கிருபனின் கமலி 18 – 1

அத்தியாயம் 18

திருமண மண்டபம் நிறைந்திருந்தது. கமலி நிச்சயம் இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. ‘இந்தச் சிடுமூஞ்சிக்கு ஆர் வரப்போயினம்?’ என்று தான், சோமசுந்தரத்தின் குணத்தை வைத்து எண்ணியிருந்தாள். ஆனால், இவ்வளவு பேரை எதிர்பார்த்ததால் தான் கிருபனும் அவளை அழைத்துவர விரும்பியிருக்கிறான் என்று இப்போது புரிந்தது.

அவளை அவனோடு கண்டதும் சோமசுந்தரத்தின் முகம் இறுகியதையும் ஜெயந்தி பதட்டமானதையும் கவனித்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதேபோல, உள்ளே நுழைகிறவரை மட்டுமே அவன், அவள் வசத்தில் இருந்தான். அதன்பிறகு, வேலை அவனைப் பிடித்துக்கொண்டது. ஒரு ஓரமாக அமர்ந்து அவனைக் கவனிப்பதைத் தவிர, கமலிக்கு வேறு வேலை இருக்கவில்லை.

அடுத்தடுத்த சடங்குகளுக்கான தேவைகளைப் பார்ப்பது, ஐயா கேட்பவற்றை உடனேயே செய்வது, யார் என்ன கேட்டாலும் முன்னே சென்று நிற்பது என்று, அவர்களின் வீட்டின் தலைச்சம் பிள்ளையாக, பொறுப்புள்ள மகனாக நின்றவனைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை.

அதே நேரம், சோமசுந்தரம் அவனைப் பொருட்டாக மதிக்கவில்லை என்பதையும் அவள் கவனிக்காமல் இல்லை.

உறவுகள் நிறைந்து வழிந்தனர். பலரை அப்போது தான் கிருபனே முதன் முதலில் பார்த்தான். இவ்வளவு சொந்தங்களா என்று மலைப்பாய் இருந்தது. அவன் ஓடி ஓடி வேலை செய்வதைக் கவனித்த சிலர், அவனையே அழைத்து விசாரித்து, அவன் யார் என்று அறிந்து கொண்டனர். சிலருக்கு மகிழ்ச்சி. சிலருக்கு வியப்பு. சிலருக்குத் தாய் தந்தையற்றுப் போனாலும் ஆளாகி நிற்கும் அவன் மீது மிகுந்த ஆதூரம்.

அவனிடம் பேச்சுக் கொடுத்த எல்லோரிடமும் அவளையும் தன் வருங்காலத் துணைவியாக அறிமுகம் செய்து வைத்தான். அப்படி, அறிமுகம் செய்கிற பொழுதுகளில், அவன் முகத்தில் தெரியும் பிரகாசத்தைப் பார்த்தவளுக்கு மனதுக்கு நிறைவாய் இருந்தது.

துளசியின் மணாளன் அவள் கழுத்தில் தாலியைப் பூட்டி முடித்தான். அர்ச்சதை தூவி, எல்லோரும் ஆசிர்வதித்த பின்னர், புகைப்படத்துக்கு நிற்க ஆரம்பித்தனர். பெண் வீடு, மாப்பிள்ளை வீடு, இரு தரப்பு உறவுகள், சொந்தங்கள் என்று எல்லோரும் நின்றனர். சோமசுந்தரம், பெயருக்குக் கூடக் கிருபனை அழைத்துத் தன்னருகில் நிறுத்திக்கொள்ளவே இல்லை. அவனும் மேடை ஏறவில்லை.

அவள் நெஞ்சில் பாரமேற ஆரம்பித்தது. கிருபனைத் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது நடமாடிக்கொண்டிருந்தான். மேடைப் பக்கம் அவன் திரும்பவே இல்லை. ஆக, அவனையும் அது வருத்துகிறது. பிறகும் எதற்கு மாடாக வேலை பார்க்கிறானாம்? அவளுக்குள் ஒருவிதக் கோபம் முகிழ்க்க ஆரம்பித்தது.

விறுவிறு என்று சென்று, அவன் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு மாடியேறினாள்.

“கமலி என்ன? அங்க நிறைய வேல கிடக்கு. நீ எங்க இழுத்துக்கொண்டு போறாய்? முதல் கைய விடு, நான் வாறன்.”

அவனுடைய எந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை. மாடியில் இருந்த அறை ஒன்றுக்குள் புகுந்து, கதவை அடைத்தாள்.

கிருபனுக்குத் திகைப்பு. எல்லோரும் பார்க்க அவள் இழுத்துக்கொண்டு வந்ததே சரியில்லை. இதில், இதை யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? வேகமாகக் கதவைத் திறக்கப் போனான்.

“கதவில கையை வச்சீங்க எண்டா எனக்கு விசர் வந்திடும் சொல்லிப்போட்டன்!” இருந்த கோபத்துக்கு அவள் குரல் உயர்ந்து ஒலித்தது.

நடை நிற்கத் திரும்பி அவளைப் பார்த்தான், கிருபன். அவள் கோபமாய் இருக்கிறாள் என்று அப்போது தான் புரிந்தது.

“என்னம்மா? ஆரும் ஏதும் சொன்னவையா?” வேகமாக அவளை நெருங்கியபடி வினவினான். அவளின் தகப்பன் அஞ்சியது போல் ஏதும் நடந்துவிட்டதோ என்று, அவன் மனம் கலங்கிற்று.

“அப்பிடி ஏதும் எண்டாத்தான் உங்களைத் தனியாக் கூட்டிக்கொண்டு வர வேணுமோ?”

அவளை அழுத்திய கோபத்தில் எதையும் யோசிக்காமல் அழைத்து வந்துவிட்டாள். இப்போது, அதைப் பற்றிக் கதைக்கப் பிடிக்கவில்லை. வேகமாக யோசித்து, “சாறி பிளிட்ஸ் ஒழுங்கா நிக்குது இல்ல. பிடிச்சுவிடுங்க.” என்றாள், குரலைச் சாதாரணமாகக் காட்டி.

‘இவள…’ என்று மனம் அலுத்துக் கொண்டாலும் உதட்டினில் இளஞ்சிரிப்பு அரும்பிற்று.

“இதுக்குத் தான் அப்பிடி இழுத்துக்கொண்டு வந்தியா?”

“அதென்ன இதுக்குத்தானா எண்டு கேவலமாக் கேக்கிறீங்க? சாறி பிளிட்ஸ் நேரா நிக்காட்டி எவ்வளவு விசர் வரும் தெரியுமா? ஒழுங்காப் பிடிச்சு விடுங்க.”

“வேட்டியே கட்டத் தெரியாது. இதுல, சாறி பிளிட்ஸ் பிடிக்கத் தெரியுமா எனக்கு?” என்று கேட்டாலும், அவளின் முன்னே முழங்கால் இட்டபடி, “என்ன செய்யோணும்?” என்று கேட்டான்.

வேட்டி சட்டையில், நெற்றியில் திருநீறு சந்தனம் தீட்டி, களை இழக்காத கம்பீர முகத்தோடு, தன் முன் மண்டியிட்டிருந்தவனின் தோற்றம், அவளை வசீகரித்தது. மனதில் இருந்த கோபம் கூடக் குறைந்து போயிற்று.

அவன் கன்னம் இரண்டையும் பிடித்துக் கிள்ளித் தன் உதட்டினில் ஒற்றிவிட்டு, “வடிவா இருக்கிறீங்க கிருபன்.” என்றாள்.

அவன் முகம் மலர்ந்தது. ஒரு பளீர் புன்னகையை அவளுக்குக் கொடுத்துவிட்டு, “நீயும் தான்.” என்றான்.

அவள் சொல்லித் தந்தது போல் பிளிட்ஸ்களை நேராக்கிவிட்டான்.

“ஓகேயா? இனிப் போவமா?”

“போவம். அதுக்கு முதல் பொட்டு நேரா வச்சிருக்கிறனா பாருங்க? சைட்டுக்கு போன மாதிரி இருக்கு.”

“இல்லையே. நேராத்தானே இருக்கு.”

“அப்பச் சரி. தலை குழம்பி இருக்கா?”

அவளுக்கு அவனை அங்கே பிடித்து வைக்க வேண்டும். அவனுக்கோ அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கான காரணம் விளங்கவில்லை. “இல்லம்மா. வடிவாத்தான் இருக்கிறாய். ஏன் இப்பிடித் திடீர் எண்டு தனியாக் கூட்டிக்கொண்டு வந்து கேக்கிறாய்?” என்று, வினவினான்.

“எல்லாம் ஒரு செல்பி எடுக்கத்தான்!” என்றவள், நன்றாகவே அவனோடு நெருங்கி நின்று செல்பியைக் கிளுக்கினாள்.

ஒருமுறை அல்ல பலமுறை. அவன் தோளோடு தோள் உரசியபடி, அவனை அணைத்தபடி, அவன் மார்பில் சாய்ந்தபடி, எம்பி அவன் கன்னத்தில் உதடுகளை ஒற்றியபடி, அவன் கையை எடுத்துத் தன் தோளைச் சுற்றிப் போட்டபடி என்று, அவளின் ஒவ்வொரு போஸ்களிலும் கிருபன் நிலைகுலைந்து கொண்டு இருந்தான்.

அவளின் அருகண்மையில் அவன் மிகவும் பலகீனமானவன் என்று தெரிந்தும் வதைக்கிறவளை என்ன செய்ய? என்னை விட்டுவிடேன் என்கிற கெஞ்சலோடு அவளைப் பார்த்தான். அவள் விடவில்லை. பால்கனிக்கும் அவனை இழுத்துச் சென்று செல்பி எடுத்தாள். அது ஒரு சின்னத் தடுப்புச் சுவர் கொண்ட பால்கனி. சேலையில் நின்றதில் அவள் தடுமாற, “பாத்து பாத்து!” என்றவனின் கரம், அவளை ஒரே தூக்காகத் தூக்கி அறைக்குள் விட்டது.

“அவுச்! இது கையா இல்ல வேற எதுவுமா? இப்பிடி நோகுது!” அவன் கரம் சற்று அழுத்தமாகவே பற்றிவிட்டதில் அவளுக்கு இடுப்பு வலித்தது.

அவன் கையோ தன்னவளின் இடையின் மென்மையை அறிந்து குறுகுறுத்தது. அன்றைய நாளும் அதன் இன்பங்களும் நினைவில் வந்து மயக்கின. இனியும் இங்கே நின்றால் ஆபத்தில் தான் முடியும் என்பதை நன்கே உணர்ந்து, “வா போவம், நேரமாகுது.” என்றபடி, வேகமாக அங்கிருந்து வெளியேற முனைந்தான்.

ஓடிவந்து அவன் முன்னே நின்றாள், கமலி.

“என்ர இடுப்பை நோகடிச்சிப்போட்டு எங்க போறீங்க? தடவி விடுங்க!”

கிருபனுக்குத் திகைப்பும் தடுமாற்றமும். “என்ன பிரச்சனை உனக்கு?” என்றவன், ஒற்றை இழுவையில் அவளைத் தன்னிடம் கொண்டு வந்தான். “விலகி நிப்பம் எண்டு நினைச்சாலும் விடமாட்டியா?” கோபமாகக் கேட்டாலும் குரல் குழைந்தது. இடையில் பதிந்த கரம் மெல்ல அதை வருடியது.

அவள் விலகவும் இல்லை, அவனுக்குத் தடை போடவும் இல்லை. அவனோடு நன்றாகச் சாய்ந்துகொண்டு, “தடவி விடச் சொன்னனான்.” என்றாள்.

கரும்பு தின்னக் கூலியா? வலிக்காத இடங்களையும் அவன் கை வருடிக் கொடுக்க ஆரம்பித்தது.

“உங்கட கை என்ன செய்யுது?”

“என்ன செய்யுது?” கிறக்கத்துடன் திருப்பிக் கேட்டான், அவன்.

“சொல்லாததையும் செய்யுது.”

“ம்ஹூம்! அது தனக்குப் பிடிச்சதைச் செய்யுது. உனக்குப் பிடிக்கேல்லையா?” தன் முகத்தை அவள் முகத்துடன் உரசியபடி, குரலைத் தணித்துக் கேட்டான்.

விழிகளில் அவனுக்கான மயக்கத்தைக் காட்டியபடி இல்லை என்றாள், அவள்.

“பிடிக்கேல்லையா? விடு, பிடிக்கிற மாதிரிச் செய்றன்.”

அதன் பிறகான நொடிகள் காதலர்களுக்கே உரித்தானது. மிகவும் அந்தரங்கமானது. இருவரையும் மயக்கத்தில் ஆழ்த்திற்று. அவள் தன் முகத்தை அவன் மார்புக்குள் மறைத்துக்கொள்ள, அவன் கைகள், அவளை ஆசையோடு அணைத்துக் கொண்டன.

நேசத்தோடு உச்சியில் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் முகத்தை இரு கரங்களினாலும் பற்றித் தன் முத்தங்களால் நிறைத்தான். “மாமா எங்களை நம்பித்தானே அனுப்பி வச்சவர். வெளில போவமா?” என்றான், கனிந்த குரலில்.

error: Alert: Content selection is disabled!!