கிருபனின் கமலி – 17

அத்தியாயம் 17

துளசியின் திருமண நாளும் வந்து சேர்ந்திருந்தது. மணப்பெண்ணான துளசிக்கு முதலே கிருபன் எழுந்திருந்தான். அந்தளவுக்கு, அவனுக்குள் உற்சாகமும் துள்ளலும் வியாபித்திருந்தது. அவனின் கமலியை அவனின் உறவுகளுக்கு முன்னே நிறுத்தப் போகிறானே!

அன்று, அவளுக்குச் சேலை எடுத்துக்கொடுத்து, உணவகம் ஒன்றில் உணவையும் முடித்துக்கொண்டு, அவளை அரவிந்தனிடம் ஒப்படைத்துவிட்டு, அப்போதே கிளிநொச்சிக்குத் திரும்பியவனின் உடம்பில் மருந்துக்கும் களைப்பில்லை. அந்தளவில், மனதினுள் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகித்துக் கொண்டிருந்தது.

அந்த மகிழ்ச்சியோடு, அந்த வீட்டின் ஆண் பிள்ளையாக, அனைத்துக் காரியங்களையும் முழு மனதோடு செய்து கொடுத்துவிட்டு, கமலியை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பதற்காக, முதல்நாள் இரவுதான் மீண்டும் மன்னாருக்கு வந்திருந்தான்.

இதோ இந்த அதிகாலையில், வேக வேகமாய்க் குளித்து, ஒரு ஜீன்ஸ், டீ ஷேர்ட்டில் தயாராகி, கமலியிடம் வருவதாகச் சொன்ன நேரத்துக்கு முதலே, அவளின் வீட்டு வாசலில் வந்து நின்றான்.

பெரியவர்களின் உறக்கத்தைக் கெடுத்துவிட வேண்டாம் என்கிற அக்கறையோடு, அரவிந்தனுக்குக் குறுஞ்செய்தியைத் தட்டி விட்டுவிட்டு அவன் காத்திருக்க, கமலி வந்து கதவைத் திறந்தாள்.

பார்த்தவனின் விழிகள் விரிந்து போயின.

அவன் எடுத்துக்கொடுத்த சேலையில், அளவான அலங்காரத்தோடு, பூச்சூடி நின்றவளின் பிரசன்னம், அவன் மனதை நிறைத்தது. வார்த்தைகள் வரவே மாட்டேன் என்றது.

அவன் நிலை கண்டு கமலியின் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. தன் தோற்றத்தைத் தானே காட்டி, ‘எப்படி?’ என்று புருவம் உயர்த்தி வினவினாள். என்னென்னவோ சொல்லத்தான் அவனுக்கும் ஆசை. அதற்கு முதலில், வேறு யாரும் தம்மைக் கவனிக்கிறார்களா என்று, வீட்டுக்குள் விழிகளைச் சுழற்றினான்.

அப்போது, “வாடா!” என்று, கொட்டாவி விட்டபடி எழுந்து வந்தான், அரவிந்தன்.

அதற்கு மேல், ஒன்றும் சொல்ல முடியாமல் போனது, கிருபனுக்கு. கமலியும் உள்ளே சென்று தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள்.

மூவரும் அருந்தி முடித்ததும், “வெளிக்கிடுவமா?” என்றாள்.

“ம், நீ வாசலுக்கு நட. நான் இப்ப வாறன்.” அவளின் விழிகளைப் பாராமல் சொன்ன கிருபன், அரவிந்தனை இழுத்துக்கொண்டு அவன் அறைக்குள் புகுந்தான்.

“என்னடா?” தேநீர் அருந்தியும் முற்றிலும் அகலாத உறக்கக் கலக்கத்தோடு வினவினான், அவன்.

“டேய் மச்சான், எனக்கு வேட்டி கட்டத் தெரியாதடா. கெதியாக் கட்டிவிடு.” கையோடு கொண்டு வந்த பைக்குள் இருந்து, வேட்டி சட்டையை வெளியே எடுத்தபடி சொன்னான்.

பக் என்று சிரித்தான், அரவிந்தன். “வேட்டி கட்டி விடுறதோ? எனக்கே அப்பா இல்லாட்டிக் கமலி தான் கட்டி விடுறதே. நீ அவளையே கேள்!”

“என்னது? கமலியையா?” அதிர்ந்து நிமிர்ந்தவன், கைகளைக் கட்டிக்கொண்டு வாசல் கதவில் சாய்ந்து நின்று, இவர்கள் கதைப்பதைக் கேட்டுக்கொண்டு நின்றவளைக் கண்டு, இன்னுமே அதிர்ந்து போனான்.

அவன் பார்வையைத் தொடர்ந்து திரும்பிப் பார்த்த அரவிந்தன், “இவனுக்கு வேட்டி கட்டத் தெரியாதாம். கட்டிவிடு கமலி!” என்றான்.

“விசராடா உனக்கு?” அவனை அதட்டினான், கிருபன். “நான் அங்க மண்டபத்தில ஆரையும் கேட்டுக் கட்டுறன். நீ வா, நாங்க போவம்!” என்றபடி, வேகமாக வேட்டியைப் பையினுள் அடைத்தவனிடம் இருந்து, பையைப் பறித்தாள், கமலி.

“ஜீன்ஸை கழட்டுங்க!”

“என்னது?”

“ஜீன்ஸை கழட்டட்டாம் மச்சி!” கொடுப்புக்குள் சிரித்தபடி, கேலி இழையோடும் குரலில் அழுத்திச் சொல்லிவிட்டு, கட்டிலில் விழுந்தான், அரவிந்தன்.

அவனை முறைத்தான், கிருபன். “நேரமாகுது கமலி, போவம்!” அவளிடம் இருந்து தப்பிக்கும் நோக்கோடு வேகமாக வாசலுக்கு நடந்தவனின் கையைப் பற்றி நிறுத்தினாள், கமலி.

“ஜீன்ஸை கழட்டச் சொன்னனான்.”

“விசரா உனக்கு?”

“கழட்டுங்க!”

“பிளீஸ்மா! வேண்டாம் விடு.” சத்தம் வராமல் கெஞ்சியும் பார்த்தான்.

அவள், ‘கழட்டு!’ என்கிற ஒற்றைப் பார்வையோடு அசையாமல் நின்றாள்.

“எப்பிடியும் ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டு தானே வந்திருப்பாய். வெக்கப்படாமக் கழட்டடா.”

‘இவன வெளுக்க வேணும் முதல்.’ ஆத்திரம் வந்தது அவனுக்கு. ஷோர்ட்ஸ் அணிந்து இருந்தாலும் அவள் முன்னே எப்படி ஜீன்ஸை கழற்றுவது?

“சிம்ரன், இண்டைக்கு நீங்க வேட்டி கட்டாம இந்த அறையை விட்டு வெளில போக மாட்டிங்க! சோ கழட்டுங்க!” கையைக் கட்டிக்கொண்டு வெகு நிதானமாகச் சொன்னாள், கமலி.

இனி விடமாட்டாள். அவனுக்குத் தெரியும். வேறு வழியற்று, “திரும்பி நில்லு.” என்றான்.

ஒற்றைப் புருவத்தைக் கேலியாக உயர்த்திவிட்டுத் திரும்பி நின்றாள், கமலி. அப்போதே, முகம் சிவந்துவிடும் போலாயிற்று அவனுக்கு. ‘வெட்கம் கெட்டவள்!’ செல்லமாகத் திட்டியபடி கழற்றினான்.

உள்ளே ஷோர்ட்ஸ் இருந்தாலும் ஒரு கூச்சம் தாக்க, “ம்” என்றான்.

அவனை நெருங்கி, கைகள் இரண்டையும் அவனுக்குப் பின்னால் கொண்டுபோய், அவள் வேட்டியைச் சுற்றவும் வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான், கிருபன்.

அவன் இடையில் அவள் விரல்கள் உரசிய இடமெல்லாம் கூசியது. அவளிடம் இருந்து தன்னைப் பறித்துக்கொண்டு ஓடினால் என்ன என்று தோன்றிய எண்ணத்தை அடக்கிக்கொண்டு நின்றான்.

அவன் படுகிற பாட்டையெல்லாம் கவனிக்காதது போல் கவனித்த கமலிக்கு அடக்க முடியாத சிரிப்பு. காட்டிக்கொள்ளாமல், நேர்த்தியாகச் சுற்றிக்கொண்டு வந்த வேட்டியின் நுனியை இடுப்பில் செருகப்போக, அவன் பதறிப்போனான்.

“விடு விடு. நானே செய்றன்.”

“இவ்வளவும் செய்த எனக்கு இது தெரியாதா?” தானே செருகியவள், வேண்டுமென்றே அவன் இடையில் தன் விரல்களால் வருடியபடி,

“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி” என்று பாடினாள்.

கிருபனின் முகம் சிவந்தே போயிற்று. “கேவலப்படுத்தாதயடி!” என்றபடி, வேகமாக அவளின் வாயைப் பொத்தினான்.

அதற்குள்,
“இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்” என்று, இசைப்பாட்டுப் பாடினான், அரவிந்தன்.

கழற்றிப் போட்டிருந்த ஜீன்ஸினாலேயே அவனுக்கு ஒன்றைப் போட்டுவிட்டு, கமலியை இழுத்துக் கொண்டு வெளியேறினான், கிருபன்.

அரவிந்தனின் சிரிப்புச் சத்தம் அவர்களைத் துரத்தியது.

பைக்கில் சென்றுகொண்டிருந்த இருவரின் முகங்களும் முகம் கொள்ளாச் சிரிப்பில் மலர்ந்து இருந்தன. பெரிதாக ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொள்ளத் தோன்றவில்லை. இருள் பிரியாத பொழுதும், அந்தப் பொழுதுக்கே ஏற்ற சில் என்ற குளிரும், அவர்களை வியாப்பித்திருந்த கிறக்கமும் அந்தப் பயணத்தை மிகவுமே அழகாக்கிற்று!

error: Alert: Content selection is disabled!!