கிருபனின் கமலி 11 – 2

“அது அங்கிளுக்கு வாங்கினது.” உதட்டில் பூத்திருந்த மெல்லிய சிரிப்புடன் சொன்னான், கிருபன்.

“அதுக்கு?” என்றுவிட்டு நிமிர்ந்து, அவள் பார்த்த பார்வையில் அவனுக்குப் பதிலே வரவில்லை.

மையிட்டிருந்த விழிகளைக் கண்டு மனம் மயங்கியது. ஒருகணம், அந்த விழிகளுக்குள் சிறைப்பட்டு நின்றவன், வேகமாகத் தன் பார்வையை அகற்றிக் கொண்டான். மனதுக்குள் பெரும் சலனம்.

“அப்பாக்கு வந்தாலும் அண்ணாக்கு வந்தாலும் நான் தான் பிரிப்பன்.”

“பாத்தியாடா? இது தான் இந்த வீட்டு நிலமை. நாங்க எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள். வெளில இருந்து பாக்கிற ஆக்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.” சோகமாகச் சொன்னான், அரவிந்தன்.

“ஓமோம்! உள்ளுக்குப் போடுற ‘சட்டில’ இருந்து வெளில போடுற ஷேர்ட் பட்டன் வரைக்கும் நான் எடுத்துத் தரவேணும். பரிசு மட்டும் உனக்கு வேணுமோ?” என்றவளின் வாயைப் பாய்ந்து பொத்தினான், அரவிந்தன்.

“லூசு! மானத்த வாங்காத! ஆருக்கும் கேக்கப் போகுது!”

கிருபனுக்கும் முகம் இரத்தமெனச் சிவந்து போனது. வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். ‘வெக்கம் கெட்டவள்! ரெண்டு ஆம்பிளைப் பிள்ளைகளுக்கு முன்னால என்ன கதைக்கிறாள்!’ என்று, மனம் செல்லமாகத் திட்டிக்கொண்டது.

அவள் அசையவே இல்லை. தமையனின் கையைத் தள்ளி விட்டுவிட்டு, “அத நீ கதைக்க முதல் யோசிக்கவேணும், விளங்கிச்சோடா அண்ணா! மணிக்கூடு நல்லாருக்கு. நானே அப்பாட்டக் குடுக்கிறன்.” என்றுவிட்டுப் போனாள்.

“சரியான ராட்சசியடா. நிமிசத்தில எப்பிடி மானத்த வாங்கினாள், பாத்தியா? வெளில இருக்கிற கிழவின்ர காதுல இது விழுந்ததோ, காச்சட்டை போடாமத் திரிஞ்சவனையே நான் பாத்திட்டானாம் எண்டுகொண்டு வந்திருக்கும்.” என்று, பல்லைக் கடித்தான், அரவிந்தன்.

பெரிய முறுவல் ஒன்று முகம் முழுக்கப் படர, “அனுபவி மச்சான். இதெல்லாம் வரம்!” என்றான் கிருபன், உள்ளார்ந்த குரலில்.

நொடியில் நண்பனைக் கணித்தான், அரவிந்தன். “அவளை விட்டுட்டு நீ வா. நாங்க டிவி பாப்பம்.” என்று, பேச்சை மாற்றினான்.

பலகாரங்கள் சாப்பிட்டு, மில்க்க்ஷேக் அருந்தி, கேக்கும் உண்டதில் இரவு உணவுக்குச் சற்று நேரமாகட்டும் என்று சொல்லிவிட்டு, பெரியவர்கள் எல்லோரும் முற்றத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். வீடு, இவள் மற்றும் இவளின் நண்பர்கள் பட்டாளத்தின் சேட்டையில் அதிர்ந்தது.

சற்று நேரம், வீட்டுக்குள்ளேயே ஒளித்துப் பிடித்து விளையாடினார்கள். இனி, ஒளிந்து கொள்வதற்கு இடமில்லை என்றானதும் கார்ட்ஸ் விளையாடினார்கள். எல்லோரும் களவு செய்ய, கிச்சு கிச்சு மூட்டி விளையாடினார்கள். கண்களில் கண்ணீர் வழிய வழியச் சிரித்துப் பிரண்டவளையே கிருபனின் விழிகள் வட்டமடித்தன. அவனுக்கும் அவள் ஒரு வரம் தரலாம். பிடியே கொடுக்கிறாள் இல்லையே! தொலைக்காட்சியில் கவனம் பதிக்கவே முடியவில்லை.

விலகிவிடு, அருமையான குடும்பத்தை இழந்துவிடாதே என்று அறிவு அறிவுறுத்துகிறது. அவள் தான் வேண்டும் என்று மனம் கிடந்து சிணுங்குகிறது. அவளும், தன் பேச்சாலும் செய்கைகளாலும் உன்னை விடமாட்டேன் என்று, அவனைத் தன்புறமாய் இழுத்துக்கொண்டு இருக்கிறாள். அவன் மனமும் அவளின் பின்னாலேயே நாய்க்குட்டியாகச் சுற்றுகிறது. எதிர்காலம், இன்னுமொரு ஏமாற்றத்தைத் தந்துவிடப் போகிறதோ என்று, மனம் மருண்டு மிரண்டது கிருபனுக்கு.

நேரம் எட்டுமணி தாண்டியதும் மெல்லிய பசியின் அடையாளங்கள் தென்பட ஆரம்பித்தன. உடையை மாற்றிக்கொண்டு வந்து, இடியப்பக் கொத்துக்கான வேலையை ஆரம்பித்தாள், கமலி. அரவிந்தனும் கிருபனும் சேர்ந்து கொண்டனர். உதவிக்கு சுகுணாவும் மாலினியும் வந்தனர்.

“இங்க ஒருத்தரும் வரத் தேவையில்லை. எங்களுக்கு எங்கட வேல பாக்கத் தெரியும். நடவுங்கோ!” என்று, அவர்களைத் துரத்திவிட்டாள், கமலி.

இரண்டு அடுப்புகளில் தாச்சி போன்ற பெரிய பான்களை(pan) வைத்து, இரண்டிலும் கொத்துக்கான வேலைகளை ஆரம்பித்தாள். ஒரு பானை அரவிந்தனைக் கவனிக்கச் சொன்னாள்.

இடியப்பத்தை உதிர்த்துத் தரச்சொல்லிக் கிருபனைப் பணித்தாள். பழக்கமில்லாத செயல் என்பதில், பார்த்து பார்த்துக் கவனமாகச் செய்தான், அவன்.

“குளுக்கோஸ் வேணுமா?” என்றாள் முறைப்புடன்.

முதலில் புரியாமல் விழித்தாலும் விடயம் பிடிபட்டதும் சிரிப்பு வந்தது. “கொஞ்சம் பழக்கமில்லை. அதுதான்…” முணுமுணுத்து விட்டு, கத்தியை எடுத்து வேகவேகமாக வெட்டத் தொடங்கினான்.

“என்ன பழக்கம் இல்ல? இடியப்பத்தைப் பிக்கிறதுக்கு எல்லாம் டியூஷனுக்கா அனுப்பேலும்? சமையல் தெரியாத நீங்க எல்லாம் என்ன ஆம்பிளைகள்? நாளைக்கு உங்கள நம்பி ஒரு பொம்பிளை எப்பிடி வருவாள்?”

இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று கிருபனுக்குச் சத்தியமாகப் பிடிபடவே இல்லை. அவன் விழிப்பதைப் பார்த்து, “உயிரே…! உயிரே…! எப்பிடியாவது தப்பிச்சு ஓடி விடு!” என்று பாடினான், அரவிந்தன்.

“காணும்! நீர் மூடும்! மூடிக்கொண்டு வேலையைப் பாரும்!” என்றவளின் பதிலில், கிருபனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. குனிந்த தலை நிமிராது இடியப்பத்தைக் கண்ட துண்டமாக்கினான்.

அரவிந்தனின் அடுப்பில் கோழிக்கொத்துத் தயாராகிக் கொண்டிருந்தது. இவள், ஆட்டிறைச்சிக் கொத்தைக் கையில் எடுத்திருந்தாள். அடுப்பு வெக்கையின் முன் நின்று, நெற்றியில் வியர்வைப் பூக்கள் அரும்ப அரும்ப, இலாவகமாகச் சமைத்துக்கொண்டு இருந்தாள். அந்தப் பிறை நெற்றியைத் துடைத்து விட, அவன் கைகள் துடித்தன.

“உப்பு, உறைப்புக் காணுமா பாருங்க?” சட்டியில் இருந்து கொஞ்சமாகக் கரண்டியில் எடுத்து, அவனிடம் நீட்டினாள்.

கையில் வாங்கி ருசி பார்த்தான், கிருபன். எண்ணைத் தன்மை இல்லாமல், காரசாரமாக, குமையாமல், பசியைத் தூண்டிவிட்டது கொத்து.

“அருமையா இருக்கு.” என்றான், முகமெல்லாம் மலர.

அவளின் கைப்பக்குவம் அவன் அறிந்தது தான். என்றாலும், கண்முன்னே அவள் செய்ததைச் சுவைத்தது சொல்லத் தெரியாத சந்தோசத்தை உண்டாக்கிற்று.

“நம்பலாமா?” தலையைச் சரித்து அவனை அளவிட்டபடி கேட்டாள், அவள்.

அவளின் செய்கையில் அரும்பிய முறுவலோடு, “நீங்களே சாப்பிட்டுப் பாருங்கோவன். உண்மையா நல்லாருக்கு.” என்றான்.

“நான் சமைச்சா நல்லாத்தான் இருக்கும் எண்டு எனக்குத் தெரியும். எண்டாலும் சும்மா கேட்டுப் பாத்தனான்.” எடுப்புடன் சொல்லிவிட்டு அடுப்பை அணைத்தாள், கமலி.

“இத நாளைக்கு நாங்க அங்க போயிட்டு வந்து சொல்லோணும்.” வாயை வைத்துக்கொண்டு இருக்க மாட்டாமல் சொன்னான், அரவிந்தன்.

“வராட்டிச் சொல்லு வந்து பெரிய ஓட்டையாப் போட்டு விடுறன்.” என்றவளின் பதிலில், சமையலறையை விட்டு வேகமாக வெளியே ஓடி வந்திருந்தான், கிருபன்.

இந்தமுறை, அவனால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன பெண் இவள்? வார்த்தைகளை வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பாள் போலும்.

ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவன் வந்தபோது, பானில் இருந்ததைப் பாத்திரத்துக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தாள், அவள்.

“விடுங்க, நான் மாத்திறன்.” அது பாரம் என்பதில், அவளிடமிருந்து வாங்கி, அவனே மாற்றினான்.

“சிம்ரன், இடுப்பு ஒடிஞ்சிடாமக் கவனம்.” என்றாள் அப்போதும்.

அவன் கையில் சட்டி ஒருமுறை தடுமாறி அடங்கியது.

“பிளீஸ்! இப்பிடிக் கூப்பிடாதீங்க.” என்றான் கெஞ்சலாய்.

“வேற எப்பிடிக் கூப்பிட? ஒல்லிக்குச்சி உடம்பழகா எண்டா?”

“என்ர பெயர் கிருபன்.”

“இருக்கட்டும். இருந்திட்டுப் போகட்டும்!”

இதற்கும் மேலே எதை, எப்படி என்று அவளிடம் சொல்வது? பேசாமல் வேலையைப் பார்த்தான், கிருபன்.

அங்கே முன்பக்கம், மாலினியும் சுகுணாவும் எல்லோருக்கும் பரிமாறத் தயாராகினர். கொத்து இருந்த பெரிய பாத்திரத்தை அவர்களிடம் கொடுக்கப் போனான், அரவிந்தன்.

தமையன் இல்லாத அந்த இடைவெளியில், “அதென்ன மரியாதை? அண்ணா நிக்கிறான் எண்டா? அப்ப, இடத்துக்கு ஏற்ற மாதிரி நடிப்பீங்களா நீங்க?” என்றாள், கமலி.

அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டான், கிருபன். இப்படிக் கேட்பாள் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அதுவரை இருந்த உற்சாகம் அப்படியே மறைந்து போனது. வேதனையோடு அவளைப் பார்த்தான்.

கமலி திகைத்துப் போனாள். மீண்டும் அவனைக் காயப்படுத்திவிட்டது புரிந்தது.

“அது… நான்…”

அதற்குள் அரவிந்தன் வருவது தெரிய, அங்கிருந்து வேகமாக நகர்ந்தான், கிருபன். சமையலறையில் அவன் வேலையும் முடிந்திருந்ததில் வாசலில் பரிமாறுவதற்கு உதவியாக நின்று கொண்டான்.

அவள் கேட்டதில் பொய் இல்லையே. அரவிந்தனின் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவன் இல்லாத போது இன்னொரு மாதிரியும் தானே அவளிடம் பழகுகிறான். அதற்குமேல், அவனால் அங்கே ஒன்றி இருக்க முடியாமல் போயிற்று.

பெயருக்கு உண்டுவிட்டு சுகுணா, பரந்தாமன், அரவிந்தனிடம் விடைபெற்றுக் கொண்டான். புறப்பட்ட போது கூட அவளின் முகம் பார்க்கவில்லை.

ஒவ்வொரு முறையும் இதையே தான் செய்கிறான். ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போலிருந்தது கமலிக்கு. அவள் என்னவோ சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னாள். அதில் உண்மை இருந்ததில் அவனுக்கு நன்றாகவே சுட்டுவிட்டது புரிந்தது.

இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தாள். அதற்குமேல் முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவனைக் காயப்படுத்துகிறோம் என்பது வேறு அவளை வாட்டியது.

மீண்டும் அவனுக்கு அழைத்து, “அல்லிராணிக் கோட்டைக்கு நாளைக்குப் பின்னேரம் வாறீங்க!” என்றுவிட்டு வைத்தாள்.

error: Alert: Content selection is disabled!!