அவளுக்கும் அது விளங்காமல் இல்லை. இருந்தாலும் முடியாது என்பதுபோல் மறுத்துத் தலையை அசைத்துவிட்டு, “என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்றீங்க?” என்று, வினவினாள்.
“அந்த வீட்டுக்கு ஆம்பிளைப் பிள்ளை நான் தானே. நான் செய்யாம வேற ஆர் செய்றது?” அவள் கன்னத்தை வருடியபடி வினவினான், அவன்.
“அப்பிடித்தான் அவேயும் உங்கள நினைக்கினமா கிருபன்?”
அவளின் கேள்வியில் அவன் வருடல் நின்று போயிற்று. விழிகளில் வலியின் சாயல். மெல்ல அவளிடம் இருந்து விலகினான்.
“அவே எப்பிடி நினைச்சாலும் எனக்கு நன்றிக்கடன் இருக்கு. கடமை இருக்கு. பாசம் இருக்கு. அதைத்தான் செய்றன்.”
“அதுதான் போதுமான அளவு காசு குடுக்கப் போறீங்களே. சின்னவளுக்கும் செய்வீங்க தானே.”
“இது கணக்குப் போடேலாத கடமை கமலி. அப்ப எல்லாம், உன்ர வீடு எங்க எண்டு ஆராவது கேட்டாச் சொல்லுறதுக்கு எண்டு எனக்கும் ஒரு வீடு இருந்தது. பசிச்ச நேரம் சாப்பாடு தந்தவே. படுக்கிறதுக்கு இடம் தந்தவே. என்னை நான் வளத்துக்கொண்டதே அங்க தான். காலமெல்லாம் நான் நல்லா வாழுறதுக்குத் தேவையான படிப்பைத் தந்தது அவே தான். இதுக்கெல்லாம் எவ்வளவும் செய்யலாம்.”
எல்லாம் சரி தான். ஆனால்… அவளுக்குத் தன் மனதிலிருப்பதை வெளிப்படையாகப் பேச மனம் வரமாட்டேன் என்றது. அவன் இன்னும் நொந்து போவானே என்று அமைதி காத்தாள்.
“இதுவரை உழைச்ச எல்லாத்தையும் குடுக்கிறன் எண்டு உனக்குக் கோபம் ஏதுமா?” அதனால் தான் இப்படியெல்லாம் கேட்கிறாளோ என்கிற தவிப்புடன் கேட்டான்.
“நான் செய்ய வேண்டாம் எண்டு சொன்னா என்ன செய்வீங்க?”
சின்ன அதிர்வு ஒன்று அவன் விழிகளில் வந்து போனது.
“குடுக்கமாட்டன். ஆனா கவலைப்படுவன்.”
“ஏன்?”
“இது நான் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே முடிவு செய்தது. அவே என்னைப் பற்றி என்ன நினைச்சாலும் அவளவே ரெண்டு பேரும் எனக்குத் தங்கச்சிமார், அவேக்குச் செய்ய வேண்டியது என்ர கடமை.”
“அப்ப, எனக்கு நகைநட்டு, உடுபுடவை, நான் ஆசைப்படுறது எல்லாம் கிடைக்குமா கிடைக்காதா? கலியாணத்த வேற ஆறு மாதம் கழிச்சு எண்டு சொல்லிட்டீங்க.”
“தங்கச்சியா நினைக்கிறவளுக்கே இவ்வளவு செய்றவன் ஆசைப்பட்டுக் கட்டுறவளுக்கு எவ்வளவு செய்வன்?” என்று திருப்பிக் கேட்டான், அவன்.
அவள் இதழ்களில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. “வரவர நல்லாக் கதைக்கப் பழகிட்டீங்க சிம்ரன்.”
“நீதான் பழக்கிவிட்டிருக்கிறாய். உன்னப் பழகிறதுக்கும் ஆசையா இருக்கு. பழகவா?” அவளின் கழுத்து வளைவில் உதடுகளைப் பதித்தபடி வினவினான். மூளையின் முடிவுகளை உடலும் அவளைத் தேடும் உணர்வுகளும் கேட்க மறுத்தன. கைகள் இடையில் தவழ்ந்து அவளைத் தனக்குள் கொண்டு வந்தன.
அவனுக்கு வாகாக இசைந்து கொடுத்தவள் இதழ்களில் முறுவல் மலர்ந்தது. முதன் முதலாக அவளைத் தயக்கமும் தடுமாற்றமுமாகப் பார்த்த கிருபன், நினைவில் வந்து போனான். இன்றைக்கு, அவர்கள் இருவருக்குமிடையில் இடைவெளியே இல்லை. இதோ, அந்தக் கள்ளன், ருசி கண்ட பூனையாக அவளுக்குள் உரிமையோடு அத்து மீறுகிறான். அவளும் அதை ரசிக்கிறாள். காலம் எப்படி மாறிவிட்டது? முத்துப் பற்கள் மின்னச் சிரித்தாள்.
“இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” உதட்டோரம் முத்தமிட்டபடி வினவினான்.
“ஓ! சிரிக்கிறதுக்கு எல்லாம் உங்களுக்கு நான் விளக்கம் சொல்லவேணும் போல.”
“கேட்ட கேள்விக்குப் பதில் இல்ல. ஆனா, வாய் என்ன? கொடுமைக்காரி!” அதற்குமேல் முடியாமல் அவளின் இதழ்களை அணைத்திருந்தான், கிருபன்.
இருவர் விழிகளும் கலந்து, மயங்கிக் கிறங்கி மூடிக்கொண்டன. அவன் பட்டுச் சட்டை, அவள் கைக்குள் அகப்பட்டுக் கசங்கியது. அவள் இடையில் பதிந்த கரம், அந்த முத்தம், அவனுக்குள் என்னவெல்லாம் நிகழ்த்துகிறது என்பதை அவளுக்கு உணர்த்திற்று.
“சாறி கசங்குது.” கிடைத்த இடைவெளியில் முணுமுணுத்தாள், கமலி.
“கழட்டி வச்சிட்டு வாறியா?” என்றான் அவன், குறும்புடன்.
“உங்கள! என்னவோ மாமா எங்களை நம்பித்தானே அனுப்பி வச்சவர் எண்டு பெரிய நல்லவன் மாதிரிச் சொல்லிப்போட்டு என்ன வேலையெல்லாம் பாக்கிறீங்க?” பொய்யாகக் கோபம் காட்டினாலும் அவள் முகம், செக்கச் சிவந்து போயிருந்தது.
அவன் தேகம் சந்தோசச் சிரிப்பில் குலுங்கிற்று. சிவந்து, மலர்ந்து, பூரித்திருந்த அவளின் பூமுகம், இன்னுமே அவனை ஈர்க்க, ஆசையோடு மீண்டும் இதழ்களை இணைத்தான்.
இருவருக்கும் மீண்டும் சில நொடிகள் கிறக்கத்தோடு கழிந்தன.
மனம் நிறைய மெல்ல அவளை விடுவித்தான், கிருபன். “கோபம் இல்லையே?” என்றான், அவள் முகம் பார்த்து.
கண்களைச் சிமிட்டிவிட்டு மலர்ந்த சிரிப்புடன் இல்லை மறுத்துத் தலை அசைத்தாள்.
“தேங்க்ஸ் செல்லம்.”
எம்பி அவன் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “நீங்க உங்களுக்கு விருப்பமான மாதிரி என்ன எண்டாலும் செய்ங்கோ, கிருபன். ஆனா, அதை அவே உணரவேணும். உங்களை விளங்கிக்கொள்ள வேணும். என்ன செய்தாலும் செய்திட்டுப் போ எண்டுற அலட்சியம் கூடாது. உங்களுக்கு எப்படியோ தெரியாது. எனக்கு என்ர கிருபன ஆரும் மதிப்பில்லாம நடத்துறது பிடிக்கேல்ல.” என்றாள், கமலி.
அவள் வார்த்தைகள் மனதுக்கு இதம் சேர்த்த போதிலும், “நாங்க இங்க நிக்கப் போறது இண்டைக்கு மட்டும் தான். அவே என்ன வேணுமெண்டாலும் நினைக்கட்டும். என்னை எப்பிடி வேணுமெண்டாலும் நடத்தட்டும். நான் பெயருக்காக இதைச் செய்யவும் இல்ல. பெருமைக்காகச் செய்யவும் இல்ல. எனக்காகத் தான் செய்றன். அதால எதைப் பற்றியும் யோசிக்காத, சரியா?” என்று, தன் நிலைப்பாட்டை அவளுக்குத் தெளிவு படுத்திவிட்டு, அவளையும் அழைத்துக்கொண்டு மண்டபத்துக்கு நடந்தான்.
கமலிக்கு அந்த அறைக்குள் வரும்போது இருந்த கோபம் இப்போது இல்லை. இருந்தாலும், அவனைப் போல அவர்கள் என்னவாவது செய்யட்டும் என்று இருக்க முடியவில்லை. அவளாகவே அவனையும் அழைத்துக் கொண்டு மேடை ஏறி போட்டோவுக்கு நின்றாள். எடுத்து முடித்ததும், துளசியிடம் கொடுக்கச் சொல்லி அவளிடம் கொடுத்திருந்த கவரை எடுத்து நீட்டி, “இதுல காசு இருக்கு துளசி.” என்று, தொகையைச் சொன்னாள்.
கேட்ட துளசிக்கு விழிகள் விரிந்து போயின. அந்தளவில் பெரிய தொகை. வாங்கவே பயந்தவளின் கையில் அதைத் திணித்தாள்.
சோமசுந்தரத்தின் புறம் திரும்பி, “நீங்க இவருக்குச் செய்தது எல்லாம் பெரிய விசயம் அங்கிள். அத நாங்க எண்டைக்கும் மறக்க மாட்டோம். அதே நேரம், நீங்களும் கொஞ்சம் பாசமா நடக்கலாம், அங்கிள்.” என்று, அவள் சொன்னதும் அவர் முகம் மாறிப் போனது.
பணத் தொகையை அவள் பொதுவில் சொன்னதிலேயே கிருபனுக்கு ஒருமாதிரி ஆகிற்று. இதில், மேடையில் வைத்து, துளிசியின் கணவனையும் வைத்துக்கொண்டு இப்படிக் கதைப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. நொடிநேரம் திகைத்தாலும் அவளின் கரத்தை அழுத்தி, மேலே பேசாதே என்று தடுத்தான். அவள் விடுவதாக இல்லை.
“ஒரு போட்டோக்கு கூட நீங்களாக் கூப்பிட்டு நிப்பாட்ட இல்லையே, அங்கிள். அந்தளவுக்கு என்ன கோபம்? இல்ல, வெறுப்பு? எவ்வளவு எட்டி உதைச்சாலும் காலைச் சுத்துற நாய்க்குட்டி மாதிரி, உங்களையே சுத்தி சுத்தி வாறார் எண்டுற அலட்சியமா? பாசம் இருக்கப் போய்த் தானே வாறார். நான் வளந்திட்டன், படிச்சிட்டன், நல்ல வேலையும் இருக்கு, இனி நீங்க எனக்குத் தேவையில்லை எண்டு உதறிப்போட்டுப் போக எவ்வளவு நேரமாகும்? அப்பிடிச் செய்யாமப் பாசமா வந்து நிக்கிறவரை ஏன் அங்கிள் விலக்கி நிப்பாட்டுறீங்க?”
சோமசுந்தரத்துக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. மகளின் கணவனும் அங்கேயே நிற்பதில் தன்னை அடக்கினார். இருந்தும், “அவனைப் பத்து வயதில இருந்து வளத்து ஆளாக்கிவிட்டவன் நான். நேற்று வந்த நீ மேடையில வச்சுக் கேவலப்படுத்திறியா?” என்று, குரலை அடக்கிச் சீறினார்.
கிருபனின் முகம் மாறியது. “வா கமலி!” என்று, அவளை அங்கிருந்து அழைத்துப்போக முயன்றான். அவள் அசையவில்லை.
“உங்களக் கேவலப் படுத்தேல்ல, அங்கிள். உங்கட தங்கச்சின்ர மகனா, மருமகனா அவரை உரிமையா உங்களுக்குப் பக்கத்தில நிப்பாட்டுங்கோ எண்டு தான் சொல்லுறன். அவரும் உங்களுக்கு மூத்த ஆம்பிளைப் பிள்ளையா, பொறுப்பா நிண்டு எல்லாம் செய்வார்.” என்றவள், சுற்றி இருந்தவர்களை எல்லாம் பார்த்தாள்.
“நான் ஏதாவது பிழையாக் கதைச்சிருந்தா சொறி. ஆனா, கிருபன் பாவம். பாசத்துக்காகச் சொந்தங்களுக்காக நிறைய ஏங்குறார். அதை, வெளில சொல்லத் தெரியாம தனக்குள்ளேயே வச்சுக் கவலைப்படுறார். அதுதான், அதை நானாவது சொல்லுவம் எண்டு நினைச்சன்.” என்றவள், கிருபானோடு மேடையை விட்டு இறங்கினாள்.

