அத்தியாயம் 16
துளசியின் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சோமசுந்தரம் கிருபனை அழைக்கவும் இல்லை; திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. அன்று, கமலியின் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதன் பிறகு, அவன் திருமணம் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவும் இல்லை.
“மாமா ஏதும் சொன்னவரா மாமி?” என்று, ஜெயந்தியிடம் கேட்டும் பார்த்தான்.
“என்ன சொல்லக் கிடக்கு? நீ வளந்த பிள்ளை. உன்ர நல்லது கெட்டதுகளை முடிவெடுக்க உனக்கே தெரியும் தானே. கலியாணம் எப்ப எண்டு சொல்லு. நாங்க வருவோம்.” என்று சொல்லி, அவரும் தான் சோமசுந்தரத்தின் மனைவி என்று காட்டினார்.
கிருபனிடம் சத்தமே இல்லாமல் போயிற்று. அவன் எவ்வளவு தான் நெருங்கிப் போனாலும் விலக்கியே நிறுத்துகிறவர்களை இன்னும் எப்படி அணுகுவது என்று புரியவே இல்லை.
ஏன் இப்படி? பொருளாதார ரீதியாக அவன் எதற்கும் அவரிடம் வந்து நின்று விடுவான் என்று நினைக்கிறாரா? அல்லது, அவனை இன்னுமே சுமையாகக் கருதுகிறாரா? அவன் தான் ஒன்றுக்கும் வரமாட்டேன் என்று சொன்னானே. பிறகும் ஏன்?
ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு பெருமூச்சுடன் அவனுக்குள் எழுகிற அனைத்துக் கேள்விகளையும் தள்ளி வைத்தான். ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்று, அந்த வீட்டுப் பிள்ளையாக அனைத்து வேலைகளையும் பார்த்தான்.
அவனுக்கான வேலைகள் குறையாமல் இருந்தது. ஜெயந்தியை முன்னிறுத்தி ஏவுவதில் அவர் குறை வைக்கவே இல்லை. அதில், அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், அவனை யாரோ ஒருவனாக விலக்கி நிறுத்தினார். பொருட்டாக மதிக்கவே மறுத்தார். திருமண அலுவல்களாக வந்துபோன அவனை அறியாத உறவுகளிடம் அவனைத் தங்கையின் மகனாக அறிமுகப் படுத்தவே இல்லை. அதுதான், அவனை மிகவுமே காயப்படுத்தியது.
ஒருவிதச் சலிப்பும் வெறுமையும் ஆட்கொண்டது. கமலியை அப்போதே பார்க்கவேண்டும் போல் ஒரு உணர்வு. “மன்னாருக்கு ஒருக்காப் போயிட்டு வாறன், மாமி.” என்றுவிட்டு, உடனேயே புறப்பட்டான்.
அவன் வீட்டுக்குக் கூடச் செல்லவில்லை. நேராக, அவள் வீட்டின் முன்னே தான் பைக்கை கொண்டுவந்து நிறுத்தினான். திருமணப் பேச்சுக்குப் பிறகு அங்குச் செல்வது சரியல்ல என்று, அவர்கள் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தான். இன்று, வந்து நின்ற பிறகுதான் இது சரியா என்று யோசித்தான்.
பைக்கை திருப்புவோமா என்று நினைக்கையில், “டேய்! என்னடா வந்திட்டு வாசல்லையே நிக்கிறாய்? நல்ல சகுனம் பாக்கிறியோ?” என்றபடி வந்தான், அரவிந்தன்.
“அது… உன்னப் பாக்க…” எனும்போதே இடையிட்டு, “ஓ! உன்ர மாமா வீட்டுக் கலியாண வேலை எல்லாத்தையும் விட்டுட்டு, என்னைப் பாக்கிறதுக்காகக் கிளிநொச்சில இருந்து மன்னாருக்கு வந்திருக்கிறாய், நீ. இத நான் நம்போணும்?” என்று கேட்டான், அரவிந்தன்.
கிருபனுக்கு மாட்டிக்கொண்டது புரிந்தது. உதட்டோரச் சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. “ஏனடா, உன்னப் பாக்க நான் இந்த வீட்டுக்கு வந்ததே இல்லையா?” என்று, அதட்ட முயன்றான்.
“அது கா.மு காலம் மச்சி. நாங்க இப்ப இருக்கிறது கா.பி காலம். இப்பவும் நீ என்னத் தான் பாக்க வந்தியோ?” அரவிந்தனும் அவனை விட மறுத்தான்.
பதில் சொல்ல முடியாமல் அவனை முறைத்துவிட்டு, பார்வையை வேகமாகத் திருப்பிக் கொண்டான், கிருபன். இப்படி, இவனிடம் மாட்டி முழிப்பதற்குப் பேசாமல் அவளோடு கைபேசியிலேயே பேசியிருக்கலாம். ஆனால், அவனுக்குள் எழுந்து நிற்கிற அந்தத் தாகமும் ஏக்கமும் அவளைப் பாராமல் தீராதே!
சிறு அணைப்பு, ஒரு முத்தம், உனக்கு நான் இருக்கிறேன் என்கிற அவளின் கன்னத்து வருடல் வேண்டுமே!
அரவிந்தன் விடவில்லை. “என்னைப் பாரு மச்சி. என்ர முகத்தைப் பாத்துச் சொல்லு, நீ என்னப் பாக்கத்தான் வந்திருக்கிறாய் எண்டு.” என்று, அவன் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான்.
கிருபனுக்கு முகம் சிவந்துவிடும் நிலை. அவன் கையைத் தட்டி விட்டுவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு தலையைக் கோதிச் சரி செய்தான். உதட்டினில் நெளியும் சிரிப்பை என்ன முயன்றும் மறைக்க முடியவில்லை.
“அட அட அட! என்ன வெக்கம்? என்ன சிரிப்பு? கண் ரெண்டும் அலைபாயுது. மீசை கிடந்து துடிக்குது. வாய் இளிக்குது. சூப்பர் மச்சி!”
அதற்குமேல் முடியாமல் பைக்கில் இருந்தபடியே எழும்பி, அவன் வாயைப் பொத்தினான்.
“ப்ளீஸ்டா! என்னை விட்டுடு. எனக்கு அவளைப் பாக்கோணும் மாதிரி இருந்தது. அதுதான் வந்தனான்.” இனியும் மறைக்க முடியாது என்று தெரிந்து சொன்னான்.
அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான், அரவிந்தன்.
கிருபன் முறைக்க, “அதுக்கு அவளை வெளில கூட்டிக்கொண்டு போயிருக்க வேணும். வீட்டுக்கு வரக்கூடாது.” என்றான் நக்கலாக.
“நீ அவளின்ர அண்ணா. கொஞ்சமாவது பொறுப்போட கதை.”
“அது, ‘அவளைப் பாக்கோணும் மாதிரி இருக்கடா’ எண்டு சொல்லேக்க நினைவு வரேல்லையோ?”
அதுதானே? இதற்குமேல் அவனிடம் மல்லுக்கட்ட முடியாமல், “இப்ப என்னடா, நான் வரவா வேணாமா?” என்றான்.
“தாராளமா வா. என்ன, நீ ஆசைப்பட்டது நடக்காது. கமலி வீட்டில இல்ல.” என்றபடி, அவனை அழைத்துப் போனான், அரவிந்தன்.
கிருபனின் முகம் சோர்ந்து போயிற்று. “எங்க போயிட்டாள்?” என்றான், தன் மனதின் வாட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல்.
“கரனுக்குக் காய்ச்சலாம். அவனைப் பாக்க சித்தி வீட்டை போயிட்டாள்.”
பரந்தாமனும் வீட்டில் தான் இருந்தார். இன்முகமாய் வரவேற்று, துளசியின் திருமணம் பற்றி விசாரித்தார்.
அதுபற்றிய விபரங்களை எல்லாம் சொல்லிவிட்டு, “அங்கிள், நான் கமலியையும் துளசின்ர கலியாணத்துக்குக் கூட்டிக்கொண்டு போகட்டுமா?” என்று, நயமாய் வினவினான்.
விழிகளில் கேள்வியோடு அவனைப் பார்த்தார், பரந்தாமன். “கலியாணத்துக்கு முதல் அப்பிடிப் போறது நல்லாருக்காதே தம்பி.”
“உண்மை தான், அங்கிள். ஆனா, எனக்கு எவ்வளவு சொந்தபந்தம் இருக்கு எண்டு எனக்கே தெரியாது. தெரியாத அவைய(அவர்களை) என்னால என்ர கலியாணத்துக்குக் கூப்பிடவும் ஏலாது. ஆனா, மாமா வீட்டுக் கலியாணத்துக்கு எல்லாரும் வருவினம். அங்க வச்சு எல்லாருக்கும் என்னையும் எனக்குத் துணையா வரப்போறவளையும் அறிமுகப்படுத்தலாம் எண்டு நினைச்சன். இது சரியா பிழையா எண்டு தெரியேல்ல அங்கிள். ஆனா, விருப்பமா இருக்கு. அம்மான்ர மகன் ஒண்டும் வழி தவறிப் போகேல்ல, நல்லாத்தான் இருக்கிறான் எண்டு, அம்மான்ர சொந்தங்களுக்குச் சொல்ல எனக்குக் கிடைச்ச ஒரு சந்தர்ப்பமா இதப் பாக்கிறன், அங்கிள்.”
“உங்கட விருப்பம் எனக்கு விளங்குது, தம்பி. ஆனா, அண்டைக்கே உங்கட மாமா தேவையில்லாமக் கதைச்சவர். அதேமாதிரி, எல்லாரும் கூடியிருக்கிற சபைல வச்சும் என்ர பிள்ளையைப் பாத்து அவர் ஏதும் கதைச்சிட்டார் எண்டா பிறகு அது, பெரும் பிரச்சினைல தான் போய் நிக்கும். எல்லா நேரமும் நானும் பொறுமையாப் போக மாட்டன். அதால தான் யோசிக்கிறன்.”
அவர் தயங்குவது சரி என்றே அவனுக்கும் பட்டது. அவர் சொல்வது போல, அப்படி எதுவும் நடந்து, அவனுடைய கமலி கலங்கிப்போனால் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அன்று ஒருநாள், அவளை அப்படிப் பார்த்ததே போதும். அதில், “விளங்குது அங்கிள்.” என்றான்.
அரவிந்தனுக்கு நண்பனின் விருப்பம் புரிந்தது. அதே நேரம், தகப்பனின் மறுப்பில் இருக்கிற நியாயமும் விளங்கியது. அதில், அந்தப் பேச்சினில் அவன் தலையிடவில்லை. சுகுணாவுக்கும் கணவரின் தரப்பில் மாற்றுக் கருத்தில்லை என்பதில், அவனை உபசரிப்பதை மாத்திரம் பார்த்துக்கொண்டார்.
ஆனால், இவர்களின் அத்தனை எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் அப்பாற்பட்டவள், கமலி. யாரின் முடிவையும் மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவள். அவன் வீட்டுக்குச் சென்ற சற்று நேரத்திலேயே அரவிந்தனோடு அங்கு வந்து நின்றாள்.
“சிம்ரன், இப்பிடிக் கடைசி நேரத்தில வந்து கலியாணத்துக்கு வா எண்டா நான் சாறி எடுக்கிறேல்லையா? இல்ல, பிளவுஸ் தைக்கிறேல்லையா? கெதியா வாங்க! இண்டைக்கே வாங்கிச் சித்திட்டக் குடுத்தா இண்டைக்கு இரவே பிளவுஸ் தைச்சுத் தந்திடுவா.” என்று, அவனை யோசிக்கவே விடாமல் இழுத்துக்கொண்டு போனாள்.
கிருபனுக்கு நம்பவே முடியாத அதிர்ச்சி. அவளின் கையோடு இழுபட்டுக் கொண்டு அரவிந்தனைக் கேள்வியோடு பார்த்தான்.
“என்னை ஏன் பாக்கிறாய்? அப்பாவோட சண்டை பிடிச்சு, ஒற்றைக் காலில நிண்டு சம்மதம் வாங்கி இருக்கிறாள். போ, போய் அவளுக்குச் சாறி எடுத்துக் குடு!” என்று, நண்பன் அப்போது கேட்ட அவர்களுக்கான தனிமையை இப்போது கொடுத்தான்.
கிருபனுக்கு நடப்பவற்றை இன்னுமே நம்ப முடியவில்லை. வண்டியில் தன் பின்னே அமர்ந்து வந்தவளிடம் அவன் பார்வை நிலைத்தது. பரந்தாமனின் மறுப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்தாலும் கூட, அவன் மனம் வாடிப்போனது என்னவோ உண்மை தான். பரவாயில்லை, இன்னுமொரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும் என்று, தன்னைத் தானே தேற்றியிருந்தான். அதற்கு, அவசியமே இல்லாமல் செய்துவிட்டாளே, அவனுடைய கமலி.
“இங்க என்ன பார்வை? ஒழுங்கா ரோட்டை பாத்து ஓட்டுங்கோ. இல்ல, கலியாண வீட்டுக்குப் பதிலா க..” என்றவளை மேலே செல்லவிடாமல், “நோ!” என்று, வேகமாக பிரேக்கை அழுத்தி பைக்கை நிறுத்தினான், கிருபன்.
கமலியும் பயந்துபோனாள். “என்ன? என்ன நடந்தது?” என்றாள், அவன் தோள்களை இறுக்கிப் பற்றியபடி.
அவள் புறம் திரும்பி, “பிளீஸ், ஏதாவது அபசகுனமாச் சொல்லிப் போடாத. எனக்கு உன்னோட நிறையக் காலம் வாழோணும் கமலி. அப்பாவோட வாழாத வாழ்க்கைய, அம்மாவோட வாழாத வாழ்க்கைய எல்லாம் சேர்த்து எனக்கு உன்னோட வாழோணும். நீ பகிடிக்குத்தான் கதைக்கிறாய் எண்டு தெரியும். ஆனாலும், இந்த விசயத்தில பகிடி கதைக்காத, பிளீஸ்!” என்றான் கெஞ்சலாக.
அவன் விழிகளில் தெரிந்த தவிப்பில் கமலிக்குப் பேச்சற்றுப் போனது. தொண்டைக்குள் வந்து என்னவோ சிக்கிக் கொண்டது. இந்தளவு தீவிரத் தன்மையோடு வாழ்க்கையை அவள் எதிர்நோக்கியதில்லை. ஆனால், அவனுக்கு அது அப்படியில்லை என்பது புரிந்தது. மனம் கனத்துவிட, அவன் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள்.
“இல்ல, இனி இப்பிடிக் கதைக்க மாட்டன். எனக்கும் உங்களோட நிறையக் காலம் சந்தோசமா வாழவேணும் கிருபன்.” என்றாள், இதயத்தில் இருந்து.

