காதல் நெய்த வர்ணம் – 4

வண்ணம் 4

“இது பாவு.. அதாவது நீளவாக்கில் ஓடுற நூல்கள். இது ஊடே… அதாவது குறுக்கால போற நூல். இந்த ரெண்டு நூல்களும் சரியான கணக்குல, சரியான இறுக்கத்துல இணையறப்போதான் ஒரு முழுத் துணி உருவாகுது. இதுல ஒரு நூல் பிசகினாலும் துணியோட தரமே மாறிடும்.”

அருள் பேசப் பேச, அவனது கை விரல்கள் தறியின் மரப் பாகங்களையும், அந்த மெல்லிய பட்டு நூல்களையும் தொட்டுச் செல்வதை ராஷி மிகுந்த கவனத்துடன் பார்த்தாள்.

அவன் சொல்வதையெல்லாம் தன் வரைபடப் புத்தகத்தில் வேகவேகமாக எழுதிக் கொண்டாள். அவளது ஆடை வடிவமைப்பு அறிவுக்கு அருள் சொன்ன ‘கணக்கும் நேர்த்தியும்’ மிகப்பெரிய புதிய பாடமாக இருந்தது.

“கொஞ்சம் கிட்ட வந்து பாருங்க,” என்றான் அருள்.

ராஷி மெல்ல அடிமேல் அடிவைத்து தறியின் மிக அருகே சென்று நின்றாள். அருளின் உடலிலிருந்து வீசிய அந்த மெல்லிய சந்தன வாசமும், நெசவு நூலின் நறுமணமும் ராஷியை மீண்டும் ஒரு கணம் சிலிர்க்க வைத்தன.

அருள் ஒரு மெல்லிய பட்டு நூலை எடுத்து, “இந்த நூலோட இறுக்கத்தை விரல்களாலதான் உணர முடியும். மிஷின்ல பிரஷர் செட் பண்ணிடுவீங்க… ஆனா தறியில நம்ம மனசுதான் பிரஷர்!” என்று சொல்லி, அந்த நூலை ராஷியின் கைகளில் கொடுத்தான்.

ராஷி தன் மென்மையான விரல்களால் அந்த நூலைத் தொட்டாள்.

“உணர முடியுதா?” என்று அருள் ராஷியை நிமிர்ந்து பார்க்க, இருவரின் பார்வைகளும் மிக அருகில் சந்தித்தன.

அருளின் கூர்மையான, கம்பீரமான பார்வையில் ராஷி மீண்டும் ஒரு கணம் சொக்கிப்போனாள். இந்த முறை சாரு அவளைக் கலாய்ப்பதற்கு முன்னதாகவே, ராஷி சட்டென்று தன் கவனத்தை நூலின் மீது திருப்பினாள்.

“ஆமாங்க சார்… உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமா இருக்கு! கையால தொடும்போதே அந்த நூலோட உயிர்ப்பு தெரியுது,” என்றாள் ராஷி மெய்யான வியப்போடு.

அப்போது வரை அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அருளின் தந்தை முத்தையா ஐயா புன்னகையோடு சொன்னார், “பார்த்தியா அருள்… அந்த அம்மாவுக்கு நம்ம கலை மேல இருக்கிற ஆர்வம்? சும்மா பேச்சுக்கு வரலம்மா இந்தப் பொண்ணு. உண்மையாவே கத்துக்கத்தான் வந்திருக்கு!”

தந்தையின் வார்த்தைகள் அருளின் மனதுக்குள் இருந்த எஞ்சிய சந்தேகங்களையும் போக்கின. ராஷியைப் பற்றிய ஒரு நல்ல மதிப்பு அவனுள் மெல்ல உருவாகத் தொடங்கியது.

நெசவின் முதல் கட்ட நுணுக்கங்களை அருளிடம் கேட்டு வரைபடப் புத்தகத்தில் குறித்தபடி இருந்தனர் ராஷியும் சாருவும்.

அப்போது சுவரிலிருந்த பழமையான கடிகாரம் காலை ஒன்பது மணி அடிப்பதைக் காட்டியது. அருள் தறியிலிருந்து எழுந்து தன் தோள் துண்டால் கைகளைத் துடைத்தபடி, “சரி… வாங்க, முதல்ல காலைச் சாப்பாடு சாப்பிடலாம்,” என்றான்.

உடனே தன் தாயைப் பார்த்து, “அம்மா… இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடும்மா,” என்றான் இயல்பாக.

சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த பார்வதி அம்மாள், முகத்தில் தாய்க்கே உரிய கனிவான புன்னகையோடு, “இதோ தம்பி… இலை போட்டு தயாராத்தான் வச்சிருக்கேன்!” என்றார்.

இதை எதிர்பாராத ராஷியும் சாருவும் சற்றே திகைத்துப்போனார்கள்.

“அய்யய்யோ! வேண்டாம்மா… உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்க அப்புறமா வெளியில பார்த்துக்கறோம்,” என்று சாருவும் ராஷியும் அவசர அவசரமாக மறுத்தார்கள்.

அப்போது திண்ணையோரத்தில் அமர்ந்திருந்த பெரியவர் முத்தையா ஐயா சிரித்தபடி, “என்னம்மா இப்படிச் சொல்லிட்டீங்க? காலையிலேயே சென்னையில இருந்து கிளம்பி இங்க வந்திருக்கீங்க. இந்த ஊர்ல நீங்க நினைக்கிற மாதிரி டவுன்ல கிடைக்கிற கடை டிபன், ஹோட்டல் எல்லாம் கிடைக்காதுமா… வீட்டுச் சாப்பாடுதான் நல்லது,” என்றார்.

அருளும் ராஷியை நேருக்கு நேர் பார்த்தபடி, தன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான்:

“அப்பா சொல்றதுதான் உண்மை. டவுன் கடைங்கள்ல கிடைக்கிற பொங்கல், பூரின்னு இங்க எதுவும் கிடைக்காது. நம்ம வீட்டுல காலையில ராகி, கம்பு, கேழ்வரகு கூழு இல்லைன்னா அடை… இப்படித்தான் எளிய சாப்பாடுதான் இருக்கும். உங்களுக்குச் செட் ஆகுமானு தெரியல…”

அருள் இதைப் பேசும்போது, அவனது கூர்மையான பார்வையும், முகத்தில் இருந்த அந்த இயல்பான கம்பீரமும் நேரடியாக ராஷியின் கண்களை ஊடுருவின.

அவனது அந்த ஆழமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் ராஷியின் நெஞ்சுக்குள் மெல்லிய படபடப்பு உருவானது. சட்டென்று தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் ராஷி. அவள் முகம் லேசாகச் சிவந்ததை அருளின் கூர்மையான கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

சாரு ராஷியின் தோளை கிள்ளி, ‘சாப்பிடுவோம்டி’ என்பது போலச் சைகை செய்ய, இருவரும் மறுக்க முடியாமல் சம்மதித்து வீட்டின் கூடத்தில் விரித்திருந்த பாயில் அமர்ந்தார்கள்.

பார்வதி அம்மாள் ஆவி பறக்கும் சுடச்சுடக் கேழ்வரகு அடையும், காரசாரமான சின்ன வெங்காயத் துவையலும், கூடவே கெட்டித் தயிரும் வாழை இலையில் பரிமாறினார்.

“சாப்பிடுங்கம்மா… கிராமத்துச் சாப்பாடுதான், ஆனா உடம்புக்கு ரொம்ப நல்லது,” என்று அன்போடு உபசரித்தார்.

முதல் வாயை எடுத்து வைத்த ராஷிக்கு அதன் சுவை பிரமாதமாக இருந்தது. “அம்மா… உண்மையாவே ரொம்ப அருமையா இருக்கு!” என்று ராஷி பாராட்டியதும் பார்வதியின் முகம் பூரித்துப் போனது.

சாப்பிட்டுக் கொண்டே பார்வதி அம்மாள் மெதுவாக விசாரிக்கத் தொடங்கினார்:
“ஆமாம்மா… ரெண்டு பேரும் சென்னையில இருந்து வந்திருக்கீங்கன்னு சொன்னீங்க. உங்க குடும்பமெல்லாம் எங்க இருக்கு? அப்பா அம்மா என்ன பண்றாங்க?”

ராஷியும் சாருவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நாங்க சென்னையில குடும்பத்தோட இருக்கோம்க்கா. அப்பா பிசினஸ் பண்றாரு… சாருவோட அப்பாவும் வேலை பார்க்குறாரு. படிச்சு முடிச்சிட்டு இந்த நெசவுப் படிப்பை மேற்கொண்டு பண்ண வந்திருக்கோம்,” என்று சுருக்கமாகச் சொன்னார்கள்.

தங்கள் குடும்பத்தின் பின்னணியான கோடிக்கணக்கிலான பிசினஸ் சாம்ராஜ்யத்தைப் பற்றியோ, தங்களது பிரம்மாண்டமான ஆடம்பரப் பின்னணியைப் பற்றியோ ராஷி விரிவாக எதுவும் சொல்லவில்லை. எளிய மனிதர்களான அவர்களிடம் தங்கள் செல்வாக்கைக் காட்ட ராஷி விரும்பவில்லை.

பார்வதி அம்மாளும் எளிய கிராமத்து மனிதர்களுக்கே உரிய இயல்போடு, “சரிங்கம்மா… பத்திரமா தங்கிப் படிங்க,” என்று அதற்குமேல் எதையும் தோண்டித் துருவி கேட்காமல் விட்டுவிட்டார்.

சாப்பிட்டு முடித்ததும், ராஷியின் பார்வை மீண்டும் தறியின் அருகே நின்று கொண்டிருந்த அருளின் பக்கம் திரும்பியது. இருவரின் பார்வைகளும் மீண்டும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டன!

காலை உணவை முடித்துக்கொண்டு, கைகளைக் கழுவிவிட்டுத் திண்ணைக்கு வந்தனர் ராஷியும் சாருவும். கிராமத்து உணவின் ருசி இன்னும் அவர்கள் நாவில் ஒட்டியிருந்தது.

அருள் தன் தோளில் இருந்த துண்டை உதறி மீண்டும் போட்டபடி, அவர்களைப் பார்த்து, “நெசவுங்கிறது வெறும் தறியில உட்கார்ந்து துணியை உருவாக்குறது மட்டுமில்ல. அதுக்கு முன்னாடி நிறைய வேலைகள் இருக்கு. நூல் எப்படி பாவா மாறுது, அதுக்கு எப்படிச் சாயம் ஏறுதுன்னு நேர்ல பார்த்தாதான் உங்களுக்கு முழுசாப் புரியும். வாங்க, சாயப் பட்டறைக்குப் போலாம்,” என்று அழைத்தான்.

இருவரும் தங்கள் குறிப்பேட்டையும், கேமராவையும் எடுத்துக்கொண்டு அருளின் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள்.

சூரியன் இப்போது நன்றாக மேலே வந்திருந்தது. கிராமத்தின் வீதிகளில் “டக்… டக்…” என்ற தறிச் சத்தங்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தன. அந்தச் சத்தம் அந்த ஊரின் இதயத் துடிப்புப் போலத் தாளமிட்டது.

ஊரின் எல்லையில் இருந்த ஒரு பெரிய திறந்தவெளிப் பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றான் அருள். அங்கே பெரிய பெரிய செம்பு அண்டாக்களில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. சிவப்பு, அடர் நீலம், பச்சை என இயற்கையான சாயங்கள் அந்தத் தண்ணீரில் கலக்கப்பட்டு, அந்த இடமே வண்ணங்களின் உலகமாகச் சுழன்று கொண்டிருந்தது. பல தொழிலாளர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, பெரிய மூங்கில் கம்புகளின் உதவியோடு நூல்களை அந்தக் கொதிக்கும் வண்ண நீரில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ராஷி தன் கேமராவை எடுத்து அந்த வண்ணங்களையும், மனிதர்களின் உழைப்பையும் புகைப்படங்களாகப் பதிவு செய்யத் தொடங்கினாள்.

அருள் கொதிக்கும் அண்டாவின் அருகே சென்று நின்று, சத்தமாகப் பேசத் தொடங்கினான்:

“மிஷின்ல ஒரே நேரத்துல ஆயிரம் மீட்டருக்கு சாயம் ஏறும். எல்லாம் ஒரே சீரா, எந்தப் பிசகும் இல்லாம இருக்கும். ஆனா இங்க பாருங்க… ஒவ்வொரு நூல் சிட்டுக்கும் நாங்க கைப்பட சாயம் கொடுக்கிறோம். இயற்கையான மூலிகைகள், மரப்பட்டைகள்ல இருந்து எடுக்கப்படுற சாயம் இது. இதுல மனிதர்களோட உழைப்பும், அவங்களோட கைவண்ணமும் கலந்திருக்கு. அதனாலதான் கைத்தறித் துணியில ஒரு தனி உயிர்ப்பு இருக்கு!”

அருள் தன் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவனது குரலில் ஒரு தனி மிடுக்கும், கண்களில் தீர்க்கமான ஒளியும் தெரிவதை ராஷி கவனித்தாள். அவளது கேமரா வண்ணங்களைப் படம்பிடித்தாலும், அவளது கண்கள் அடிக்கடி அருளின் அந்த மிடுக்கான தோற்றத்தையே நோட்டமிட்டன.

“சார்… இந்தச் சாயம் காயறதுக்கு எவ்வளவு நாள் ஆகும்?” என்று சாரு ஆர்வமாகக் கேட்டாள்.

“வெயிலைப் பொறுத்ததுங்க. இந்த நூல்களை எல்லாம் எடுத்து, அந்தப் பக்கம் மூங்கில் கழிகள்ல காயப் போடுவாங்க,” என்று கை நீட்டிச் சுட்டிக் காட்டினான் அருள்.

அவன் சுட்டிக்காட்டிய திசையில், பல வண்ண நூல்கள் நீண்ட வரிசையில் வானவில் கொடி போலக் காயவிடப்பட்டிருந்தன. அந்தப் பின்னணியில் நின்றிருந்த அருளைப் பார்த்தபோது, ராஷிக்கு ஏதோ ஒரு கவிதை நேரில் நிற்பது போலத் தோன்றியது.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மிஷின்களைப் பார்த்துப் பழகிய ராஷிக்கு, வியர்வையும் வண்ணமுமாக நின்றிருந்த அந்த எளிய மனிதர்களின் உழைப்பு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

“இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்குற இந்தத் துணிக்கு, சரியான விலை கிடைக்குதா சார்?” என்று ராஷி மெல்லிய குரலில் கேட்டாள்.

அருளின் முகம் சட்டென்று லேசாக வாடியது. ஒரு பெருமூச்சு விட்டபடி, “அதுதான் இங்க பெரிய போராட்டமே! இடைத்தரகர்கள் லாபத்தைப் பார்த்துக்கறாங்களே தவிர, இந்த உழைப்பை யாரு மதிக்கிறா? இந்த நெசவை நம்பி இருக்கிற எத்தனையோ குடும்பங்கள் இன்னைக்கு அடுத்த வேளைச் சோற்றுக்குக் கஷ்டப்படுது,” என்றான் வேதனையோடு.

அவனது அந்த வார்த்தைகள் ராஷியின் மனதை ஆழமாகத் தைத்தன. தன் தந்தை நடத்தும் பிரம்மாண்டமான ஆடை சாம்ராஜ்யத்தில், இதுபோல எத்தனை எளிய மனிதர்களின் உழைப்புக்கான நியாயம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணம் அவளுள் உறுத்தத் தொடங்கியது.

‘இவர்களுக்கான சரியான அங்கீகாரத்தை எப்படியாவது உலகிற்குக் கொண்டு வர வேண்டும்’ என்ற அவளது லட்சியம் இப்போது இன்னும் உறுதியானது.

வண்ணம் மிளிரும்….

error: Alert: Content selection is disabled!!