காதல் நெய்த வர்ணம் – 5

வண்ணம் 5

மாலையில் கதிரவன் மலையிடுக்கில் மறையத் தொடங்கிய வேளையில், சாயப் பட்டறையின் வண்ண நினைவுகளோடும், மனதிற்குள் உறைந்த புதிய அனுபவங்களோடும் ராஷியும் சாருவும் தங்களது அறைக்குத் திரும்பினார்கள்.

செம்மண் பாதையில் நடந்து வரும்போதே, மாலையின் மெல்லிய தென்றல் இருவரின் முகத்திலும் படர்ந்தது.

சின்ன வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று, கைகால் கழுவிவிட்டுப் பாயில் சரிந்தாள் ராஷி. கையில் வரைபடப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, இன்று அருள் சொன்ன ‘பாவு’, ‘ஊடே’ கணக்குகளையும், அவனது கம்பீரமான முகத்தையும் நினைத்துப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சாரு, ராஷியின் பக்கத்தில் வந்து அமர்ந்து, தோளை லேசாகத் தட்டி முகம் முழுவதும் குறும்பான சிரிப்போடு கேட்டாள்:

“என்ன மேடம்… பார்வை ரொம்ப தூரமா போகுது? கையில் இருக்கிறது வரைபடப் புத்தகமா இல்லை அருள் உருவப்படமா?”

ராஷி சட்டென்று நிமிர்ந்து, முகத்தில் லேசான வெட்கத்தைப் பூசிக்கொண்டு, “சீ… போடி! சும்மா உளறாத. நான் இன்னைக்குப் பார்த்த அந்தச் சாயப் பட்டறையையும், தறியையும் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்,” என்றாள்.

“ஆமா ஆமா… எனக்குத் தெரியாதா உன்னைப்பற்றி? இன்னைக்குக் காலையில தறியில இருந்து அந்த அருள் அண்ணா பேசும்போதே உன் கண்ணு எங்க இருந்ததுனு நான் கவனிச்சேன். ஷவர், பாத் டப்னு ஆடம்பரமா வாழ்ந்த சென்னை மேடம், இன்னைக்கு ஒரு கிராமத்து இளைஞனோட கம்பீரத்துல சொக்கிப் போய் நிக்கிறீங்க!” என்று சாரு உரக்கச் சிரித்தாள்.

“சாரு… விளையாடாதடி,” என்ற ராஷி, பிறகு சற்றே நிதானமாகத் தன் மனதைத் திறந்தாள்.

“ஆனா உண்மையிலேயே… அருளைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு சாரு. நம்ம நகர்ப்புறத்துல எத்தனையோ பெரிய பிசினஸ்மேன்களைப் பார்த்திருக்கோம், பெரிய கோட்-சூட் போட்ட கார்ப்பரேட் தலைவர்களைப் பார்த்திருக்கோம். ஆனா, அருள் கிட்ட இருக்கிற அந்தச் சுயமரியாதையும், தன் கலை மேல அவனுக்கு இருக்கிற கம்பீரமும் வேற எங்கயும் நான் பார்த்ததே இல்லை.

ஒரு தோள் துண்டும், எளிய வேட்டியும்தான் அவன் உடை. ஆனா, அவன் பேசும்போது ஒரு ராஜாவோட கெத்து இருக்குல்ல… அது என்னை அறியாமலேயே ஏதோ ஒரு ஈர்ப்பைக் கொடுக்குதுடி,” என்று ராஷி தன் மனதின் மெல்லிய உணர்வை ஒப்புக்கொண்டாள்.

சாரு ராஷியின் கையைப் பிடித்துக் கொண்டு, “உண்மைதான் ராஷி… அவர் பேசுற ஒவ்வொரு வார்த்தையிலும் அந்தப் பாரம்பரியத்தோட கம்பீரம் தெரியுது. ஆனா, உன் லட்சியம் பெரியது. இந்தக் கலைக்கு உலகளவில் அங்கீகாரம் வாங்கித் தரணும்னு நினைக்கிற உன் எண்ணத்துக்கு அருளின் இந்த உழைப்பும் நேர்மையும் பெரிய பலமா இருக்கும்,” என்றாள் உண்மையோடு.

“ஆமாடி சாரு… அவருக்காகவும், இந்த ஊர் நெசவாளர்களுக்காகவும் கண்டிப்பா நாம ஏதாச்சும் பண்ணனும்,” என்று ராஷி உறுதியோடு கூறினாள்.

இரவு நேரம் மெல்ல நகர, கிராமத்தின் அமைதியில் தறியின் ஓசை தூரத்திலிருந்து மெல்லிய தாலாட்டாகக் கேட்டுக்கொண்டிருந்தது. ராஷியின் மனதில் அருளின் அந்த கூர்மையான பார்வையும், கம்பீரக் குரலும் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தன…

சாருவின் குறும்பான பேச்சுக்குப் பிறகு, இருவரின் கவனமும் இரவுக் உணவின் பக்கம் திரும்பியது.

கடிகாரத்தைப் பார்த்தாள் ராஷி. மணி மாலை ஆறு ஆகியிருந்தது.

வெளியே இருள் மெல்லப் படரத் தொடங்கியிருந்தது. “பின்ன என்னடி… இரவு சாப்பாட்டுக்கு என்ன பண்றது?” என்று யோசித்தபடி உட்கார்ந்திருந்தாள் ராஷி.

“இந்த நேரத்துல அடுப்பைப் பத்தவெச்சு, பாத்திரமெல்லாம் வாங்கிட்டு வந்து சமைக்க முடியுமா? நாமதான் இன்டக்ஷன் ஸ்டவ் மட்டும் தானே எடுத்து வந்திருக்கோம்.பாத்திரம் கூட எடுத்துட்டு வரலையே,” என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, வாசலில் இருந்து அன்பான ஒரு குரல் கேட்டது:

“பாப்பா… வீட்ல இருக்கீங்களா பாப்பா?”

“யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கேடி!” என்று சாரு எழுந்து போய் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

வாசலில் பார்வதி அம்மாளும், அவருக்குப் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அருளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

சாருவைக் கண்டதும் பார்வதி அம்மாள் கனிவாகப் புன்னகைத்து, “கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வந்தேன். பொண்ணுங்க தனியா இருக்காங்களே, ஒரு எட்டு பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்,” என்றார்.

ராஷியும் ஓடிவந்து, “வாங்கம்மா, உள்ள வாங்க!” என்று அன்போடு அவர்களை அழைத்தாள்.

பார்வதி அம்மாள் உள்ளே அடியெடுத்து வைத்தவர், “நைட்டு சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறீங்கம்மா?” என்று இயல்பாகக் கேட்டார்.

“அதைத்தான் ம்மா ரெண்டு பேரும் யோசிச்சுட்டு இருந்தோம். நாங்க வேற அவசரத்துல வெறும் இன்டக்ஷன் கரண்ட் அடுப்பை மட்டும் தூக்கிட்டு வந்துட்டோம். அதுக்கு ஏத்த பாத்திரங்கள் எதுவும் இன்னும் வாங்கல,” என்றாள் ராஷி.

இதைக்கேட்ட பார்வதி அம்மாள் லேசாகச் சிரித்துவிட்டு, “ஐயையோ… அதுக்கென்னம்மா! சரி, நைட்டு சாப்பாட்டை நான் என் வீட்டுல சமைச்சுக் கொடுத்திடுறேன். நீங்க நாளைக்கு மெதுவா டவுனுக்குப் போயி உங்களுக்கு வேண்டிய பாத்திரங்களை வாங்கிட்டு வந்து சமையுங்க. இல்லைன்னா… நீங்க தங்கியிருக்க போற இந்த நாட்களுக்கு மூணு வேளையும் நானே சமைச்சுக் கொடுத்துடட்டுமா?” என்று தாய்மையோடு கேட்டார்.

பார்வதி அம்மாளின் அந்தத் தாராள மனசையும் அன்பையும் பார்த்து ராஷியும் சாருவும் நெகிழ்ந்துபோனார்கள்.

பின்னால் நின்றுகொண்டிருந்த அருள், தன் தாய் அப்படிச் சொன்னதும், ராஷியை மெல்ல நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்களில், ‘எங்க அம்மா அப்படித் தான், யோசிக்காம உதவுவாங்க’ என்கிற ஒரு மெல்லியப் பெருமிதம் மின்னியது!

சில நொடிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி யோசித்தார்கள்.

சென்னை ஆடம்பர வாழ்க்கையில் எதையும் பணத்தைக் கொடுத்து வாங்கியே பழக்கப்பட்ட ராஷிக்கும் சாருவிற்கும், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் இப்படி அள்ளித் தரும் கிராமத்து மனிதர்களின் அன்பு வியப்பாக இருந்தது. அதே சமயம், தொடர்ந்து அவங்களையே சிரமப்படுத்துவதும் சரியாக இருக்காது என்று தோணியது.

ராஷி மெல்லப் புன்னகைத்து பார்வதி அம்மாளிடம் சொன்னாள், “இல்லைங்கம்மா… நீங்க சமைச்சுத் தர்ற சாப்பாடு ரொம்ப பிரமாதமாத்தான் இருக்கு. ஆனா, தினமும் உங்களைச் சிரமப்படுத்தினா நாங்க மனசளவில சங்கடப்படுவோம். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீங்க சமைச்சுத் தர்றதை நாங்க ஏத்துக்கறோம். நாளைக்கு நாங்களே டவுனுக்குப் போய் சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், மளிகைப் சாமான்கள் எல்லாம் வாங்கிட்டு வந்துடறோம்க்கா.”

சாருவும் அதை ஆமோதித்து, “ஆமாங்கம்மா… நீங்க எங்களுக்குத் தங்க இடமும், அண்ணாவுடைய தறிக் கூடத்துல வழிகாட்டுதலும் கொடுத்ததே பெரிய உதவி. அதுவே போதும்மா,” என்றாள்.

அருகில் நின்றுகொண்டிருந்த அருள், இருவரின் இந்த சுயமரியாதையான பதிலைக் கேட்டு மனதுக்குள் மெச்சிக் கொண்டான். பணக்கார வீட்டுப் பெண்கள் என்ற மிதப்பு இல்லாமல், தங்களின் எல்லை அறிந்து பேசும் ராஷியின் நிதானம் அவனுக்குப் பிடித்திருந்தது.

பார்வதி அம்மாள் சிரித்தபடி, “சரிங்க பாப்பா… நீங்க சொல்றதும் சரிதான். ஆனா இன்னைக்கு நைட்டுக்கு என் வீட்டுச் சாப்பாடுதான்! நான் போய் சுடச்சுட இட்லியும் கத்திரிக்காய் கோத்சும் பண்ணி வக்கிறேன். அருள்… நீ எட்டரை மணிக்கு வந்து இவங்களுக்குக் சாப்பாட்டைக் கொண்டு வந்து கொடுத்துட்டு போடா,” என்று மகனிடம் பணித்தார்.

“சரிம்மா,” என்று தலையசைத்தான் அருள்.

பார்வதி அம்மாள் கிளம்ப, அருள் ஒரு நொடி ராஷியை நிமிர்ந்து பார்த்து, “அப்போ நான் நைட்டு சாப்பாடு எடுத்துட்டு வர்றேங்க. பார்த்து பத்திரமா இருங்க,” என்று சொல்லிவிட்டுத் தாயுடன் நடந்து சென்றான்.

இருள் முழுமையாகச் சூழ்ந்த அந்த கிராமத்து அமைதியில், அருளின் கனிவான “பார்த்து பத்திரமா இருங்க” என்ற வார்த்தைகள் ராஷியின் மனதை ஏதோ ஒரு புதுக் கதகதப்பால் நிரப்பின.
இரவு நேரம் மெல்லக் கடந்து கொண்டிருக்க, கிராமத்தின் அமைதியை ஊடுருவிக்கொண்டு அருளின் காலடிச் சத்தம் கேட்டது.

அருள் தன் கையில் சூடான சாப்பாட்டுத் தூக்குச் சட்டியோடு வந்திருந்தான். வாசலில் நின்றபடியே, “சாப்பாடுங்க…” என்று கூறி தூக்குச் சட்டியை ராஷியிடம் கொடுத்தான்.

அவளது கைகள் பாத்திரத்தைப் பெறும்போது, இருவரின் விரல்களும் லேசாகத் தொட்டுச் சென்றன. ராஷியின் நெஞ்சில் மெல்லிய அதிர்வு. அருள் சட்டென்று தன் கைகளை விலக்கிக் கொண்டு, “சாப்பிட்டு பாத்திரத்தை உள்ள வச்சுடுங்க, காலையில வந்து வாங்கிக்கிறேன். கதவைப் பூட்டிக்கோங்க,” என்று கம்பீரமான குரலில் சொல்லிவிட்டு, இரவின் இருளில் மறைந்தான்.

இருவரும் பார்வதி அம்மாள் கொடுத்து அனுப்பிய ஆவி பறக்கும் இட்லியையும் கத்திரிக்காய் கோத்சையும் சுவைத்துச் சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களில், ராஷியின் போன் உரக்க ஒலித்தது. திரையில் ‘அப்பா’ என்ற பெயர் மின்னியது. அதே நேரத்தில் சாருவின் போனுக்கும் அவளது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.

இருவரும் போனை எடுத்துப் பேசத் தொடங்கினார்கள். ஆனால், பழைய அந்த ஓட்டு வீட்டிற்குள் தடிமனான சுவர்கள் இருந்ததால் நெட்வொர்க் சரியாகக் கிடைக்காமல் குரல் விட்டு விட்டுத் தேய்ந்தது.

“ஹலோ… அப்பா கேக்குதா? இருங்கப்பா வெளிய வந்து பேசுறேன்,” என்று கூறியபடி ராஷி வீட்டின் வாசலுக்கு வந்தாள். சாருவும் தன் போனில் பேசியபடி திண்ணையின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டாள்.

வெளியே தெருவில் ஜில்லென்ற இரவுத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. வானத்தில் முழு நிலவு வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, கிராமமே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.

ராஷி போனை காதில் வைத்தபடி, வீட்டின் இடது பக்கமாக இருந்த செம்மண் பாதையில் மெல்ல நடை பழகிக்கொண்டே பேசத் தொடங்கினாள்.

“ஆமாப்பா… சாப்பாடு எல்லாம் நல்லபடியா சாப்பிட்டோம். இங்க இருக்கிறவங்க ரொம்ப அன்பா இருக்காங்கப்பா. காலையில கிணற்றுத் தண்ணியில குளிச்சேன் தெரியுமா? அப்புறம் அந்த அருள்னு ஒருத்தர் இருக்காருப்பா… தறியில அவ்வளவு அழகா நெய்யுறாரு. சாயப் பட்டறைக்குக் கூட்டிட்டு போயி ஒவ்வொன்னா விளக்கினாரு… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா!”

தன் தந்தையிடம் அந்த ஊரின் அழகையும், மனிதர்களின் அன்பையும், குறிப்பாக அருளின் திறமையைப் பற்றியும் உற்சாகமாக விவரித்துக் கொண்டே நடந்தவள், தான் வீட்டை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி வந்துவிட்டோம் என்பதையே கவனிக்கவில்லை.

பாதையின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய பாறங்கல்லையும், மரத்தின் வேரையும் கவனிக்காமல் காலை முன்வைத்த அடுத்த நொடி—

“ஆ…” என்று ராஷியின் கால்கள் நிலைதடுமாறி, இடைதடவி கீழே விழப் போனாள்! போன் கையிலிருந்து நழுவும் நிலைக்குச் சென்றது

error: Alert: Content selection is disabled!!