காதல் நெய்த வர்ணம் – 25 ( இறுதி அத்தியாயம் )

இறுதி பாகம்25

அருள் அவளது கண்களை ஆழமாகப் பார்த்து, உதடுகளில் ஒரு குறும்புப் புன்னகை பூக்க மெல்லிய குரலில் “அது நாளைக்குக் காலைல நடக்கப் போற நம்ம கல்யாணத்துக்கு… இது நாளைக்கு ராத்திரி நடக்கப் போற நம்ம முதலிரவுக்கு!” என்றான்.

அந்த ஒற்றை வார்த்தையைக் கேட்ட அடுத்த நொடி… ராஷியின் கன்னங்கள் அப்படியே செந்தாமரையாகச் சிவந்து போயின!

எதிர்பாராத அந்தப் பதிலில், உடம்பெல்லாம் ஒரு மெல்லிய சிலிர்ப்பு பரவ, அளவற்ற வெட்கத்தால் தன் இரு கரங்களாலும் முகத்தை அப்படியே மூடிக்கொண்டாள் ராஷி.

அவளது வெட்கத்தைக் கண்டு ரசித்த அருள், மெதுவாக அவளது கரங்களை விலக்கி, “என் கையால நெய்த இந்தப் புடவையில, என் ராஷியைப் பார்க்குற அந்த நொடிக்காகத் தான்டி இத்தனை வருஷமா என் மனசு காத்திருக்கு…” என்று காதலோடு முணுமுணுத்தான்.

ராஷி வெட்கத்துடன் தலையைக் குனிந்தபடி, அந்தத் தங்கச் சரிகைப் புடவையைத் தன் கைகளில் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அறையெங்கும் காதலின் வாசம் இன்னும் அடர்த்தியாகப் பரவத் தொடங்கியது!

“நாளைக்கு இந்த வர்மனின் ராஷியா, உங்க கையால நெய்த இந்த உடையில் வரும்போது… இந்த உலகத்துலயே மிக அழகான பொண்ணா நான் தான் இருப்பேன் மிஸ்டர் அருள்மொழிவர்மன்!” என்று கூறி நாணத்தில் தலைசாய்த்தாள்.

அருளின் கைகள் நெய்த அந்தப் பட்டுப் புடவை, வெறும் ஆடையாக மட்டுமில்லாமல், மரணத்தை வென்ற அவர்களது தூய்மையான காதலின் சாட்சியாக அந்த அறையில் ஒளிரத் தொடங்கியது!

காதலியாக இதுதான் நமக்குக் கடைசி நாள்… நாளை முதல் நீ என் மனைவி!” என்று அவனது உதடுகள் முணுமுணுக்க, அருள் மெல்ல அவளை நோக்கி அடிஎடுத்து வைத்தான்.

ராஷியின் இதயம் சீரற்றுத் துடிக்கத் தொடங்கியது. அவனது ஒவ்வொரு அடியிலும் காதலின் வெப்பமும், இத்தனை காலப் பிரிவின் தவிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன.

அவள் மெல்லப் பின்வாங்க, ஜன்னலோரச் சுவரில் அவளது முதுகு லேசாகத் உரசியது. அதற்குமேல் தப்பிச் செல்ல வழியில்லாமல் நின்ற ராஷியை, அருள் தன் இரு கரங்களாலும் சுவரோடு சேர்த்து வளைத்துப் பிடித்துக் கொண்டான்.

இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து அறையின் வெப்பத்தைக் கூட்டியது.

அருளின் கண்கள் அவளது இதழ்களில் நிலைக்க, ராஷி தன் கண்ணிமைகளை மெல்ல மூடிக்கொண்டாள். இத்தனை காலம் மரணப் போராட்டத்திலும், கோமாவின் இருளிலும், பிரிவின் வலியிலும் துடித்த இரு இதயங்களும் அந்த ஒரு நொடியில் தங்களின் இழந்த நாட்களை மீட்டெடுக்கத் துடித்தன.

அருள் மெதுவாகக் குனிந்து, அவளது இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான்.

அந்த முத்தம்… வெறும் உடல் சார்ந்த தீண்டலாக இல்லாமல், மரணத்தின் பிடியிலிருந்து அவளை மீட்டெடுத்த காதலின் சாட்சியாக, இத்தனை நாள் உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்த தவிப்புகளின் வெளிப்பாடாக அமைந்தது.

ராஷியின் விரல்கள் அருளின் தோள்களை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள, அவனது அணைப்பு அவளைச் சுவரோடு இன்னும் நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டது.

காலமும், உலகமும், ஏன்… அந்தச் சிரசாமலையின் இரவுக் காற்றும் கூட அந்த ஒற்றை முத்தத்தின் ஆழத்தில் உறைந்து போயின!

அன்று காலை சுபமுகூர்த்த வேளையில்…

அருள்மொழிவர்மன், தான் சொந்தமாகக் கைத்தறியில் நெய்த பட்டு வேஷ்டி-சட்டையில் கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்தான். எதிரே, ஆரஞ்சு நிறப் பட்டுப்புடவையில், முகத்தில் காதலும் நாணமும் மின்ன ராஷி தேவதையென மணமேடைக்கு வந்து சேர்ந்தாள்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, கெட்டிமேளம் கொட்ட, சிரசாமலையின் குலதெய்வம் சாட்சியாகவும், ஊர் மக்களின் ஆசிகளோடும்…

ராஷியின் கழுத்தில் அருள்மொழிவர்மன் திருமாங்கல்யத்தைக் கட்டினான்!

சுற்றி நின்ற பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழி சாருவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. “நடமாடும் சாமி” என்று அருளைப் போற்றிய குமாரியும் அவளது கணவரும், இன்று அவனைத் தங்கள் வீட்டுக் குலக்கொழுந்தாய், மருமகனாய் ஏற்றுக்கொண்டு ஆசி வழங்கினர்.

திருமணம் முடிந்ததும், அருள் ராஷியின் கையைப் பற்றிக்கொண்டு தன் கைத்தறிக்கூடத்தின் அருகே வந்து நின்றான்.

காலைச் சூரியனின் இளம் கதிர்கள், அந்த மரத்தறிகளின் மீது பட்டுப் பொன் நிறத்தில் மிளிர்ந்தன. தறிக்கூடத்தின் வாசலில் நின்றிருந்த இருவரின் பாதங்களிலும் மண் வாசனை கமழ்ந்தது. இத்தனை சோதனைகள், மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த பயம், பிரிவின் துயரம் என அனைத்தையும் கடந்து, இன்று அதே தறிக்கூடத்தின் முன் இருவரும் தம்பதியாய் நிற்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

ராஷி தன் புதுப் பட்டுப்புடவையின் தலைப்பைச் சரிசெய்தபடி அருளின் முகத்தைப் பார்த்தாள். அவளது கழுத்தில் புதிதாக மின்னிய திருமாங்கல்யம், அவளது முகத்திற்கு இன்னும் கூடுதல் அழகைக் கூட்டியிருந்தது.

“என்ன அருள்… அப்படிப் பார்க்குறீங்க?” என்று ராஷி நாணத்தோடு கேட்டாள்.

அருள் மெல்லச் சிரித்துக்கொண்டு, அவளைத் தறிக்கூடத்தின் உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே, அவனது பரம்பரைத் தறி வழக்கம்போல கம்பீரமாகக் காத்திருந்தது. ஆனால், அதன் மீது ஒரு புதிய பட்டு நூல் இழையோடத் தொடங்கியிருந்தது.

அருள் தறியின் அமரும் பலகையில் அமர்ந்து, ராஷியையும் தன் அருகில் அழைத்துக் கூர்மையாக அமர்த்திக் கொண்டான்.

“ராஷி… இந்தத் தறிதான் நமக்கு முதல்ல முகவரியைக் கொடுத்துச்சு. இந்த நூல்கள்தான் உன்னையும் என்னையும் இணைச்சது. இன்னைக்கு நம்ம கல்யாண நாளுல, நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் இந்த புதிய பட்டுப் புடவையோட முதல் இழையை நெய்யணும்,” என்றான் அருள், அவளது கரங்களைச் சேர்த்துத் தன் கைகளுக்குள் பொதிந்தபடி.

ராஷி கண்களில் மிளிர்ந்த ஆனந்தக் கண்ணீரோடு தலையசைத்தாள்.

இருவரின் கரங்களும் இணைந்து தறியின் நாடாவை அசைக்க, “டக்… டக்…” என்ற அந்தப் பரம்பரை தறியின் ஓசை மீண்டும் அந்தச் சிரசா மலையின் அடிவாரத்தில் அழகாக எதிரொலித்தது. அது வெறும் தறியின் சத்தம் மட்டுமல்ல, அவர்களின் புதிய வாழ்க்கையின், என்றும் அழியாதக் காதலின் தொடக்க இசை!

தூரத்தில் சிரசாமலையின் மலைக்கூட்டங்கள் கம்பீரமாகக் காட்சி அளித்தன. சலசலக்கும் தறியின் சத்தமும், குளிர்ந்த காற்றும் அவர்களைத் தழுவிச் சென்றன.

ராஷி மெல்ல அருளின் தோளில் தலைசாய்த்து, “வர்மா சார்… என்னை விட்டுப் போயிடுவீங்களோனு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

அருள் அவளது கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “உன் உயிர் மீண்டு வந்தப்போவே என் காதல் ஜெயிச்சிருச்சு ராஷி. இனி இந்த அருள்மொழிவர்மனோட எந்த மூச்சும் உன்னை விட்டுப் போகாது,” என்று காதலோடு கூறினான்.

மரணத்தின் இருளையும், கோமாவின் மௌனத்தையும், பிரிவின் வலியையும் கடந்து… அருளின் தியாகமும் ராஷியின் ஆழமான காதலும் சிரசாமலையின் மண்ணில் புதிய வாழ்வாக மலர்ந்து ஒளிரத் தொடங்கியது!

மரணத்தின் இருண்ட கணங்களையும், கோமாவின் மௌனப் பெருவெளியையும் தாண்டி, காதலின் அசைக்க முடியாத நம்பிக்கையால் வெற்றி பெற்றிருந்தது அருள் – ராஷியின் வாழ்க்கை.

சிரசாமலையின் குளிர்ந்த மலைக் காற்றும், பாரம்பரிய தறியின் இனிதான நாட ஓசையும் அவர்களது புதிய தொடக்கத்திற்கு நல்வாழ்த்துகளை இசைத்துக் கொண்டிருந்தன. ஒரு காலத்தில் பிரிவின் வலியையும், தியாகத்தின் பாரத்தையும் மட்டுமே சுமந்திருந்த அருளின் கைத்தறி நூலிழைகள், இன்று இரு வேறு இதயங்களை ஒன்றாகப் பிணைக்கும் புனிதமான தாலிக் கொடியாக உருப்பெற்றிருந்தன.

தான் நேசித்த கலையையும் கைவிடாமல், உயிருக்கு உயிரான காதலையும் விட்டுக்கொடுக்காமல், தன் சுயமரியாதையோடும் பெற்றோர்களின் ஆசியோடும் அருள் கரம்பிடித்த அந்த சுபவேளையில், சிரசாமலை மண்ணே பூரித்துப் போயிருந்தது.

அன்று இரவு…

பால் போன்ற நிலவொளி அந்த அறையின் ஜன்னல் வழியே வழிந்து பரவியிருந்தது. அறை முழுதும் வீசிய முல்லைப் பூக்களின் நறுமணமும், ஏலக்காய் கலந்த சூடான பாலின் வாசனையும் அந்த இரவின் அழகை மேலும் கூட்டின.

அறைக்கு வெளியே மெல்லிய காலடிச் சத்தம் கேட்டது.

அருள் தன் கைகளால் நெய்து கொடுத்த, தேவதை போன்ற வெண் பட்டுப் புடவையில்… வெட்கமும் நாணமும் தன் முகத்தில் மொய்த்திருக்க, கையில் பால்பாத்திரத்தோடு ராஷி மெல்ல முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வைத்தாள்.

வெள்ளைப் பட்டின் ஒளி அவள் மேனியைத் தழுவி நிற்க, அவளது ஒவ்வொரு அடியிலும் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தின் மணியோசை மெலிதாக ஒலித்தது. கதவை மெல்லச் சாத்திவிட்டு, அவள் அருளை நிமிர்ந்து பார்த்தபோது, அவளது இமைகள் பயத்திலும் கூச்சத்திலும் லேசாக நடுங்கின.

மணமேடையில் கம்பீரமாக இருந்த அதே அருள்மொழிவர்மன், இப்போது கட்டிலில் அமர்ந்து தன் காதலியை அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கொண்டு வந்த பால் டம்ளரை அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு, தலையைக் குனிந்தபடி அமைதியாக நின்றாள் ராஷி.

அருள் மெல்ல எழுந்திருந்து அவள் அருகில் வந்தான். அவனது மூச்சுக்காற்று தன் முகத்தில் பட்டதும் ராஷியின் உடம்பு சிலிர்த்தது.

அருள் தன் கரங்களை நீட்டி, அவளது தாடையைப் பிடித்து மெதுவாக உயர்த்தினான். அவளது வெட்கம் கலந்த அழகிய விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவன், அவளது நெற்றியில் தன் முதல் காதலை ஆழமாகப் பதித்தான்.

“ராஷி… இந்த வெண் பட்டு உனக்காகவே நெய்ததுடி… ஆனா, இதை விட உன் வெட்கம் தான்டி இன்னும் அழகா இருக்கு,” என்று அவன் முணுமுணுக்க,

ராஷி தன் உதடுகளைக் கடித்துச் சிரித்தபடி, அருளின் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

பிரிவும், தவிப்பும், துயரமும் அந்த ஒற்றை அணைப்பில் ஆவியாகிக் கரைய, இருவரின் புதிய வாழ்வின் இனிமையான முதல் இரவு அந்த நிலவின் சாட்சியாகத் தொடங்கியது.

நிலவின் வெளிச்சமும், முல்லைப் பூக்களின் நறுமணமும் அந்த அறை முழுதும் நிறைந்திருக்க, அருளின் நெஞ்சில் சாய்ந்திருந்த ராஷி மெதுவாகத் தலையுயர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவளது இமைகளில் இன்னும் விலகாத நாணத்தையும், அதையும் தாண்டிய ஆழ்ந்த காதலையும் கண்ட அருள்மொழிவர்மனின் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியது.

“ராஷி… சிரசா மலையில நாம தொடங்கின இந்தப் பயணம், இவ்வளவு தூரம் நம்மைக் கொண்டு வந்து சேர்க்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலடி. என் தறியில் இருந்த சாதாரண நூல்களுக்கு மட்டுமில்லை… என் வாழ்க்கைக்கே புது வண்ணங்களை நெய்து கொடுத்தது நீதான்…” என்று அவள் கூந்தலை மெல்லக் கோதியபடி அருள் முணுமுணுத்தான்.

ராஷி அவனது மார்பில் தன் கையை வைத்து, அவனது வேகமான இதயத் துடிப்பைக் கேட்டபடியே சிரித்தாள். “இல்லை அருள்… நீங்க நெய்தது வெறும் பட்டுப் புடவை இல்லை; என் உயிரையும் சேர்த்துதான். இந்த பட்டுப் புடவையில் இருக்குற ஒவ்வொரு இழையிலும் நம்ம காதலும், துயரமும், நம்பிக்கையும் தான் பின்னப்பட்டிருக்கு…”

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் அருளின் மனதைத் தொட்டன. அவளது முகத்தை இரு கரங்களிலும் ஏந்தி, அவளது சிவந்த உதடுகளில் மீண்டும் ஒரு காதல் முத்திரையைப் பதித்தான்.

சிரசா மலையின் அமைதியான பௌர்ணமி நிலவும், மரத்தறிகளின் தாலாட்டும், காலம் கடந்து நிற்கும் அவர்களின் காதலுக்குச் சாட்சியாய் நின்றன. வறுமையும் துயரமும் சூழ்ந்த அருளின் வாழ்க்கையில், ராஷியின் வருகையும் அவளது தேடல் தந்த ஒளியும் இணைந்து ஒரு காவியப் படைப்பையே உருவாக்கிவிட்டன.

இழப்புகளையும், மரணத்தின் எல்லை வரையிலான சோதனைகளையும் கடந்து, தங்களின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் அன்பைப் பிணைத்து, அகில உலகமும் வியக்கும் வண்ணம் தங்களின் வாழ்க்கையை அழகுற அமைத்துக் கொண்டனர் அருள்மொழிவர்மனும் ராஷியும்!

மண்ணின் பாரம்பரியத்தையும், பரம்பரை நெசவாளர்களின் வியர்வையையும் உலகிற்கு அடையாளம் காட்டிய ஒரு கலைஞனின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல; அது மரணத்தை வென்ற காதலின் மகத்தான அடையாளம்!

நூல்களால் ஆடைகளை நெய்யும் அருள்மொழிவர்மனின் கைத்தறிக் கலையோடு, ராஷியின் அன்பும் சாருவின் தியாகமும் இணைந்து, இரு இதயங்களின் வாழ்வியலை வண்ணமயமாக மாற்றி அமைத்தது. தடைகளை உடைத்து, சோதனைகளைக் கடந்து, நிலவின் சாட்சியாக ஒன்றிணைந்த இந்த தம்பதியின் காவியக் காதல் என்றும் அழியாத வசந்தமாய் மிளிர்கிறது.

“காதல் நெய்த வர்ணம்” — என்றும் மாறாத அன்பின் வண்ணங்களோடு வாழ்க!

-சுபம்-

error: Alert: Content selection is disabled!!