் குமாரி கண்ணீரோடு பார்வதியின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“தம்பி அருள்…” என்று அடைத்த குரலில் பேசத் தொடங்கினார் ராஷியின் தந்தை.
“நீங்க சாமி இல்லை தம்பி… எங்கள் குடும்பத்துக்குக் கிடைச்ச பொக்கிஷம்! என் பொண்ணோட உயிர் மட்டுமில்ல, அவளோட சந்தோஷமும் உங்ககிட்டதான் இருக்குன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். கோமாவிலிருந்து கண் விழிச்சதுல இருந்து அவ உங்களைத் தான் தேடிக்கிட்டு இருந்தா. நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறீங்கன்னு தெரிஞ்ச அப்புறம், எங்களுக்கு உங்களை என் மாப்பிள்ளையா ஏத்துக்கிறதை விட வேற என்ன பெருமை வேணும்?” என்று நெகிழ்ந்து கூறினார்.
குமாரி ஓடிச் சென்று ராஷியைக் கட்டியணைத்துக் கொண்டு, “என் பொண்ணுக்கு வாழ்க்கையைக் கொடுத்ததும் நீங்கதான் தம்பி, இனி அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைக்கப் போறதும் நீங்கதான்!” என்று ஆனந்தக் கண்ணீரோடு கூறினாள்.
அத்தனை நாட்களாக நெஞ்சில் அடைத்து வைத்திருந்த பாரமும், அச்சமும் நொடியில் விலக… அருளின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நிமிர்ந்து பார்த்த அருளின் பார்வையை ராஷி சந்தித்தாள். அவளது கண்களில் ‘என் வர்மா சார் என்னை விட்டுப் போகல’ என்கிற அளவற்ற காதலும், மாபெரும் நிம்மதியும் பிரகாசித்தது.
வர்ணம் மிளிரும்…

